உடல் இயக்கமில்லை; மூளை மட்டும் இயங்கியது! போப்பிடம் கடவுளை மறுத்த மகத்தான விஞ்ஞானி
வாழும் ஐன்ஸ்டைன் எனப் போற்றப்பட்ட ஸ்டீவன் ஹாக்கிங் 76 ஆண்டு வாழ்வை முடித்துக் கொண்டார். 20 வயதிலிருந்து இயற்கையுடன், மருத்துவ அறிவியலுடன் மிக நீண்ட போரை மனத் துணிவுடன் நடத்திவிட்டார்.
ஆம், அவர் சிறுவனாக இருந்தபோதே அவர் ஷூ லேஸைக் கட்டுவதற்கு மிகவும் கடினப்படுவதைப் பார்த்த அவர் தந்தை, மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். பல மருத்துவச் சிகிச்சைகளுக்குப் பிறகு, அவருக்கு நரம்பியல் இயக்க நோய் பாதிப்பு ஏற்பட் டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது, அவர் முழு உடல் இயக்கமுமே செயலற்றுப் போனது. அப்போது ஹாக்கிங் மருத்துவர்களிடம் கேட்கிறார், செயலற்றுப் போனது எனது உடல் இயக்கம் மட்டுந்தானா? மூளை இயக்கமுமா? மூளைக்கு ஒரு சிக்கலும் இல்லை என்கின்றனர் மருத்துவர்கள். இதைக் கேட்டதும் மகிழ்கிறார் ஹாக்கிங்! என் அறிவுத் தேடலுக்கு உடல் இயக்கம் வேண்டாமே, மூளை இயக்கம் போதுமே. அப்படியானால், நான் எவ்வளவு கொடுத்து வைத்த மனிதன் என மகிழ் கிறார். உடல் இயக்க ஊனத்திலும் அறிவைப் பற்றி யோசித்தாரே, அவர்தான் ஹாக்கிங்.
புதுப் புதுக் கதைகளை, கவிதைகளை, நகைச்சுவைத் துணுக்குகளை அவ்வப்போது சொல்லி அறிவியலை மர்மக் கதைபோல் கொண்டு சென்றதுதான் ஹாக்கிங்கின் வெற்றி.
பெட்ரன்ட் ரசல் ஒரு கூட்டத்தில் விண்ணி யல் விதிகள் பற்றி விரிவாகப் பேசி முடிக்கிறார். அப்போது ஒரு மூதாட்டி ஐயா, நீங்கள் சொன்ன தெல்லாம் வெறும் குப்பை. உண்மையில் உலகம் ஓர் ராட்சச ஆமையின் மேல் அமர்ந்திருக்கும் ஒரு தட்டையான தட்டே என்கிறார். அப்படியானால், அந்த ஆமை எதன் மீதம்மா நிற்கிறது என்கிறார் ரசல். அதற்கு உடனே மூதாட்டி, ஆமையின் கீழ் ஆமை எனக் கடைசி வரை ஆமைகள்தான் என்கிறார். இதைப் படிக்கும் வாசகர் எவரும் மூதாட்டியின் வாதத்தை மனத்தில் கிண்டலடித்துச் சிரித்துக் கொண்டே நகர்வார், இல்லையா? ஹாக்கிங் சொல்கிறார், இதைப் படிக்கும் உங்களில் பலரும் மூதாட்டி சொன்னதைக் கேலிக்குரியதாகவே கருதுவீர்கள். சரி, உங்களுக்கு அறிவியலைப் பற்றி இதைவிடப் பெரிதாக என்ன தெரியும் எனக் கேட்டு, நம்மைத் திகைக்க வைக்கிறார்.
அப்படியே அறிவியல் என்னும் அதிசயத்தை அழகாக விவரிக்கத் தொடங்குகிறார். கருந்துளை எப்படிப்பட்டது எனச் சொல்லும்போது, அதற்குள் விழுந்தால் எவரும் தப்ப முடியாது. ஏன் ஒளிகூடத் தப்ப முடியாது என்கிறார். இந்தக் கருந்துளையின் அதிபயங்கரத்தை விளக்குவதற்கு, நரக நுழைவாயில் குறித்து கவிஞர் தாந்தே வரிகளை எடுத்துக் காட்டுகிறார், ‘நுழைகின்றீர் ஈண்டு நீவிர், நம்பிக்கை யாவும் துறந்து வாரீர்’ என்று எழுதுகிறார். உங்களுக்கு விரைவில் இறப்பு உறுதி என மருத்துவர் தெரிவித்த பின்பும் அதிசயமாக உயிர்பிழைத்து வாழும் எவருக்கும் கடவுள் ஈடுபாடு வராமல் போகாது. அதிலும் ஹாக்கிங் வித்தியாசமானவர். தீவிர நாத்திகர். அவர் தனது ‘காலம்’ புத்தகம் முழுதுமே கடவுளைக் கிண்டலடித்துக் கொண்டே இருப்பார். ஓரிடத்தில் சொல்வார், கடவுள் என்று ஒருவர் இருந்தால்கூட, அவர் இயற்பியல் விதிகளுக்குக் கீழ்ப்படியும் கடவுளாகத் தான் இருக்க முடியும்.
‘பிக் பாங்க்’ எனப்படும் பெருவெடிப்பு பற்றி ஹாக்கிங் நிறைய எழுத ஆரம்பித்தார். ஒரு முறை வாடிகனில் சேசு சபையார் ஒழுங்கு செய்த அண்டவியல் மாநாட்டில் கலந்துகொண்டார். அண்டவியல் குறித்துப் போப்பாண்டவரிடம் பல அறிவியலர்களும் பேசுகின்றனர். இங்கு பெரு வெடிப்புக்குப் பிறகு, ஏற்பட்ட வளர்ச்சி பற்றி எல்லாம் பேசுவது சரிதான், ஆனால் பெருவெடிப்பு பற்றியே ஆய்வுசெய்யக் கூடாது, ஏனென்றால், அது கடவுள் செயல் என்றாராம் போப்பாண்டவர். ஹாக்கிங் பெரு வெடிப்பு நிலவரம் பற்றித் துணிச்சலுடன் விளக்குகிறார்.
பெரு வெடிப்பு பற்றி ஹாக்கிங் முன்வைத்த கருதுகோளில் கடவுள்தான் உலகைப் படைத்தார் என்ற கோட்பாட்டுக்கு எதிரான கருத்து மறைந்து கிடந்தது. ‘‘நல்வாய்ப்பாக, நான் நிகழ்த்திய உரையின் பொருள் பற்றி போப்பாண்டவருக்குப் புரியவில்லை. இல்லை என்றால், கலீலியோவுக்கு நேர்ந்த கதி எனக்கும் ஏற்பட்டிருக்குமோ’’ என நகைச்சுவை யுடன் குறிப்பிடுகிறார் ஹாக்கிங். கலீலியோ இறந்து சரியாக 300 ஆண்டுகள் கழித்து நான் பிறந்தேன் என்பதும் அச்சத்துக்குக் காரணம் என நகைச்சுவை ததும்பக் கூறி, அவருக்கும் கலீலியோவுக்கும் உள்ள பொருத்தப்பாட்டைச் சொல்லிப் பெருமைப்படு கிறார் ஹாக்கிங்.
2009 ஆம் ஆண்டு உலக கத்தோலிக்க மதத்தின் தலைவரான போப், ரோம் நாட்டில், ‘கடவுளும், பிரபஞ்சமும்’ என்ற தலைப்பில் கிறிஸ்தவ தலைமைச் சபையில் ஒரு மாநாட்டைக் கூட்டினார். அம் மாநாட்டுக்கு கடவுளை மறுக்கும் ஹாக்கிங்கை, போப் அழைத்தார். தனது உடல் நலிவையும் பொருட்படுத்தாது, ஹாக்கிங், சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், மாநாட்டுக்குச் சென்றார். உலகம் முழுதுமிருந்தும் வந்திருந்த விஞ்ஞானிகள், மதத் தலைவர்கள் போப்பிடம், தலை தாழ்த்தி ஆசி பெற்றனர். ஆனால் ஸ்டீபன் ஹாக்கிங் சக்கர நாற்காலியில் அசைவற்று உட்கார்ந்து இருந்த நிலையில், போப் இறங்கி வந்து ஹாக்கிங் முன், முழங்காலிட்டு தலைகுனிந்து, தன்னை வாழ்த்தும்படி கேட்டார். போப், மண்டியிட்டு, ஆசி பெற்றது உலக வரலாற்றில் இதுவே முதல்முறை. அதுவும் கடவுளை மறுக்கும், ஒரு பகுத்தறிவாளர் முன்!
ஹாக்கிங் – மாநாட்டில், தான் கண்டுபிடித்த கருவியின் வழியாக பேசினார். பூமியையோ, நட்சத்திரத்தையோ, சூரியனையோ, நிலவையோ, உயிரினத்தையோ கடவுள் படைக்கவில்லை. மதத் தலைவர்களாகிய நீங்கள் அப்படிப் பேசுவதும் போதிப்பதும் பொய். இது பொய் என்பதை விஞ்ஞானம் நிரூபித்துவிட்டது என்று ஆணித்தரமாக, தனது கருத்துகளை எடுத்துரைத்தார். இறுதியாகப் பேசிய போப், “விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளை மறுத்து, அவர்களை மதம் தண்டித்து தவறு; அதற்காக மன்னிப்புக் கோரு கிறேன்” என்றார். (பூமி தட்டை அல்ல; உருண்டை தான் என்று கலிலியோ கூறியதற்காக, அவரை கிறிஸ்துவ மதம் தண்டித்த தற்கு, போப் மன்னிப்புக் கேட்டது இந்தச் சூழ்நிலையில் தான்)
ஆனாலும் விஞ்ஞானத்துக்கு அப்பால், அதிசயப் படைப்புகளைக் கொண்ட ஒரு சக்தி இருக்கிறது என்றும், அதிசயமாக உயிர் வாழும் ஹாக்கிங்கையும், அத்தகைய தெய்வம்தான் படைத்திருக்க முடியும் என்றும் மதவாதி களுக்கே உரிய வலிமையற்ற வாதத்தையே போப் அப்போது முன் வைத்தார்.
போப் சந்திப்பைத் தொடர்ந்து, ஸ்டீபன் ஹாக்கிங் மற்றொரு கருத்தையும் முன் வைத்தார். “பூமிப் பந்தில் மட்டு மல்லாது, வேறு ஒரு கோளத்திலும், மனிதர்களைவிட சிறந்த அறிவுள்ள உயிரினங்கள் வாழ்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. அவர்கள் நமது பூமியைக் கண்டறிவதற்கு முயற்சித்து வரலாம் என்று கருதுகிறேன். நம்மிலும் அறிவில் சிறந்த அந்த உயிரினம் இங்கே எப்போதாவது வரக் கூடும். அது பற்றி ஆராய்ந்து வருகிறேன். இது எனது கற்பனை யல்ல; விஞ்ஞான கண்டுபிடிப்பு” என்று கூறி யுள்ளார். வேறு சில விஞ்ஞானிகளும் இந்தக் கருத்தை ஏற்றுள்ளனர்.
நியுயார்க் நகரில் ஸ்டீபன் ஹாக்கிங்கைப் பாராட்டி, 2010 ஜூன் 4 ஆம் தேதியிலிருந்து மூன்று நாட்கள் பாராட்டு விழாக்கள் நடந்தன. பல்துறை கலைஞர்களும், விஞ்ஞானிகளும் இசை, நாட்டியம், நாடகம் ஆகிய கலைகளின் வழியாக, பாராட்டி மகிழ்ந்து அந்த விஞ்ஞானியை கொண்டாடினர்.
விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசிய ஸ்டீபன் ஹாக்கிங், “கோளங்களில் இருண்ட குகைகள் இருக்கின்றன. அந்த இருட்டைவிட, விஞ்ஞானத்தைப் புரிந்து கொள்ளாமலும் ஏற்க மறுத்தும் அறியாமையில் உழலும் இருட்டுதான் மிகவும் ஆபத்தானது” – என்று பேசினார்.
அய்ன்ஸ்டீன் கூறிய ஒரு புகழ் பெற்ற வாசகம் உண்டு. “கடவுள் பிரபஞ்சத்துடன் ‘தாயம்’ விளையாடவே முடியாது” என்பது அந்த வாசகம். ஹாக்கிங் இதை மேலும் செழுமைப்படுத்திக் கூறினார். “கருந்துகள் கண்டுபிடிப்புகளுக்குப் பிறகு, கடவுள் பிரபஞ்சத்துடன் தாயம் விளையாட முடியாது என்பது மட்டுமல்ல; கடவுள் உருட்டிய ‘தாயம்’ எங்கே இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல், நம்மைக் குழப்பத்துக்குத் தள்ளி விடுவார்” – என்றார் ஹாக்கிங்.
வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு வருபவர் ஸ்டீபன் ஹாக்கிங். குழந்தைப் பருவத்திலேயே அவரது உடலில், உயிர் காக்கும் அணுக்கள் சாகத் தொடங்கிய நிலையில், இதைத் தடுக்கும் மருத்துவம் உலகில் கண்டு பிடிக்கப்படவில்லை என்று மருத்துவர்கள் கை விட்டனர். உலகப் புகழ் பெற்ற மருத்துவர்கள் சோதித்து, அவர் உயிரோடு வாழும் காலம் மிகக் குறுகியது என்பதால், வீட்டில் மகிழ்ச்சியுடன் வைத்திருங்கள் என்று கூறி விட்டனர். கை கால்கள் செய லிழந்தன; வாய்ப் பேச்சும் இல்லை; மனம் தளராத ஸ்டீபன் ஹாக்கிங், பெற்றோர்களைத் தேற்றி, தனக்கு ஆய்வு நடத்த தனி அறையையும், நூல்களையும் கேட்டு வாங்கிக் கொண்டார். அவர் சொல்ல விரும்பும் கருத்தை, எழுதிக் காட்டவும் முடியாத நிலையில், வாயிலிருந்து வரும் குரலைக் கொண்டு எழுதும் ஒரு கருவியை அவரே தயாரித்தார். அதைக் கண்டு விஞ்ஞானிகளும், பெற்றோரும் வியப்பில் மூழ்கினர். அதே கருவியைக் கொண்டு தான் இப்போதும் பேசி வருகிறார். உடல் உறுப்புகள் செயலிழந்து சக்கர நாற்காலியில் வலம் வந்தார். அவரது மூளை மட்டும் அசாத்தியமாக இயங்குகிறது. பெற்றோர்கள் கடவுள் நம்பிக்கையாளர்கள்.
ஆனால் உடல் உறுப்புகள் செயலிழந்துள்ள இவரோ உள்ளம் தளராத அழுத்தமான கடவுள் மறுப்பாளர். உடலின் ஊனம் அவரை கடவுள் நம்பிக்கைக்கு இழுத்துப் போக வில்லை. “பல கோடிக்கணக்கான மக்கள் கடவுளை நம்புகிறார்கள் என்பதற்காக அந்த பொய்யை, புத்தியுள்ள மனிதன் ஏற்கத் தேவை இல்லை” என்கிறார். விஞ்ஞானிகள் கண்டுபிடித்த ஒவ்வொரு புதுமையான கருத்துகளையும், பாமரர்களும் புரிந்து கொள்ளும் வகையில், எளிமைப்படுத்த வேண்டும். அதுவே இன்றைய அறிவாளிகளின் முக்கிய கடமை என்று வலியுறுத்தியவர் அவர். – இரா
நிமிர்வோம் மார்ச் 2018 இதழ்