புதுச்சேரியில் பிரிகேடியர் பால்ராஜ்- “சமர்க்கள நாயகன்” நூல் வெளியீட்டு விழா

தமிழீழத்தை மீட்டெடுக்க தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் வழிகாட்டுதலில் போராடி, சிங்கள இராணுவத்தாலும் இந்திய இராணுவத் தாலும் வெல்லமுடியாத தளபதியாகத் திகழ்ந்த பிரிகேடியர். பால்ராஜ் அவர்களைப்பற்றிய ”பிரிகேடியர் பால்ராஜ்- சமர்க்கள நாயகன்” (இராவணன் பதிப்பகம் பதிப்பித்த) நூல் வெளியீட்டு விழாப் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் பெரியார் திடலில் 13.12.2014 சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு புதுச்சேரி மாநிலத் திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்பாடுசெய்திருந்தது.
விழாவில் புதுச்சேரி மாநிலக் கழகத் தலைவர் தோழர். லோகு.அய்யப்பன் தலைமை உரையாற்றினார். அவ் வுரையில், ”ஈழ விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கியது சிங்களர்கள் அல்ல! இந்திய ஆட்சியாளர்கள்!!” என்பதைக் குறிப்பிட்டார். தோழர் இர.தந்தைப் பிரியன் வரவேற்புரையாற்றினார்.நூலினைத் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர். கொளத்தூர் மணி வெளியிட, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் தோழர். தி.வேல்முருகன் பெற்றுக்கொண்டார். நூலின் முதல்படியினைத் தோழமை இயக்கங்களின் தலைவர்கள் பெற்றுக்கொண்டனர். கொளத்தூர் மணி ஈழ விடுதலைப் போராட்டத்தின் தொடக்ககால நிலையினை யும் பிரிகேடியர், பால்ராஜ் அவர்களின் காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் ஈட்டிய மாபெரும் வெற்றிகளையும் நினைவுகூர்ந்தார். புலிகள் தமிழகத்தில் பயிற்சி எடுத்த செய்திகளையும், ஒவ்வொரு காலகட்டத்திலும் ஈழத்தமிழருக்கு இந்தியா செய்த துரோகங்களையும் நாம் இனிவரும் காலங்களில் ஆற்றவேண்டிய கடமைகள் என்ன என்பதையும் விரிவாக எடுத்துரைத்தார்.
தமிழரின் பாரம்பரிய இசையான பறையிசை முழங்க, தோழர்கள் தமிழீழத் தேசியக் கொடியை ஏந்திவர கருஞ்சட்டை அணிந்த குழந்தைகள் நூலினைப் புலிக்கொடி போர்த்தி தட்டில் ஏந்தி மேடைக்கு வந்து கொடுத்த பின்னர் நூல் வெளியிடப்பட்டது. தோழர்கள் தமிழ் இன உணர்வாளர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் கலந்துகொண்டு சமர்க்கள நாயகன் நூலினைப் பெற்றுச் சென்றனர்.

பெரியார் முழக்கம் 08012015 இதழ்

You may also like...

Leave a Reply