மலேசியாவின், பினாங்கு மாநில துணை முதல்வர் முனைவர் பேராசிரியர் இராமசாமி அவர்களின் ஒருங்கிணைப்பில், பினாங்கு தமிழர் முன்னேற்ற இயக்கத்தின் சார்பாக, 21-11-2015 அன்று நடைபெறவிருந்த “ஈழத்தில் நடந்த இனப்படுகொலை” தொடர்பான கருத்தரங்கில் உரையாற்ற சென்றிருந்த கழகத் தலைவர் கொளத்தூர் மணியை, 20-11-2015 அன்று மலேசிய திராவிடர் கழகத்தின் சிலாங்கு மாநிலத் தலைவர் தோழர் பரமசிவம், செயலாளர் தோழர் பொன்வாசகம், பொருளாளர் தோழர் அன்பழகன், பெரியாரிய எழுத்தாளர் கவி ஆகியோர் அவர் தங்கியிருந்த அறைக்கு வந்து சந்தித்தனர்.
அடுத்து, அவரை தங்கள் மகிழுந்தில் அழைத்துக் கொண்டு, கி.பி. 11ஆம் நூற்றாண்டில் இராசராச சோழனும், இராசேந்திர சோழனும் கடல் வழியாய் வந்து கால்பதித்த கடாரத்துக்கு ( இன்றைய கெடா மாநிலம் ) அழைத்து சென்று , அங்கு நடக்கும் அகழ்வாய்வு இடங்களையும், புஜாங்க் பள்ளத்தாக்கு எனும் மலை, ஆறு, பள்ளத்தாக்காக உள்ள இயற்கை அழகு கொஞ்சும் பகுதிக்கும் அழைத்து சென்றனர். அங்கு பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள சோழர் கால காசு, சிலைகள், உலோகப் பாத்திரங்கள், கட்டியிருந்த கோவில்களின் சொச்சங்கள், கிடைத்த இரத்தினக் கற்கள் கொண்ட பழம்பொருட் கண்காட்சியைப் பார்த்தனர். திராவிடர்க் கழகத்தின் மூத்த தோழர் ஜெயராமன், கழக ஆதரவாளர் செல்லா ஆகியோர் உடன் வந்து உதவினர். ஐ.நா.வின் யூனெஸ்கோ புஜாங்க் பள்ளத்தாக்கை, எதிர்வரும் 2016ஆம் ஆண்ட்டின் சுற்றுலாத் தளமாக அறிவுத்துள்ள நிலையில், திராவிடர் இயக்கங்கள் அனைத்தும் அங்கு கூடி ஒரு மாநாட்டை நடத்த வேண்டுமென்றும், அதற்காகும் செலவைத் தானே முன்னின்று அங்கத்தைய அரசின் உதவியோடு நடத்தித் தர அணியமாக உள்ளதாகவும் கழக ஆதரவாளர் செல்லா அவர்கள் உற்சாகம் பொங்கக் கூறினார். திரும்பும் வழியில், கெடா மாநில திராவிடர் கழகத் தலைவர் தோழர் கதிரவன், கழகத் தலைவரை வரவேற்று மதிய உணவு வழங்கினார்.
மாலை 4-00 மணிக்கு பினாங்கில் மாநில திராவிடர்க் கழகத்தின் சார்பாக, கழகத் தலைவரை வரவேற்று ஒரு கலந்துரையாடலை நடத்தினர். பினாங்கு மாநில திராவிடர்க் கழகம், இரு அலுவலக அறைகள், கணிணி அறை, கூட்ட அரங்கு ஆகியவற்றுடன் சொந்த கட்டிடத்தில் இயங்கி வருவது குறிப்பிடத் தக்க ஒன்றாகும். மாநிலக் கழகத் தலைவர் மூத்த தோழர் அண்ணாமலை அவர்கள் தாங்கள் மானமிகு வீரமணி அவர்கள் தலைமையை ஏற்று இயங்குபவர்கள் எனினும், தங்கள் நாட்டுக்கும், மாநிலத்துக்கும் வந்திருக்கிற பெரியாரிய இயக்கத்தவர் என்ற தோழமையோடு, இந்த கலந்துரையாடலை நடத்துவதையும், இந்தியாவில் ஏற்பட்டுள்ள இந்து மத வெறியர் ஆட்சியை எதிர்க்க நாம் இணைந்து நிற்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்’
கழகத் தலைவர் அவர்கள் மத்தியில் அரை மணி நேரம் உரையாற்றினார். உரையைத் தொடர்ந்து கழகத் தோழர்கள் எழுப்பியக் கேள்விகளுக்கும் உரிய விளக்கங்களை தந்தார்.அதன் பின்னர் மலேசியத் திராவிடர் கழகத்தின் தேசியக் கழகம் வெளியிட்டுள்ள ஆண்டு மலரையும், பினாங்கு மாநிலக் கழகம் தங்கள் மாநிலக் கழக மாநில மாநாட்டை ஒட்டி வெளியிட்ட மாநாட்டு மலரையும் நினைவுப் பரிசாக வழங்கினர்.
அதன் பின்னர், சிலாங்கு மாநிலத் தோழர்கள், கருத்தரங்குக்காக வருகை தந்திருந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளரைச் சந்தித்து உரையாடினர். கழக நூல்களையும் அவர்கள் பரிசளித்தனர்.