ஆர்.எஸ்.எஸ். ஆணையை ஏற்று குண்டு வைத்தோம்: அசீமானந்தா ஒப்புதல் ஒப்புதல் வாக்கு மூலத்துக்குப் பிறகும் விடுதலையான பயங்கரவாதியின் கதை
இராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் தர்காவில் ரம்சான் தொழுகையில் 5000 இஸ்லாமியர்கள் ஈடுபட்டிருந்த போது குண்டு வெடித்தது. இதில் 3 பேர் இறந்தனர்
17 பேர் படுகாயமடைந்தனர். வழக்கம்போல் இதில் இஸ்லாமியர்களே குற்றவாளி என்று கைது செய்தனர். தீவிர விசாரணைக்குப் பிறகு குண்டு வைத்தது இந்து தீவிரவாதிகள், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் என்பது கண்டறியப்பட்டது. தேசிய புலனாய்வு நிறுவனம் இந்த வழக்கை விசாரித்தது. சிறப்பு நீதிமன்றம் வழக்கில் முக்கிய குற்றவாளியான முன்னாள் ஆர்.எஸ்.எஸ்.காரர், அசீமானந்தாவை விடுதலை செய்து விட்டு 3 பேரை மட்டும் குற்றவாளி என்று கூறியிருக்கிறது. அசீமானந்தா டெல்லி உயர்நீதி மன்றத்தில் பல தாக்குதல்களை நானே திட்டமிட்டேன் என்று ஒப்புதல் வாக்குமூலமே தந்திருந்தார்.
‘காரவான்’ ஆங்கில இதழுக்காக லீனா கீதா ரெங்கநாத் எனும் செய்தியாளர் தனது குழுவினருடன் அம்பாலா சிறையில் அசீமானந்தாவை பேட்டி கண்டார். 2013ஆம் ஆண்டு நான்கு முறை சந்தித்து,
9 மணி நேரம் 26 நிமிடம் பதிவு செய்தார். தனது பயங்கரவாத செயல்களை வெளிப்படையாக அவர் ஒப்புக் கொண்டதோடு இதற்கு ஆர்.எஸ்.எஸ்.சின் முழு ஆசீர்வாதமும் உண்டு என்று அவர் கூறினார். டெல்லி மாநகர் நீதிமன்றத்திலும் இதேபோல் ஒப்புதல் வாக்குமூலம் தந்த பிறகும் இப்போது டெல்லி சிறப்பு நீதிமன்றம் அவரை நிரபராதி என்றும் அவருக்கு எதிராக போதுமான சாட்சியங்கள் இல்லை என்றும் விடுதலை செய்துவிட்டது. ‘காரவன்’ ஏட்டில் அவரது பேட்டி வெளி வந்தவுடன், வழக்கம்போல் ஆர்.எஸ்.எஸ்.சும், பா.ஜ.க.வும் இவை உண்மைக்கு மாறானவை என மறுத்தன. அதைத் தொடர்ந்து
அவரது பேட்டியின் ஒலி நாடா இணையத்தில் ஒலிப்பதிவாக வெளியிடப்பட்டது. இப்போதும்
http/www.caravanmagazin.in/swamiassemanda-interviews என்ற தளத்தில் அதை கேட்கலாம்.
நரேந்திர மோடியின் முழுமையான ஆதரவு பெற்றவர் அசீமானந்தா. அவர் இப்போது வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அவரின் ஒப்புதல் வாக்குமூலத்தை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ முழுமையாக வெளியிடுகிறது. அதிர்ச்சி யூட்டும் தகவல்கள் இதில் இடம் பெற்றுள்ளன.
அசீமானந்தா 2011 மார்ச் 28 அன்றுதான் தனக்கு வழக்கறிஞர் வைத்துக் கொள்ள ஒப்புக் கொண்டார். அடுத்த நாள் அவர் தன் ஒப்புதல் வாக்குமூலங்களை மறுத்தார். அவையெல்லாம் தன்னை சித்ரவதை செய்து பெறப்பட்டவை என்றார். அவர் விசாரணை மன்றத்தில் கொடுத்த மனுவில் சொன்னதாவது: “அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம் என்று சொல்லப்படுபவை ஊடகங்களுக்குக் கசிய விட்டிருப்பது அதிர்ச்சி தருகிறது. அவை வேண்டுமென்றே இந்த வழக்கை அரசியல்படுத்த வும், ஊடகம் வழியாகவே விசாரணை நடத்தி, உலகளவில் இந்து பயங்கரவாதம் என்று ஒன்று இருப்பதாக மிகைப் படுத்திக் காட்டி நிறுவுவதற்காகவும் ஆளுங்கட்சியின் இலாபத்துக்காக செய்யப்பட் டிருக்கின்றன.” அசீமானந்தாவும் சம்ஜௌத்தா வழக்கில் ஆஜராகும் பல வழக்கறிஞர்களும் என்னிடம் அவர்களெல்லாரும் ஆர்.எஸ்.எஸ். சின் உறுப்பினர்கள் என்பதை தெரிவித்தார்கள். ஆர்.எஸ்.எஸ்.சின் சட்டப்பிரிவான அகில் பாரதியா அதிவக்த பரிஷத்தின் கூட்டங்களில் இந்த வழக்கை எப்படி நடத்துவது என்று தாங்கள் முடிவுகள் எடுத்து வருவதாக தெரிவித்தனர்.
நான் அசீமானந்தாவை பேட்டி கண்டபோது அவர் தான் சித்திரவதை செய்யப்பட்டதாக சொல்வதையும், தன் ஒப்புதல் வாக்குமூலங்கள் கட்டாயப்படுத்திப் பெறப்பட்டவை என்பதையும் மறுத்தார். குண்டு வெடிப்புக்காக தன்னை சி.பி.ஐ. கைது செய்தபோதுதான் “இதையெல்லாம் சொல்ல நல்ல நேரம் வந்துவிட்டது. இதற்காக என்னை தூக்கில் போடலாம். அதனாலென்ன, எப்படியும் எனக்கு வயதாகிவிட்டது” என்று முடிவெடுத்ததாக சொன்னார்.
அவரோடு நான் நடத்திய உரையாடல்களில், அசீமானந்தா தான் ஈடுபட்ட இந்த சதியின் விவரங்களை மேலும் மேலும் விரிவாகவே தெரிவித்தார். அவருடன் என்னுடைய மூன்றாவது, நான்காவது சந்திப்புகளின்போது, அவர் இந்த பயங்கரவாத செயல்கள் அனைத்தும் ஆர்.எஸ்.எஸ்.சின் உச்சமான தலைமையின் ஒப்புதலுடன் நடந்தவை என்று கூறினார். அப்போது சங்கத்தின் செய லாளராகவும் இப்போது தலைவராகவும் இருக்கும் மோகன் பகவத் மட்டத்தில் இந்த ஒப்புதல் தரப்பட்டது. “இது நடப்பது மிக முக்கியம். ஆனால் இதில் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) சம்பந்தப்படாமல் நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று பகவத் தன்னிடம் சொன்னதாக அசீமானந்தா இந்த வன்முறையைப் பற்றி என்னிடம் கூறினார்.
ஜூலை 2005இல் நடந்த ஒரு கூட்டம் பற்றி அசீமானந்தா எனக்கு சொன்னார். சூரத்தில் நடந்த ஆர்.எஸ்.எஸ். சந்திப்புக்குப் பின்னர், பகவத்தும் தற்போது அமைப்பின் சக்தி வாய்ந்த ஏழு உறுப்பினர் தேசிய செயற்குழுவில் உறுப்பினராக இருக்கும் இந்திரேஷ் குமாரும், இரண்டு மணி நேரம் பயணம் செய்து குஜராத்தில் அசீமானந்தா வசித்துக் கொண்டிருந்த டாங்க்ஸ் பகுதி கோவிலுக்கு வந்தார்கள். கோவிலிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் ஆற்றங்கரையில் இருந்த ஒரு கூடாரத்தில் அவர்கள் அசீமானந்தாவையும் அவர் கூட்டாளிகளில் ஜோஷியையும் சந்தித்துப் பேசினார்கள். திட்டத்தை இரு ஆர்.எஸ்.எஸ். தலைவர்களும் அங்கீகரித்தார்கள். பகவத், “நீங்கள் இதை செய்ய வேண்டும்” என்றார். இந்திரேஷ், “இதை சுனிலுடன் சேர்ந்து செய்யுங்கள். நாங்கள் நேரடியாக சம்பந்தப்பட மாட்டோம். ஆனால் இதைச் செய்வதில், இதில் நாங்களும் உங்களுடன்தான் இருக்கிறோம்” என்றார்.
“சுவாமிஜி, நீங்கள் இதைச் செய்வதால் எங்களுக்கு எந்த கஷ்டமும் இல்லை. எதுவும் தப்பாக நடக்காது. இதை கிரிமினல் குற்றமாக யாரும் ஆக்க முடியாது. நீங்கள் இதைச் செய்தால், மக்கள் யாரும் ஒரு குற்றத்தை நாம் செய்ததாக சொல்லப் போவதில்லை. அது நம் சித்தாந்தத்துடன் பொருந்தியதாகவே பார்க்கப்படும். இது ஹிந்துக்களுக்கு மிகவும் முக்கியம். தயவுசெய்து செய்யுங்கள். நிச்சயமாக, எங்கள் ஆசிகள் உண்டு. எங்கள் ஆசிகள் உண்டு” என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் தன்னிடம் சொன்னதாக அசீமானந்தா தெரிவித்தார்.
விசாரணை அமைப்புகள் பதிவு செய்த குற்றப் பத்திரிகைகளில் குமார் சதிகாரர்களுக்கு தார்மீக ஆதரவும் நடைமுறையில் பொருள் ரீதியான ஆதரவும் அளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால், பகவத் போன்ற மூத்த ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் யார் பெயரும் அதில் சம்பந்தப்படுத்தப்படவில்லை. குமாரை ஒரு முறை சி.பி.ஐ. விசாரித்தது. பின்னர் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணையை தொடர்ந்தபோது, அசீமானந்தா, பிரக்யா சிங் மட்டத்துக்கு அடுத்த மட்டத்தில் இருப்பவர்களின் சதித் தொடர்பு பற்றி விசாரணையை எடுத்து செல்லவில்லை. (இந்தச் சதித் திட்டத்தில் குண்டுகள் தயாரித்து வைத்தவர்கள் உட்பட சம்பந்தப்பட்ட பலருடனும் தொடர்புகள் ஏற்படுத்தி அனைவருக்குமான இணைப்பு இழையாக செயல்பட்டதாக கருதப்படும் ஜோஷி 2007 டிசம்பரில் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்)
இந்திரேஷ் குமாருக்கு இந்த தாக்குதல்களில் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் 2010இல் எழத் தொடங்கியதுமே ஆர்.எஸ்.எஸ். அவருக்கு கேடயமாக இயங்கத் தொடங்கியது. ஆர்.எஸ்.எஸ்.சின் தலைவரான சர்சங்சாலக் எவரும் இதுவரை செய்திராத விதத்தில், பகவத் நேரடியாகவே குமார் மீதான குற்றச்சாட்டுகளை கண்டிக்கும் தர்ணாவில் ஈடுபட்டார். பாரதிய ஜனதாவும் குமாருக்கு ஆதரவாகப் பேசியது. அதன் தேசிய பேச்சாளர் மீனாட்சி லேக்கிதான் குற்றப்பத்திரிகையில் குமாரின் பெயர் குறிப்பிடப்பட்டபோது குமாரின் வழக்கறிஞராகவே இருந்தார். குற்றவாளிகளின் வழக்கறிஞர்களில் ஒருவர் என்னிடம் பேசும்போது, குமார் மிகுந்த அபிலாஷைகள் உடையவர் என்றும் அடுத்த சர்சங்சாலக் ஆவதற்குக் (ஆர்.எஸ்.எஸ் தலைவராவதற்கு) காத்திருப்பவர் என்றும் சொன்னார்.
பெயர் வெளியிட விரும்பாத, விசாரணை அதிகாரி ஒருவர் மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்ட ஒரு இரகசிய அறிக்கையைப் பார்வை யிடுவதற்கு என்னை அனுமதித்தார். இதுவரை உள்ள சாட்சியங்களின் அடிப்படையில் ஏன் ஆர்.எஸ்.எஸ்.சை தடை செய்யக் கூடாது என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பும்படி அமைச்சகத்துக்கு இந்தஅறிக்கை பரிந்துரைத்துள்ளது. ஆனால் இதுவரை இந்தப் பரிந்துரை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எப்போது வேண்டுமானாலும் தடை செய்யப்படுவோம் என்ற பயம் ஆர்.எஸ்.எஸ். தலைமைக்கு இருக்கத்தான் செய்கிறது. 1948இல் காந்தி கொலை செய்யப்பட்ட பின்னர் சிறது காலமும் பின்னர் 1975இல் நெருக்கடி நிலைபோது சிறிது காலமும், அடுத்து 1992இல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னர் சிறிது காலமும் ஆர்.எஸ்.எஸ். மீது தடை விதிக்கப்பட் டிருக்கிறது. எப்போதெல்லாம் அதன் உறுப்பினர் யாரேனும் பயங்கரவாத செயல்கள் செய்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தாலும், ஆர்.எஸ்.எஸ். கோட்சே விஷயத்தில் பின் பற்றிய அதே உத்தியைக் கையாளுகிறது. குற்றம்சாட்டப் பட்டவர்களைத் தங்கள் ஆள் என்று ஏற்பதோ மறுப்பதோ எதையும் செய்யத் தேவையில்லை என்பது ஆர்.எஸ்.எஸ். நிலை. ஏனென்றால், அவர்கள் முன்பே சங்கத்தை விட்டு வெளியேறிவிட்டார்கள் என்றோ, சங்கத்துக்கு சம்பந்த மில்லாமல் சுதந்திரமாக இயங்கினார்கள் என்றோ, அல்லது வன்முறையைக் கைகொண்டதால் சங்கத்திடமிருந்து தாமே அந்நியமாகி விட்டார்கள் என்றோ சொல்லிக் கொள்ளலாமல்லவா.
இந்த விஷயத்தில் அசீமானந்தா ஆர்.எஸ்.எஸ்.க்கு இப்போது ஒரு பெரும் தலைவலி. வனவாசி கல்யாண் ஆசிரமம் 1952இல் தொடங்கப்பட்டது முதல் இன்று வரை ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவாரத்தின் மைய சக்திகளில் ஒன்றாக இருக்கிறது. அசீமானந்தா தன் இளமைக்காலம் முதல் முதுமை வரை தன் வாழ்க்கை முழுவதையும் அதற்கே அர்ப்பணித்திருக்கிறார். தாக்குதல்களை திட்டமிட்ட சமயத்தில் அவர் அந்த அமைப்பின் மதப் பிரிவில் அவருக்கென்றே உருவாக்கப்பட்ட தேசியத் தலைவர் பதவியில் இருந்தார். பயங்கரவாத சதிச் செயலுக்கு முன்னதாகக் கூட, மதக் கலவரங்கள் உட்பட திட்டமிட்ட வன்முறைகளை நடத்துவது அவருடைய வழிமுறைகளில் ஒன்றாக இருந்தது.
பகவத்துக்கும் குமாருக்கும் இந்த சதி திட்டங்களில் அசீமானந்தாவின் பங்களிப்புப் பற்றி 2005மத்தியிலேயே தெரியும். ஆனாலும், அவர் ஒன்றும் வெளியேற்றப்பட வில்லை. நேர் எதிராக மேலும் அரவணைக்கப்பட்டார். ஆர்.எஸ்.எஸ்.சின் வார இதழான ஆர்கனைசரில் வெளியான செய்தியின்படி 2005 டிசம்பரில் அசீமானந்தாவுக்கு ஒரு இலட்ச ரூபாய் விருது, ஆர்.எஸ்.எஸ்.சில் மிக அதிகமாகப் போற்றப்படும். இதன் இரண்டாவது தலைவராயிருந்த கோல் வால்கர் நூற்றாண்டையொட்டி வழங்கப்பட்டிருக் கிறது. விருது வழங்கு விழாவில் சிறப்புரை ஆற்றியவர் பாரதிய ஜனதாவின் முன்னாள் தலைவர் முரளி மனோகர் ஜோஷி. தன் மீதான குற்றச்சாட்டுகளிலிருந்து குமார் தன்னை முழுக்க முழுக்கக் கேடயமிட்டுக் காப்பாற்றிக் கொண்டாலும், அசீமானந்தாவுக்கும் ஆர்.எஸ்.எஸ்.க்கும் இருக்கும் தொப்புள் கொடி உறவை மறுப்பது ஆர்.எஸ்.எஸ்.க்குக் கடினமாகும்.
ஹிந்து மத சீர்திருத்தவாதியான சுவாமி அக்னிவேஷ் கடந்த பத்தாண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்.சின் உறுப்பினர்கள் செய்து வரும் பயங்கரவாதச் செயல்களைக் கண்டித்து என்னிடம் பேசும்போது அந்த செயல்கள் “அவர்களையும் ஹிந்து சமுதாயத்தையும் பாதிக்கும்” என்றார். ஹிந்துத்துவா குறித்து மூன்று நூல்கள் எழுதியிருக்கும் அரசியல் அறிஞர் ஜோதிர்மய சர்மா, “ஆர்.எஸ்.எஸ். நேரடியான, இரகசியமான செயல்கள் இரண்டிலும் ஈடுபடுகிறது. ஆனால் அது சிவாஜியின் குருநாதரான இராமதாஸ் உபதேசித்த கொரில்லா தாக்குதல் முறையான, மறைந்திருந்து அடித்துவிட்டு தப்பி ஓடும் உத்தியையே பெரிதும் நம்புகிறது. ஹிந்து மதத்தின் பெயரால் செய்யப்படும் இப்படிப்பட்ட பயங்கரவாத செயல்களைக் கடுமையாக எதிர்க்கத் தேவையான பரந்த மனக் கொள்கையுடைய அமைப்புகள் அரசியல் கட்சிகள் முதல் வலுவான ஊடகங்கள் வரை நம்மிடம் இல்லை என்பதுதான் பிரச்சினை” என்கிறார்.
இப்படிப்பட்ட விமர்சனங்களையெல்லாம் மீறி 1948இல் பெற்ற கெட்ட பெயரையும் கடந்து ஆர்.எஸ்.எஸ். நெடுந்தூரம் வந்துவிட்டது. மனிதர்களையும் நாட்டையும் கட்டியமைப் பதற்கான தன் முயற்சிகளின் வழியே, ஆர்.எஸ்.எஸ்.சின் பல்வேறு அவதாரங்கள், பி.ஜே.பி. உட்பட, இன்று இந்திய சமூகத்தின் பிரதான அரசியல் களத்தில் முக்கிய அரசியல் போக்காகத் தங்களை வடிவமைத்துக் கொண்டிருக் கின்றன. அசீமானந்தாவும் இத்தகைய முயற்சிகளால் வளர்ந்தவர்தான். அவருக்கும் ஆர்.எஸ்.எஸ்.சின் நோக்கங்களே இலட்சியமாகும். கொஞ்சம் பிரமாண்ட மாக்கப்பட்ட இலட்சியம் அது. வருங்காலத்தில் உலகளாவிய ஹிந்து ராஷ்டிரம் அமைப்பதே அவரது இலட்சியம்.
(தொடரும்)
நன்றி: ‘நரேந்திர மோடி ஆதரவு பெற்ற ஒரு காவி பயங்கரவாதியின் ஒப்புதல் வாக்கு மூலம்’ நூலிலிருந்து
(தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டவர்கள் ஞாநி, நரேன் ராஜகோபாலன்)
அசீமானந்தாவுக்கு ஒரு இலட்ச ரூபாய் விருது கோல்வால்கர் நூற்றாண்டையொட்டி வழங்கப்பட்டது
பெரியார் முழக்கம் 23032017 இதழ்