அறமற்ற பா.ச.க. பேசுவது ஆன்மீகமா?
கோவிலுக்குள் தமிழ் ஒலிக்க முயற்சி எடுக்காத பாரதிய சனதா கட்சி, ஆழ்வார்களையும், நாயன்மார்களையும் பற்றி பேசுவது அபத்தம். 28.12.2017 அன்று புதியதலைமுறை தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட பாரதிய சனதா கட்சியைச் சேர்ந்த கே.டி.ராகவன் “தமிழகம் பெரியார் மண் அல்ல; ஆழ்வார்களாலும், நாயன்மார்களாலும் நிறைந்த மண்” என்றார்.
வேதங்களையும், மநு நீதியையும் ஏற்றுக்கொண்டு மதவாத ஆட்சி புரியும் பாரதிய சனதா கட்சியைச் சேர்ந்த ராகவன், தமிழர்களிடம் ஓட்டுவாங்குவதற்காக ஆழ்வார் களையும், நாயன்மார்களையும் இழுத்துப்போட்டுக் கொள்வது வேடிக்கையாக உள்ளது. சிதம்பரம் நடராசர் கோவிலில் ஐயா ஆறுமுகசாமி திருவாசகம் ஓதுவதற்கு அங்குள்ள பார்ப்பனர்கள் எதிர்த்தபோது அதை எதிர்க்க முடியாத பா.ச.க. இப்போது ஆழ்வார் களையும், நாயன்மார்களையும் இழுப்பது ஏன் என்று தெரியாதவர்களா தமிழர்கள்? உங்களின் ஓட்டரசியலுக்கு நாயன்மார்கள் தேவைப்படுகிறார்கள், ஆலயங்களுக்குள் திருவாசகம் தேவையில்லை என்றால் உங்களின் எண்ணத்தை தமிழக மக்கள் நன்றாக புரிந்து கொள்வார்கள். தமிழகம் என்றுமே “பெரியார் மண்தான்”. கடவுள் நம்பிக்கை கொணட பலர் பெரியாரின் ‘சமூக நீதியை’ ஆதரித்துள்ளார்கள் என்பதுதான் தமிழக வரலாறு. சமூக நீதியை எதிர்க்கக்கூடிய பார்ப்பனிய மதவாதச் சிந்தனை கொண்ட எந்த கட்சியையும் தமிழகம் எதிர்க்கும்.
பெரியார் மண் என்றால் “சமூகநீதியைப் போற்றும் மண்” என்பதுதான் உண்மையான பொருள். கடவுள் நம்பிக்கையோடு கோவிலுக்குப் போகின்றவர் களெல்லாம் மதவாதிகள், மநுவாதிகள் அல்ல. சமய நம்பிக்கைக்குப் பதிலாக மாற்று மதத்தின் மீது வெறுப்பை வீசி மதவாத அரசியல் செய்யும் அரசியலை நன்கு தெரிந்து கொண்டவர்கள்தான் தமிழ்நாட்டு சமய நம்பிக்கைக் கொண்டவர்கள்.
தமிழ்நாடு என்பது சித்தர்களையும், சித்தாந்திகளையும் போற்றிய மண். உங்களைப் போன்ற வேதாந்த மநுவாதிகளை என்றும் அனுமதிக்க மாட்டார்கள். மநு நீதிக்கு எதிரானது எங்களின் திருக்குறள். உங்களின் மத அடையாளங்களையும், மதவாதச் சிந்தனைகளையும் துடைத்து எறிந்துவிடுகிறது தமிழ் கூறு நல்லுலகம் உலகுக்கு வழங்கிய கொடையான திருக்குறள்.
மதவாதப் போக்கை என்றுமே எதிர்த்து நின்றதுதான் தமிழ்ச் சமய வரலாறு. “மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்” என்கிறார் வள்ளலார். வேத மரபை எதிர்ப்பதுதான் தமிழ் மரபு. தமிழ் மரபில் வந்த நாயன்மார்களையும், ஆழ்வார்களையும் நீங்கள் கூறுவதனால் தமிழ்ச் சமயவாதிகள் உங்களைப் போன்ற மதவாதிகளை ஆதரிப்பார்கள் என்று கனவு காணாதீர்கள். திருமூலர் தொடங்கி வள்ளலார் வரை அனைவருமே பார்ப்பன எதிர்ப்பை, வேத மறுப்பை கைகொண்டவர்களே.
பெரியார் கடவுள் நம்பிக்கை அற்றவராக இருக்கலாம் ஆனால் அனைவரும் ஆலயத்திற்குள் செல்லவேண்டும் என்று கூறியவர். அதற்காக போராடியவர். நீங்கள் கடவுள் நம்பிக்கையாளர் எனக் கூறிக்கொண்டு சாதிப்படி நிலைகளோடுதான் மனிதர்களை கோயில்களுக்குள் அனுமதிக்கவேண்டும், சாதிப்படிநிலைதான் தர்மம் என்பவர்கள். கடவுள் நம்பிக்கையற்ற பெரியார்தான் இந்து சமயத்தைச் சேர்நத தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும் கல்வி வேலைவாய்ப்பைப் பெற வேண்டும் என்று கூறியவர். கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் எனக் கூறிக்கொள்ளும் நீங்கள் இந்துமதத்தில் உள்ள சக மக்களின் கல்வி வேலைவாய்பையே பறிக்க நினைத்து இடஒதுக்கீட்டுக்கு எதிராக பேசியும் எழுதியும் வருபவர்கள். நீட் போன்ற தேர்வுகளை திணித்து தமிழக இந்து சமய நம்பிக்கை கொண்ட மாணவர்களை மருத்துவம் படிக்க முடியாதபடிச் செய்யும் மநுவாதிகள்.
இந்து சமயக் கோவில்களைக் கட்டியவர்களும் நாங்களே, பாதுகாப்பதும் நாங்களே, மன்னர்கள் காலத்தில் உருவ வழிவாட்டில் நம்பிக்கையற்ற சமற்கிருத வேதத்தை ஏற்றுக்கொண்ட நீங்கள் வேதத்திற்கு எதிரான ஆகம விதிமுறைகள்படி கட்டப்பட்டுள்ள தமிழக கோவில்களுக்குள் நுழைந்து கொண்டு சிவாச்சாரியார்களையும், ஓதுவார்களையும் வஞ்சித்து வருவதுபோல் இப்போது பெரியாரைப் படித்து வளரும் தமிழர்களை வஞ்சிக்க நினைப்பது இனியும் எடுபடாது. திருக்குறளே எங்கள் நெறி. வேதங்கள் அல்ல. கோவிலுக்குச் செல்லும் மக்களையெல்லாம் கட்சிக்குள் இழுத்துவிடலாம் என்ற பிற்போக்கான அரசியல் பிழைப்புக்கு அறமே கூற்றாகும்.
நா.வெங்கடேசன், ஆசிரியர், ‘மெய்ச்சுடர்’
பெரியார் முழக்கம் 11012018 இதழ்