தமிழர் பண்பாட்டில்-வைதீக ஊடுறுவல் வரலாற்று ஆதாரங்களை முன் வைத்து ஒரு விரிவான அலசல் – முரசொலி மாறன்
வைதீகப் பார்ப்பனிய ஊடுறுவலுக்கு முன்பான தமிழ் வாழ்வியலையும் மன்னரின் ஆட்சியில் பார்ப்பனியம் ஊடுறுவித் தன்னை சமூக நிலவுடைமை அதிகாரமாக்கிக் கொண்டதையும் வரலாற்றுச் சான்றுகளோடு நிறுவுகிறது இந்த சிறப்பான கட்டுரை.
ஆரியர் வருகைக்கு முன்னர் தமிழ்நாட்டில் சாதி முறை கிடையாது – என்பதில் இரு கருத்துகள் கிடையாது.
வர்ணாஸ்ரம தர்மப்படி வட இந்தியாவில் பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் – என்று நான்கு வர்ணங்களாக மக்கள் பிரிக்கப்பட்டிருந்தனர். இதுதான் வர்ணாஸ்ரம தர்மம் – அல்லது சதுர் வர்ணம் – என்று குறிப்பிடப்படுவதாகும்! சமுதாய வட்டத்திற்கு வெளியே தீண்டத்தகாதார் வைக்கப்பட்டிருந்தனர்.
பிராமணர்கள் பிர்மாவின் நெற்றியிலிருந்தும், க்ஷத்திரியர்கள் புஜங்களிலிருந்தும், வைசியர்கள் தொடையிலிருந்தும், சூத்திரர்கள் பாதங்களிலிருந்தும் பிறந்ததாகக் கூறுகிறது மனு ஸ்மிருதி.
சூத்திரர்கள் என்போர் யார்?
“சண்டையில் வென்று சிறையாகப் பிடித்துக் கொணரப்பட்டவன், அன்புடன் ஊழியஞ் செய்பவன், தன் வேசி மகன், விலைக்குக் கொள்ளப்பட்டவன், ஒருவனாற் கெடுக்கப்பட்டவன், குல வழியே தொன்றுதொட்டு ஊழியஞ் செய்பவன், குற்றத்திற்காக வேலை செய்பவன் எனச் சூத்திரர் எழு வகைப்படுவர்” எனவும், “பார்ப்பனன் ஐயம் இன்றி மேற்கூறிய எழுவகைச் சூத்திரரிடத்திலிருந்தும் பொருளை வலிந்து எடுத்துக் கொள்ளலாம். தம் தலைவன் எடுத்துக் கொள்ளுதற்குரிய பொருளையுடைய அந்தச் சூத்திரர் தம் பொருளுக்குச் சிறிதும் உரிமையுடையர் அல்லர்” என்றும் மனு கூறுவதாக மறைமலையடிகளார் தெரிவிக்கிறார்.
பிரபல வரலாற்று நூலாசிரியர் வின்சென்ட் ஸ்மித் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:
“ஆந்திரர், சேரர், சோழர், பாண்டியர் உள்ளிட்ட தீபகற்பத்து அரசுகளில் நுழைவதில் பிராமணர்கள் வெற்றி கண்டபோது, அங்கே அவர்கள் கண்டது முரட்டுத்தனமான, காட்டுமிராண்டி இனங்களையல்ல; ஒரு நாகரிகம் வாய்ந்த சமுதாயத்தையே! திராவிட மதமும், அவர்களது சமூகப் பழக்க வழக்கங்களும் வட இந்தியாவில் இருந்ததைப்போல் அல்லாமல் முற்றிலும் மாறுபட்டிருந்தன. சாதி என்பது அவர்களுக்குத் தெரியாத ஒன்றாக இருந்தது. இப்போது பர்மாவில் இருப்பது போல! அவர்களது மதம் மெய்மறந்து பரவசமாகிற – தங்கள் மூதாதையர் வழிவந்த குல தெய்வங்களை வழிபடுவதாக இருந்தது. அவர்களது முக்கிய கடவுள் மலைத் தெய்வமான முருகன். அவர்களது மூலக் கடவுளர்கள் அதற்குப் பிறகு பிராமணர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அவர்களால் புதுப் பெயரிடப்பட்டு பழைய இந்துக் கடவுளரோடு இணைத்துக் கொள்ளப் பட்டனர். பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்று நான்கு வருணங்கள் அல்லது வகுப்புகள் அல்லது சாதிகளாக மனித சமுதாயம் பிரிக்கப்பட் டிருந்ததாகக் கூறப்படும் இந்து தத்துவம் தென்னாட்டு மக்களுக்கு முற்றிலும் அன்னியக் கொள்கையாகும். அவர்களிடையே இன்று வரை க்ஷத்திரியரோ, வைசியரோ கிடையாது. திருமணம் பற்றிய சட்டங்களும், இறந்தவர் சொத்துக்களை வாரிசு அடைவது பற்றிய சட்டங்களும் பிராமணர்களுடையது போலன்றி முற்றிலும் மாறுபட்டிருந்தன. கண்டிப்பான சாதி விதிகளோடும், சட்டங்களோடும் இந்து மதம் மேலோங்கியிருக்கிற இந்த காலத்தில்கூட மிகவும் தொன்மையானதும் (இந்து மதத்திற்கு) முற்றிலும் மாறுபட்டதுமான திராவிடக் கருத்துகள் வேரூன்றி இருப்பதை ஆயிரம் திசைகளில் காணலாம்.”
1885-87இல் தொகுக்கப்பட்ட ‘இந்திய அரசு அறிக்கை’யில் ‘தென்னிந்தியாவில் மக்ககள் தொகை பிராமணர்களாகவோ, சூத்திரர்களாகவோ, பறையர்களாகவோ’ (அதாவது தீண்டத்தகாதவர்களாகவோ) பதிவு செய்யப்பட்டிருந்தது.
1891ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கு, “பிராமணர், மராட்டியர், குடியேறிய முசல்மான்” தவிர சென்னை மாகாணத்து மக்கள் தொகையினர் முற்றிலும் திராவிடர்கள் என்றும், மனு உருவாக்கிய சாதி முறை திராவிட இனங்களுக்கு முற்றிலும் அன்னியமானது” என்றும் குறிப்பிடுகிறது.
1901ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட சென்னை மாகாணத்து மக்கள் தொகைக் கணக்கு கீழ்க்கண்ட விவரத்தைத் தருகிறது.
“சென்னை மாகாணத்தில் வாழும் மக்கள் பிரிவு:
பிராமணர்கள்- 3.4ரூ; சூத்திரர்கள் -94.3ரூ – ஆக மொத்தம் 97.7ரூ.
“மீதமுள்ள சொற்பத் தொகையினர் தங்களை க்ஷத்திரியர் அல்லது வைசியர் என்று கூறிக் கொள்ளும் தெலுங்கர்களும், கன்னடர்களும் ஆவர்” என்று கணித்திருக்கிறது.
– தென்னகத்தில் மட்டும் மக்கள் நான்கு வருணங்களாகப் பிரிக்கப்படாமல், பிராமண ரல்லாதாரை – “சூத்திரர்” என்கிற ஒட்டு மொத்தப் பெயரிட்டு அழைத்த காரணம் என்ன?
பிராமணர் – க்ஷத்திரியர் – வைசியர் – சூத்திரர் என்று பிறப்பினால் மக்களைப் பாகுபடுத்தி வைக்கும் ‘சதுர்வர்ணம்’ என்கிற ‘வர்ணாஸ்ரம தர்மம்’ தமிழக மக்களுக்கு முற்றிலும் அன்னியமானது என்றால், அது ஆரியர் புகுத்திய கொள்கை என்றால், அவர்கள் வருகைக்கு முன்பு தமிழ்நாட்டுச் சமுதாயம் எப்படி அமைந்திருந்தது?
இதுபற்றி பேராசிரியர் பி.டி. சீனிவாச அய்யங்கார் ‘ஆரியருக்கு முற்பட்ட தமிழ்நாடு’ என்கிற நூலில் கீழ்க்கண்ட விளக்கத்தை அளிக்கிறார்:
தமிழ் மாநிலம் நிலத்தின் அடிப்படையில் இயற்கையை ஒட்டிப் பிரிக்கப்பட்டிருந்தது.
மணலும், மணல் செறிந்த வெளியும் பாலை என்றும்; அந்தப் பாலை நிலத்தில் வாழ்வோர் மறவர் என்றும் குறிப்பிடப்பட்டது.
– அது மனித சமுதாய வளர்ச்சியில் நாடோடி நிலையைக் குறிப்பதாகவும் அமைந்தது.
மலையும், மலையைச் சார்ந்த இடமும் குறிஞ்சி என்றும்; அதில் வாழ்வோர் குறவர் என்றும் குறிப்பிடப்பட்டது.
– அது மனித சமுதாய வளர்ச்சியில் வேட்டுவர் நிலையைக் குறிப்பதாகவும் அமைந்தது.
காடும், காடு சார்ந்த இடமும் முல்லை என்றும்; அதில் வாழ்வோர் ஆயர் என்றும் குறிப்பிடப்பட்டது.
– அது மனித சமுதாய வளர்ச்சியில் ஆடு-மாடுகளை மேய்த்துப் பிழைக்கும் நிலையைக் குறிப்பிட்டது.
வயலும் வயலைச் சார்ந்த இடமும் மருதம் என்றும்; அதில் வாழ்வோர் உழவர் என்றும் குறிப்பிடப்பட்டது.
– இது சமுதாய வளர்ச்சியில் விவசாய நிலையைக் குறிக்கும்.
கடலும், கடலைச் சார்ந்த இடமும் நெய்தல் என்றும்; அதில் வாழ்வோர் பரதவர் என்றும் அழைக்கப்பட்டனர்.
– இது மனித வளர்ச்சியில் மீன்பிடிக்கும் பருவத்தையும் கடலில் பயணம் செய்யும் பருவத்தையும் குறிக்கும்.
– இவை நிலத்தின் தன்மையும்இயற்கைத் தன்மைக்கேற்ப அங்கு வாழும் மக்கள் மேற்கொள்ளும் வாழ்க்கை முறையையும் குறிப்பனவாகும்.
– இப்படி அவர்கள் இயற்கையோடு இயைந்து மண்ணின் மைந்தர்களாகச் சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்ப வாழ்ந்தார்கள்.
– இதை “horizontal classification” என்று வர்ணிக்கிறார், பேராசிரியர் பி.டி. சீனுவாச அய்யங்கார்.
அவரது கூற்றுப்படி சமுதாயத்தில் இன்னொரு செங்குத்தான பிரிவும் இருந்தது.
மன்னர், வள்ளல் (அதாவது குறுநில மன்னர் கள்), வேளாளர் (நில உடைமைக் காரர்கள்), வணிகர் – இவர்கள் உயர்ந்தோர் அல்லது மேலோர் என்று அழைக்கப்பட் டார்கள்.
இவர்கள் தவிர – உழைக்கும் வர்க்கத்தினர் ‘வினைவலர்’ என்றும்;
தனிப்பட்ட முறையில் ஊழியம் செய்வோர் ‘அடியோர்’ என்றும் அழைக்கப்பட்டார்கள்.
(இது சமுதாயத்தில் ஒவ்வொருவர் இருக்கும் பொருளாதார நிலை அல்லது அவர்கள் சார்ந்திருக்கும் வர்க்கத்தைக் குறிக்கும். இது சாதி அன்று.)
– இப்படித்தான் உலகெங்கிலும் சமுதாயம் உருவாகி இருந்தது என்றும் பேராசிரியர் பி.டி. சீனுவாச அய்யங்கார் கூறுகிறார்.
அதனால்தான் திருவள்ளுவர்,
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்”
“எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒரு தன்மை யானதே; ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை” என்று கூறுகிறார்.
நாலடியார் ஆசிரியர்,
“நல்ல குலமென்றும் தீய குலமென்றுஞ்
சொல்லள வல்லாற் பொருளில்லை”
என்றும் திருமூலநாயனார்,
“ஒன்றே குலமும் – ஒருவனே தேவனும்”
என்றும் கூறியிருக்கிறார்கள்.
கூலவாணிகம் செய்து வந்த சீத்தலைச் சாத்தனார், கடல் வாணிபம் செய்து வந்த ஆலங்குடி வங்கனார், பொன் வாணிகம் செய்த உறையூர் இளம்பொன் வாணிகனார், ‘வண்ணக்கன்’ எனப்படும் நாணயப் பரிசோதனை செய்து வந்த வடம வண்ணக்கன் தாமோதரனார், மருத்துவத் தொழில் செய்து வந்த உறையூர் மருத்துவன் தாமோதரனார், கூத்துத் துறையைச் சேர்ந்த உறையூர் முதுகூத்தனார், செவிலித் தாயாராக விளங்கிய காவற்பெண்டு, வேளாண் மரபில் வந்த அரிசில் கிழார், ஆவூர் கிழார் போன்றோர், சங்கறுக்கும் தொழிலைக் கொண்ட ‘கீரர்’ குடியைச் சேர்ந்த குட்டுவன் கீரனார், இசைக் கருவிகளை இயக்கிய நெடும் பல்லியத்தனார், ஆரியக் கூத்தனின்றும் மாறுபட்ட தமிழ்க்கூத்தில் சிறந்த மதுரைத்
தமிழ் கூத்தனார், பாண்டரங்கம் என்னும் கூத்து வகையில் வல்லுநரான பாண்டரங்கண்ணனார், ஆசிரியத் தொழிலை மேற்கொண்டிருந்த மதுரைக் கணக்காயனார், குறமக்களுள் ஒருவரான குறமகள் இளவெயினார், பொற் கொல்லரான வெண்ணாகனார் – இவ்வாறு பல்வேறு தொழிலைச் செய்தவர்கள் இயற்றிய கவிதைகள் புறநானூற்றில் இடம் பெற்றிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
– அது மட்டுமல்ல; ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியப் பாண்டியன், தலையாலங் கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ் செழியன், சேரமன்னன் கணைக்கால் இரும்பொறை, கோப்பெருஞ்சோழன், சோழன் நலங்கிள்ளி போன்ற அரியாசனம் வீற்றிருந்த முடிவேந்தர்களின் கவிதைகளோடு மேற் சொன்ன தொழிலை மேற்கொண்ட புலவர்களின் கவிதைகளும் சரியாசனம் பெற்றிருப்பது சங்ககாலத் தமிழகத்தில் நிலவிய சமத்துவ சமுதாய நிலையை விளக்குவதாகும்.
அவர்கள் செய்யும் தொழிலின் சிறப்பியல்புகள் வேறுபட்டிருந்தாலும் அவை அடையாளப் பெயர்களாகவே குறிக்கப்பட் டிருக்கின்றன.
அதுமட்டுமா? ஆண்பாலரின் கவிதை களோடு காக்கைப்பாடினியார், நச்செள்ளை யார், நக்கண்ணையார் போன்ற பெண்பாலரின் கவிதைகளும் இடம் பெற்றிருப்பது சங்க காலத்தில் நிலவிய ஆண்-பெண் சமத்துவத் திற்கும் உதாரணமாகத் திகழ்கிறது.
அதனால்தான் “எல்லாரும் ஒரு குலம் எல்லாரும் ஓரினம் எல்லாரும் இந்நாட்டு மன்னர்” என்றார் பாரதியார்.
தமிழர் கடைப்பிடித்தது வள்ளுவர் கூறிய சமதர்மம்; ‘மனுநீதி’ கூறிய பிறப்பினால் ஏற்படும் வர்ணாஸ்ரம தர்மம் அன்று!
பிராமணர் – க்ஷத்திரியர் – வைசியர் – சூத்திரர் என்கிற வர்ணாஸ்ரம தர்மம் என்பது என்ன?
பேராசிரியா பி.டி. சீனுவாச அய்யங்கார் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்:
“இந்த நான்கு வகைப் பாகுபாடு (தமிழர்களுடையதுபோல) நிலப் பிராந்தியத்தை அடிப்படையாகக் கொண்டதன்று; இனத்தை அடிப்படையாகக் கொண்டதன்று; சமூக ரீதியானதும் அல்ல; செய்யும் தொழிலை அடிப்படையாகக் கொண்டதும் அல்ல. அக்கினியை மையமாக வைத்து செய்யப்படும் ஆச்சாரங்களையும் சம்பிரதாயங்களையும் அடிப்படையாகக் கொண்டது ஆகும். பிராமணர்கள் தென்னிந்தியாவில் குடியேறியபோது, பண்டைய தமிழ் மனனர்கள் யாகங்களால் கிடைக்கும் நன்மைகளைப் பெறும் ஆசையுடன் அக்கினியை மேற்கொண்ட குருக்களிடம் சமுதாயத்தின் தலைமைப் பதவியை ஒப்படைத்தார்கள். அதன் காரணமாக மதத்தை அடிப்படையாகக் கொண்ட தங்கள் சமுதாய முறையைப் பிராமணர்கள் தமிழர் சமூகத்தின் மீது புகுத்திட முயன்றார்கள். ஆனால் இந்த மதவாதிகளின் ஏகபோக ஆட்சி (முன்பே நிலவி வந்த) தமிழர்களின் சமுதாய சமதர்மத்தோடு ஒட்டிப் போக முடிய வில்லை. அதனால்தான், வட இந்தியாவில் செய்தது போல் தென்னிந்தியாவில் மக்களை அவர்களால் நான்கு வருணங் களாகப் பிரித்து அமைப்பதில் வெற்றி பெற முடியவில்லை. தமிழர்களின் வாழ்க்கை முறை அதற்கு முன்பு பல்லாயிரம் ஆண்டுக்காலமாக மதச்சார்பு அற்றதாகவும், சமதர்மத்தின் அடிப்படையிலும் அமைந்திருந்த காரணத்தால் – சிறுநீர் கழிப்பதிலிருந்து சுடுகாட்டில் பிணமாக எரிக்கப்படும்வரை அக்கினி பற்றிய ஆச்சாரங்களாலும் சம்பிரதாயங்களாலும் சூழப்பட்டிருந்த நான்கு வருணத் திட்டம் தமிழர்களிடம் நன்கு பரவ முடியவில்லை. பிராமணர்கள் தென்னிந்தியாவிற்கு வருவதற்கு முன்பே இந்த ஆரிய அக்கினி ஆச்சார விதிமுறை வீரியம் இழந்து விட்டபடியாலும் அது பரவவில்லை. இதனால் சாதி பற்றிய குழப்பமும், சமுதாயத்தில் போட்டி பொறாமைகளும் உருவாயின. 1,500 ஆண்டுகாலமாக
இவை தென்னிந்திய வாழ்வில் ஒரு குணாதிசயமாகவே ஆகிவிட்டன. தேவாரம் பாடிய திருநாவுக்கரசு நாயனார் இன்று போலவே தன் காலத்திலும் பிராமணர் களுக்கும், பிராமணரல்லாதாருக்கும் அல்லது அன்று அவர்கள் அழைக்கப்பட்டது போல ஆரியர்களுக்கும், தமிழர்களுக்கும் பொறாமை இல்லாவிடினும் போட்டி உணர்வுகள் இருந்ததைச் சுட்டிக் காட்டியிருக்கிறார்.”
– திருநாவுக்கரசர் தேவாரத்தில் உள்ள ‘செந்தமிழோடு ஆரியனைச் சீரியனை’ என்கிற வரிகளையும், ‘ஆரியர் தமிழோடிசையானவன்’ – என்கிற வரிகளையும் தமது வாதத்திற்கு பி.டி. சீனுவாச அய்யங்கார் மேற்கோள் காட்டுகிறார்.
1856ஆம் ஆண்டு ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்கிற அரிய நூலைத் தீட்டிய ராபர்ட் கால்டுவெல் கீழ்க்கண்டவாறு நிலைமையை விளக்குகிறார்:
“மனு நூலாரும், பாரத ஆசிரியரும், புராண ஆசிரியர்களும், திராவிடக் குழுவைச் சேர்ந்த மக்கள் எல்லோரையுமே போர்வீரர் மரபில் சேர்த்து க்ஷத்திரியரென வகைப்படுத்திக் கூறுகின்றனர். ஆனால் திராவிடரிடையே வந்து குடியேறி, அவர்களிடையே வடநாட்டு வகுப்புப் பிரிவினையையொட்டிச் சாதிப் பிரிவினை கற்பித்த பார்ப்பனர் மட்டும், நாடாளும் அரச குடும்பத்தினர்களொழிந்த மற்றை யோர் அனைவரையும் சூத்திரர் என்ற பெயருக்கு மேற்பட்ட எப்பெயராலும் அழைத்ததாகத் தெரியவில்லை. இது வியப்பாகவே இருக்கிறது. ஏனெனில் அவர்கள் எளிதாக வேளாளரையும், வணிகரையும் ‘வைசியர்’ என்று அழைத்து, மற்ற கீழ்த்தர வகுப்பினரை ‘ஸூத்திரர்” என அழைத்திருக்க முடியும். அங்ஙனம் அவர்கள் செய்யவில்லை. அஃதேயெனின், ஆரிய இனத்தைச் சேர்ந்தோரையன்றி ஏனையோரை க்ஷத்திரியரென்றோ, வைசியரென்றோ அழைப்பது அவர்கள் மரபுக்கு மாறானதொன்றாகையால், ஆரியரல்லாத திராவிட மக்களை, (அவர்கள் எவ்வளவு உயர்தர மக்களே யாயினும்) – ஸூத்திரர்கள் என்றே அழைத்து வந்துள்ளராதலின் என்க… உண்மையில் பார்ப்பனர் முதலில் அவர்களை ஸூத்திரர் என்றழைத்தபோது அப்பெயர் மதிப்பிற்குரியதோர் பட்டப் பெயர் என்றே அவர்களிடம் கூறி அவர்களை ஏமாற்றியிருக்கக்கூடும். இவ்வேமாற்றம் வெற்றியடைந்ததென்றே கூறலாம்.”
– இருபதாம் நூற்றாண்டின் துவக்கம் வரையில் – அதாவது, திராவிட இயக்கத்தின் தோற்றம் வரையில் – பிராமணரல்லாதார் ‘சூத்திரர்’ என்கிற வார்த்தையை எதிர்க்க வில்லை என்பது நினைவு கூரத்தக்கது. அதற்குப் பிறகுதான் ‘சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடி!’ என்னும் பழமொழியே பிறந்தது!
இதில் திராவிடத் தன்னுணர்வுத் தந்தை பெரியாரின் பங்கு மகத்தானது; தன்னிகரரில் லாதது!
இது குறித்து டாக்டர் சரசுவதி கீழ்க்கண்ட வாறு கூறுகிறார்:
“குறிப்பாகத் திராவிட இயக்கத்தின் நிறுவனத் தலைவராகிய ஈ.வே.ராமசாமி நாயக்கர் ‘சூத்திரன்’ என்கிற பட்டத்தை எதிர்த்து ஒரு யுத்தம் நடத்துவதையே தனது நோக்கமாகக் கொண்டார்… ஓய்வில்லாத பிரச்சாரம் காரணமாக, இந்து சமுதாய அமைப்பில் சூத்திரனாக வைக்கப்பட் டிருப்பது திராவிடனுக்கு ஏற்பட்ட அவமானம் என்று மக்களிடத்திலே ஒரு பிரக்ஞையை ஏற்படுத்தினார்.”
திராவிட மக்களின் பிரக்ஞையைத் தட்டி எழுப்பிய தந்தை பெரியாரின் யுத்த முழக்கத்தை இதோ கொஞ்சம் கேளுங்கள்:
“ஒரு மனிதனைப் பார்த்து பிராமணன் என்று சொல்லுவதனாலேயே, நாம் தாழ்ந்த ஜாதியென்பதையும், பிராமணனது வைப்பாட்டி மக்கள் என்பதையும் நாமே ஒப்புக் கொண்டவர்களாகிறோம். இதைப் பற்றிக் கவலையில்லா மக்களுக்குச் சுயராஜ்யம் எதற்காக? காங்கிரஸ் எதற்காக? சங்கங்கள் எதற்காக? பொதுநலச் சேவை என்கிற வேஷம் எதற்காக,”
– இப்படி ஆத்திரம் கொள்ள வைக்கும் ‘சூத்திரர் நிலை’ எப்படி இருந்தது?
இந்த நூற்றாண்டின் துவக்கக் காலத்தில் ‘சூத்திர நிலைமை’ எவ்வளவு கொடுமையாக இருந்தது என்பதற்கு 1901ஆம் ஆண்டு மக்கள் தொகைப் புள்ளி விவரம் சான்று பகர்கிறது. ‘சாதிகளின் சமுதாய அந்தஸ்து’ – என்கிற விவரம் அவ்வாண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் காணப்படுகிறது.
பிராமணர்கள் சமுதாயத்தின் மேல்தட்டிலும், முற்றிலும் தீண்டத்தகாதவர்கள் அடித்தட்டிலும் வைக்கப்பட்டிருந்தார்கள். பிராமணர்கள் யாரைத் தீண்டினால் அத்தீட்டு தீண்டாதார் என்கிற ஆதி திராவிடரைவிடக் குறைவாக இருக்குமோ அத்தகையோர் அடித்தட்டுக்கு மேலே இரண்டாவது தட்டிலே வைக்கப்பட் டிருந்தார்கள்
தீட்டின் அளவு அல்லது அந்தத் தீட்டு ஒட்டிக் கொள்ளாமல் சூத்திரர்கள் பிராமணரை விட்டு விலகி நிற்கும் தொலைவு – இதற்கேற்றபடிதான் அந்தந்தச் சாதியினரின் சமுதாய அந்தஸ்து ‘ஏணி’ படிப்படியாக அமைக்கப்பட்டிருந்தது.
இது குறித்துப் பேராசிரியர் சீனுவாச அய்யங்கார் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:
“இந்துக் கொள்கைப்படி தீட்டு என்பது என்ன? அது உண்மையல்லாத மனக் கற்பனையாகும். அது ஆரியர்களும், ஆரியரல்லாத இந்துக்களும் சமுதாய உறவு கொள்ளும்போது எழும் காந்த சக்தியின் அளவைக் குறிப்பதற்காக உருவாக்கப் பட்டதாகும். யார் யார் பிராமண ஆச்சாரங்களையும், பழக்க வழக்கங் களையும் எந்த அளவு பின்பற்ற வில்லையோ அந்த அளவு தீட்டின் அளவு அதிகமாகிவிடும். பறையர் சமுதாயத்தைச் சேர்ந்தோர் (பிராமண ஆச்சாரங்களையும், பழக்க வழக்கங்களையும் பின்பற்றுவதில்) கொஞ்சம்கூட அக்கறைக் காட்டாதவர் களாகவும், அப்படி ஈடுபாடு கொள்ளாமல் இருப்பதில் பிடிவாதமாகவும் இருந்தனர். அதன் விளைவாக, ஜாதி இந்துக்களின் முன்னால் முப்பது கஜம் சுற்றளவிற்கு அவர்கள் வருவதுகூடத் தீட்டாகக் கருதப்பட்டது.”
இதைக் கீழ்க்காணும் அட்டவணை தெளிவாக்குகிறது:
சாதிகளின் சமுதாய அந்தஸ்து – 1901
(horizontal classification)
அந்தஸ்து சாதிகளின் பெயர் மொத்த மக்கள் தொகையில்
வரிசை அந்தச் சாதியினரின் சதவிகிதம்
- பிராமணரும், உட்பிரிவினரும் 3.50
- க்ஷத்திரியரும், உட்பிரிவினரும் 1.00
- வைசியரும், உட்பிரிவினரும் 1.50
- ‘சத்’ சூத்திரர் அல்லது நல்ல சூத்திரர் 31.00
- பிராமணர்களைப் புரோகிதர்களாக அமர்த்திக் 16.25
கொள்கிற – தொட்டால் தீட்டு மிகக் கொஞ்ச
அளவே இருக்கிற சூத்திரர்கள்
- பிராமணர்களை எப்போதாவது 11.00
புரோகிதர்களாக உபயோகிக்கிற – ஆனால்
தொட்டால் தீட்டு உண்டாக்குகிற சூத்திரர்கள்
- பிராமணர்களைப் புரோகிதர்களாக உபயோகிக்காத – 5.75
தொட்டால் தீட்டு உண்டாக்குகிற சூத்திரர்கள்
- தொடாமலேயே தீட்டு உண்டாக்குகிற-ஆனால் 8.25
மாட்டு இறைச்சி சாப்பிடாத சாதியினர்
- மாட்டு இறைச்சி சாப்பிடுகிற – ஆனால் 3.50
தொடாமலிருந்தால் தீட்டு உண்டாக்காமல்
இருக்கிற சாதியினர்
- மாட்டு இறைச்சி சாப்பிடுகிற – ஆனால் 14.70
தொடாமல் கூட தீட்டு உண்டாக்குகிற சாதியினர்
- பிராமணர்களின் புரோகித அதிகாரத்தை 3.00
மறுக்கும் சாதியினர்
– இவ்வாறு பிராமணர்கள் சமுதாயத்தின் மேல் தட்டிலும், பிராமணரல்லாதார் பத்து கீழ்த்தட்டுகளிலும் பிரித்து வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் சென்னை மாகாணத்தில் முதல் மூன்று வருணத்தைச் சேர்ந்தவர்கள் மக்கள் தொகையில் 6 சதவிகிதமாக இருந்திருக்கின்றனர். மீதமுள்ளோர் நான்காம் வருணம் (அல்லது ‘நாலாம் சாதி’) என்கிற சூத்திரர்களாகவும் ஐந்தாம் வருணம் என்கிற பஞ்சமர்களாகவும் பிரித்து வைக்கப்பட்டிருந்தனர்.
சாதித் தலைமையும்; சமஸ்கிருதத்தையும் அம்மொழியில் எழுதப்பட்டிருந்த வேத மந்திரங்களையும் அவர்கள் மட்டுமே கற்க அனுமதிக்கப்பட்டதால், மதத் தலைமையும் அவர்கள் கையில் இருந்தது.
இது குறித்து டாக்டர் சரசுவதி கீழ்க் கண்டவாறு கூறுகிறார்:
“அரசு உத்தியோகங்களிலும், படிப்பறிவு தேவைப்படும் தொழில்களிலும் பிராமணர்கள் ஏற்றம் பெற்றிருப்பது வேத காலத்திலிருந்தே அவர்கள் பெற்ற ஏற்றத்தின் தொடர்ச்சி என்று கருதப்படு கிறது. ஒடுக்கப்பட்ட பெரும்பான்மையோர் தங்களை அடக்கி ஒடுக்கும் சிறுபான்மை யோருடன் தொடுத்த புரட்சிதான் தற்காலத்தில் பிராமணரல்லாதாருக்கும், பிராமணருக்கும் இடையில் ஏற்பட் டிருக்கும் மோதலின் கரு – என்று கூறலாம்.”
வேத காலத்தில் துவங்கிய இந்த நிலைமை காலப்போக்கில் படிப்படியாக அவர்கள் ஆதிக்கத்தை மேன்மேலும் பலப்படுத்தி அதைச் சர்வ வல்லமை பொருந்திய உருக்குப் பிடியாக்கியது.
பல்லவர்கள் காலத்திலிருந்தே, குறிப்பாகப் பிற்காலச் சோழ வேந்தர்கள் காலத்தில் பிராமணர்கள் நிறைய நிலமானியத்தைப் பெற்றார்கள்.
அத்தகைய நிலங்கள் ‘பிரம்மதேச நிலங்கள்’ என்கிற பெயரைப் பெற்றன.
நிலமனைத்தும் மன்னருக்கே சொந்தம் என்ற காலத்தில் இவ்வாறு பிராமணர்கள் நிலங்களைத் தனியுடைமையாகப் பெற்றனர்.
முதலாம் குலோத்துங்கச் சோழனுடைய ஆட்சியின் 12ஆவது ஆண்டில் 108 பிராமணர் களுக்கு பிரம்மதேச நிலங்களைக் கொடுத்து, வரிவிலக்கும் அளித்து, அந்த நிலங்கள் சதுர்வேதி மங்கலமாக உருவாக்கப்பட்ட செய்தி ஒன்று இருக்கிறது.
இவ்வாறு பிற்காலச் சோழர் ஆட்சியில் நிலமான்யம் வழங்கப்பட்டு பிராமணர் குடியிருப்புகளான அக்ரகாரங்களும், மங்கலங்களும் உருவாக்கப்பட்டன.
– இத்தகைய பிராமணர் காலனிகளின் நிர்வாகத்தில் அவர்கள் பங்கு கொள்ள ‘சபா’க்களும் உருவாக்கப்பட்டன.
அதுமட்டுமின்றி, பிரம்மதேச நிலங்களுக்கு நிலவரி விலக்கும் அளிக்கப்பட்டிருந்தது ஒரு தனிச் சலுகையாகும்.
உதாரணமாக கி.பி.1002இல் இராஜ ராஜசோழன் பிராமணருக்கான கிராமங்களில் பிராமணரல்லாத பிற சமூகத்தினர் தங்களது நிலங்கள் அனைத்தையும் பிராமணர்களுக்கே விற்றுவிட வேண்டும் என்று ஒரு உத்தரவு போட்டான். (அரசு ஊழியங்களுக்காக நிலங்களைப் பெற்றவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டது)
பிராமணர்கள் அப்படி நிலங்களை வாங்கித் தங்களது ஏகபோகத்தையும், தனித் தன்மையையும் காப்பாற்றிக் கொண்டதோடு, பொருளாதார மேம்பாட்டையும் எய்தினர்.
அப்போது அப்படி விற்கப்பட்ட நிலங்களில் சிலவற்றை இராஜராஜனின் சகோதரி குந்தவை விலைக்கு வாங்கி உள்ளூர்க் கோயிலுக்கு அளித்திருக்கிறாள்.
மேலும், அவ்வகுப்பார் அனுபவித்த நிலங்கள் மிகவும் வளமானவைகளாகவும் திகழ்ந்தன.
சாதி – மத – முதன்மை காரணமாகச் சமுதாயத்தின் மேல்தட்டிலிருந்த பிராமணர் களுக்கு நில உடைமையில் வேளாளரைப்போல அவர்கள் பெற்றிருந்த பங்கும், அதன் காரணமாக ஏற்பட்டிருந்த நில வசதியும் அதைக் காப்பாற்றிக் கொள்ளப் பெரிதும் உதவிற்று.
முழுக்க முழுக்க ‘பிராமணர்’ கிராமங்களாக விளங்கியவற்றிற்குத் திருநெல்வேலி மாவட்டத் திலுள்ள கல்லிடைக்குறிச்சியை ஒரு ஆசிரியர் உதாரணம் காட்டுகிறார். முதல் உலகப் போருக்குப் பிறகு அங்கு பிராமணர் – பிராமண ரல்லாதாரிடையே சச்சரவு ஏற்பட்டதையும் அவ்வாசிரியர் குறிப்பிட்டிருக்கிறார்.
சமுதாயத்தில் பிராமணர் அடைந்த மேலாண்மைக்கு வேத பாராயணத்திலும், அதன் மூலமாகச் சமஸ்கிருதக் கல்வியிலும் அவர்களுக்கிருந்த பாரம்பரியமும் இன்னொரு காரணமாகும்.
பிற்காலச் சோழப் பெருவேந்தர்கள் காலத்தில் (கி.பி. 9 – முதல் 12ஆம் நூற்றாண்டுகள் உள்ளிட்ட காலம்) பிராமணர்கள் வேத – உபநிஷதங்களைப் பயில்வதற்காகப் பிரத்தி யேகமாக அவர்களுக்கென்றே அரசு மானியத் துடன் பல அமைப்புகள் துவக்கப்பட்டன.
உதாரணமாக, முதலாம் இராஜேந்திர சோழன் (1012-1044) ஆட்சியிலும், இராஜாதி ராஜன் (1018-1054) ஆட்சியிலும் தென்னாற்காடு மாவட்டத்திலுள்ள எண்ணாயிரத்திலும், பாண்டிச்சேரிக்கு அருகில் உள்ள திரிபுவனி யிலும் வேதங்கள் கற்பதற்கு நவீன கல்லூரி களைப் போன்ற உயர்கல்வி அமைப்புகள் அமைக்கப்பட்டன. அவை அனைத்தும் பிராமணர்களுக்கு மட்டுமே!
எண்ணாயிரம் கல்லூரியில் 340 மாணவர்கள் 14 ஆசிரியர்களிடம் கல்வி கற்றனர்.
திரிபுவனியில் 260 மாணவர்கள் 12 ஆசிரியர்களிடம் கல்வி கற்றனர். மாணவர்கள் இளங்கலை வகுப்பு, முதுகலை வகுப்பு என்று இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு வேதங்களை யும், உபநிஷதங்களையும், சமஸ்கிருதக் கல்வி யோடு தொடர்புடைய இதர பாடங்களையும் பயின்றனர்.
மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மானியங்கள் வழங்கப்பட்டன.
எண்ணாயிரத்தில் அமைந்த வேத கல்லூரியில் ஒருவகைப் பண்டிதர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தங்க நாணயங்கள் உதவித் தொகையாகத் தரப்பட்டன.
பின்னர் விஜயநகர சாம்ராஜ்ய காலத்திலும் (14 முதல் 16ஆம் நூற்றாண்டு வரை) பிறகு நாயக்கர் ஆட்சியிலும் (16 முதல் 18ஆம் நூற்றாண்டு வரை) பிராமணர்களது ஆதிக்கம் தமிழ்நாட்டில் கொடிகட்டிப் பறந்தது; வேறு எப்போதையும்விட அதி உன்னத நிலையை அடைந்தது!
அக்ரகாரங்களை நிறுவுவதே அவர்களது முக்கிய பணிகளில் ஒன்றாக இருந்தது. பிராமணர்களுக்கான பிரத்யேகக் கல்வி வசதியும் பெருகி வளர்ந்தது. அவர்களுக்குக் கல்வி கற்பித்த முறை மற்றவர்களுக்குக் கற்பித்த முறையிலிருந்து வேறுபட்டிருந்தது.
அவர்கள் ஆட்சிக் காலத்தில்தான் தமிழ்நாட்டில் தீபாவளி என்கிற புதிய பண்டிகையும் புகுந்தது. இது குறித்து அ.கி.பரந்தாமனார் கூறுகிறார்:
“தீபாவளி தமிழ்நாட்டில் தொன்று தொட்டு வந்த திருநாளன்று, மதுரை நாயக்கர்களாலும், தஞ்சை – செஞ்சி நாயக்கர்களாலும், தமிழ்நாட்டில் புகுத்தப்பட்டது. பதினாறாம் நூற்றாண்டி லிருந்து தென் தமிழ்நாட்டு மக்களால் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் பெருநாள். இது பழந்தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்படவேயில்லை. சென்னை, செங்கற்பட்டு மாவட்டங்களில் தீபாவளியில் புத்தாடை அணியும் வழக்கம் அண்மைக்காலம் வரையில் இருந்ததில்லை.”
1610ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 22ஆம் நாள் இராபர்ட் டி நோபிளி பாதிரியார் எழுதிய கடிதமொன்று அக்கால நிலைமையை நன்கு சித்தரிக்கிறது.
இவர் திருமலை நாயக்கர் காலத்தில் காவியுடையும், சந்தனப் பொட்டும், கடுக்கனும், பொற்பூணூலும் அணிந்து ‘இத்தாலியப் பார்ப்பனர்’ என்று கூறிக் கொண்டு கிறிஸ்தவ சமயப் பிரச்சாரம் செய்தவர். இவர் தம் பெயரையும் ‘தத்துவ போதகர்’ என்று மாற்றியமைத்துக் கொண்டார். அவர் 1610, நவம்பரில் எழுதிய ஒரு கடிதத்தில் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:
“வகுப்பிற்கு இருநூறு முதல் முன்னூறு வரை என்று பிரிக்கப்பட்டு மதுரையில் பத்தாயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் இருந்தனர். அந்த மாணவர்கள் அனைவரும் பிராமணர்களே. ஏனெனில், உயர் கல்வி பெறுவதற்கு உரிமை பெற்றவர்கள் அவர்கள்தான். இதர சாதியினர், குறிப்பாக வைசியர்களும், சூத்திரர்களும் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை.”
– மாணவர்களும், ஆசிரியர்களும் கவலையின்றி உயர் கல்வியிலும், வேதாந்தக் கல்வியிலும் கவனம் செலுத்த அந்த நிறுவனங்களுக்கு நிரந்தர வருவாய் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. “பிராமணரல்லாதாருக்கு இந்த வாய்ப்பு இல்லை. செல்வர் வீட்டுத் திண்ணையிலாவது, ஆசிரியர் வீட்டுத் திண்ணையிலாவது, திண்ணைப் பள்ளிக்ககூடங்கள் நடைபெற்றன. அங்கே எழுதவும், படிக்கவும், கணக்குப் போடவும் கற்பிக்கப்பட்டது.
விஜய நகர சாம்ராஜ்ய காலத்தில் இந்தக் கல்விப் பயிற்சி அவர்களுக்குக் கைமேல் பலனைக் கொடுத்தது. அப்போது அரசு உத்தியோகங்களில் நிறைய பிராமணர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
முதலாம் ஹரிஹரர் காலத்தில் (கி.பி.1336-1357) கர்ணம் பதவி வகித்து வந்த பிராமணரல்லாதார் நீக்கப்பட்டு அப்பதவிகளில் பிராமணர்கள் நியமிக்கப்பட்டனர்.
“மதுரை நாயக்கர்களுக்குப் பெரும் பாலும் பார்ப்பனர்களே தளவாய்களாயும், பிரதானிகளாயும், இராயசங்களாயும் இருந்ததைக் காண்கிறோம். பிற்கால நாயக்கர்களுக்கு தளவாய்களாகப் பணி யாற்றியவர்கள் தெலுங்குப் பார்ப்பனர்களே. நாயக்கர்கள் ஒரு சாதியிலிருந்த சில பிரிவுகளுக்கும் ஒன்று மற்றொன்றோடு மணவுறவு கொள்ள விடவில்லை. கம்மாளர்களுக்குள் இருந்த ஐந்து பிரிவுகள் ஒன்றோடொன்று கலந்து விடுதல் கூடாது என்று 1623 ஆண்டுச் சாசனம் குறிப்பிடுகிறது. சௌராட்டிரர்களுக்குப் பார்ப்பனர்களைப் போலப் பூணூல் அணிந்து கொள்ள உரிமை யளித்தாள், மங்கம்மாள்.”
‘தளவாய்’ என்பவர் அனைத்து சிவில் இராணுவ நிர்வாகத்தைக் கவனித்து வந்த பிரதம அதிகாரி என்பது குறிப்பிடத்தக்ககது.
“பெரும்பாலான தளவாய்கள் தெலுங்குப் பார்ப்பனர்கள். சொக்கநாதர் காலத்திலிருந்து பார்ப்பனர்களே தளவாய்களாய் இருந்தார்கள் என்பது குறிப்பிடற்குரியது” – என்கிறார் அ.கி.பரந்தாமனார்.
அடுத்த முக்கிய பதவி வகித்தவர் ‘பிரதானி’. இப்பதவி சாதாரண அமைச்சர் பதவியைவிட உயர்ந்தது. இக்கால நிதி அமைச்சர் பதவிக்கு ஒப்பாகக் கூறலாம். “என்றாலும், பிரதானிக்கு உள்நாட்டு ஆட்சியில் மிகுந்த செல்வாக்கு இருந்தது.”
அமைச்சர்களுள் பிரதானிக்கு அடுத்த பெரும் பதவி வகித்தவர் ‘இராயசம்’ என்று அழைக்கப் பட்டார். இவர்தான் அரசின் பிரதம செயலாளர்.
“இந்த மூவரே மதுரை நாயக்கர் ஆட்சிக் குழுவில் மிகுந்த அதிகாரமும் செல்வாக்கு முள்ளவர்களாய் இருந்தார்கள்.”
இந்த மூன்று பதவிகளுக்கும் பிராமண வகுப்பினைச் சேர்ந்தவர்களே நியமிக்கப்பட்டது தென்னக வரலாற்றில் நிரந்தர அடையாளங் களை ஏற்படுத்தாமற் போகவில்லை.
“இதன் காரணமாக, பிராமணரல்லா தாரைவிட முன்னேறித் தென்னிந்திய சமுதாயத்தின் தலைமையிடத்தை அவர்களால் பெற முடிந்தது”
– என்கிறார் ஈ.சா. விசுவநாதன் எனும் ஆராய்ச்சி யாளர்.
அவர் மேலும் கூறுகிறார்:
“பிராமணர்கள் சிறுபான்மையினராக இருந்தபோதிலும் ஒருவருக்கொருவர் ஒருங்கிணைந்து வாழ்வதன் மூலம் சமுதாயத்தில் தங்கள் தனித்தன்மையைக் காப்பாற்றிக் கொண்டனர். குலப்பிரிவில் புறமணத் தடையும், அகமண உறவுக் கட்டும் இருந்ததால் அவர்கள் சமுதாயத்தில் தனித்தன்மையைப் பெற்ற குழுவாக விளங்க முடிந்தது. பின்னர் மேலை நாட்டுப் படிப்பு அவர்களது தனித்தன்மைக்கும், சமுதாய மேன்மைக்கும் மேலுமொரு காரணமாயிற்று.”
1891இல் இந்தியாவில் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்குப்படி 72.21 சதவிகித பிராமணர்கள் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களா யிருந்தனர். அத்தகையோர் வேளாளர்களில் 27.22 சதவிகிதம்தான்.
– அதாவது, ஆங்கில நிர்வாக இயந்திரம் இங்கே இயக்கத் துவங்கியபோது அவர்களது கல்வி முறையில் தேர்ந்து, உத்தியோகங்களை ஏற்பதற்கு அப்போது பிராமண சமுதாயம் தயார் நிலையிலும், முன்னணியிலும் இருந்தது.
(திராவிட இயக்க வரலாறு நூலிலிருந்து)
நிமிர்வோம் மார்ச் 2018 இதழ்