அம்பேத்கர் – பெரியார் குறித்த சர்ச்சைகள் தொடர வேண்டாம்!
அம்பேத்கர்-பெரியாரிடையே மோதலை உருவாக்கும் சதித் திட்டத்தை சங் பரிவாரங்கள் அரங்கேற்றி வருகின்றன. அந்த வலையில் உண்மையான கொள்கை உணர்வு கொண்ட பெரியார்-அம்பேத்கர் இயக்கங்கள் விழுந்துவிடக் கூடாது.
திரைப்பட இயக்குனர் ரஞ்சித் அளித்த ஒரு பேட்டியில், ‘பெரியார் பெயரை உச்சரிக்கவில்லை’ என்று முகநூலில் ‘விவாதப்போர்’ நடந்து வருகிறது. தலைவர்களின் பெயரை உச்சரிப்பது என்பதைவிட அந்தத் தலைவர்கள் இலட்சியங்களைப் பேசுகிறார்களா? என்பதுதான் முக்கியம்.
ஜாதி ஒழிப்புக் கருத்துகளைப் பேசும் ஒவ்வொருவரும் அம்பேத்கரிஸ்ட்டுதான்; பெரியாரிஸ்டுதான்.
அம்பேத்கரைப் பேசும்போது பெரியார் பெயரை ஏன் குறிப்பிடவில்லை என்று பெரியாரிஸ்டுகள் எழுப்பும் கேள்விகள் தேவையற்றவை என்பதே நமது கருத்து.
தலித் அல்லாதவர்களைவிட ‘தலித்’ மக்கள் ஜாதி ஒடுக்குமுறைக்குள்ளாகி வருகிறார்கள் என்பதே உண்மை. ஜாதிய ஒடுக்குமுறைக்குள்ளாகிறவர்களின் கூடுதலான உணர்வுகளையும் நியாயங்களையும் சரியாகப் புரிந்து கொள்ளும் பக்குவம் பெற்றவர்களே பெரியாரிஸ்டுகளாகவும் இருக்க முடியும்.
சொல்லப் போனால் அம்பேத்கர், பெரியாரைப் பற்றி அதிகம் பேசாத நிலையில் பெரியார் தான் அம்பேத்கரைப் பற்றி பேசினார். அம்பேத்கரை எனது தலைவர் என்றார். இலட்சியத்துக்கு முன்னுரிமை தரும் எவரும் இலட்சியத்துக்கு மேலாக தலைவர்களை முன்னிறுத்திப் பார்க்கக் கூடாது என்பதே நமது கருத்து.
தோழர்கள் சர்ச்சைகளைத் தவிர்க்கக் கோருகிறோம்!
பெரியார் முழக்கம் 18012018 இதழ்