தோழர் இரஞ்சித்

“இயக்குனர் தோழர் ரஞ்சித் ஒரு பேட்டியில் பெரியார் பெயரை கூறாதது தவறா ?”
– விடுதலை ராஜேந்திரன்

இயக்குனர் இரஞ்சித் ஒரு பேட்டியில் பெரியார் பெயரை குறிப்பிடவில்லை என்பதற்காக அவர் மீது கடுமையான விமர்சனங்கள் மூகநூலில் பதிவிடப்படுகின்றன. இது தேவையற்ற வேலை என்பது தான் எனது கருத்து.

“அம்பேத்கர் பெரியார் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். இருவரும் ஜாதி ஒழிப்புக்காக போராடிய தலைவர்கள்”. அம்பேத்கர் பெயரை சொல்லக் கூடாது, பெரியார் பெயரை சொல்லக் கூடாது அல்லது அம்பேத்கர் பெயரை சொல்ல வேண்டும் பெரியார் பெயரை சொல்ல வேண்டும் என்று பெயருக்குள் புகுந்து கொண்டு தத்துவங்களை பின்னுக்கு தள்ளுவது என்பது அம்பேத்கரிய கொள்கைக்கோ பெரியாரிய கொள்கைக்கோ உடன்பாடன ஒன்றல்ல.

இரஞ்சித் அவர்கள் பெரியாரை குறிப்பிடவில்லை என்பதற்காக அவரை பெரியாருக்கு எதிராளராக சித்தரிப்பது என்பது ஒரு மிக பெரிய தவறு.

” பெரியார் பேசிய ஜாதி ஒழிப்புக்கு தான் இரஞ்சித் குரல் கொடுக்கிறார். இன்னும் சொல்ல போனால் அம்பேத்கர் வடமாநிலங்களில் பெரியாரை பற்றிக் கூட அதிகமாக பேசவில்லை. ஆனால், பெரியார் அம்பேத்கரை பற்றி அதிகம் பேசியிருக்கிறார். ஒரு உண்மையான பெரியாரியல்வாதி என்பவர் தலைவர்களுடைய பெயர்களுக்கு பின்னால் பதுங்கி கொண்டு இருப்பதை விட அவருடைய தத்துவங்களை முன்னெடுப்பது தான் சரி என்பது நமது உறுதியான கருத்து”.

இன்றைய தமிழ் சமூகத்தில் தலீத் மக்கள் பிற்படுத்தப்பட்டவர்களை விட ஒடுக்கப்படுபவர்களாக இருக்கிறார்கள் என்ற யதார்த்த உண்மையை புறம் தள்ளிவிட்டு பெரியார் என்றால் பிற்படுத்தப்பட்ட மக்களின் தலைவர், அம்பேத்கர் என்றால் தலீத் மக்களின் தலைவர் என்ற சாதிய மனப்பான்மையோடு இந்த தகவல்களை பார்க்கின்றவர்கள் தான் ஏன் பெரியார் பெயரை கூறவில்லை என்று இரஞ்சித்தை குறை கூறுகிறவர்களாக இருக்க முடியும் என்று நான் கருதுகிறேன்.

ஜாதி ஒழிப்புக் களத்தில் பெரியாரியவாதிகளுக்கு மிகப் பெரிய பொறுப்பு உண்டு. ஜாதி எதிர்ப்பு கருத்துகள் எந்த தளத்திலிருந்து வந்தாலும் அதை பிடித்து கொண்டு அந்த இலட்சியத்தை முன்னோக்கி எடுத்து சொல்வது தான் பெரியாரிஸ்டுகளுடைய கடமை. இதில் பெரியார் பெயரை ஏன் கூறவில்லை என்பதை பிரச்சனையாக்கி விவாதிப்பது என்பது பெரியாரிஸ்டுக்கான அடையாளமல்ல என்பது தான் திராவிடர் விடுதலைக் கழகத்தின் உறுதியான கருத்து என்பதை தோழர்களுக்கும், ஜாதி ஒழிப்பு போராளிகளுக்கும் தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.

(12.01.2018 வாட்ஸ் அப் செய்தி.)

You may also like...