கிருஷ்ணராயபுரத்தில் பெரியார் நினைவுநாள் பொதுக்கூட்டம்

6-1-2018 சனிக்கிழமை மாலை 6-00 மணியளவில், கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம், கோவக்குளத்தில் பெரியாரின் 44ஆவது நினைவு நாள் பொதுக் கூட்டம், பேரூர்க் கழக ம.தி.மு.க. மாணவரணியின் ஏற்பாட்டில்  நடைபெற்றது.

கூட்டத்துக்கு கரூர் மாவட்ட ம.தி.மு.க. மாணவரணி அமைப்பாளர் பொறியாளர் காமராஜ் தலைமையேற்றார். தமது தலைமை உரையில் பெரியாரைப் பின்பற்றவேண்டிய தேவைகளை விளக்கியதோடு.கோவக்குளத்தில் பெரியாரின் நினைவு நாளன்று நிறுவப்பட்ட பெரியாரின் மார்பளவு சிலை வருவாய், காவல்துறையால் அகற்றச் செய்யப்பட்டதை எடுத்துரைத்ததோடு, அடுத்த பெரியார் நினைவு நாளுக்குள் அச்சிலை உரிய அனுமதியோடு நிறுவப்படும் என்பதை உறுதிபட எடுத்துரைத்தார்.

மாவட்ட ம.தி.மு.க.விவசாய அணித் துணைச்செயலாளர் மரு.முத்து வரவேற்புரையாற்றினார். கூட்டத்தில் ம.தி.மு.க. மாநில மாணவரணி செயலாளர் மணவை தமிழ் மாணிக்கம், கரூர் பகுத்தறிவு மன்றத் தலைவர் வழக்குரைஞர் குடியரசு, த.பெ.தி.க. மாவட்டத் தலைவர் கு.கி.தனபால், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் முல்லையரசு, தி.மு.க. பேரூர்க் கழக செயலாளர் எம்.மகாலிங்கம் ஆகியோர் உரையைத் தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார்.

கழகத் தலைவர் தனது உரையில், பார்ப்பனர்கள் தங்கள் சமூக மேலாதிக்கத்தைக் கட்டிக் காப்பாற்ற உருவாக்கிய இந்து மதக் கட்டுமானத்தை, அதனை உறுதி செய்ய எழுதிவைத்த சாஸ்திரங்களை, விளக்குவதற்கு உண்டாக்கிய புராணங்களை விளக்கியதோடு, எதிர்க் கேள்விகள் எழாமலிருக்க – பார்ப்பனரல்லாத மக்கள் கல்வி பெறாமல் தடுத்து வைத்திருந்த சூழ்ச்சிகளை விளக்கினார். புராணகாலத்தில் தொடங்கிய இந்த சூழ்ச்சிகள் நவீன அரசியல் காலகட்டத்திலும் ராஜகோபலாச் சாரியின் கிராமப்புற பள்ளிகளை மூடியது, இந்தித் திணிப்பு, குலக் கல்வித்திட்டம், நீட் தேர்வு, நவோதயா பள்ளி, இந்திய அளவிலான தேர்வுகள் போன்ற திட்டங்கள் வழியாகத் தொடர்வதை விளக்கிக் கூறினார். அச்சூழ்ச்சிகளை முறியடிக்க உருவான பார்ப்பனரல்லாதார் இயக்கம், பெரியார் ஆகியோரின் சமூக நீதிப் போராட் டங்கள், இப்போது தமிழ்நாட்டின் பணி வாய்ப்புகளிலும் வடநாட்டாரை நுழைக்க ஏற்படுதியுள்ள சதிகளை எடுத்துரைத்து, அவற்றை எதிர்கொள்ள நாம் மேற் கொள்ள வேண்டிய முயற்சிகளையும் விளக்கிப் பேசினார்.  ஒன்றிய ம.தி.மு.க. மாண வரணி அமைப்பாளர் பொறியாளர் கணேசமூர்த்தி நன்றி கூற கூட்டம் நிறைவுற்றது.

கூட்டத்துக்கு வந்த தலைவர்களை தாரை தப்பட்டையோடு வரவேற்பளிக்கப் பட்டது. கிராம மக்களைப் பெருமளவில் திரட்டியிருந்த பாங்கு போற்றத்தக்கதாய் இருந்தது. கூட்டத்தில் கரூர் மாவட்ட தி.வி.க தலைவர் முகமது அலி, சின்ன தாராபுரம் சண்முகம், அறிவியல் மன்ற அமைப்பாளர் மலைக்கொழுந்து உள்ளிட்ட கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.

பெரியார் முழக்கம் 18012018 இதழ்

You may also like...