தலையங்கம் ஜாதி எதிர்ப்புச் சட்டம்: பிரிட்டன் அரசு பின் வாங்கியது
இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு வேலைக்குப் போகும் பார்ப்பனர்களும் உயர் ஜாதியினரும் தங்களுடைய ஜாதியப் பெருமைக ளையும் ‘தீண்டாமை’ வெறுப்பு களையும் சேர்த்து சுமந்து கொண்டே போகிறார்கள். குறிப்பாக பிரிட்டனில் இந்தியாவிலிருந்து வேலைக்குச் சென்ற ‘தலித்’ மக்களுக்கு எதிராக ‘தீண்டாமை’ மறைமுகமாக திணிக்கப்பட்டே வருகிறது. இதற்காகவே ‘ஜாதிக் கண்காணிப்பு’ என்ற அமைப்பு ஒன்று பல ஆண்டு களுக்கு முன்பே இலண்டனில் உருவாக்கப்பட்டது. ‘ஜாதிப் பாகுபாடு காட்டுவதும் இனபாகுபாடுதான்’ என்று வலியுறுத்திய இந்த அமைப்பு, ஜாதிப் பாகுபாட்டை தடை செய்யும் சட்டம் ஒன்றைக் கொண்டு வர வேண்டும் என்று நீண்டகாலமாக வற்புறத்தி வந்தது. பார்ப்பனர்கள் உயர்ஜாதியினர் ‘இந்து’ மதத்தின் பெயராலும் ‘கோயில் பாதுகாப்புக் குழு’ என்ற பெயராலும் சில அமைப்புகளை ஏற்படுத்திக் கொண்டு இந்தச் சட்டம் கொண்டு வரப்படக் கூடாது என்று அரசை நிர்ப்பந்தித்து வந்தன. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாகவே இது குறித்து விவாதங்கள் பிரிட்டனில் நடந்து வந்தன. ஜாதியப் பாகுபாடு இனப் பாகுபாடுதான் என்று அய்.நா. ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில் பிரிட்டன் நாடாளுமன்றமும் அய்.நா.வின் இந்தக் கொள்கைக்கு ஒப்புதல் வழங்கியது. பிரிட்டன் ஆட்சியே உருவாக்கியுள்ள சமத்துவம் மற்றும் மனித உரிமைக்கான ஆணையமும் இந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டது. இந்த அடிப்படையில் இனப்பாகு பாட்டைத் தடை செய்திருப்பது போல் ஜாதியப் பாகுபாடுகளைத் தடை செய்யும் சட்டத்தை பிரிட்டன் நாடாளு மன்றத்தில் கொண்டுவரவேண்டும் என்று ‘ஜாதி எதிர்ப்பு பாகுபாடுகளுக்கு எதிரான கூட்டணி’ என்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அமைப்பு வலியுறுத்தி வந்தது. இது குறித்து பொது விவாதங்களும் நடந்தன. பிரிட்டனில் அமுலில் உள்ள ‘சமத்துவத்துக்கான சட்டம்-2010இல் இதற்கான 9ஆவது திருத்தமாக ஜாதிப் பாகுபாடுகளும் சமத்துவத்துக்கு எதிரானது என்ற திருத்தம் 2013ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. பிரபுக்கள் சபை இதற்கு ஆதரவாக ஓட்டளித்தது. பிரிட்டன் தொழிலாளர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜெர்மி கார்பைன், இதில் மிகவும் ஆர்வம் காட்டி செயல்பட்டதோடு பிரிட்டிஷ் பொது அவையிலும் இந்தத் திருத்தத்தை சட்டமாக்க முயன்றார். இந்தியாவில் பா.ஜ.க. ஆட்சி வந்தவுடன் நிலைமை முற்றிலும் மாறத் தொடங்கியது. 2014ஆம் ஆண்டு ஜாதியப் பாகுபாட்டுக்கு எதிராக தனிச் சட்டம் தேவை இல்லை என்று ‘இந்து’ அமைப்புகள் குரல் கொடுக்கத் தொடங்கின.
இது குறித்து கருத்துகளைக் கேட்க ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. 13 கேள்விகளடங்கிய பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டு கருத்துகள் கேட்கப்பட்டன. தெற்கு ஆசியாவைச் சார்ந்த 16,000த்துக்கும் அதிகமானோர் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்தனர். இப்போது திடீரென்று பிரிட்டன் தனது முடிவை மாற்றிக் கொண்டு ஜாதிப் பாகுபாட்டை இனப் பாகுபாடாக ஏற்க முடியாது என்று கடந்த ஜூலை மாதம் 23ஆம் தேதி அறிவித்து விட்டது. தலித் அமைப்புகளும் ஜாதி எதிர்ப்பு அமைப்புகளும் அரசின் இந்தத் திடீர் மாற்றத்தால் கடும் ஏமாற்றமடைந் துள்ளனர். அரசு தலித் மக்களை ஏமாற்றிவிட்டது; இந்த முடிவு மிகவும் வேதனைத் தருகிறது. தலித் மக்கள் பாகுபாடுகளுக்கு உள்ளாகி வருவதை ஒரு பிரச்சினையாகவே கருதவில்லை. பிரிட்டனில் வாழும் உயர்ஜாதியினரை திருப்திப்படுத்தவும் இந்தியாவின் உயர்ஜாதியினரை திருப்திப்படுத்தவும் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது என்று ‘ஜாதி கண்காணிப்பு’ என்ற அமைப்பின் தலைவர் சத்பால் மியுமன் கூறியுள்ளார்.
இந்துத்துவா அமைப்புகளின் அரசியல் அதிகாரக் குறுக்கீடுகள் பிரிட்டிஷ் ஆட்சியின் முடிவை மாற்றிச் செய்து விட்டதாகவே ஜாதி எதிர்ப்பு அமைப்புகள் கூறுகின்றன.
பெரியார் முழக்கம் 08112018 இதழ்