தூக்குத் தண்டனை தீர்வு அல்ல!
12 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளை கட்டாய பாலுறவு வன்முறைக்கு உள்ளாக்குகிறவர்களுக்கு தூக்குத் தண்டனை வழங்கும் அவசர சட்டம் ஒன்றைக் குடியரசுத் தலைவர் பிறப்பித்திருக்கிறார்.
ஜம்முவில் கத்துவா பகுதியில் முஸ்லிம் நாடோடி சமூகத்தைச் சார்ந்த ஆசிஃபா என்ற எட்டு வயதுப் பெண், ஜம்மு பண்டிட்டுகளால் (பார்ப்பனர்களால்) காவல்துறை ஒத்துழைப்புடன் கூட்டுப் பாலுறவு வன்முறைக்கு உள்ளாக்கி, சித்திரவதை செய்து கொலை செய்த நிகழ்ச்சி, சர்வதேச அளவில் மோடி ஆட்சியின் மானத்தைக் கப்பலேற்றிவிட்டது. அதற்கு எதிர்வினையாக இந்த அவசர சட்டம் வெளி வந்திருக்கிறது.
தூக்குத் தண்டனை என்ற தண்டனையே சட்டப் புத்தகத்திலிருந்து நீக்க வேண்டும் என்று அய்.நா. உட்பட உலக நாடுகளிலிருந்து வலிமையான குரல் எழுப்பப்பட்டு வருகிறது. சட்டத்தில் தூக்குத் தண்டனை இருப்பதாலேயே குற்றங்கள் குறைந்து விடுவதில்லை என்பதையும் ஆய்வுகள் உணர்த்தி வருகின்றன.
கத்துவாவில் ஆசிபா பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டு கோரமாகப் படுகொலை செய்யப்பட்டதை பாலுறவு வன்முறை சம்பவமாக மட்டுமே குறுக்குவதே தவறான பார்வை. பா.ஜ.க. இதை ஒரு கிரிமினல் குற்றம் என்றே இந்தச் சம்பவத்தை சித்தரித்து இதற்குப் பின்னால் உள்ள இஸ்லாமிய வெறுப்பு அரசியலை மூடி மறைக்கப் பார்க்கிறது.
ஜம்மு பகுதி முழுமையாக ‘இந்து’க்களுக்கானது என்று சொந்தம் கொண்டாடும் காஷ்மீர் பார்ப்பனர்கள் (பண்டிட்டுகள்) அப்பகுதியில் நாடோடி இஸ்லாமியர்களான ‘பேக்வார்’ சமூகத்தினர் தற்காலிகமாகக் கூடாரமடித்துத் தங்குவதைக்கூட அனுமதிக்கக் கூடாது என்ற நோக்கத்துடன் நடத்திய அச்சுறுத்தல்தான் ஆசிஃபா கோரக் கொலை. இந்த மத வெறுப்பு அரசியலைத் துண்டித்துவிட்டு, பாலுறவு வன்முறையாக மட்டுமே சித்தரிக்க முயலும் சங் பரிவார், தங்களது நிலைப்பாட்டை நியாயப்படுத்தவே இந்த அவசரச் சட்டத்தைப் பிறப்பித்திருக்கிறது.
வேத மதமான பார்ப்பனிய இந்து மதம், பெண்களின் சமத்துவத்தை மறுக்கிறது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இன்றும்கூட ஒரு பெண் ‘சுயம் சேவக்காக’ முடியாது. அதன் முன்னணி அமைப்புகளில் மட்டும் பெண்களை சேர்க்கிறார்கள். மதத் தடைகளை எதிர்த்து பெண்களுக்கான கல்வி, அதிகார உரிமைகளை வழங்கவும், அதற்கு மக்களை தயார்ப்படுத்துவதற்குமான விழிப்புணர்வு இயக்கங்களை நடத்த வேண்டும்.
தூக்குத் தண்டனைச் சட்டங்களால் பெண் குழந்தை மீதான பாலுறவு வன்முறைகளைத் தடுத்து விடலாம் என்று கருதிட முடியாது. அரிதினிலும் அரிதான வழக்குகளில் தூக்குத் தண்டனை வழங்கும் சட்டம் இப்போதும் நடைமுறையில்தான் இருக்கிறது. அதற்காகக் கொலைகள் நின்று போய் விட்டதா? ஒரு சமூகம் ஏன் குற்றங்களை இழைக்கும் மனநிலைக்குத் தள்ளப்படுகிறது? அதற்குப் பின்னால் உள்ள மதவெறி மற்றும் அரசியல் சமூகப் பொருளாதாரக் காரணிகளை நீக்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டுமே தவிர, தூக்குத் தண்டனை அதற்குத் தீர்வாகிட முடியாது.
பெரியார் முழக்கம் 26042018 இதழ்