விபூதியை அழிக்கக் கூடாதா? பொன் இராதாகிருஷ்ணன் மிரட்டுகிறாரா?

எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு ஸ்ரீரங்கம் கோயிலில் அர்ச்சகர் பூசிய விபூதியை அழித்து விட்டார் என்பதற்காக அவர் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்கிறார், மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன்.

மத அடையாளங்களை தரித்துக் கொள்வது தனி உரிமை; அதைக் கட்டாயப் படுத்த முடியாது. எதிர்க்கட்சித் தலைவர் நெற்றியில் விபூதி பூச மாட்டார் என்பது தெரிந்தும், அர்ச்சகர் பூசியபோது அதை மறுக்காமல் பண்பாடோடு எதிர்க் கட்சித் தலைவர் தடுக்கா மல் ஏற்றுக் கொண்டார். அதற்குப் பிறகு, அதை அகற்றிக் கொண்டிருக்கிறார். அர்ச்சகர் விபூதி பூசி விட்டார் என்ப தற்காக அதை அழிக்கவே கூடாது என்கிறாரா அமைச்சர்?

விபூதி, குங்குமம் வைக்கும் பழக்கமுள்ள அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன், வைணவக் கோயிலுக்குப் போகும்போது அய்யங்கார் அர்ச்சகர் அவரது நெற்றியில் நாமத்தைப் போட்டு விட்டால், அதுவும் இந்துமத புனித சின்னம்தான் என்று அமைச்சர் அதை அழிக்காமல் அதே நாமத்தோடு பவனி வருவாரா?

வடகலை நாமம், தென்கலை நாமத்தை மறுக்கிறது; தென் கலை நாமம் வடகலை நாமத்தை மறுக்கிறது;. இரண்டையும் விபூதி மறுக்கிறது. அனைத்து அடையாளங்களும் இந்துமத அடை யாளங்கள்தான். இருந்து விட்டுப் போகட்டுமே என்று நினைக்காமல், சொந்த மத அடையாளங்களை மறுக்கும் இவர்களுக்கு, விபூதியைப் புறக்கணித்தால் மட்டும் ஏன் கோபம் வர வேண்டும்?

குன்றக்குடி அடிகளார், பெரியாருக்கு விபூதி பூசிய போது, பெரியார் அதை அழிக்க வில்லை என்கிறார், அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன். அடிகளார் பெரியாருக்கு விபூதி பூசவில்லை. அடிகளாரின் உதவியாளர்தான் வழமையான சடங்காக பெரியார் நெற்றியில் விபூதியைப் பூசினார். ஆனாலும் பண்பாடு கருதி பெரியார் அதைத் தடுக்காமல், அதற்குப் பிறகு அப்போதே அதை அகற்றி விட்டார். இதுதான் உண்மை. ‘அரைகுறை’ செய்திகளை  அமைச்சராக இருப்பவர் உளறிக் கொட்டக் கூடாது.

கடவுள் நம்பிக்கையோடு விபூதி உள்ளிட்ட மதச் சின்னங்களை ‘பயபக்தி’யோடு ஏற்றுக் கொண்டிருக்கும் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்து வார்களாம். அவர்கள் நிலங்களை பசுமை வழிச் சாலைக்காக பறிப்பார்களாம்; நீட் தேர்வை திணிப்பார்களாம்;

இப்படி ‘விபூதியும் – நாமமும்’ போடும் மக்களின் வாழ் வுரிமையைப் பறிப்பவர்கள் தான் இப்போது ‘விபூதி’க்காக பொங்கி எழுகிறார்கள்!

பெரியார் முழக்கம் 28062018 இதழ்

You may also like...