அரசு கட்டுப்பாட்டிலிருந்து கோயில்களை விடுவிக்கலாமா? – விடுதலை அரசு

கோயில்களை அரசுப் பிடியிலிருந்து மீட்க வேண்டும் என்று இந்துத்துவாதிகள் பார்ப்பனர்கள் கூறுவதில் நியாயமிருக்கிறதா?

இத்தனை பெரிய கோயில்களை கட்டியது யார்? மன்னர்கள்- அரசுகள்.

யாருடைய பணம்? மக்களை கசக்கி பிழிந்து வசூலித்த வரிப் பணம்.

எவருடைய உழைப்பு? மக்களின் உழைப்பு.

திருவரங்கம் கோவிலை கட்டிமுடித்த உழைப்பாளிகள்  கூலிகேட்டு குழந்தை குட்டி களோடு ஒட்டிய வயிற்றுடன் நின்றபோது  “இந்த உலகத்தில்தான் பசிக்கும், பசி தீர்க்க காசு வேண்டும்! ஆனால் வைகுந்தத்தில் பசிக்காது… காசும் தேவைப்படாது! உங்களை நித்யமான  வைகுந்தம் அனுப்புகிறேன்”  என்றுகூறி அவர்கள் அனைவரையும் ஓடத்தில் ஏற்றி கரைபுரண்டு ஓடிய கொள்ளிடம் ஆற்றின் நடுவில் ஓடத்தை கவிழ்த்துக் கொன்றான் திருமங்கை ஆழ்வான்.

திருவானைக்கா கோயிலில் ஒரு மதில் சுற்றின் பெயர்: விபூதி பிரகாரம்! ஏனிந்த பெயர்?

ஊரையே வளைத்து மைல் கணக்கில் கட்டப்பட்ட நீண்ட கருங்கல் மதில்சுவற்றை கல்சுமந்து கட்டிய நமது முன்னோர்களுக்கு வழங்கப்பட்ட கூலி விபூதி! மட்டும்தான்!

எதற்கு? பசியால் கண்கள் இருளும்போது வாயிலும்,வயிற்றிலும் பட்டையடித்து கொள்ள!

இப்படி ஒருவேளை கஞ்சிக்கும், பல நேரங்களில் அதற்கும் வழியற்றும், வீட்டுக்கு ஒருவர் கட்டாயமாக வேலைசெய்து, கசையடி, பிரம்படி வாங்கி அரசனின் புகழ் நிலைத்திருக்க அரசின் கட்டளையை ஏற்று கல்லும், மண்ணும் சுமந்து கட்டப்பட்டதுதான் கோவில்கள்.

இவர்களின் முன்னோர்கள் அன்றைக்கே அரசனிடம் சென்று, அரசின் கடமை மக்களை கசக்கிப் பிழிந்து கோவில் கட்டுவதல்ல… மக்களை பாதுகாப்பது.

அரசின் கடமை யாகசாலைகள் அமைப்பதல்ல… பிள்ளைகள் படிக்க பாட சாலைகள் கட்டுவது!

எனவே, அரசே! கோவில் கட்டாதே, கோவில் நிர்வாகத்தில் தலையிடாதே என்று குரல் எழுப்பியிருந்தால் அது நியாயம்!

அதைவிடுத்து, முடியரசு காலத்தில் ஆட்சியாளர்கள் மக்களின் செல்வத்தை தங்கமாக, வெள்ளியாக, வைர, வைடூரியமாக, நிலமாக கொட்டிக் கொடுக்கும்போது பல்லிளித்து வாங்கிக் கொண்டு பத்திரப் படுத்தியவர்களின் வாரிசுகள் இன்று குடியரசு காலத்தில் கொடுத்ததற்கு கணக்கு கேட்டால்… அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு என்பது என்ன நியாயம்?

இந்த வகையில் மக்களைச் சுரண்டி கட்டப்பட்ட மசூதியோ, தேவாலயமோ இங்கிருந்தால் அதையும் அரசே ஏற்கவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஏன் வெளியேற வேண்டும்?

கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கோவில் சொத்துக்கள் தனியார் ஆக்ரமிப்பில் உள்ளது. முறையாக வாடகை, குத்தகை செலுத்துவதில்லை. எனவே கோவில் நிர்வாகத்தை இந்து துறவிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்கிறார்கள்.

சரி, நீங்கள் சொல்கிற மடாதிபதிகள், ஜீயர்கள், ஆதீனங்கள் அறநிலையத் துறைக்கு கட்டுப் படாமல் தன்னாட்சி நடத்து கிறார்களே…இந்த துறவிகளின் நிர்வாகத்தில் மக்களும்,மன்னர்களும் கொடுத்த சொத்துக்கள் ஒழுங்காக பராமரிக்கப் படுகிறதா? எதற்காக எழுதி வைத்தார்களோ அதற்காகவே அந்த சொத்துக்கள் பயன்படுத்தப்படுகிறதா?

குத்தகை, வாடகை அனைத்தும் முறையாக வசூலாகிறதா?

இதில் எவ்வளவு பொதுமக்கள் நலனுக்கு, பொது காரியத்திற்குப் பயன்படுகிறது?

இதெல்லாம் கிடக்கட்டும்.

கோயில் சொத்துக்களை வாடகை, குத்தகை செலுத்தாமல் அனுபவிப்பவர்கள் ஆத்திகர்களா? நாத்திகர்களா?

திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் நாத்திகர்கள் கோவில்களில் அறங்காவலராக வந்துவிட்டார்கள் என்று கூக்குரலிடுகிறார்கள்.

எந்த கோவிலில் நாத்திகர்கள் அறங் காவலராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்? பட்டியல் இருக்கிறதா இவர்களிடம்?

இந்து அறநிலையத் துறையைப் பார்ப்பனர்களின் கடும் எதிர்ப்புகளுக்கிடையில் உருவாக்கியவர் பக்தியில் ஊறித் திளைத்த, சமற்கிருதம் படித்த, வேத-புராண, இதிகாசங்களைக் கற்றறிந்த நீதிக்கட்சியின் பனகல் அரசர்.

நீதிக்கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான பி.டி.ராசன் அவர்களது பக்தி உலகபிரசித்தம்.

அறநிலையத்துறை மசோதா கொண்டு வரப்படும் போது காங்கிரசின் சத்தியமூர்த்தி அய்யர் எதிர்க்கிறார். பெரியார் காங்கிரசில் இருந்து கொண்டே ஆதரிக்கிறார்.

பிற்காலத்தில் காங்கிரசு ஆட்சியில் அறநிலையத்துறை சட்டம் செழுமையாக்கப் படுகிறது. இதில் கவனிக்கப்பட வேண்டிய செய்தி நீதிக் கட்சியும், காங்கிரசும் நாத்திகத்தை கொள்கையாகக் கொண்ட கட்சிகள் இல்லை.

திமுகவில் சற்று கூடுதலாகவும், அதிமுகவில் ஒன்றிரண்டு பேரும் நாத்திகர்களாக இருக்கிறார்களேத் தவிர இவர்கள் அறங் காவலர்களாக நியமிக்கப் படுவதில்லை.

கோவில் அறங்காவலர் என்பது திமுக, அதிமுக வில் பட்டையடித்துக் கொண்டும் , நாமம் போட்டுக்கொண்டும், ஆஷாடபூதிகளாக வலம் வருகிற, பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளை யாக பல்லிளிக்கிறவர்களுக்குக் கிடைக்கிற நியமனப்பதவி. இதற்கு நாத்திகர்கள் ஆசைப்படு வதுமில்லை. அதற்காக பக்தி வேடம் போடுவதுமில்லை.

அதேவேளை, நாத்திகர்களை அறங் காவலர்களாக நியமிப்பதும் தவறானதில்லை. ஏனெனில் நாத்திகர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை செம்மையாக நிறைவேற்றுபவர்கள். பொதுப் பணத்திற்கு ஆசைப்படாதவர்கள்.

காங்கிரசை பெரியார் ஆதரித்தபோது பல தொகுதிகளில் காங்கிரசு வேட்பாளர்களின் தேர்தல் செலவுக் கணக்கை கவனித்துக் கொண்டவர்கள் நாத்திகர்களான பெரியார் தொண்டர்கள்தான். காரணம் நயாபைசா சுத்தமாக கணக்கை ஒப்படைத்து, காமராசரையே வியப்படையச் செய்தது நாத்திகர்களின் நேர்மை.

தான் பொறுப்பேற்றுக் கொண்ட ஈரோடு தேவஸ்தான கமிட்டியை திறமையாக நிர்வாகம் செய்து நட்டத்திலிருந்த கோவில் வருவாயை மிச்சப்படும் அளவிற்கு இருப்பு வைத்து பொறுப்பைத் துறந்தவர் பெரியார் பட்டம் பெறுவதற்கு முந்தைய ஈ.வெ.ரா!

நாத்திகரான நாவலர் நெடுஞ்செழியன் அறநிலையத்துறை அமைச்சராக இருக்கும் போது நெய்யில் குளித்த திருவரங்கம் அரங்கநாதன் “பக்தி பெருத்த பக்தவச்சலனார்” காலத்தில் தீயில் குளித்தார் என்பது குறிப்பிடத் தகுந்தது.

இதுவரை எந்த நாத்திகர் மீதும் கோவில் இடிப்பு, கோவில் நகைத் திருட்டு, சிலைத் திருட்டு, கோவில் நில அபகரிப்பு, கோவிலுக்குள் கொலை செய்தல் போன்ற குற்றாசாட்டுகள் பதியப்பட்டதே இல்லை!

“நீங்க பேசறதெல்லாம் நாத்திகமா? ஸ்ரீராமன் அரசவையிலே அமைச்சரா இருந்த ஜாபலியைத் தெரியுமா? அவர் எப்பேற்பட்ட நாத்திகர் தெரியுமா?” என்று ராமாயணக் கதையை உச்சிமுகர்ந்து மெச்சுகிற அதே அம்பிகள்தான், அறங்காவலர்களாக அனைத்து சாதியினரும் தங்களை கேள்வி கேட்பதை பொறுக்க இயலாமல் கோவில் நிர்வாகத்தில் நாத்திகர்கள் நுழைந்து விட்டார்கள் என்று கூசாமல் ஒப்பாரி வைக்கின்றனர்.

இந்திய தத்துவஞான மரபிலிருந்து நாத்திகத்தை புறந்தள்ளி விடமுடியாது என்ற சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் கூற்றை இவர்கள் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

(கட்டுரையாளர் – பெரியாரிஸ்ட்)

 

நிமிர்வோம் பிப் 2018 இதழ்

You may also like...