வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் உச்சநீதிமன்றம் போடும் ஓட்டைகள்
இந்தியாவில் 18 கோடிக்கும் மேற்பட்டவர்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தவர்கள். ஒவ்வொரு 15 நிமிடத் துக்கும் ஒரு முறை ஒரு தலித் தாக்கப்படுகிறார்; நாள்தோறும் 6 தலித் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றனர். 2007 முதல் 2017 வரையிலான பத்தாண்டுகளில் தலித்துகளுக்கு எதிரான குற்றச்செயல்கள் 66ரூ அதிகரித்துள்ளன. கடந்த பத்தாண்டுகளில், தலித் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்குவதும் இரட்டிப்பாகியிருக் கிறது. இந்த நிலையில்தான், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தொடர்பான வழக்கில் ‘அப்பாவிகள் மீது பொய்ப் புகார்கள் அளிக்கப்பட்டு அலைக்கழிக்கப் படுவதாகவும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஜாமீனில் வெளிவர முடியாமல் இருப்பதை நீக்க வேண்டும்’ என்றும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்திருக்கிறது.
தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக ‘தேசிய குற்றப்பதிவு ஆணையம்’ (என்சிஆர்பி) அளித்துள்ள தரவுகள் எள் முனையளவைப் போன்றது; பெரிய மலையளவுக்கு குற்றங்கள் மறைக்கப்படுகின்றன. காரணம், ஆதிக்க சாதியினர் பழிவாங்குவார்கள் என்ற அச்சத்தில் பெரும்பாலானவர்கள் புகார் செய்வதே இல்லை. அப்படியே புகார் ஏற்கப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு நடந்தாலும் குற்றம்சாட்டப்பட்டவர் மீதான புகாரை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை என்ற வகையில் விடுதலையாகிவிடுவார். இதற்குக் காரணம் இத்தகைய வழக்குகளில் ஒவ்வொரு நிலையிலும் சாதிச் சார்புநிலை அப்பட்டமாக வெளிப்படுவதுதான்.
காசிநாத் மகாஜன் வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே. கோயல், யு.யு. லலித் ஆகியோர், முன்ஜாமீன் வழங்கத் தடை விதிக்கும் சட்டப் பிரிவு குறித்து நோக்கத்துடன் விளக்கம் அளித்து, சட்டத்தையே நீர்த்துப்போக வைத்துள்ளனர். இந்தத் தீர்ப்பானது சாதிரீதியான அக்கிரமங்களுக்கு முக்கியத்துவம் தரவில்லை; இன்றைக்கும் கடைப் பிடிக்கப்படும் தீண்டாமைக் கொடுமைபற்றி ஏதும் கூறாமலேயே புறக்கணிக்கிறது. தலித்துகள் தங்களுடைய உரிமைகளை வலியுறுத்தும் போதெல்லாம் ஆதிக்க சக்திகள் அவர்களைக் கடுமையாக அடக்கி ஒடுக்குகின்றன என்று இந்தச் சட்டத்தைக் கொண்டு வருவதற்கான காரண விளக்கத்தில் அரசே குறிப்பிட்டிருக்கிறது. தலித்து களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் கொடுமைகளின் தீவிரத்தன்மையைக் கருத்தில்கொண்டே, ‘குற்றம் சாட்டப்படுபவர்கள் ஜாமீனில் வெளிவர முடியாதபடியான பிரிவு’ சட்டத்தில் சேர்க்கப் பட்டது. இச்சட்டப்படி தண்டிக்கப்படக்கூடிய குற்றங்கள் எவை என்ற பட்டியலைப் பார்த்தாலே, ஜாமீன் மறுக்கப்படுவற்கான காரணமும் புரியும். இத் தீர்ப்பின்போது நீதிபதி கோயல் சுட்டிக்காட்டிய ‘கர்தார் சிங் வழக்கில்’ தீர்ப்பளித்த ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வும் அரசியல் சட்டப்படியே இந்த முன்ஜாமீன் மறுப்பு இருப்பதாகக் கூறி ஏற்றிருக்கிறது.
தலித்துகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் விசாரணை முடிந்து தண்டனை வழங்கப்படுவது மிகவும் குறைவாக இருப்பதால், இந்தப் புகார்கள் போலியானவை என்ற தவறான எண்ணம் பலருக்கு ஏற்படுகிறது. இந்த எண்ணம் உண்மையல்ல என்பதை தேசியக் குற்றப்பதிவு ஆணையத்தில் உள்ள தரவுகள் உணர்த்துகின்றன. இந்த சட்டப்படி பதிவுசெய்யப் படும் போலி வழக்குகளின் எண்ணிக்கை 2009-2015 காலத்தில் குறைந்துவிட்டன; அத்துடன் தண்டனை விதிக்கப்படும் வழக்குகளின் எண்ணிக்கையும் 2013இல் 23.8ரூ ஆக இருந்தது 2014இல் 28.8ரூ ஆக உயர்ந்திருக்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு 2015இல் இது ஏன் குறைந்தது என்பது தனியாக ஆராயப்பட வேண்டும். சாதாரணக் குற்றவழக்கு களின் எண்ணிக்கையையும் சாதி, இனம், மதம் போன்றவற்றின் அடிப்படையில் வெறுப்பில் நிகழ்த்தப்படும் குற்றங்கள் தொடர்பான வழக்கு எண்ணிக்கையையும் ஒப்பிடுவதே நியாயமுமில்லை, பகுத்தறிவுக்கு ஏற்றதும் இல்லை.
மோசமான புலன் விசாரணையும், திறமையற்ற வழக்கு தொடுப்பும்தான் இந்த எண்ணிக்கைகள் குறைவதற்கு முக்கியக் காரணம். இத்தகைய வழக்குகளில் சாட்சிகள், பெரும்பாலும் பிறழ்சாட்சி களாகிவிடுகின்றனர். பயங்கரவாதத் தடுப்புச் சட்டப்படி தொடரும் வழக்குகளிலும் தண்டனை பெறுவது மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது; அதனால் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகளையும் தளர்த்திவிடலாமா? குற்றம்சாட்டப் பட்டவர் நிரபராதியாக இருக்கலாம் என்று கருத வேண்டும் என்றால், எல்லா வழக்குகளிலும் எல்லா சட்டங்களிலும்கூட இப்படிக் கருதி முன்ஜாமீன் பெறும் உரிமையை எதிரிகளுக்கு வழங்கிவிடலாமே!
விவாதத்துக்குள்ளான இந்த வழக்கில், தலித் அல்லாத அதிகாரிகள் தலித் அரசு ஊழியருக்கு எதிராகப் பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் குறிப்புகளை எழுதுவது அல்லது வழக்கு தொடுக்க அனுமதி தராமலிருப்பது போன்றவை வன் கொடுமைத் தடுப்புச் சட்டப்படியான குற்றமாகக் கூட இல்லாமல் இருக்கலாம். இந்த வழக்கில்கூட ‘எதிரி’க்கு முன்ஜாமீன் வழங்கப்பட் டிருக்கிறது ;
அவருக்கு எதிரான குற்ற வழக்கைத் தள்ளுபடி செய்ய உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டதால் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டிருக்கிறார். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தவும் வாய்ப்புகள் இருந்தாலும், அதன் தண்டனையளிக்கும் பிரிவுகளில் குற்றம்காணக் கூடாது. அப்படிச் செய்தால் அது நசுக்கப்பட்ட மக்களுக்குத் தவறான சமிக்ஞையை அளித்துவிடும் என்று உயர் நீதிமன்றம் கூறியிருக்கிறது. ஆனால் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பு மூலம் தவறான சமிக்ஞைகளைத்தான் வெளியிட்டிருக்கிறது.
ஏற்கெனவே ஒப்புக்கொள்ளப்பட்ட நீதி சார்ந்த கருத்துகளிலிருந்து உச்ச நீதிமன்றம் இப்போது விலகியிருக்கிறது. முன்ஜாமீன் என்பது 1973இல் தான் சட்டத்தில் சேர்க்கப்பட்டது; இது வரையறைக் குட்பட்ட அரசியல் சட்டப்படியான உரிமையே தவிர வாழ்வுரிமை, தனிப்பட்ட சுதந்திர உரிமை ஆகியவற்றை உறுதிசெய்யும் அரசியல் சட்டத்தின் 21ஆவது பிரிவின் கீழ் அல்ல என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே கூறியிருக்கிறது. நீதிபதி கோயலின் தீர்ப்பானது தலித்துகளுக்கு எதிரான குற்றங் களுக்காக வழக்குக்கு ஆளாகும் அதிகாரிகளுக்குச் சாதகமாக அதிக இடம் கொடுத்திருக்கிறது. குஜராத் உயர் நீதிமன்றத் தீர்ப்பிலிருந்து அவர் நிறைய மேற்கோள் காட்டியிருக்கிறார். வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படியான வழக்குகளில் மிகமிகக் குறைந்த அளவுக்கே தண்டனை வழங்கியுள்ள மாநிலம் குஜராத் என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம்.
இந்த வழக்கில் அரசுத் தரப்பு வாதத்தைத் தீர்ப்பில் ஒரு பத்தி மட்டுமே சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது; அதற்கும் மேல் சொல்ல ஏதும் இல்லை. அரசுத்தரப்பு இந்த வழக்கில் இப்படி ஆர்வமே இல்லாது அலட்சியத்துடன் வாதாடியதில் நமக்கு வியப்பு ஏதும் இல்லை!
இப்போது புதிய தீர்ப்புக்குப் பிறகு பூர்வாங்க விசாரணையின்றி முதல் தகவல் அறிக்கையைக்கூட பதிவு செய்ய முடியாது. அப்படியே முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டாலும், அவருடய மேல் அதிகாரி அனுமதி தராமல் கைதுசெய்ய முடியாது. காவல் துறையின் மூத்த கண்காணிப்பாளரின் ஒப்புதலின்றி யார் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்ய முடியாது.
தலித்துகளுக்கு எதிராகக் குற்றங்கள் இழைக்கப் பட்டாலும் காவல் துறையிடம் புகார்செய்வது ஏற்கெனவே குறைவாக இருக்கிறது. இந்தத் தீர்ப்புக்குப் பிறகு அவர்களுக்கு அச்சமே அதிகமாக இருக்கும். மத்திய அரசு விரைந்து இந்தத் தீர்ப்புக்கு எதிராக மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்!
‘இந்து’ ஏட்டில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் – கட்டுரையாளர்: ஃபைஸான் முஸ்தஃபா
குறிப்பு : வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகளின் கடுமையை நீர்த்துப் போகச் செய்த வழக்கில் அரசுத் தரப்பில் சரியாக வாதங்கள் முன் வைக்கப்படவில்லை. இப்போது தலித் மக்ககளின் போராட்டத்தினால் நடுவண் ஆட்சி மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்யப் போவதாக அறிவித்துள்ளது.
பெரியார் முழக்கம் 05042018 இதழ்