மதுக்கூர் மைதீன் நினைவேந்தல்

  • 10-11-2017 அன்று மாலை 6-00 மணியளவில், உயர்நீதிமன்றத்தில் தமிழ் – மக்கள் இயக்கம், உயர்நீதி மன்றத்தில் தமிழ் – போராட்டக் குழு ஆகியவற்றின் சார்பாக, மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையம் அருகே உள்ள இராமசுப்பு அரங்கத்தில், இஸ்லாமிய ஜனநாயக முன்னணியின் தலைவர் மதுக்கூர் மைதீன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு, உயர்நீதி மன்றத்தில் தமிழ் – மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மீ.தா.பாண்டியனின் தலைமை யில் நடைபெற்றது.

மதுக்கூர் மைதீன் படத்தை உயர்நீதி மன்றத்தில் தமிழ் போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் கு.ஞா.பகத்சிங் திறந்து வைத்தார். இளந்தமிழகம் இயக்கத்தின் ரபீக் ராஜா, இஸ்லாமிய ஜனநாயக முன்னணியின் துணைத் தலைவர் நத்தம் சேக் பரீத், மருது மக்கள் இயக்கத்தின் முத்துபாண்டி, தமிழர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் இமயம் சரவணன், வழக்குரைஞர் எழிலரசு உள்ளிட்ட பலரும் நினைவேந்தல் உரையாற்றினர். இறுதியாக உரையாற்றிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி, வளர்ந்துவரும் கூலிப்படை கலாச்சாரம், செய்தியை சேகரிக்காமல் காவல்துறையின் கருத்தையே செய்தியாக்கும் ஊடகங்களின் கேவலப் போக்கு ஆகியவற்றை விரிவாக விளக்கிப் பேசினார். தமிழை நீதிமன்ற மொழியாக்கவேண்டிய தேவையை விளக்கி 1956இல் பெரியார் எழுதிய தலையங்கக் கட்டுரை செய்திகளையும் எடுத்துரைத்தார். மதுரை, பழனி ஆகிய பகுதிகளைச் சார்ந்த தோழர்கள் நிகழ்வுக்குத் திரளாக வந்திருந்தனர்.

சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட தோழர் மதுக்கூர் மைதீன் அவர்கள்  தமிழை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக்கு எனும் கோரிக்கையோடு, 27-7-2017 முதல் 4-8-2017 முடிய ஒன்பது நாட்கள் நீடித்த (தனது மார்க்கத்தின் விதிகளுக்கு உடன்பாடில்லாத) பட்டினிப் போரில் பங்கேற்றவர் ஆவார்.

பெரியார் முழக்கம் 30112017 இதழ்

You may also like...