களப் போராளி பத்ரியின் நினைவுச் சுவடுகள்’’ -விடுதலை இராசேந்திரன்
1996ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் நாள் சென்னையில் பெரியார் சிலை முன் 120 திராவிடர் கழக இளைஞர்கள் பழைய கருப்புச் சட்டையை கழற்றி புதிய கருஞ்சட்டை அணிந்து திராவிடர் கழகத்திலிருந்து விலகி பெரியார் திராவிடர் கழகமாக செயல்பட உறுதி ஏற்றனர். அந்த நிகழ்வுக்கு நான் தலைமை தாங்கினேன். அந்த 120 இளைஞர்களில் பெரும்பான்மை இளைஞர்கள் இராயப்பேட்டை யில் பெரியாரியலை முன்னெடுத்த களப்பணியாளர் தோழர் பத்ரி நாராயணனால் உருவாக்கப் பட்டவர்கள்.
இந்தப் புதிய அமைப்பு, திராவிடர் கழகம் நடைபோட்ட பாதையிலிருந்து விலகி புதிய திசையில் பயணித்து இயக்கப் போக்கில் பண்பு மாற்றங்களை உருவாக்கியது என்றே சொல்லலாம். அதில் முதன்மையான கூறு பார்ப்பன ஆதிக்க எதிர்ப்போடு நின்றுவிடாமல் பார்ப்பனீயத்தை உள்வாங்கி ஜாதி வெறியோடு பட்டியலின மக்களுக்கு எதிராக நின்ற இடைநிலை ஜாதிகளின் பார்ப்பனீ யத்தையும் இணைத்து எதிர்க்க வேண்டும் என்பதாகும். பட்டியல் இனப்பிரிவு மக்களின் போராட்டங்களோடு கரம் கோர்த்த பெரியார் திராவிடர் கழகம் தோழமை சக்தியாக மட்டும் நின்றுவிடாமல் அம்மக்களுக்கான போராட்டங் களையும் தீவிரமாக முன்னெடுத்தது.
அசைக்க முடியாத பார்ப்பனக் கோட்டையாக அதிகாரத் திமிருடன் வலம் வந்த சென்னை அய்.அய்.டி.யின் தலித் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்தது. தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தலையிட்டு நடவடிக்கை எடுக்கக்கூடிய சூழலை உருவாக்கியதோடு தலித் மக்களின் உரிமைப் போராட்டத்தில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த அறிவுஜீவிகளையும் முற்போக்கு இயக்கங் களையும் ஒரே குடையின் கீழ் இணைத்து அதில் வெற்றியும் கண்டது. பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப்பில் சமூக நீதி மீட்பு இயக்கம் உருவானது. அப்படி பெரியார் திராவிடர் கழகம் பட்டியலினப் பிரிவினரின் ஆதரவு நிலை எடுத்துப் போராட வேண்டும் என்ற கருத்தில் உறுதியாக நின்றவர் பத்ரி நாராயணன். அதே போல் இஸ்லாமியர்களின் ஆதரவு நிலைப்பாட்டிலும் உறுதி காக்க வேண்டும் என்பதில் அவர் முனைப்புக் காட்டினார்.
அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தாக்குதலின் போது இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக மேற்குலகம் சித்தரித்தது. அந்தச் சூழலில் சென்னை யில் அன்றைய தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகளுடன் இணைந்து தொடர் கூட்டங்களை பெரியார் திராவிடர் கழகம் நடத்தியது. அந்தக் கூட்டங்களை இஸ்லாமியர் அமைப்புடன் கலந்து பேசி ஒருங்கிணைத்தவர் பத்ரி நாராயணன்தான். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சூழ்ச்சிகர அரசியலை அந்த மேடைகள் அம்பலப்படுத்தின.
இராயப்பேட்டையில் “வி.எம்.தெரு” பகுதி பல குறுகிய சாலைகளையும் நெரிசலான வீடுகளையும் கொண்டிருக்கும் பகுதி. ஒரு காலத்தில் சமூக விரோத செயல்பாடுகள், போதைப் பொருள் விற்பனை என்று இளைஞர்கள் திசை மாறிப்போய் காவல்துறையின் தீவிர கண்காணிப்புக்கு உள்ளாகியிருந்த பகுதி. அந்தப் பகுதியில் பெரியார் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட பத்ரி நாராயணன், ஏராளமான இளைஞர்களை பெரியாரியல் பாதைக்குத் திருப்பினார். அவர்களிடம் பொது ஒழுக்கத்தை வளர்த்தெடுத்தார். அவர்கள் சுக துக்கங்களில் பங்கேற்றார்.
‘வன்னியர் – யாதவர்’ என்ற இடைநிலைச் சாதியினர் அதிகமாக வாழும் அந்தப் பகுதியில் இளைஞர்களிடையே ஜாதி ஒழிப்புக் கருத்தியலுக்கு முன்னுரிமை தந்து களமாடினார். ஜாதி மறுப்புத் திருமணங்கள் ஏராளமாக நடைபெறத் தொடங்கின. அந்தத் திருமண நிகழ்வுகளில் திருமணத்துக்கான அழைப்பிதழ்களில் பெரியார் படத்துடன் அம்பேத்கர் படத்தையும் போடுவதை வழக்கத்திற்கு கொண்டு வந்தவர் பத்ரி. பெரியார் திராவிடர் கழகத்தின் சுவரொட்டிகள் எதுவாக இருந்தாலும் பெரியார் படத்துடன் அம்பேத்கர் படமும் இணைக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். பத்ரி பிறப்பால் ‘தலித்’ அல்ல. ஆனால் ஜாதி அடையாளம் கடந்து சுயஜாதி மறுப்போடு செயல்பட்டவர்.
பெரியார் திராவிடர் கழகம் தொடங்கப்பட்ட பிறகு அதில் இணைத்துக் கொண்ட இளைஞர் களின் வாழ்க்கை ஒப்பந்த நிகழ்வுகள் ஏராளம் நடந்தன. அவை பெரும்பாலும் ஜாதி மறுப்புத் திருமணங் களாகும். அத்திருமணங்களை முன்னின்று ஏற்பாடு செய்தவர் பத்ரி. ஆனூர் செகதீசன் தலைமையில் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் தான் மணவிழாக்கள் நடந்தன. பத்ரி நாராயணன் – சுதா இணையரின் திருமண மும் அந்த காலக்கட்டத் தில் தான் நடந்தது (28.11.96) திருமணத்துக்குப் பிறகு பத்ரி தனது துணை வியார் தாயாருடன் குடியிருந்தது இராயப் பேட்டையில் உள்ள சின்னஞ்சிறு ‘ஒற்றைக் குடித்தன’ வீடு. அது தான் பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமையகமாக பதியப்பட்டது.
(61, வெங்கடாசலம் தெரு, இராயப்பேட்டை)
பத்ரிநாராயணன் திராவிடர் கழகத்தில் தீவிரமாக இளைஞரணியில் செயல்பட்ட காலத்தில் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள பெரியார் அறக்கட்டளைக்குச் சொந்தமான வணிக வளாகத்தில் மார்வாடி வர்த்தகர் ஒருவர் வீண் தகராறுகளை உருவாக்கினார். அது அடிதடி கலவரமாகியது. அப்போது தனது பகுதித் தோழர்களுடன் மார்வாடிக்கு எதிராக களமிறங்கிய பத்ரியை மார்வாடியின் அடியாட்கள் தனிமைப்படுத்தி கடையின் கதவை மூடி உள்ளே மூர்க்கத்தனமாகத் தாக்கினர். உடல் முழுதும் சுமார் 20 தையல் போடப்பட்ட நிலையில் பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் பத்ரி தோழர்களோடு அமர்ந்திருந்தபோதுதான் நான் அவரை முதன்முதலாக சந்தித்து உரையாடினேன். அப்போது நான் ‘விடுதலை’ ஏட்டில் பணியாற்றி வந்தேன்.
திராவிடர் கழக இளைஞரணியில் செயல்பட்ட போது அவரது முயற்சியால் வி.எம்.தெரு சந்திப்பில் வைக்கப்பட்டதுதான் பெரியார் சிலை. அந்த சிலை திறப்பு விழாவில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி பங்கேற்றார். அப்போது அரசியல் அணிகளில் ‘எதிரும்-புதிருமாக’ இருந்த கட்சிகளின் பகுதித் தலைவர்கள் அனைவரையும் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க வைத்து, ஒரே மேடையில் ஏற்றி பெரியார் சிலை அப்பகுதி வாழ் மக்களின் முழுமையான ஆதரவோடு நிறுவப்படு கிறது என்பதை உணர்த்திக் காட்டினார். அனைத்துக் கட்சிப் பொறுப்பாளர்களும் பத்ரியின் நேர்மை, பொது ஒழுங்கு, ஓடிச் சென்று உதவிடும் பண்புகளால் ஈர்க்கப்பட்டு அவரிடம் பெருமதிப்புக் காட்டினர். அதுவே கழகத்தின் வளர்ச்சிக்கும் உரமாக அமைந்தது. தனது சொந்த நலனுக்கு இயக்கத்தைப் பயன்படுத்தாத உயர்ந்த பண்பும், ‘பணம் கொடுக்கல் வாங்கல்’ என்ற நாணய ஒழுங்கில் நூறு சதவீத நேர்மையும் அவரிடமிருந்தது. தனது குடும்ப வருமானத்துக்காக அவர் அவ்வப்போது திறந்த மாலை நேர பிரியாணிக் கடைகளையும் உணவு விடுதிகளையும் தொடர்ந்து நடத்த முடியாமல் மூட வேண்டியதாயிற்று. ஒவ்வொரு முறையும் கழகத்தின் பெரிய நிகழ்ச்சிகள் நடக்கும்போது இயக்கப் பணியால் கடையை கவனிக்க முடியாமல் மூடப்படுவது வழக்கமானது.
இராயப்பேட்டை பெரியார் சிலை இருக்கும் பகுதியைச் சுற்றி, பிரபலமான நாகாத்தம்மன் கோயில் இருக்கிறது. கோயிலுக்கு வரும் பக்தர்கள், கோயில் நிர்வாகிகள் இன்று வரை கழகத்திடம் நல்லுறவு பேணும் பண்பாடு தொடர்கிறது என்றால், அதற்கு வித்திட்டது பத்ரிதான்.
பகுதி மக்கள் ஆதரவோடு கழகத்தின் கோட்டை யாகியது இராயப்பேட்டை. மதவாத சக்திகள் நுழைய முடியாத அப்பகுதியில் வினாயகன் சிலை ஊர்வலத்துக்காக விநாயகன் சிலையை அப்பகுதியில் நிறுவ இந்து முன்னணி திட்டமிட்டு, திடீரென்று இந்து முன்னணித் தலைவர் இராம கோபாலன் ‘அடியாட்களை’த் திரட்டிக் கொண்டு பகுதிக்குள் வர இருந்தார். நாகாத்தம்மன் கோயில் அர்ச்சகர் இது பற்றி தமக்கு ஏதும் தெரியாது என்று கூறியதோடு, மதக் கலவரம் இல்லாத பகுதியில் விநாயகன் சிலை வைப்பதைத் தாம் விரும்பவில்லை என்று கைப்பட கடிதம் எழுதி பத்ரியிடம் தந்தார். பகுதி தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட அத்தனை கட்சிப் பிரமுகர்களும் இந்தப் பகுதியில் விநாயகன் சிலை வேண்டாம் என்று கையெழுத்திட்டு கடிதம் தந்தனர். கோயில் அர்ச்சகர் கடிதம், பகுதி வாழ் கட்சித் தலைவர்கள் கடிதத்தோடு காவல்துறையிடம் புகார் அளிக்க தோழர்களுடன் பத்ரி போனார். காவல்துறையினரும் அது குறித்து தங்களுக்கே தெரியாது என்று கூறினர். எதிர்ப்புகளை மீறி இராமகோபாலன் ஒலி பெருக்கி முழக்கங்களுடன் பகுதியில் விநாயகன் சிலை நிறுவ நுழைந்தபோது, “பதற்றத்தை உருவாக்க வேண்டாம் திரும்பிப் போய் விடுங்கள்” என்று இராமகோபாலனிடம் பத்ரி தலைமையில் தோழர்கள் அமைதியாக வேண்டு கோள் வைத்தனர். உடன் வந்த அடியாட்கள், ஆயுதங்களை எடுத்துத் தாக்கத் தொடங்கியவுடன், கழகத் தோழர்கள் திருப்பித் தாக்கினர். தாக்க வந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். ‘இராமகோபாலன் பயந்து நாகாத்தம்மன் கோயிலுக்குள் ஓடிப் போய் பதுங்கிக் கொண்டு கதவை சாத்திக் கொண்டார்’ என்று பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர். இராயப் பேட்டையின் சக்தியை பார்ப்பனர்கள் உணர்ந்தனர்.
பகுதி மக்களை கட்சி மாறுபாடின்றி தமிழர்களாக ஒருங்கிணைக்கும் முயற்சியின் ஒரு செயல்பாடுதான் பத்ரி தொடங்கிய தமிழர் திருநாள் விழா கொண்டாட்டம். அனைத்துக் கட்சியினரை யும் இணைத்து பொங்கல் விழாக் குழுவை உருவாக்கி, ஜனவரி 12ஆம் நாள் பொங்கல் விழா நடத்தும் மரபைத் தொடங்கினார். அந்த விழா பெரியார் கருத்து பரப்பும் கலை விழாவாகவே நடக்கும். இன்று வரை அவர் தொடங்கி வைத்த அந்த விழா 18 ஆண்டுகளாக தொய்வின்றி கழகத் தோழர்களால் நடத்தப்பட்டு வருகிறது.
2001ஆம் ஆண்டு ஆனூர் செகதீசன், கொளத்தூர் மணி, கோவை இராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் செயல்பட்ட பெரியார் அமைப்புகள் ஓரணியாக இணைந்து, ‘தந்தை பெரியார் திராவிடர் கழகமாக’ செயல்படத் தொடங்கியபோது அதுவரை மாத இதழாக வெளிவந்த ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வார இதழாக கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. 2001 ஜனவரியில் அசோக் நகரில் தோழர் மு. பாலகுரு நடத்திய தமிழர் திருநாள் விழா நிகழ்ச்சியில் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வார ஏட்டின் முதல் இதழை – அவ்விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தி.மு.க.வின் மூத்த தோழர், முன்னாள் சென்னை மேயர் சா. கணேசன் வெளி யிட்டார். (அண்மையில்தான் அவர் தனது 85ஆம் அகவையில் முடிவெய்தினார்)
இதழ் வெளியிட எந்த நிதி இருப்பும் இல்லை. ஆனால் வார ஏடாக முதல் இதழ் வெளியிடப்பட்ட அடுத்த நாளே பத்ரி நாராயணன் பகுதி பொங்கல் விழாக் குழுவினரோடு எனது திருவான்மியூர் இல்லம் தேடி வந்து பொங்கல் விழாவுக்காக திரட்டப்பட்ட நிதியில் மீதமான தொகையை விழாக் குழுவினரின் ஒப்புதலோடு கழக ஏட்டுக்கு வழங்குகிறோம் என்று கூறி ரூ.25,000 நிதியை வழங்கினார். ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏடு வெளி வந்ததே தோழர் பத்ரிநாராயணன் வழங்கிய அந்த நிதியிலிருந்துதான் என்பதை பெருமையுடன் சுட்டிக்காட்ட வேண்டும்.
பெரியார் திராவிடர் கழகத்திற்கு இராயப் பேட்டை சைவ முத்தையா 5ஆவது தெருவில் 17.9.2001 அன்று முதன்முதலாக ஒரு தலைமையகம் ‘குத்தகைக்கு’ எடுத்து தொடங்கப்பட்டது. அதற்கான நிதியை தனது சொந்தப் பொறுப்பில் திரட்டி வழங்கியவர் பத்ரிநாராயணன் தான். அதற்காக அலுவலகத் திறப்பு விழாவில் பத்ரி நாராயணனுக்கு ஆடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது. கவிஞர் இன்குலாப் அந்தத் தலைமைக் கழகத்தைத் திறந்து வைத்தார்.
ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்படட 26 தோழர்களுக்கும் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தூக்குத் தண்டனை வழங்கியபோது பெரியார் திராவிடர் கழகம் சிலிர்த்தெழுந்தது. நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்து அடுத்த நாளே கழகம் கண்டன சுவரொட்டிகளை ஒட்டியது. பத்ரி, கேசவன் உள்ளிட்ட 10 தோழர்கள் கைது செய்யப்பட்டு 22 நாள் சிறைவாசத்துக்குப் பிறகு பிணையில் விடுதலையானார்கள். பழ. நெடுமாறன் தலைமையில் நடந்த தூக்குத்தண்டனை எதிர்ப்பு இயக்கத்தில் பத்ரி உள்ளிட்ட பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் பங்கேற்று தமிழகம் முழுதும் பரப்புரைப் பயணத்தில் முக்கிய பங்காற்றினார். இராயப்பேட்டை பகுதி சார்பில் வழக்கு நிதியாக ரூபாய் ஒரு இலட்சம் திரட்டி, இராயப்பேட்டையில் நடந்த தூக்குத் தண்டனை எதிர்ப்பு மாநாட்டில் (1998 ஆகஸ்ட் 26) இரண்டாம் தவணையாக கழக சார்பில் வழங்கப்பட்டது. நிதி திரட்டலில் முழுமையாக செயல்பட்டவர் பத்ரி நாராயணன்.
இராயப்பேட்டை பகுதியில் ‘ரவுடிகள் சாம்ராஜ்யத்தை’ முழுமையாக அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினார் என்ற ஒரே காரணத்துக்காக வன்முறையாளர்கள் அவரது உயிருக்கு குறி வைக்கும் காலத்தை எதிர்நோக்கியிருந்தபோது கழகத்தின் ‘துரோகிகள்’ சிலர் கிடைத்தவுடன் அதைப் பயன்படுத்தி பத்ரி நாராயணனை (2004, ஏப்.30) பட்டப் பகலில் அதே பகுதியில் படுகொலை செய்துவிட்டனர். அவரது உயிர் குறி வைக்கப்படுகிறது என்பதை முன்கூட்டியே தோழர்கள் எச்சரித்த போதும், ‘நமது தோழர்கள் ஒரு போதும் அச்செயலில் இறங்க மாட்டார்கள்’ என்று நம்பிக்கையுடன் கூறினார். தன்னிடம் ‘சுயநலத்துக்காக’ கருத்து மாறுபாடுகள் கொண்ட தோழர்களையும் அவர் தோழர்களாகவே நேசித்து, திருத்தவே முயன்றார்.
பத்ரியிடம் கோபத்தைப் பார்க்க முடியாது; அளவாகவே உரையாடுவார். மாறுபட்ட கருத்துகளை மட்டும் அழுத்தமாக மென்மையான குரலில் எடுத்துக் கூறுவார். அவரது வாய்மொழியைவிட உடல்மொழி நளினமான வெளிப்படும்; நடைமுறைகளைச் சார்ந்தே அவரது முடிவுகள் இருக்கும். ஆவேசத்தைக் கொட்ட மாட்டார். போராட்டம், கூட்டங்களுக்கான அத்தனை ஏற்பாடுகளிலும் அவரது உழைப்பு இருக்கும். ஆனால் மேடை ஏற மாட்டார். கேமிராக்களுக்குள் சிக்க மாட்டார். நெருக்கமான தோழர்களை ‘வாத்தியார்’ என்றே அழைப்பது அவரது வழக்கம். பொருளாதாரப் பின்புலம் ஏதுமில்லை. மத்திய அரசுப் பணியிலிருந்த தனது மாமாவின் ‘ஆதரவு – அரவணைப்பு’டன் வாழ்ந்தாலும் சுயஜாதி உணர்வுகளிலிருந்து அவர் விலகி நிற்க வேண்டிய சூழலில் ‘மாமா’வின் உதவியையும்கூட வேண்டாம் என முடிவெடுத்த கொள்கைக்காரர்.
அவரால் உருவாக்கப்பட்ட தோழர்கள், அவர் உணர்வுகளையும் வாழ்ந்து காட்டிய நெறிமுறைகளையும் நெஞ்சில் சுமந்து களப்பணியாற்றி வருகிறார்கள்.
இலட்சியத்துக்காக களப்பணியாற்றியவர்களுக்கு மரணமில்லை; அவர்களின் உணர்வுகள் அடுத்த தலைமுறையை வழிநடத்திக் கொண்டிருக்கிறது.
– விடுதலை இராசேந்திரன்.
(ஏப்ரல் 30, பத்ரி நினைவு நாள்).
பெரியார் முழக்கம் 26042018 இதழ்