இராம ரதயாத்திரையை நிறுத்து! பெரியார் மண் கொதித்தெழுந்தது!
இராமராஜ்ய ரத யாத்திரைக்கு தமிழகம் தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து இது பெரியார் மண் என்பதை மீண்டும் உறுதி செய்தது. அயோத்தியில் ராமன் கோயில் கட்டுதல்; இராமராஜ்யம் உருவாக்குதல்; அரசு விடுமுறை நாளை ஞாயிற்றுக்கிழமைக்கு பதிலாக வியாழக்கிழமையாக்குதல்; இந்து தேசிய நாள் ஒன்றை அரசு நாளாக அறிவித்தல் என்ற கோரிக்கைகளோடு ‘இராமராஜ்ய ரதயாத்திரை’ உ.பி., ம.பி., மகாராஷ்டிரம், கர்நாடகா, கேரளம் வழியாக தமிழ்நாட்டின் எல்லையான செங்கோட்டையில் மார்ச் 21இல் நுழைந்தது. மதவெறியைத் தூண்டி விடும் நோக்கத்தோடு நடத்தப்படும் ரத யாத்திரையை எதிர்த்து மறியல் செய்வோம் என்று காவி பயங்கரவாத மக்கள் எதிர்ப்புக் கூட்டமைப்பு ஏற்கனவே அறிவித்திருந்தது. திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பெரியார் இயக்கங்களும், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சி, நாம் தமிழர், பாப்புலர் பிரன்ட் ஆப்இந்தியா, மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் இணைந்து உருவாக்கிய இந்தக் கூட்டமைப்பின் தலைவர்களும் திட்டமிட்டபடி செங் கோட்டை நோக்கிப் புறப்பட்டனர்.
இதற்கிடையே தமிழ்நாட்டில் நடக்கும் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி, நடுவண் அரசுக்கு நடுங்கி, நெல்லை மாவட்டம் முழுதும் 144 தடை உத்தரவைப் பிறப்பித்து, பிற மாவட்டத்தார் எவரும் நெல்லைக்குள் நுழையத் தடை விதித்தது. மறியல் போராட்டத்துக்குப் புறப்பட்டுச் சென்ற கழகத் தலைவர் கொளத்தூர் மணி, த.பெ.தி.க. பொதுச் செயலாளர் கோவை இராமகிருஷ்ணன் ஆகியோர் புளியங்குளத்தில் அவர்கள் தங்கி யிருந்த விடுதிகளில் விடியற்காலை 5 மணி யளவில் கைது செய்யப்பட்டனர். மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவஹிருல்லாவும் புளியங்குளத்தில் கைது செய்யப்பட்டார். இவர்களோடு உடன் சென்ற தோழர்களும் கைது செய்யப்பட்டனர்.
தொல் திருமாவளவன், வேல் முருகன், சீமான், தெகலான் பாகவி உள்ளிட்டோர் வழியில் கைது செய்யப்பட்டனர். காவல்துறை கெடுபிடிகளையும் மீறி தென்காசியில் 500க்கும் மேற்பட்டோர் ரத யாத்திரையை மறியல் செய்ய திரண்டிருந்தனர். அதிர்ச்சியடைந்த காவல்துறை செய்வதறியாது திகைத்து, தோழர்களைக் கைது செய்யத் தொடங்கியது. தோழர்கள் கைது செய்யப்பட்டு முடியும் வரை இராம ரத யாத்திரை எல்லையிலேயே நிறுத்தப்பட்டிருந்தது.
கட்டுவதற்கு திட்டமிட்டிருக்கும் இராமர் கோயிலைப்போல் மிகப் பெரும் டிரக்கில் இராமன் சிலையோடு சங் பரிவாரங்கள் வந்தன. பார்ப்பன புரோகிதர்கள் அர்ச்சனை செய்தார்கள். வடநாட்டு காவி உடை சாமியார்கள் உடன் வந்தனர். 144 தடை உத்தரவு பிறப்பித்த நிலையில் ‘இராமன் ரதம்’ மட்டும் ஊர்வலமாக வருவதற்கு எப்படி அனுமதிக்கப் பட்டது என்ற கேள்விக்கு தமிழக அரசிடம் பதில் இல்லை. இதற்கிடையே தமிழ்நாடு சட்ட மன்றத்தில் மார்ச் 19ஆம் தேதி ஆளும் கட்சி கூட்டணியில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் தளியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி – ரதயாத்திரைக் குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளாததைக் கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.
20ஆம் தேதி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், “இரத யாத்திரையை அனுமதித்தது யார்? இராமன் கோயில் கட்டும் பிரச்சினை உச்சநீதிமன்ற விசாரணையில் இருக்கும்போது எப்படி இதை அனுமதிக்கலாம்” என்று கவன ஈர்ப்பு தீர்மானம் வழியாகக் கேட்டார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இது மத ஊர்வலம் என்றும் ஏனைய மாநிலங்களைப் போல் தமிழக அரசு அனுமதித்தது என்றும், மத ஊர்வலத்தை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன என்றும் பதில் கூறினார். பதில் உரையில் திருப்தி அடையாத தி.மு.க. காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் ரத யாத்திரைக்கு தடை கோரி சட்டசபைக்குள் முழக்கங் களை எழுப்பினர். அதைத் தொடர்ந்து அனைவரும் வெளியேற்றப்பட்டனர். பிறகு தலைமைச் செயலக வாயிலில் அமர்ந்து சாலை மறியலில் ஈடு பட்டனர். “அனுமதிக்காதே; அனுமதிக் காதே! மதவெறியைத் தூண்டும் யாத்திரையை அனுமதிக்காதே; இது பெரியார் மண்; இது அண்ணா மண்; பா.ஜ.க.வின் கைக் கூலி எடப்பாடி ஆட்சியே பதவி விலகு” என்று முழக்கங்களை எழுப் பினர். பிறகு காவல்துறை அனைவரை யும் கைது செய்தது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பார்ப்பனிய மதவாத வெறி சக்திகளுக்கு எதிராக தமிழகம் மீண்டும் கொதித்தெழுந்த காட்சியைக் காண முடிந்தது. ஆத்திர மடைந்த சில காலிகள் ஆலங்குடியில் பெரியார் சிலையை சேதப்படுத்தி யுள்ளனர்.
இரத யாத்திரையை எதிர்த்து சென்னையில் மட்டும் ஒரே நாளில் 69 இடங்களில் நடந்த போராட்டத்தில் 3314 பேர் கைதாகியுள்ளது குறிப்பிடத் தக்கது.
பெரியார் முழக்கம் 22032018 இதழ்