புதுச்சேரியில் திவிக நடத்திய ‘’மாவீரர் நாள்’’
புதுச்சேரியில் திவிக நடத்திய ‘’மாவீரர் நாள்’’
தமிழீழத் தாயக விடுதலைக்காக தன்னுயிர் ஈந்த விடுதலைப் புலிகளுக்கான மாவீரர் நாள் புதுச்சேரி அரியாங்குப்பத்திலுள்ள கேப்டன் மில்லர் அரங்கத்தில் 27.11.2017 திங்கட்கிழமை அன்று மாலை 5.00 மணியளவில் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் தொடக்கமாக திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர். கொளத்தூர் மணி அவர்களின் தலைமையில் தந்தை பெரியார் சதுக்கத்திலிருந்து சுடர் ஏந்தி மில்லர் அரங்கத்திற்கு திவிக தோழர்களும் தமிழ் இன உணர்வாளர்களும் பேரணியாக வந்தடைந்தனர்.
மாலை 6.05 மணிக்கு தியாகச் சுடரையும் அதன்பின் தமிழீழ தேசியக் கொடியையும் தோழர். கொளத்தூர் மணி அவர்கள் ஏற்றினார்கள். தோழர்கள் அனைவரும் விளக்கேற்றி மாவீரர்களுக்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர். திராவிடர் விடுதலைக் கழகத்தின் புதுச்சேரி மாநிலத் தலைவர் தோழர்.லோகு.அய்யப்பன் அவர்கள் வீரவணக்க உரை நிகழ்த்தினார்.
அவரைத் தொடர்ந்து தோழர்.கொளத்தூர் மணி அவர்கள் வீரவணக்க உரையாற்றினார். அதில் ”தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் அதற்காக விடுதலைப் புலிகள் செய்த அளப்பரிய தியாகங்களையும் தமிழீழம் மலருவதின் தேவையையும் தனித் தமிழ்நாடு அமைக்கப்படவேண்டியதின் தேவையையும் அதற்காக களப்பணியாற்றுவது தமிழரின் செயல் திட்டமாக இருக்கவேண்டும்” எனவும் குறிப்பிட்டார். தலைவரின் உரையைத் தொடர்ந்து ”விழ விழ எழுவோம்” எனும் ஆவணப்படமும் மாவீரர் வீரவணக்கப் பாடல்களும் திரையிடப்பட்டது. மாவீரர் நாள் நிகழ்ச்சியில் நானூறு பேர் தங்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.