கழகம் எடுத்த அம்பேத்கர் நினைவு நாள்
திருப்பூரில்
திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் திருப்பூரில் அம்பேத்கர் நினைவு நாளான 06.12.2017 அன்று காலை 11 மணியளவில் அம்பேத்கர் சிலைக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது பொருளாளர் துரைசாமி, அறிவியல் மன்ற தலைவர் ஆசிரியர் சிவகாமி, மாவட்டத் தலைவர் முகில்ராசு, தனபால், அகிலன், மாதவன் பரிமளராஜன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
பேராவூரணியில்
பேராவூரணியில் தமிழக மக்கள் புரட்சிக் கழகம் சார்பில் அம்பேத்கர் நினைவுநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாநில கொள்கைபரப்புச் செயலாளர் ஆறு. நீலகண்டன் தலைமையில் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சித.திருவேங்கடம், தா.கலைச்செல்வன், சுப.செயச்சந்திரன், தமிழக மக்கள் புரட்சிக் கழகத் தோழர்கள் ஏனாதி சம்பத், ஆயில் மதியழகன், இரா மதியழகன், ரெட்டவயல் மாரிமுத்து, கிறித்தவ நல்லெண்ண இயக்க பொறுப்பாளர் ஆயர் த.ஜேம்ஸ், மெய்ச்சுடர் நா.வெங்கடேசன் ஆகியோர் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செய்தனர். நிகழ்வில் சமூக நீதிக்கு எதிராக மனுநீதியை நிலைநிறுத்த நினைக்கும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பெண்ணுரிமை, சமூகநீதி, சமூக நல்லிணக்கம் போன்றவற்றைப் பாதுகாத்திட அம்பேத்கரின் வழிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
சென்னையில்
அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளான 06.12.2017 காலை திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட பொறுப்பாளர்கள், தோழர்கள் பசுமை வழிச் சாலையில் அமைந்துள்ள அம்பேத்கர் மணி மண்டபத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கத்தை செலுத்தினர்.
அதை தொடர்ந்து மயிலாப்பூர் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையை செலுத்தினர். கழகப் பொறுப்பளர்கள் தபசி குமரன், இரா. உமாபதி, வேழவேந்தன், பிரகாஷ், செந்தில் எப்.டி.எல்., ஏசுகுமார், அய்யனார், மயிலைப் பகுதி தோழர்கள் சுகுமார், மாரி, இராவணன், சிவா, மாணவர் கழகத்தோழர் பாரி சிவா, சைதை மனோகரன் உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்களோடு தோழர்களும் பங்கேற்றனர்.
கோவையில் கழகத் தலைவர் பேச்சு
டிசம்பர் 6ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு கோவை வழக்கறிஞர் சங்கக் கூடத்தில் புரட்சியாளர் அம்பேத்கார் நினைவு நாளை ஒட்டி திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர்மணி சிறப்புரை ஆற்றினார்.
அம்பேத்கரின் ஒரே கனவு உரிமையற்றவர்களின் உயர்வுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதே. அம்பேத்காரின் அஹிம்சை என்பது அடங்கிப்போவது அல்ல. இம்சைக்கு எதிரானதும் அஹிம்சைதான். என் அஹிம்சை அதுதான் என்று விளக்கியதோடு, ஜாதியை பற்றி அம்பேத்கார் பெரியாரின் பார்வையும் ஒன்றே என்றார்.
“கூடா ஒழுக்கத்தினால் இவ்வளவு ஜாதிகள்” என்று அம்பேத்கார் கூறினார்.
“விபச்சாரமே இவ்வளவு ஜாதிகளுக்குக் காரணம்” என்று பெரியார் கூறினார் என்று கழகத் தலைவர் ஒப்பிட்டுக் காட்டினார்.
பெரியார் முழக்கம் 14122017 இதழ்