சென்னையில் கழக மாநாடு எச்சரிக்கை

காவிரிப் பாசனப் பகுதியிலிருந்து இராணுவத்தை வெளியேற்று!

சென்னையில் 30.04.2018இல் நடந்த திராவிடர் விடுதலைக் கழக தன்மானம் – தன்னுரிமை மீட்பு மண்டல மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

இராணுவமயமாக்காதே! – காவேரி பாசனப் பகுதியை வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்ற உழைக்கும் மக்களின் கோரிக்கையைப் புறந்தள்ளி, பாசனப் பகுதியை நஞ்சாக்கும் – மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களைத் திணித்து வருகிறது நடுவண் ஆட்சி; மக்கள் – வாழ்வுரிமைக்கான போராட்டத்தை துணி வுடன் அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் தொடர்ந்து நடத்தி வரும் நிலையில் – நடுவண் ஆட்சி  – போராடும் மக்களை மிரட்டவும் – ஒடுக்கவும் துணை இராணுவப் படையை இறக்கி – காவிரி பாசனப் பகுதியை இராணுவ மயமாக்கி வருவதை – இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது;  இராணுவத்தைக் கொண்டு மக்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தை நசுக்க முயன்றால் – அது மக்கள் புரட்சியாக வெடிக்கும் என்று – இம்மாநாடு எச்சரிக்கிறது.

தமிழகக் கல்வி உரிமையில் குறுக்கிடாதே! : கிராமப்புற மாணவர்களின் – மருத்துவப்படிப்பை முடக்கும் ‘நீட்’  தேர்விலிருந்து – தமிழகத்துக்கு விதிவிலக்கு தரவேண்டும் என்ற தமிழக சட்ட மன்றத்தின் ஒருமித்த தீர்மானத்தைக் குப்பைக் கூடையில் வீசி எறிந்து விட்டது நடுவண்ஆட்சி; கடந்த ஆண்டு நீட் தேர்வால் – பின்தங்கிய மாவட்டங்களிலிருந்து படிக்க வரும் மாணவர்களின் எண்ணிக்கை கடுமையாக சரிந்துவிட்டது;  இப்போது மேலும் ஒரு அடி விழுந்திருக்கிறது; கிராமப்புறங்களில் மருத்துவ சேவை செய்யும் அரசு மருத்துவர்களுக்கு மேல்பட்டப் படிப்புகளில் – டிப்ளோமோ வகுப்பில் 50 சதவித இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட முறையும் நீக்கம் செய்யப்பட்டு விட்டது;  அத்துடன் இனி மருத்துவ பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கான இறுதியாண்டு தேர்வு – அகில இந்திய தேர்வாக நடக்கும் என்று தேசிய மருத்துவ ஆணையம் கூறுகிறது; இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் –மருத்துவக் கல்லூரிகள் அதிகம்;  காமராசர் காலத்திலிருந்து தொடர்ந்து – பின்பற்றப்பட்டு வந்த சமூக நீதிக்கல்வியில் – தமிழ்நாடு மருத்துவத்துறையில் – இந்தியாவிலேயே முதலிடத்தில் நிற்கிறது;  இந்த சமூக நீதியையும் கிராமப்புற மருத்துவ சேவையையும் முற்றாக சீர்குலைக்கும் அதிரடி நடவடிக்கைகளை நடுவண் அரசு தொடர்ந்து மேற்கொண்டு – தமிழ்நாட்டு மக்கள் மீது – போர்தொடுத்து வருவதை – தமிழக மக்கள் இனியும் சகிக்க மாட்டார்கள் ;  தமிழக கல்வி உரிமையிலிருந்து நடுவண் அரசு ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்றும் – தமிழ்நாட்டு மக்களின் உரிமை சார்ந்த – உணர்வுகளோடு விளையாட வேண்டாம் என்றும் இம்மாநாடு நடுவண்அரசை எச்சரிக்கிறது.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை உறுதி செய்! : தலித் மக்களின் பாதுகாப்புக் கவசமாக நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை – உச்ச நீதிமன்றம் – நீர்த்துப்போகச் செய்தது – உச்சநீதிமன்றத்தின் வரம்பு மீறியச் செயலாகும்;  இந்தச் சட்டம் முறையாக செயல்படுத்தப்படாமல் இருப்பதுதான் உண்மை நிலையாகும்;  சட்டத்தில் குற்றம் சாட்டப் பட்டவர்கள் அதிக அளவில் விடுவிக்கப்படுவதற்குக் காரணம் – சட்டத்தை அமுல்படுத்தும் அதிகார வர்க்கத்தின் அலட்சியமே தவிர சட்டத்தின் தோல்வி அல்ல;  எனவே உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நிராகரிக்கும் சட்டப்பாதுகாப்புகளை உறுதி செய்ய நடுவண் ஆட்சி முன்வரவேண்டும்;  அதற்கு அனைத்துக் கட்சியினரும் ஆதரவு தரவேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

15ஆவது நிதிக் குழுவின் அநீதி : 15ஆவது நிதிக்குழு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்காக உருவாக்கியுள்ள புதிய கோட்பாடுகள் – வடமாநிலங்களை விட வளர்ச்சியடைந்த தமிழ்நாடு உள்ளிட்ட தென்னக மாநிலங்களுக்கு கடும் பாதிப்புகளை உருவாக்குவதாகும்.  வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் என்பதற்காகவே தண்டிக்கப்படு கின்றனர்;  இந்த அநீதியை எதிர்த்து – தென்னக மாநிலங்களின் – ஒருமித்த வலிமையான கண்டனத்தைத் தெரிவிக்க கேரள நிதியமைச்சர் – தென்னக நிதி அமைச்சர்களின் மாநாட்டைக் கூட்டினார்;  இந்த மாநாட்டில் நடுவண் அரசுக்கு அஞ்சி நடுங்கி – தமிழக நிதியமைச்சர் பங்கேற்க வில்லை;  இது தமிழ்நாட்டு மக்களுக்கு இழைத்த துரோகம்;  ஆட்சி அதிகாரத்துக்காக – தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை – நடுவண் பா.ஜ.க பார்ப்பனிய ஆட்சியிடம் அடகு வைக்கும் – தமிழக ‘சரணாகதி’ ஆட்சியை இம்மாநாடு வண்மையாகக் கண்டிக்கிறது.

‘வடநாட்டு அதிகாரிகளே; வெளியேறு!’ – தமிழ்நாட்டில் மத்திய அரசு அலுவலகங்களில் – தேசியமய வங்கிகளில் – வடநாட்டுக்காரர்கள் – ஏராளமாக குவிந்துவிடுகிறார்கள்;  தமிழ் மொழியே அறிந்திடாத – தமிழ்நாட்டுக் கலாச்சாரத்தோடு எந்தத் தொடர்பும் இல்லாத வடமாநில அதிகாரிகள் – தமிழ்மக்களின் வேலை வாய்ப்பு உரிமைகளைப் பறித்து – குறுக்கு வழியில் பதவிகளைப் பிடித்துவரும் முறைகேடுகள் அவ்வப்போது அம்பலமாகி வரு கின்றன;  இந்நிலையில் – “வடநாட்டு அதிகாரிகளே, வெளியேறுங்கள்” என்ற இயக்கத்தைத் தொடங்க – தமிழர்கள் தயாராகுமாறு, இம்மாநாடு அறைகூவல் விடுக்கிறது.

சேகர் – ராஜாவை கைது செய்க : தமிழ்நாட்டு பெண் ஊடகவியலாளர்களின் சுயமரியாதையை அவமதித்து – அவர்களை இழிவு செய்து முகநூல் பதிவிட்ட நடிகர் எஸ்.வி.சேகர் – முன்பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்ட பிறகும் கைது செய்யப்பட வில்லை;  தமிழ்நாட்டின் மதிப்புமிக்க தலைவர்களை – தனது திமிர்ப்பேச்சால் – அவ்வப்போது ‘நஞ்சு கக்கி’ – தமிழகத்தில் கடும் எதிர்ப்புகளை சந்தித்துவரும் பா.ஜ.க வின் தேசிய செயலாளர் எச்.ராஜா மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  பார்ப்பனர் என்றால் அவர்கள் எந்தக் குற்றம் செய்தாலும் தண்டிக்கப்படக்கூடாது என்ற ‘மனுகால’ சட்டத்தை தமிழக காவல்துறையில் – தமிழக அரசும் இவர்களிடம் பின்பற்றாமல் – இந்தியத் தண்டனைச் சட்டத்தைப் பயன்படுத்த முன்வர வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

 

கழகத்தில் இணைந்தனர்

ஏற்கனவே பத்ரியோடு இணைந்து  பெரியார் திராவிடர் கழகத்தில் செயல்பட்ட  கரு. அண்ணாமலை, சென்னை மாநாட் டில் கழகத்தில் இணைந்தார். அவரது தலைமை யில் இணைந்த தோழர்கள்: க. சுப் பிரமணி,  மாசிலா விநாயகம், வீ. பொற்கோவன், மதிவாணன், சிலம்பம் சிவாஜி, கரிகாலன், மதன் குமார், செயசீலன், மணிமொழியன், துரைராஜ், முவேந்தன், கண்ணன், குலசேகரன், மணி பாரதி, க. செல்வம், கவிஞர் மன்னார், சூளை பள்ளம் பெரியார் செல்வம், இராஜசிம்மன், அனகை சிர்த்தான், அருண், இராஜரத்தினம், வீரமணி அம்பேத்கார், தம்பி சேகுவாரா வெங்கடேசு, யமுனா,  சட்டக் கல்லூரி மாணவர்கள் அ. அன்பரசன், ப. சுரேஷ்குமார், அம்பேத்கர் துரை, இரா ஜீவ ரத்தினம், அனிதா, மோனிசா, விஜி, மணிமொழியன், குமார், கி. மூர்த்தி மற்றும் அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கத் தலைவர் இல பாண்டியராஜன் தலைமையில் இயங்கும்  மன்றத்தின்  சங்கர் சுரேஸ், மனோகரன் கார்த்தி, கோபி, திவியராஜ், பக்தசலம், கலை நிதி ஆகியோர் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொது செயலாளர் விடுதலை இராஜேந்திரன் முன்னிலையில் திராவிடர் விடுதலைக் கழகத்தில்  இணைந்தார்கள். இனி அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கம், திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பு இயக்கமாக செயல்படும்.

பெரியார் முழக்கம் 03052018 இதழ்

You may also like...