இந்து மதத்திலிருந்து விலகும் லிங்காயத்துகள் – ச.சிவலிங்கம்
கர்நாடக அரசு லிங்காயத்து சமூகத்தின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அவர்கள் இந்துக்கள் அல்ல என்று அரசாணை வெளியிட்டு இருக்கிறது. லிங்காயத்து சமூகத்தின் வரலாற்றுப் பின்னணியை விளக்குகிறது இக்கட்டுரை.
கர்நாடகத்தில் லிங்காயத்தைத் தனிமதமாக அறிவிக்கக் கோரும் போராட்டங்களும் கன்னடக் கொடிக்கான போராட்டங்களும் விவாத மையங் களானதோடு 2018 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் காரணிகளாகவும் உருவெடுத்திருக்கின்றன. அடுத்தடுத்த தேர்தல் வெற்றிகளினூடே கர்நாடகத்தையும் கைப்பற்றி விடலாம் என்ற பாஜகவின் கணக்குக்குப் பெரும் தடைகளாக இப்போது உருவெடுத்திருக்கின்றன இந்த இரு பிரச்சினைகளும். குறிப்பாக ‘லிங்காயத் தனி மதம்’ எனும் விவகாரம் இந்துத்துவ அரசியல் கணக்குகளுக்கும் நீண்ட காலச் சவாலாக மாறியிருக்கிறது.
கி.பி. 12-ம் நூற்றாண்டில் வட கர்நாடகத்தில் உருவான வசனக்காரர்களின் இயக்கம் (பக்தி இயக்கம்) சமூகப் பண்பாட்டுத் தளத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது அனைத்து அதிகாரங்களும் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தில் இருந்த காலகட்டம் அது.
வசனக்காரர்களின் இயக்கம் அதைக் கேள்விக்கு உட்படுத்தியதோடு மட்டும் நில்லாமல், மாற்றுச் சமூகக் கட்டமைப்பை உருவாக்கவும் முனைந்தது. இந்த முரண்பாடு வர்ணாசிரம சாதி ஆதிக்க சக்தி களுக்கும் வசனக்காரர்களுக்கும் இடையில் சமரசம் செய்ய முடியாத முரண்பாடாக வளர்ந்தது என்று தேசியக் கல்லூரியின் கன்னடப் பேராசிரியர் ரங்கநாத் கண்ட்டன் குண்ட்டே கூறுகிறார். பிறப்பின் அடிப்படையிலான சாதிகளின் மதிப்பும் இழிவும், உழைப்பு பற்றிய கருத்தாக்கங்களை வசனக்காரர் களின் இயக்கம் மறு மதிப்பீடு செய்து சமூகத்தை உயிர்ப்பித்தது என்று கூறுகிறார் கன்னட ஊடகவியலாளரான பார்வதீஷ்.
உடம்பே ஆலயம், ஆன்மாவே தெய்வம் என்ற தத்துவத்தை நடைமுறைப்படுத்தியதன் மூலம் சமூகத்தில் நிலவிய வர்ணாசிரமக் கோட்பாட்டை வசனக்காரர்கள் தகர்த்தெறிந்தனர். அனை வருக்கும் லிங்க தீட்சை கொடுத்து சகோதரத்துவத்தை நிலைநாட்டினர். இதில் ஈர்க்கப்பட்ட அனைத்து சாதி மக்களும் வசனக்காரர்களின் இயக்கத்தில் இணைந்தனர். இந்த இயக்கத்தைத் தலைமைதாங்கி வழிநடத்தியவர் பசவண்ணர். தீண்டத்தகாத மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் சமூக விடுதலை கிடைத்த மகிழ்ச்சியில் இயக்கத்தில் இணைந்தனர் என்று மாத்தே மகாதேவி குறிப்பிடுகிறார். இவர் லிங்காயத் மதத்தை தனி மதமாக அறிவிக்கக் கோரி போராடுபவர்களில் முன்னணியில் நிற்பவர்.
அதேபோல சிதானந்த மூர்த்தியும், தீண்டப்படாத சாதியினர் அதிக எண்ணிக்கையில் பக்தி இயக்கத்தில் இணைந்ததாகத் தனது நூலில் குறிப்பிடுகிறார். இவர்களின் கருத்துகளை மெய்ப்பிப்பதாகவே வசனக் காரர்களின் இயக்க வரலாறு இருக்கின்றது. வசனக் காரர்களின் இயக்கத்தில் டோஹர கக்கய்யா (கூடை முனை பவர்), அம்பிகா சௌடய்யா (மீனவர்), ஜேடர தாசரமய்யா (நெசவாளர் – தேவாங்கா), அல்லம பிரபு (நாட்டியக்கார சாதி), காலவ்வே (தலித்), மாதார சென்னய்யா (மாதிகா), மடிவாளா மாச்சிதேவா (வண்ணார்) உள்ளிட்ட அனைத்து சாதியினரும் சரணர்களாக (பக்தர்களாக) இருந்தனர். வசனக்காரர்கள் பசவண் ணர் தலைமையில் கல்யாண் (இன்று பசவகல்யாண்) என்னும் இடத்தில் அனுபவ மண்டபத்தை (பல்வேறு தொழில் செய்வோர் தங்களது அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளும் இடம்) உருவாக்கினர். கல்யாண் நகரம் பிஜ்ஜல அரசனின் தலைநகரமாக இருந்தது. அமைச்சரவையில் பசவண்ணர் அமைச்சராக இருந்தார். அனுபவ மண்டபத்தில் அனைத்து சாதிகளைச் சேர்ந்த 730 உறுப்பினர்கள் இருந்துள்ளனர். இவர்கள் தொழிலுக்கும் உழைப்புக்கும் முன்னுரிமை கொடுத்தனர்; தொழிலே தெய்வம் என்னும் கோட்பாட்டை நம்பினர். அனுபவ மண்டபத்தைப் பற்றி ஆய்வுசெய்த சென்னப்ப உத்தங்கி என்பவர், ‘அனுபவ மண்டபம் உலகின் முதல் பாராளுமன்றம்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த அனுபவ மண்டபத்தின் தலைவராக அல்லம பிரபுவை நியமித்தார் பசவண்ணர்.
வர்ணாசிரம அமைப்புமுறைக்கு எதிரான இத்தகைய செயல்களை ஒடுக்க வேண்டும் என்றும் பார்ப்பனர்கள் அரசனிடம் முறையிட்டனர். வசனக்காரர்களை ஒடுக்குவதற்கு அரசன் படைகளை அனுப்பினான். கல்யாண் நகரம் புரட்சியின் மையமானது. சரணர்கள் நான்கு திசைகளிலும் தப்பி ஓடினர். சரணர்கள், மக்கள் என்று பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. பசவண்ணரையும் படைகள் துரத்தின; இறுதியில் கொல்லப்பட்டார் என்றும் கொல்லப்பட வில்லை, சமாதியானார் என்ற கருத்தும் இருக்கின்றது.
தப்பி ஓடியவர்கள் தென் கன்னட மாவட்டத்தின் உலுவெ குகைகளில் தஞ்சம் புகுந்தனர். இந்த இடம் சரணர்களின் வழிபாட்டு இடமாகக் கருதப்படுகிறது. இங்கு இரண்டாவது அனுபவ மண்டபம் நிறுவப்பட்டதாகக் கூறப்படு கிறது. 12ஆம் நூற்றாண்டின் இறுதியில் நடந்த இந்தப் போர், பசவண்ணர் உருவாக்கிய மதத்துக்கு ஓரளவு பின்னடைவையும் அதே நேரத்தில் தப்பியோடிய சரணர்களின் மூலம் பரந்துபட்ட பிரச்சாரத்தையும் பெற்றதாகக் கூறுகிறார் மாத்தே மகாதேவி. பசவண்ணரின் பக்தி மரபு 17ஆம் நூற்றாண்டு வரை நீடித்துள்ளது. சண்முக சிவயோகிதான் கடைசி சரணர் என்று அவர் குறிப்பிடப்படுகிறார்.
கிருஷ்ணதேவராயருக்கு முன்னர் ஆட்சிசெய்த பிரவுடு தேவராயா என்னும் அரசனின் பாதுகாப்பில் இருந்த சித்தலிங்கேஸ்வர குரு வசனக்காரர்களின் சுவடிகளைப் பாதுகாத் துள்ளார். 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பகீரப்பா குரப்பா ஹலகட்டி என்பவர் சுவடிகளில் இருந்த வற்றை அச்சேற்றி நூல்களாக வெளியிட்டுள்ளார். 1931 முதல் 1995 வரை வாழ்ந்த லிங்காயனந்த சுவாமிகள், சுமார் 40 ஆண்டுகள் லிங்காயத்து மதம் பற்றிப் பிரச்சாரம் செய்துள்ளார். மேற்கண்ட சமூக வரலாற்று நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டும் மாத்தே மகாதேவி லிங்காயத், ஆரம்பம் முதலே தனி மதமாக, குறிப்பாக சனாதன வர்ணாசிரமத்தி லிருந்து வேறுபட்டு இயங்கிவருகிறது என்கிறார். இது தொடர்பான சான்றுகளையும் முன் வைக்கிறார்.
1851-ம் ஆண்டிலேயே லிங்காயத் மதம் சுதந்திர மதம் என்று பேராசிரியர் எம்.ஆர்.காக்லே எழுதினார். மேலும், ஆங்கிலேயர் காலத்தில் ஆந்திரப் பிரதேசத்தில் நீதிபதியாக இருந்த சி.பி.பிரவுன் எழுதிய நூலில் ‘லிங்காயத் தனி மதம்’ என்று குறிப்பிட்டுள்ளார். லிங்காயத் மதத்தினர் நீதிமன்றத்தில் பகவத் கீதை மீது உறுதியெடுக்க மறுத்ததையும் இந்நூலில் குறிப்பிட்டுள்ளார். இது மதராஸ் கெஜட்டில் பதிவாகியிருப்பதையும் மாத்தே மகாதேவி குறிப்பிடுகிறார். இவ்வாறு கடந்த 800 ஆண்டுகளாக பசவண்ணரால் உருவாக்கப்பட்ட லிங்காயத் தனி மதமாகவே இருந்துவந்துள்ளது. எனவே, மத்திய அரசு அரசியல் சட்டப்பிரிவு 21-ன்படி லிங்காயத்தைத் தனி மதமாக அங்கீகரிக்க வேண்டும் என்னும் கோரிக்கையை முன்வைத்துப் போராடி வருவதாக அவர் கூறுகிறார்.
ஆந்திராவிலிருந்து கர்நாடகத்துக்குக் குடியேறிய ஆனகல் குமாரசாமி 1904-ல் வீரசைவ மகா சபையை நிறுவினார். இதே காலகட்டத்தில், சிவயோக மந்திர என்னும் அமைப்பும் உருவாக்கப் பட்டது. இது மதப் பயிற்சிப் பள்ளியாகச் செயல்பட்டது. ஆனகல் குமார சாமிதான் சூழ்ச்சித் திட்டத்துடன் வீரசைவ லிங்காயத் என்று லிங்காயத் மதத்தைக் குறிப்பிட்டதாகவும் மாத்தே மகாதேவி குற்றம்சாட்டுகிறார். வீரசைவ மகா சபையின் நெறிமுறைகளில் முதலாவதாக இருப்பது வேத ஆகமங்கள்தான் என்றும் குறிப்பிடுகிறார்.
வீர சைவமானது வர்ணாசிரமம், சாதி அமைப்பு முறை, ஹோமம், யாகம் முதலியவற்றில் நம்பிக்கை கொண்டிருப்பதோடு எல்லா இந்து தெய்வங்களையும் நம்புகிறது. மேலும், வீர சைவர்கள் பசவண்ணரை குருவாக ஒப்புக் கொள் வதில்லை. அது மட்டுமல்லாமல் பசவண்ணருக்கும் முன்பே வீரசைவம் இருந்ததாகவும் கூறுகின்றனர். லிங்காயத் மதத்தை வீரசைவ லிங்காயத் மதம் என்று கூறுபவர்களில் முக்கியமானவர்களாக சிதானந்த மூர்த்தி, பைரப்பா போன்றவர்களைக் குறிப்பிடலாம். இவர்கள் இந்துத்துவா சார்பானவர்கள்.
1891, 1991 மக்கள்தொகைக் கணக்கெடுப்புகளில் முறையே 38 (மைசூர்) மற்றும் 43 (மும்பை) துணை சாதிகள் லிங்காயத்தில் இருப்பதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. இறுதியாக 71 துணை சாதிகள் இருப்பதாக முடிவுசெய்யப்பட்டது. மேற்கண்ட சமூக வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் லிங்காயத் என்பது தனி மதம் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது. இந்தக் கோரிக்கை பலமுறை அரசிடம் வைக்கப்பட்டுள்ளது; எனவே, எங்களது கோரிக்கையை அரசியலுடன் இணைத்துப் பேசுவது சரியல்ல என்பது இதற்காகப் போராடுபவர்களின் வாதம். ஆனால், பெரும் விஸ்வரூபம் எடுத்திருக்கும் இந்த விவகாரம் எதிர்கால அரசியலைத் தீர்மானிக்கும் எல்லா அறிகுறிகளும் இப்போது கர்நாடகத்தில் தீர்க்கமாகத் தெரிகின்றன.
குறிப்பு: அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்ட கவுரி லங்கேஷ் ஒரு லிங்காயத்; லிங்காயத்துக்களை ‘இந்து’ மதத்திலிருந்து விடுவிக்க வேண்டும் என்ற போராட்டத்தை தீவிரமாக ஆதரித்து எழுதி வந்தார்.
நிமிர்வோம் மார்ச் 2018 இதழ்