சூளுரைத்தார், கவிஞர் வைரமுத்து வடமொழி எதிர்ப்போடு தமிழின விடுதலையை முன்னெடுப்போம்
“வடமொழி எதிர்ப்பும் இனவிடுதலை இயக்கமும் மீண்டும் புத்துயிர் பெறச் செய்வோம்” என்று சூளுரைத்தார் – கவிஞர் வைரமுத்து.
ஆண்டாள் தேவதாசி மரபில் வந்தவராக இருக்கலாம் என்று ஓர் ஆய்வாளர் கருத்தை மேற்கோள் காட்டினார் என்பதற்காக, கவிஞர் வைரமுத்துவை பார்ப்பனர்கள் மூர்க்கத்தனமாக எதிர்த்தனர். எச். ராஜா என்ற பார்ப்பனர், வைரமுத்துக் குடும்பத்தினரை இழிவுபடுத்தினார். அய்யங்கார் பார்ப்பனர்கள், வைரமுத்து, திருவில்லிபுத்தூர் கோயிலுக்கு வந்து ஆண்டாளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று திறந்தமேனியுடன் வீதிக்கு வந்து போராடினார்கள். ‘தினமணி’ ஆசிரியரான ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர் வைத்தியநாதனுடன் கடந்த சில ஆண்டுகளாக நெருக்கம் காட்டி வந்தார் வைரமுத்து. கட்டுரை வாசிப்பு நிகழ்ச்சிகளை பா.ஜ.க.வின் ஊதுகுழலான ‘தினமணி’யே ஏற்பாடு செய்து அந்தக் கட்டுரைகளை முழுமையாக ‘தினமணி’ வெளியிட்டு வந்தது.
தருண் விஜய் என்ற ஆர்.எஸ்.எஸ்.காரர், திருக்குறள் பெருமை பேசினார் என்பதற்காக அவருக்கு தமிழகத்தில் மேடை அமைத்துக் கொடுத்தார் வைரமுத்து. பா.ஜ.க.விடம் வைரமுத்து காட்டிய ‘நேசக்கரம்’ நீண்ட நாள் நிலைக்கவில்லை. ‘ஆண்டாள்’ பற்றிய அவர் உரையில், இடம் பெற்ற ஒரு வரியைப் பெரிதாக்கி பார்ப்பனர்கள் வைரமுத்துக்கு எதிராக தொடைத் தட்டிக் கிளம்பினர். ‘தினமணி’ வைத்தியநாத அய்யரும், தானாகவே திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்குச் சென்று வைரமுத்து கட்டுரையை வெளியிட்டதற்காக, ‘ஆண்டாள்’ சன்னதியில் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு, ஜீயரிடமும் மன்னிப்புக் கேட்டார். வைரமுத்து மன்னிப்புக் கேட்கவில்லை, வருத்தம் தெரிவித்தார். அதற்குப் பிறகுதான் கவிஞர் வைரமுத்துவுக்கு பார்ப்பனர்களை நம்பிப் போன தவறு புரியத் தொடங்கியது. ‘தினமணி’ ஏற்பாட்டில் 13 கட்டுரை வாசிப்புகளை நடத்தினார் கவிஞர் வைரமுத்து. 13ஆவது கட்டுரை வாசிப்புதான் ஆண்டாள். அத்துடன் முறிந்து போனது அந்த உறவு.
14ஆவது வாசிப்புக்கு கவிஞர் வைரமுத்து தேர்வு செய்தது மறைமலை அடிகளை. பார்ப்பன வடமொழியான சமஸ்கிருதத்தை எதிர்த்து, தனித்தமிழ் இயக்கம் கண்ட மறைமலை அடிகளாரைக் கையில் எடுத்து, பார்ப்பனிய எதிர்ப்புக் களத்தை சூடேற்றியிருக்கிறார் வைரமுத்து. இந்த முறை கவிஞர் வைரமுத்துவின் ‘தமிழாற்றுப் படை’ நிகழ்வை அவரே தனது சொந்தப் பொறுப்பில் சென்னையில் காமராசர் அரங்கில் பிப்.13 அன்று ஏற்பாடு செய்தார். உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி நாகமுத்து தலைமையில் துணைவேந்தர் திருவாசகம் முன்னிலையில் நிகழ்வு நடந்தது. மேடையில் மறைமலை அடிகளார் படம் வைக்கப்பட்டு நிகழ்வுக்கு வந்த முக்கிய பிரமுர்கள் படத்துக்கு மலர்களைத் தூவினர். பார்ப்பன எதிர்ப்பு உணர்வு அலையில் அரங்கம் உணர்ச்சிப் பிழம்பாகத் திகழ்ந்தது.
“உறங்கிக் கிடந்த தமிழ் உணர்வும், இன உணர்வும் அண்மையில் உயிர்த்துடிப்போடு எழுந்து நிற்பது கண்டு தமிழ்ச் சமூகம் சிலிர்த்து நிற்கிறது” என்று பலத்த கரவொலிக்கிடையே தனது உரையைத் தொடங்கிய கவிஞர், “ஒரு மொழி பெருமையும் உரிமையும் பெற வேண்டுமானால் அதிகார மய்யங்களில் அது நின்று நிலவ வேண்டும். மாநில அரசு அலுவலகங்களில் தமிழ்நாட்டுக்குள்இயங்கும் மத்திய அரசு அலுவலகங்களில் நீதிமன்றங்களில் கல்விக் கூடங்களில் ஊடகங்களில் ஒரு இனத்தின் அன்றாடப் பேச்சு வழக்கில் அது தொடர்ந்து நிலைபெற வேண்டும்” என்றார். குடியரசுத் தலைவர் கொச்சியில் நடந்த ஒரு விழாவில் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகத் தாய்மொழிகளே இருக்க வேண்டும் என்கிறார். ஆனால் குடியரசுத் தலைவர் இப்படி கூறிய பிறகும், தமிழை வழக்காடு மொழியாக்க மத்திய அரசு மறுக்கிறது. இராஜஸ்தான், உத்திரபிரதேசம், மத்திய பிரதேச நீதிமன்றங்களில் இந்தியில் தீர்ப்பளிப்பது நடைமுறையில் இருக்கும்போது தமிழில் தீர்ப்பளிப்பது மட்டும் சாத்தியம் ஆகாதா? இந்திய மொழிகளில் எந்த மொழிக்கும் தமிழ் குறைந்ததா? என்ற கேள்வியை மத்திய அரசை நோக்கி எழுப்பினார்.
“சிவபெருமான் தன் உடுக்கை எடுத்தான்; ஒரு பக்கம் அடித்தான் தமிழ் பிறந்தது; மறுபக்கம் அடித்தான் சமஸ்கிருதம் பிறந்தது என்று நம்புகிறவர்களைக் கேட்கிறேன், இரண் டும் சமமான மொழிகள் தானே! பிறகு ஒரு மொழி மட்டும் எப்படி உயர்ந்தது என்கிறீர்கள்? அப்படியானால் நீங்கள் சிவபெரு மானையே எதிர்க்கிறீர் களா?” என்ற கேள்வியை எழுப்பிய போது அரங்கமே கைதட்டலால் அதிர்ந்தது.
“திராவிட மொழிக் குடும்பம் தோன்றுவதற்கு முன் தென்னிந்தியா முழுக்கத் தமிழ் பரவி இருந்தது. இன்று தென்னிந்தியாவில் ஒரு பகுதியாக வெறும் 1,30,058 சதுர கிலோ மீட்டராகச் சுருங்கியிருக்கிறது. இது மேலும் சுருங்குவதற்கு தமிழ் சம்மதிக்காது. தமிழர்களும் சம்மதிக்க மாட்டார்கள். அதனால் தமிழ் உணர்வு மீண்டும் முன்னெடுக்கப்படுகிறது” என்று சமஸ்கிருதத் திணிப்பை நடத்தி வரும் பா.ஜ.க. ஆட்சியை மறைமுகமாக எச்சரித்தார்.
“தாக்குவதல்ல வீரம்; தாங்குவதே வீரம்; பொறுமை காப்போம்; ஒற்றுமையால் தமிழ் இனத்தைக் கட்டிக் காப்போம்” என்ற முன்னுரை யோடு தொடங்கியது அவரது உரை:
மறைமலை அடிகளுக்கு பல்வேறு பெருமைகள் இருந்தாலும் அவருக்கு உரிய தனித்த பெருமை – தமிழ் – வடமொழி சார்பு இன்றி தனித்து இயங்கும் என்பதை நிலைநிறுத்தி அதற்காக வடமொழியை எதிர்த்து தனித் தமிழ் இயக்கம் கண்டதுதான் என்றார், வைரமுத்து.
பார்ப்பனியம் தமிழை ஊடுருவி தமிழரின் வரலாற்றையே துடைத்ததை அவர் சுட்டிக் காட்டினார்.
“வேதாரண்யம் என்று சுட்டும்போது அந்த ஊரின் வயது – வரலாறு – பண்பாடு என்ற மூன்றும் நமக்கு முற்றும் விளங்கவில்லை. திருமறைக்காடு என்று சுட்டப்படுமிடத்து அதன் நூற்றாண்டுகளை நம்மால் நுகர முடிகிறது. கபிஸ்தலம் என்ற பெயரை அகழ்ந்து பார்த்தால் உள்ளே ‘குரங்காடுதுறை’ தோன்று கிறது. அருணாசலம் என்ற சொல்லின் நதி மூலம் தேடி நகர்ந்தால் அது ‘திருவண்ணா மலை’யில் முடிகிறது. ஜம்புகேஸ்வரம் என்ற ஊர்ப் பெயரை ஊடுருவிப் பார்த்தால், உள்ளே ‘திருவானைக்கா’ தென்படுகிறது. இப்படித்தான் தமிழ் மொழியின் மீது வந்து படிந்த பிற மொழிகள் தமிழரின் வரலாற்றைத் துடைத்துவிட்டு, தம்மிலிருந்தே வரலாறு தொடங்கப்பெற வேண்டும் என்று சூழ்வினையாற்றின.
இந்தப் பெயர் மாற்றம் என்ற பெருஞ் செயலைப் போகிற போக்கில் புறந்தள்ளிவிட முடியாது.
மறைமலை என்ற அலை மட்டும் அடித்திராவிடில், காலப்போக்கில் தமிழ் இலக்கியங்களின் மூலங்களும்கூட முகம் மாறிப் போயிருக்கலாம். தொல்காப்பியம் ஐந்திரமாகி யிருக்கலாம்; தொல்காப்பியர் திரண தூமாக்கினி ஆகியிருக்கலாம்; திருவள்ளுவர் ஸ்ரீவல்லபராய்த் திரிந்திருக்கலாம்; தமிழ்நாடு என்பது வட இந்தியாவின் தென்துண்டு என்று வரலாறு வளைக்கப்பட்டிருக்கலாம்” – என்றார்.
தனித்தமிழ் இயக்கமாகத் தொடங்கி தமிழர் இன மீட்பு இயக்கமாக நீட்சிப் பெற்றதை க் குறிப்பிட்ட வைரமுத்து, மறைமலை அடிகளுக்கும் பெரியாருக்கும் இருந்த உறவையும் பெருமையுடன் பதிவு செய்தார்.
“தண்ணீரைத் தேடிப் பயணித்த கடப்பாரை, புதையலில் முட்டிப் பொறி தட்டியதுபோல, மொழி மீட்சிக்குத் தோன்றிய தனித்தமிழ் இயக்கம், இனமீட்சியில் போய் முடிந்தது.
திராவிட இயக்கத்தைக் கொழுந்துவிட்டு எரியச் செய்த கொள்கைகளுள் ஒருபாதி இனம்; மறுபாதி மொழி. அந்த மொழிக் கொள்கை மறைமலையடிகளின் மூளைக் குழந்தை என்பதை மறைக்கவோ மறுக்கவோ இயலாது. ஒருவரைப் பாராட்டுவதில் பணத்தைவிடச் சிக்கனமாய்ச் சொற்களைப் பயன்படுத்துகிற பெரியார், மறைமலை யடிகளைத் தன் கரமென்று சொல்லி யிருக்கிறார்.
“மறைமலையடிகளும் எம்.எல்.பிள்ளையும் எனக்கு வலக்கையும் இடக்கையும் போன்றவர்கள். எனக்கு ஏதேனும் அய்யம் உண்டாகும் போதெல்லாம் அவர்களிடமே தீர்த்துக்கொள்வேன்” என்ற பெரியாரின் கூற்றை நான் பெரிதினும் பெரிதாய்க் கருதுகிறேன்.”
பார்ப்பன ஊடகங்களின் வடமொழிப் பற்றை மறைமலை அடிகள் நடத்திய இயக்கம் மாற்றியதையும், திராவிட இயக்கத்துக்கும் தனித் தமிழ் இயக்கத்துக்கும் உள்ள உறவையும் கவிஞர் வைரமுத்து இவ்வாறு பதிவு செய்தார்.
“மறைமலையடிகள் அன்று கொளுத்திப் போட்ட நெருப்புதான் இன்றளவும் வெவ்வேறு திரிகளில் விளக்குகளாய் விளக்கமுற நிற்கிறது.
முதலில் அது ஊடக மொழியை உருமாற்றிப் போட்டது. சில ஏடுகள் ‘ஜல சப்ளை ரத்து’ என்று தலைப்பிட்டுக் கொண்டிருந்தன. இதனுள் ஜலம் – சம்ஸ்கிருதம்; சப்ளை – ஆங்கிலம்; ரத்து – உருது. இது ‘தண்ணீர் வரத்து நிறுத்தம்’ என்று தமிழாகியது மறைமலை யடிகளால்.
திராவிட இயக்க மேடைகளும் மறைமலை யடிகளின் தாக்கத்தால் ஆக்கமுற்றன. ‘அக்ராசனர்’ தலைவரானார்; ‘மகாஜனங்கள்’ பொதுமக்கள் ஆயினர்; ‘பிரேரணை’ தீர்மான மாயிற்று; ‘நமஸ்காரம்’ வணக்கமாயிற்று. மாநில அலுவல் மொழியாகத் தமிழாவதற்கு ஒரே வழி ஆங்கிலத்தை எழுப்பிவிட்டுத் தமிழ் ஏறி அமர்வதுதான். ‘முனிசிபாலிட்டி’ நகராட்சி ஆயிற்று; ‘கார்ப்பரேஷன்’ மாநகராட்சி ஆயிற்று; ‘கமிஷனர்’ ஆணையாளரானார்; ‘ஜி.ஓ’ அரசாணையானது; ‘சர்க்குலர்’ சுற்றறிக்கை ஆனது. மறைமலையடிகளின் நீண்டு விழுந்த நிழல்களே இவையெல்லாம்.
அறிஞர் அண்ணா இந்த மண்ணுக்குத் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டியதும், தமிழ்நாட்டுத் தலைநகரத்திற்கு கலைஞர் ‘சென்னை’ என்று பெயர் சூட்டியதும் மறை மலையடிகளால் நேர்ந்த மங்கலங்களாகும்.”
தருண் விஜய் வழியாக வைரமுத்துவைப் பயன் படுத்தி, ‘தினமணி’ வைத்தியநாத அய்யர், தமிழக பா.ஜ.க.வுக்கு ‘தமிழ்ச் சாயம் பூச முயற்சித்தார். சூழ்ச்சிகள் வெற்றிப் பெறவில்லை. மீண்டும் பார்ப் பனிய சமஸ்கிருத எதிர்ப்புக் களத்தை ‘அவாள்களே’ உருவாக்கி தந்ததோடு, பெரியார் கருத்துகளுக்கு மேலும் வலிமை சேர்த்துள்ளனர்.
– நமது செய்தியாளர்
பெரியார் முழக்கம் 22022018 இதழ்