சமூக நீதித் தத்துவத்தின் முன் இந்துத்துவா அரசியல் தோற்கிறது உ.பி. தேர்தல் களம்: நடப்பது என்ன?
உ.பி. தேர்தல் களத்தில் இந்துத்துவா அரசியலை ஆளும் பா.ஜ.க.வும் எதிர்கட்சிகளும் பின்னுக்குத் தள்ளி விட்டு ‘சமூகநீதி’ அரசியலையே முன்னிறுத்தி வருகின்றன.
இந்துத்துவா அரசியலின் ‘சோதனைக் களமாக’ செயல்பட்டது உ.பி.யில் ஆதித்யநாத் தலைமை யிலான பா.ஜ.க. ஆட்சி. ஆனால் படுதோல்வியை சந்தித்து வருகிறது -‘இந்துத்துவா’ அரசியல். இந்துக்களை மதத்தின் அடிப்படையில் ஓரணியில் திரட்ட இஸ்லாமியர்களை எதிரிகளாகக் கட்டமைக்க வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ். தத்துவம். விரைவில் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க விருக்கும் மாநிலம் உ.பி. இஸ்லாமிய வெறுப்பை ஊதி விட்டாலும் இந்துக்களை அணி திரட்ட முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது. ஆதித்ய நாத் ஆட்சி தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிராக செயல்படுகிறது என்று குற்றம் சாட்டி, பா.ஜ.க.வி லிருந்து ஒவ்வொரு பிற்படுத்தப்பட்ட அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினர்களும் விலகி வருவது பா.ஜ.க.வையும் சங்பரிவாரங்களையும் அதிர்ச்சிக் குள்ளக்கியுள்ளது. ஆதித்யநாத் ஒரு பார்ப்பன ரல்லாத உயர்ஜாதியைச் சேர்ந்தவர். அம்மாநில பார்ப்பனர்களும் பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராகவே அணி திரண்டிருக்கின்றனர்.
கடந்த ஜனவரி 11ஆம் தேதி உ.பி.யில் துணை முதல்வராக இருந்த பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் செல்வாக்கு மிக்க தலைவர் சுவாமி பிரசாத் மவுரியா. பா.ஜ.க.விலிருந்து விலகி சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்துள்ளார். இதனால் உ.பி. தேர்தல் அரசியல் ‘இந்துத்துவா’வுக்கும் சமூகநீதிக்குமான போராட்டமாக உருவெடுத்துள்ளது என்று ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் (ஜன.16, 2022) வெளி வந்துள்ள அரசியல் ஆய்வுக் கட்டுரை கூறுகிறது.
பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த அமைச்சர்களும் ஏழு சட்டமன்ற உறுப்பினர்களும் பா.ஜ.க.வுக்கு முழுக்குப் போட்டு சமாஜ்வாடியில் இணைந்துள்ளனர். மவுரியா 5 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியில் 20 ஆண்டுகாலம் இருந்தார். 2016இல் பா.ஜ.க.வில் இணைந்தார். 1980இல் யுவலோக்தள் கட்சியிலிருந்து அவரது பயணம் தொடங்கியது. 1991இல் வி.பி. சிங்கின் ஜனதாதள் கட்சியின் உ.பி. மாநில செயலாளர் 1996இல் பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்தார். மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியில் பிற்படுத்தப்பட்டோருக்கான முகமாக அவர் முன்னிறுத்தப்பட்டார். அம்பேத்கர் சிந்தனைகளில் ஊறிப் போனவர் புத்த மார்க்கத்தை நேசித்தவர். அவர் ‘இந்துத்துவா’ அரசியலக்குத் தாவிய நிலையில் இப்போது மீண்டும் சமூக நீதி அரசியலுக்குத் திரும்பியிருப்பது ‘இந்துத்துவா’வின் தோல்வியையே உணர்த்துகிறது. அவரது மகள் சங்கமித்ரா, பா.ஜ.க.வின் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியில் தொடருகிறார். மவுரியா, குஷ்வகா, சாக்கியா, சைனி ஆகிய பிற்படுத்தப்பட்ட ஜாதியினரிடையே செல்வாக்குள்ள தலைவராக அவர் இருக்கிறார் என்று கூறுகிறது இந்த ஆய்வுக் கட்டுரை.
“பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஓரணியாகத் திரண்டு பார்ப்பனர் மற்றும் உயர்ஜாதியினருக்கு எதிராக பா.ஜ.க. அணியில் திரண்டுள்ளனர் என்றும் 80 சதவீத மக்கள் 20 சதவீத மக்களை எதிர்ப்பதே இந்தத் தேர்தல் என்றும்” பிரச்சாரத்தை பா.ஜ.க. முன்னெடுத்து வருகிறது. இந்துத்துவா சோதனைக் களமாகக் கூறப்பட்ட உ.பி. பா.ஜ.க.வே இப்போது பார்ப்பன உயர்ஜாதி எதிர்ப்பை முன் வைத்து தேர்தல் களத்தை சந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. பார்ப்பனிய சமூகக் கட்டமைப்பைத் தகர்ப்பதற்கு பெரியார் முன் வைத்த முழக்கம். அதைத் தான் இப்போது உ.பி.யில் பா.ஜ.க.வே பேச வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட் டுள்ளது. இதற்கு சமாஜ் வாடி கட்சியில் இணைந்த வுடன் பதிலடி தந்து பேசியிருக்கிறார் மவுரியா. 85 சதவீத பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் எங்கள் பக்கம் தான். 15 சதவீதம் பேர் மட்டுமே பா.ஜ.க.வின் பக்கம் இருக்கிறார்கள். பா.ஜ.க. தான் உயர்ஜாதி பார்ப்பனக் கட்சி” என்று கூறியிருக்கிறார். களத்தில் நிற்கும் இரண்டு பெரிய கட்சிகளுமே சமூக நீதியை – பார்ப்பன உயர்ஜாதி எதிர்ப்பை தேர்தல் களத்தில் முன் வைத்து வருகின்றன.
8 ஆண்டுகளுக்கு முன்பு சுல்தான் பூர் என்ற இடத்தில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட் டோரிடம் பேசிய மவுரியா, “திருமண நிகழ்வு களில் இந்து கடவுள்களை வணங்காதீர்கள்; இந்த இந்து கடவுள்கள் பார்ப்பனர்களால் திட்டமிட்டு நமது மக்களை அடிமைப்படுத்த உருவாக்கப்பட்டவை” என்று பேசினார். இந்தப் பேச்சுக்காக அவருக்கு ‘கைது வாரண்ட்’ பிறப்பிக்கப் பட்டது.
‘இந்து’ ஆங்கில நாளேடு வெளியிட்டுள்ள இந்த ஆய்வுக் கட்டுரை, ‘இந்துத்துவா’ அரசியலை – சமூக நீதி தத்துவம் வீழ்த்தி முன்னேறிச் செல்லும் என்பதை உறுதிப்படுத்துகிறது.
பெரியார் முழக்கம் 20012022 இதழ்