அரசே! குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடு! விழுப்புரத்தில் தலைவிரித்தாடும் ஜாதி வன்கொடுமை
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டத்துக் குட்பட்ட கிராமங்களில் தலித் குடும்பங்கள் மீதான கொலை வெறித் தாக்குதல்கள், பாலியல் துன்புறுத்தல்கள், ஜாதி ஆதிக்கச் சக்திகளால் தொடர்ந்து நடப்பது அதிகரித்து வருகிறது. வழக்கம்போல காவல்துறை தலித் மக்கள் மீதான தாக்குதல் என்றால் அலட்சியம் காட்டுவது போலவே இதிலும் செயல்பட்டு வருகிறது.
தற்போது திருக்கோவிலூர் அருகே உள்ள வெள்ளம்புத்தூர் கிராமத்தில் வசித்து வந்த தலித் குடும்பத்தைச் சார்ந்த ஆராயி (4), அவரது மகள் தனம் (15), மகன் சமையன் (10) ஆகியோர் மீது மர்ம நபர்கள் கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். சிறுவன் சமையன் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்துவிட்டார். உயிருக்குப் போராடிய நிலை யில் ஆராயியையும் அவரது மகள் தனத்தையும் முதலில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்து, அங்கு பிராணவாயு (ஆக்ஸிஜன்) இல்லாததால், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் முருகேசன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வெள்ளம் புத்தூர் கிராமத்துக்குச் சென்று ஆய்வு நடத்தியுள்ளனர்.
இதே விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டிவட்டம், அத்தியூர் திருக்கை கிராமத்தில் மற்றொரு ஜாதிவெறித் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இதே கிராமத்தில் இரு வேறு சமூகத்தைச் சார்ந்த இளைஞரும் இளம் பெண்ணும் காதலித்து திருமணம் செய்யும் நோக்கத்தோடு ஊரை விட்டு சென்றுள்ளனர். பெண்ணின் வீட்டார் தேடிச் சென்று பெண்ணை காதலனிடமிருந்து கட்டாயப்படுத்திப் பிரித்து, அழைத்து வந்துவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து, பெண்ணின் ஜாதியைச் சார்ந்த 200 பேர் பயங்கர ஆயுதத்துடன், தலித் குடியிருப் புகளுக்குள் புகுந்து, 60க்கும் மேற்பட்ட தலித் குடும்பங் களைத் தாக்கி, பல இலட்சம் மதிப்புள்ள உடைமைகளை அழித்துவிட்டனர். பாதிக்கப் பட்ட தலித் குடும்பங்கள் வாழ்வாதாரங்களை இழந்து ஊரைவிட்டே வெளியேறி யுள்ளனர்.
ஊடகங்களில் இத்தகைய தலித் மீதான வன்கொடுமை களுக்கு முக்கியத்துவம் தருவ தில்லை. தொலைக்காட்சி ஊடகங்களிலும் விவாதங்கள் நடப்பது இல்லை.
வழமைக்கு மாறாக பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி, வெள்ளம்புதூர் தாக்குதலுக்கும் தலித் சிறுவன் படுகொலைக்கும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். ‘வதந்தி களைப் பரப்பக் கூடாது’ என்றும், புதுடில்லி, விழுப்புரம், தூத்துக்குடி மற்றும் போரூரில் தலித்துகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் போலவே இந்தத் தாக்குதலும் நடந்திருக்கிறது என்றும் ஒப்புமை காட்டி யிருக்கிறார்.
எப்படி இருப்பினும் உண்மையான குற்றவாளிகளை காவல்துறை கண்டுபிடித்து, உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும். பாதிக்கப் பட்ட தலித் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணை யமும் இதை வலியுறுத்தி யிருப்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
தமிழ்நாட்டில் தலித் மக்கள் மீதான ஜாதி வெறித் தாக்குதல், வன்கொடுமைகள் முடிவில்லா மல் தொடர்ந்து கொண்டே இருப்பதை தமிழக அரசியல் கட்சிகளும் ‘வாக்கு வங்கிக்’ கண்ணோட்டத்தோடு கண்டிக் காமல் ஒதுங்கியே நிற்பது கண்டனத்துக்குரியது.
‘இந்து’ ஒற்றுமைப் பேசும் மதவாத கட்சிகளானாலும், தமிழர் என்றால் யார் என்பதற்கு ‘ஆக்ஸ்போர்டு அகராதி’ போடும் அமைப்புகளும், ஜாதி வெறித் தமிழர்களைக் கண்டிக்க முன்வருவதில்லை. அவர்கள் மவுனத்தைக் களைய வேண்டும்.
திராவிடர் விடுதலைக் கழகம் தலித் மக்கள் மீதான இந்த ஜாதி வெறித் தாக்குதலை வன்மை யாகக் கண்டிக்கிறது.
பெரியார் முழக்கம் 01032018 இதழ்