திவிக செயலவை தீர்மானம் சேலம் 29122017

29122017 வெள்ளியன்று, சேலம் விஜயராகவாச்சாரி அரங்கில் நடைபெற்ற திராவிடர் விடுதலைக் கழகச் செயலவையில் இயற்றப்பட்டத் தீர்மானங்கள்

தீர்மானம் 1

சமூக நீதிக் கொள்கைகளால், கல்வி, வேலை வாய்ப்புகளில் இந்தியத் துணைக் கண்டத்துக்கே வழிகாட்டிய தமிழ்நாடு இன்று மோசமான நிலையில் பின்னடைந்து, தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது. மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தமிழ்நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டம், இந்தியா சராசரியைவிட அதிகமாகிவிட்டது என்றும், வேலைவாய்ப்புகளை வழங்கக்கூடிய புதிய தொழிற்சாலைகள் எதுவும் தொடங்கப்படாததே காரணம் என்றும் கூறியுள்ளது

இந்த நிலையில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், மாநில அரசுப் பணி நியமனங்களுக்கு, இந்தியாவின் அனைத்து மாநிலத்தினரும், நேபாளம், பூட்டான் நாட்டவரும், வெளிநாடுகள் பலவற்றிலிருந்து நிரந்தரமாக குடியமரும் நோக்குடன் இந்தியா வந்துள்ளோரும் – தமிழ்மொழி தெரியாதோரும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது

தமிழ்நாடு அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு விரிவுரையாளர் பணிக்கு தேர்வு செய்யும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் பிற மாநிலத்தவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கியுள்ளது (தற்போது தேர்வில் நடந்த ஊழல்கள் காரணமாக தேர்வுகள் இரத்து செய்யப்பட்டுள்ளது)

தமிழ்நாடு நுழைவுத் தேர்வை இரத்து செய்து, தனக்கான சமூகநீதிக்கொள்கையைப் பின்பற்றி வந்த நிலையில், மத்திய அரசு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ், நுழைவுத் தேர்வைத் திணித்து, மாநில அரசுப் பாடத்திட்டத்தின் கீழ் பயின்றுவரும் 85% மாணவர்களின் மருத்துவக் கல்விக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டது

கடந்த பல ஆண்டுகளாக, மத்திய அரசுப் பணியாளர் தேர்வையும், மண்டல அளவில் நடந்து வந்த முறையை இரத்துசெய்து இந்திய அளவில் பொதுத் தேர்வுமுறையை நுழைத்து, தமிழ்நாட்டு மத்திய அலுவலகங்களில் தமிழர்கள் எண்ணிக்கையை மிக மோசமான அளவுக்குக் குறைத்துவிட்டது

மேலும், இந்தியா விடுதலை பெற்றதாகக் கூறப்பட்டதன் பின்னர் 45 ஆண்டுகள் மத்திய அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு இல்லாதிருந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு, தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டில் பாதியளவான 27% வழங்கப்பட்டு, 24 ஆண்டுகள் கடந்த நிலையிலும், அதில் பாதியளவு கூட நிரப்பப்படாத நிலையே உள்ளது

தமிழ்நாட்டின் நீண்ட நெடுங்காலமாக பின்பற்றப் பட்டு வந்த சமூக நீதிக் கொள்கைகளால் ஓரளவேணும் பலன்பெற்று முன்னேறிவரும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களும், இளையோரும் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளை விளக்கி துண்டறிக்கை, சிறுவெளியீடுகளுடன் தமிழகம் முழுதும் கல்விக் கூடங்களிலும், விடுதிகளிலும் சந்தித்து செய்திகளைப் பரப்பவும், அணி திரட்டுவதுமான முன்னெடுப்புகளைத் செயல்படுத்தவுள்ள தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தமிழ்ச் சமூகத்தை செயலவை கோருகிறது

தீர்மானம் 2

மத்திய பாஜக ஆட்சி தனது அதிகாரக் கொடுங்கரங்களால் தமிழ்நாட்டின் நிர்வாகத்தில் நேரிடையாகத் தலையிடுவதும், தமிழ்நாட்டில் தற்போது ஆட்சியிலிருக்கும் அஇஅதிமுக அரசு பாஜக ஆட்சிக்குப் பணிந்து போய் தமிழகத்தின் உரிமைகளை பறித்துக் கொள்ள அனுமதிப்பதும் நடைபெறுவது மிக இயல்பான ஒன்றாகிவிட்டது. தமிழ்நாட்டில் பாஜகவின் நிழலாட்சி நடப்பது போன்ற நிலை உருவாகி விட்டது. தமிழக ஆளுநர், தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக தன்னை கருதிக் கொண்டு, ஆளுநருக்கு உரிய சம்பிரதாயங்களை உதறி விட்டு மாவட்டம் மாவட்டமாக பயணம் செய்து மக்களைச் சந்திப்பதும், மாவட்ட அரசு அலுவல்களை ஆய்வு செய்வதுமாக இயங்கி வருகிறார். மக்கள் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வர இயலாத பாஜக, இத்தகைய அதிகார அத்துமீறல்களால் தமிழ்நாட்டின் சமூக தனித்துவத்தை அழித்தொழித்து – இந்துத்துவ கொள்கைகளை செயல்படுத்த களங்களை உருவாக்கி வருவது வன்மையான கண்டனத்துக்குரியதாகும். தமிழ்நாட்டின் நலனில் அக்கறையும் கவலையும் உள்ள அனைத்து கட்சிகள், இயக்கங்கள் இந்த அதிகார அத்துமீறலுக்கு எதிரான கண்டனங்களையும், இயக்கங்களையும் நடத்த முன்வரவேண்டும் என்று இந்த செயலவை கேட்டுக் கொள்கிறது

தீர்மானம் 3

ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்நாடு அரசு தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருகிறது. உடுமலை சங்கர் படுகொலை வழக்கில் திருப்பூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அனைத்து தரப்பு மக்களாலும் வரவேற்கப்பட்டதைப் பார்த்த இந்த நிலையிலாவது ஜாதி ஆணவப் படுகொலைக்கு எதிரான தனிச்சட்டத்தினை உடனடியாக இயற்றவேண்டும் என தமிழக அரசினை இந்த செயவை வலியுறுத்துகிறது

தீர்மானம் 4

கல்வி நிறுவனங்களில் பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறிஸ்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவர்களின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் வகையிலான கல்வி உதவித் திட்டம் 2012ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டுவருகிறது. இத்திட்டத்தால் ஆண்டுதோறும் ஏறத்தாழ 1,50,000 மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

ஆனால் இந்த ஆண்டு கல்வி உதவித் தொகையைக் குறைத்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதே வேளை, சுயநிதிக் கல்லூரிகளில் கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்ய அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன் தலைமையிலான குழுவானது, கடந்த ஆண்டு பொறியியல் பட்டப்படிப்புக்கு அரசு ஒதுக்கீட்டில் 40 ஆயிரமாக இருந்த கல்வி கட்டணத்தை 50 ஆயிரமாகவும், நிர்வாக ஒதுக்கீட்டில் 70 ஆயிரமாக இருந்த கல்வி கட்டணத்தை 85 ஆயிரமாகவும் உயர்த்தியுள்ளது

இந்த சூழலில், அரசு கல்வி உதவித் தொகையை ரூ 50000 ஆகக் குறைத்து அறிவித்துள்ளதால், மீதமுள்ள ரூ 35 ஆயிரத்தை மாணவர்களே செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏராளமான மாணவர்கள் தங்கள் கல்வியைத் தொடரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது

எனவே தமிழ்நாடு அரசு, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மாணவர்களுக்கு ஏற்கனவே வழங்கி வந்ததைப் போல முழுகல்வி கட்டணத்தையும் தொடர்ந்து வழங்க உரிய ஆணைகளை உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என திராவிடர் விடுதலைக் கழகம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது

தீர்மானம் 5

இந்தியாவை மதசார்பற்ற நாடு என இந்திய அரசியல் சட்டத்தின் முகப்புரையிலேயே கூறப்பட்டுள்ளது. ஆனால் அமைச்சர்களும், அதிகாரிகளும் தங்கள் மத உணர்வுகளை வெளிப்படுத்தும் இடமாக அரசு அலுவலகங்களை ஆக்கி வருவது அதிகரித்த வண்ணம் உள்ளது

1992ஆம் ஆண்டில் மத்திய அரசில் வீற்றிருந்த பாஜக ஆட்சியில், நாடாளுமன்ற குழு சமூக கலவரங்களைப் பற்றி ஆய்ந்து, அரசு அலுவலகங்களிலும், இடங்களிலும் குறிப்பிட்ட மத சின்னங்களை வரைவதும், கருத்துக்களை பொறிப்பதும், மத வழிபாடுகள் நடத்துவதுமே முதன்மைக் காரணமாக அமைகிறது என சுட்டிக்காட்டியதைக் கருத்தில் கொண்டு மத்திய அரசின் உள்துறை, அனைத்து மாநில அரசுகளுக்கும் அவ்வாறான செயல்பாடுகளைத் தடுக்குமாறு அறிவுறுத்தியது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசும் கண்டிப்பான சுற்றறிக்கையை அனுப்பியது

ஆனால் காஞ்சிபுரம் தொடர்வண்டி நிலையத்தில் அரசு அனுமதித்துள்ள டாக்டர் அம்பேத்கர் படத்தை அகற்றிவிட்டு, சங்கராச்சாரி படத்தை வரைந்த சட்ட விரோத நடவடிக்கையை மாற்றி, மீண்டும் அம்பேத்கர் படத்தை பழையபடி வைத்த காஞ்சி மக்கள் மன்றத் தோழர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நால்வரை சிறைப்படுத்தியுள்ளது. இந்நடவடிக்கையை திராவிடர் விடுதலைக் கழக செயலவை வன்மையாக கண்டிப்பதோடு, தமிழக அரசு உடனடியாக வழக்கைத் திரும்பப் பெறுவதோடு, சட்டவிரோத செயலில் ஈடுபட்ட தொடர்வண்டித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வற்புறுத்துகிறது.

2017-12-29-photo-00002315

You may also like...