அறநிலையத் துறை முதல்முறையாக நியமனம் பார்ப்பனரல்லாதார் அர்ச்சகரானார்!

தமிழ்நாடு அறநிலையத்துறை நிர்வகிக்கும் மதுரை கோயில் ஒன்றில் பார்ப்பனரல்லாத ஒருவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2005 ஆம் ஆண்டு முதல்வராக கலைஞர் இருந்த காலகட்டத்தில்தான் தமிழகத்தில் பார்ப்பனரல்லாத பிற சாதியினருக்கும் அர்ச்சகர் பணி வழங்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 2007-08ஆம் ஆண்டு அனைத்து சாதியில் இருந்தும் 206 பேர் அர்ச்சகர் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்டனர். அதில், ஒருவருக்கு பணி நியமனம் வழங்கப் பட்டுள்ளது. தமிழக அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயிலில் பார்ப்பனரல்லாத  ஒருவருக்கு அர்ச்சகர் பணி வழங்கப் படுவது இதுவே முதன்முறை.

இது குறித்து இந்து சமய அற நிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஒவ்வொரு கோயிலுக் கும் ஒரு ஆகமவிதி உள்ளது. அந்தக் கோயில்களின் ஆகமவிதிகளுக்குட் பட்டே அர்ச்சகர் நியமனம் நடை பெறும். கோயில் செயல் அதிகாரி நேர்காணல் கண்டு ஆகம விதிகளுக்குட்பட்டு அர்ச்சகர்களைத் தேர்வு செய்வார்கள். எந்தச் சாதியைச் சேர்ந்தவர்களும் பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், ஆகம விதிகளுக்குட்பட்டுதான் தேர்வு நடைபெறும்” என்றார்.

தமிழ்நாடு பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் சங்கத் தலைவர் ரங்கநாதன், “ஏதோ ஒரு சிறிய கோயிலில் பார்ப்பனரல்லாதோர் அர்ச்சகராகப் பணிக்கு நியமிக்கப் பட்டால் மட்டும் போதாது. தமிழகத்தின் முக்கியமான பெரிய கோயில்களில் அனைத்து சாதி யினரும் அர்ச்சகர் களாக நியமிக்கப் பட வேண்டும். அப்போதுதான் கோயில்களில் அர்ச்சகர் நியமனத் தில் நிலவும் சாதிய பாகுபாடு தீரும்” என்கிறார்.

1971இல் தமிழக சட்டமன்றத்தில் தந்தை பெரியார் கோரிக்கையை ஏற்று, முதல்வர் கலைஞர் அனைத்து ஜாதி யினரும் அர்ச்சகராவதற்கான ஒரு மசோதாவைக் கொண்டு வந்து ஒரு மனதாக நிறைவேற்றினார். தமிழகப் பார்ப்பனர்கள் அதை உச்சநீதிமன்றம் சென்று முடக்கினர்.

பிறகு 2006ஆம் ஆண்டு கலைஞர் முதல்வரானவுடன் இதே கோரிக்கைக்காக ஆணை பிறப் பித்தார். இதை எதிர்த்து தொடரப் பட்ட வழக்கில் 2015இல் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ‘அனைத்து ஜாதி யினரும் அர்ச்சகராகலாம்; ஆனால் ஆகம விதிகள் அடிப்படை உரிமை’ என்று தீர்ப்பளித்தது. ஆகம விதிகள் பார்ப்பனர் அர்ச்சகராக இருக்கும் கோயில்களில் அவர்களே அர்ச்சகர் களாகத் தொடர வேண்டும் என்று கூறுகிறது.

இந்த நிலையில் பார்ப்பனரல்லாதார் அர்ச்சகராகக் கூடிய ஆக விதிகளுக்கு உட்படாத ஒரு கோயிலில் பார்ப்பன ரல்லாதார் ஒருவர் அர்ச்சகராக்கப் பட்டுள்ளார். இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள ஒரு கோயிலில் முதல்முறையாக துறை ரீதியாக இந்த நியமனம் நடந்திருக்கிறது என்பதும், அர்ச்சகர் பயிற்சி பெற்ற 206 பேரில் ஒருவர் தேர்வாகியுள்ளார் என்பதும்  இப்போது கிடைத்துள்ள வெற்றியாகக் கருதலாம்.

பெரியார் முழக்கம் 02082018 இதழ்

You may also like...