கலைஞருக்கு செய்யக்கூடிய உண்மையான நினைவு அஞ்சலி

50 ஆண்டுகாலம் ஒரு இயக்கத்திற்கு தலைமை தாங்கியவர், 18 ஆண்டுகாலம் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தவர், 80 ஆண்டுகாலம் தமிழகத்தின் பொதுவாழ்க்கையில் பயணித்தவர். எல்லாவற்றிற்கும் மேலாக சமூகத்தின் கடைக்கோடி சமூக பிரிவிலிருந்து அதிகாரத்தின் உச்சிற்கு உயர்ந்த ஒரு மனிதர் கலைஞர் இன்றைக்கு விடைபெற்றுக்கொண்டுவிட்டார்.

95 வயது வாழ்க்கை என்பது ஒரு முழுமையான நிறை வாழ்வுதான். அவர் விட்டுச்சென்ற கொள்கைகளை எப்படி அவர் கட்டி எழுப்பிய இயக்கம் பாதுகாக்க போகிறது என்பதுதான் கலைஞருக்கு செய்யக்கூடிய உண்மையான நினைவு அஞ்சலியாக இருக்கக் கூடும்.

திராவிடர் இயக்கத்தினுடைய அரசியல் கொள்கைகளை ஒழிப்பதற்கும் சீர்குலைப்பதற்கும் இன்றைக்கு திட்டமிட்ட சூழ்ச்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அந்த தடைகளை கடந்து இயக்கத்தை எப்படி முன்னெடுத்துச் செல்ல போகிறோம் என்பது தான் இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு முன்னிருக்க கூடிய மிகப்பெரிய சவால். அந்த சவாலை கடந்து திராவிட முன்னேற்ற கழகத்தின் திராவிட இயக்க அரசியலை தீவிரமாக முன்னெடுத்து செல்வது ஒன்று தான் கலைஞருக்கு செலுத்துகிற நிலையான அஞ்சலியாக இருக்கும் என்பது நமது கருத்து

கண்ணீர் நமக்கு வந்து கொண்டுதான் இருக்கிறது, ஆனாலும் கண்ணீரை துடைத்துக் கொண்டு காலத்தின் சவாலை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இன்றைக்கு உருவாகி கொண்டு இருக்கிறது. திராவிட முன்னேற்ற கழகத்தை சீர்குலைத்து அதை சின்னபின்னமாக்கிவிட்டால் தமிழகத்தில் திராவிட அரசியலை ஒழித்துவிட முடியும் என்ற திட்டமிட்ட சூழ்ச்சி இன்றைக்கு அரங்கேறிக்கொண்டிருக்கிறது என்பதை நிச்சயமாக திராவிட முன்னேற்ற கழக தலைமை புரிந்துகொண்டிருக்கும் என்று நாம் நம்புகிறோம்.

அந்த சூழ்ச்சிகளை முறியடித்து கலைஞர் கட்டியெழுப்பிய சமூகநீதி குறித்த கருத்துகளை, மாநிலங்களுக்கான உரிமை கருத்துகளை, திராவிடர் இயக்கத்தின் தனித்துவமான அடையாளங்களை சமரசம் செய்து கொள்ளாமல் தீவிரமாக முன்னெடுப்பது ஒன்று தான் கலைஞர் உருவாக்கி சென்றிருக்கிற வெற்றிடத்தை நிரப்புவதற்கான சரியான முயற்சியாக இருக்கு முடியும்.

இப்போதே அந்த சூழ்ச்சிகள் அரங்கேறிவிட்டன என்று தான் தோன்றுகிறது. தமிழகத்தின் மூத்த தலைவர் ஒருவருக்கு அண்ணா நினைவிடத்தில் ஒரு பகுதியில் அடக்கம் செய்வதற்கு கூட அனுமதிக்க முடியாது என்று தமிழக அரசு மூலம் ஒரு அறிவிப்பு வருகிறது என்று சொன்னால் இது ஏதோ தமிழக அரசின் குரல் மட்டும் அல்ல இதற்கு பின்னால் மத்திய பார்ப்பன ஆளம்வர்க்கத்தின் குரலும் இருப்பதாக தான் நாம் கருதுகிறோம். எனவே சூழ்ச்சிக்கான திட்டங்கள் இப்போதே துவங்கி விட்டன. இந்த அறிவிப்பு சற்று கூட நாகரீகமற்றது என்பது நம்முடைய கருத்தாகும், எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அரசுனுடைய அனுமதி எதுவும் இல்லாமல் ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கிற நிலையில் அண்ணா நினைவிடத்தில் கலைஞருடைய உடலை அடக்கம் செய்வதில் என்ன தடை இருக்கிறது என்பது நமக்கு புரியவில்லை

தமிழக அரசின் தலைமை செயலாளர் இதுகுறித்து சட்ட பிரச்சனை இருக்கறது என்று சுட்டிக்காட்டி இருக்கிறார். இதில் எந்த சட்ட பிரச்சனையும் கிடையாது, சட்ட தடைகளும் கிடையாது இது திட்டமிட்டு செய்யப்படுகின்ற ஒரு சூழ்ச்சிகரமான முடிவு என்று வழக்கறிஞர்களும் தெளிவாக பதில் சொல்லிவிட்டார்கள்

எனவே தமிழ்நாடு அரசு எங்கிருந்தோ வருகின்ற ஓர் உத்தரவிற்காக அடிபணிந்து தமிழகத்தில் கட்டி எழுப்பிய அரசியல்பண்பாட்டை சீர்குலைக்கும் முயற்சிகளுக்கு தன்னை உள்ளாக்கி கொள்ள வேண்டாம் என்பதே நமது அன்பான வேண்டுகோள், தமிழ்நாடு அரசு இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். *திராவிட முன்னேற்ற கழகம் இப்போது அந்த இயக்கத்தின் முன்னால் எழுந்து நிற்கின்ற சவால்களை எதிர்கொள்வதற்கு துணிவோடு கொள்கை போர்வாள்களாக தங்களை வளர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும்*. இது தான் கலைஞருக்கு நாம் செலுத்துகிற உண்மையான மரியாதை அர்ப்பணிப்பு என்று திராவிடர் விடுதலைக் கழகம் கருதுகிறது

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கலைஞருக்கு தலைதாழ்ந்து வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்

கொளத்தூர் மணி
தலைவர்

திராவிடர் விடுதலைக் கழகம்*

You may also like...