பெரியார் – திராவிட இயக்கம் குறித்து நடந்த இரண்டு நாள் ஆய்வரங்கம்
பெரியார் திராவிட இயக்கம் குறித்து இரண்டு நாள் ஆய்வரங்கம் ‘திராவிட அரசியல் வரலாற்றுத் தடங்கள்’ என்ற தலைப்பில் 2018 செப்டம்பர் 29, 30 ஆகிய இரு நாட்களிலும் சென்னை இராஜா முத்தையா ஆராய்ச்சி நூலக வளாக அரங்கில் நடைபெற்றது. சமூக மாற்றத்துக்கான ஆய்வு நடுவம், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இராஜா முத்தையா ஆராய்ச்சிக் கழகம் ஒருங் கிணைந்து நடத்திய இந்த ஆய்வரங்கில் பல்வேறு தலைப்புகளின் கீழ் ஆய்வாளர்கள் ஆய்வுரை வழங்கினர். அது குறித்து விவாதங்களும் நடந்தன.
செப். 29 அன்று காலை 10 மணிக்கு ‘பொது மன்றமும் மாறும் சமூக அடையாளங்களும்’ தலைப்பில் தொடங்கிய முதல் அமர்வை முனைவர் ராஜன்குறை நெறியாள்கை செய்தார். வீ.எம்.எஸ். சுபகுணராஜன் – ‘பெரியார் ஜாதிச் சங்கங்களும் ஜாதி ஒழிப்பும்’ என்னும் தலைப்பிலும், பேராசிரியர் ஜி.அலோசியஸ் – ‘சூத்திரத் தன்மையிலிருந்து சுயமரியாதைக்கு’ என்னும் தலைப்பிலும், பேராசிரியர் சுந்தர் காளி – ‘தமிழகத்தில் பொது மன்ற உருவாக்கமும் திராவிட இயக்கமும்’ என்கிற தலைப்பிலும் ஆய்வுரைகளை வழங்கினர்.
இரண்டாம் அமர்வின் தலைப்பு ‘கல்வியும் – அரசியல் வெளியும்’ என்பதாகும். வீ.எம்.எஸ். சுபகுண ராஜன் நெறியாள்கை செய்த இந்த அமர்வில், முனைவர் பழ. அதியமான் – ‘சேரன்மாதேவி குருகுலப் போராட்டம்’ என்னும் தலைப்பிலும், முனைவர் எஸ். ஆனந்தி – ‘கல்வியும் சமூக நீதியும்; குலக்கல்வி எதிர்ப்புப் போராட்டங்கள்’ என்னும் தலைப்பிலும் , முனைவர் ஆ.இரா. வேங்கடாசலபதி – ‘தி.க. தி.மு.க. இரட்டைக் குழல் துப்பாக்கி’ என்னும் தலைப்பிலும் ஆய்வுரை வழங்கினர்.
மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு மூன்றாம் அமர்வு முனைவர் ரவீந்திரன் ஸ்ரீராமச்சந்திரன் நெறியாள்கையில் ‘பார்ப்பனரல்லாதார் தீண்டாமை’ என்னும் தலைப்பில் நிகழ்ந்தது. முனைவர் ஆ. நீலகண்டன் – ‘நீடாமங்கலம் ஜாதிக் கொடுமையும் சமூக உருவாக்கமும்’ என்னும் தலைப்பிலும், முனைவர் ஆர்.எம். கார்த்திக் – ‘பார்ப்பனர் மீதான விமர்சனம்’ என்னும் தலைப்பிலும் ஆய்வுரை வழங்கினர். நிகழ்வின் இறுதியில் வீ.எம்.எஸ். சுபகுணராஜன் எழுதிய “சாதியும் நிலமும் காலனியமும் மூலதனமும்’ என்ற நூல் வெளியிடப்பட்டது. முனைவர் ஜெயரஞ்சன், நூல் மதிப்புரை செய்தார். பார்வையற்ற முற்போக்காளர் அமைப்பு குரல் ஒலி நாடாவாகப் பதிவேற்றம் செய்துள்ள ‘பெரியார்: இன்றும் என்றும்’ நூல் ஒலிப்பதிவும் இணைய இதழான ‘தமிழ்’ வெளியிட்ட ‘கலைஞர்’ சிறப்பிதழ் குறித்த திறனாய்வும் இடம் பெற்றன. பூ.கோ. சரவணன், அய்.ஆர்.எஸ். திறனாய்வு
செய்தார்.
இரண்டாம் நாள் : இரண்டாம் நாள் செப்.30 அன்று காலை 10 மணியளவில் நான்காம் அமர்வு ‘திராவிட இயக்கத்தின் வீச்சும் தடங்களும்’ என்னும் தலைப்பில் தொடங்கியது. முனைவர் ஆனந்தி நெறியாள்கை செய்தார். ‘பிரண்ட் லைன்’ ஆசிரியர் விஜயசங்கர் இராமச்சந்திரன் – ‘சுயமரியாதை சமதர்மம்’ என்னும் தலைப்பிலும், எஸ்.அன்வர் – ‘திராவிட இயக்கமும் இஸ்லாமியமும்’ என்னும் தலைப்பிலும் பேராசிரியர் சரசுவதி – ‘பெண்களும் திராவிட இயக்கமும்’ என்னும் தலைப்பிலும் ஆய்வுரை வழங்கினர். தேநீர் இடைவேளையைத் தொடர்ந்து அய்ந்தாம் அமர்வு – ‘திராவிட ஆட்சியும் பொருளாதார வளர்ச்சியும்’ என்னும் தலைப்பில் முனைவர் சுந்தர்காளி நெறியாள்கையில் தொடங்கியது. முனைவர் ஜெயரஞ்சன் – ‘குத்தகையாளர் உரிமை நில உடைமை’ என்னும் தலைப்பிலும், முனைவர் கலையரசன் – ‘திராவிட வெகுஜன அரசியலும் சமூகநலத் திட்டங்களும்’ என்னும் தலைப்பிலும், முனைவர் எம். விஜயபாஸ்கர் – ‘திராவிட ஆட்சியில் பொருளாதார கட்டமைப்பு மாற்றங்கள்’ என்னும் தலைப்பிலும் ஆய்வுரை வழங்கினர்.
மதிய உணவுக்குப் பிறகு தொடங்கிய ஆறாம் அமர்வு, ‘தமிழகம்: பன்மை அடையாளமும் கூட்டாட்சியும்’ என்னும் தலைப்பில் நடந்தது. முனைவர் எம். விஜயபாஸ்கர் நெறியாள்கை செய்தார். முனைவர் இரவீந்திரன் – ‘பன்மையுறும் மொழி அடையாளம்’ எனும் தலைப்பிலும், ‘இந்து’ வாசகர் ஆசிரியர் ஏ.எஸ். பன்னீர்செல்வன் ‘திராவிட இயக்கமும் கூட்டாட்சி தத்துவமும்’ எனும் தலைப்பிலும், முனைவர் ராஜன் குறை ‘தமிழ் அகம்: இறையாண்மையின் இரு பொருள் தன்மை’ எனும் தலைப்பிலும் ஆய்வுரை வழங்கினர்.
வீ.எம்.எஸ். சுபகுணராஜன், இந்த ஆய்வரங்கை ஒருங்கிணைத்தார். இரு நாட்களிலும் 200 பார்வையாளர்கள் பங்கேற்று அரங்கம் நிரம்பி வழிந்தது. 200 ரூபாய் பயிற்சியாளர்கள் கட்டணம் செலுத்தி, 150 பேர் இருநாள் அமர்விலும் பங்கேற்றனர் என்பதும், இவர்கள் பெண்-ஆண் இளைஞர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அரங்கத்தில் இளைஞர்கள் கூட்டமே மிகுந்திருந்தது.
பெரியாரியப் பார்வையில் திராவிட அரசியல், சுயமரியாதை இயக்கம் – அதன் சமூகத் தாக்கங்களை விரிவாக அலசிய இந்த ஆய்வரங்கம் வளர்ந்து வரும் புதிய நவீனத்துவம் – சமூகவியல் கோட்பாடுகளின் கண்ணோட்டத்தில் ஆய்வுக்கு உட்படுத்தியது இந்த அரங்கின் சிறப்பு ஆகும். மாறி வரும் புதிய சமூக சர்வதேச சூழலில் பெரியாரியம், திராவிடவியல் கோட்பாடுகளுக்கு புதிய வெளிச்சங்களை யும் அதன் தேவைகளையும் ஆழமாக விவாதித்தன இந்த ஆறு அமர்வுகளும். அண்மைக்கால பெரியாரிய திராவிடர் இயக்க வளர்ச்சிப் போக்கில் இந்த அமர்வு புதிய பாதையைக் காட்டியிருக்கிறது என்றே பார்வையாளர்கள் கருத்து தெரிவித்தனர். ஆய்வு உரைகள் தொகுக்கப்பட்டு, நூல் வடிவம் பெறும் என்று சுப.குணராஜன் அறிவித்தார். – நமது செய்தியாளர்
பெரியார் முழக்கம் 04102018 இதழ்