பகுத்தறிவு நடிகர் மாரிமுத்து உடலுக்கு தோழர்கள் இறுதி மரியாதை
திரைப்பட நடிகரும் பகுத்தறிவாளருமான தோழர் மாரிமுத்து அவர்கள் சென்னையில் 08.09.2023 அன்று காலை 10 மணியளவில் முடிவெய்தினார். தேனி மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தில் பிறந்து பொறியியல் படிப்பு முடித்து சென்னையில் திரைப்படத் துறைக்கு வந்த அவர் பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். நீண்ட காலம் ஊடக வெளிச்சம் பெறாமல் இருந்த அவர் அண்மைக்காலமாக அவர் சீரியல் வழியாகவும், பரியேறும் பெருமாள் போன்ற திரைப்படங்களின் வழியாகவும் ஊடக வெளிச்சத்தைப் பெற்றார். தனக்கு ஜாதி கடவுள் மீது நம்பிக்கை இல்லை என்றும் கருப்புச் சட்டை தான் தனக்கு பிடித்த உடை என்றும் பல பேட்டிகளில் வெளிப்படையாக கூறியதோடு தனது மகன், மகளுக்கு ஜாதி மறுப்புத் திருமணம் செய்வதே தனது நோக்கம் என்றார். நடிகர் வடிவேலுவின் பிரபலமான நகைச்சுவை காட்சிகளான ‘கிணறு காணாமல் போவது, போலிஸ் அடிச்சுக் கேட்டாலும் சொல்லிவிடாதே’ போன்ற காட்சிகளை உருவாக்கியதே மாரிமுத்து தான் என்று நடிகர் வடிவேலு பதிவு செய்துள்ளார். வளர்ந்துவந்த ஒரு பகுத்தறிவு நடிகர் 57 வயதில் முடிவெய்தியது மிகவும் துயரமானது.
அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த தோழரின் உடலுக்கு சென்னை மாவட்டக் கழகம் சார்பாக கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி ஆகியோர் மலர் மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினர்.
பெரியார் முழக்கம் 14092023