குடியாத்தத்தில் அம்பேத்கர்-பெரியார் கருத்தரங்கம்
12-11-2017 ஞாயிறு அன்று மாலை 6.00 மணி யளவில், குடியாத்தம் அம்பேத்கர் மண்டபத்தில், திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில், அம்பேத்கர்-பெரியார் நினைவு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
நிகழ்வின் தொடக்கத்தில் ஆசிரியர் அருணிடம் பயிற்சி பெற்ற மாணவர்களின் பறை முழக்கம் நடந்தது. அதனைத் தொடர்ந்து பெரியாரிய விழுது யாழினி உள்ளிட்ட பலரும், வேலூர் கற்பி பாசறை பாலா, வழக்குரைஞர் அருண், பரப்புரை செயலர் பால் பிரபாகரன் ஆகியோரும் உரையாற்றினர். கழகத் தோழர்களின் “இப்பெல்லாம் யாருங்க ஜாதி பாக்குறாங்க” என்ற வீதிநாடகம் நிகழ்த்தப்பட்டது.
இந்து மதவெறி துறைத் தலைவரின் ஜாதியப் பாகுபாட்டு வன்முறை காரணமாக, தன் வாழ்வை முடித்துக் கொண்ட, வேலூரைச் சேர்ந்த சென்னை, கவின்கலைக் கல்லூரி மாணவர் ஜோயல் (எ) பிரகாசின் படத்தை, பள்ளிகொண்டா தளபதி கிருஷ்ணசாமியுடன் பணியாற்றிய பெரியவர் மோகன் திறந்துவைத்தார்.
“பெரியாரின் ஜாதி ஒழிப்புப் பணிகள்” என்ற தலைப்பில் உரையாற்றிய நீலப் புலிகள் இயக்கத் தலைவர் பேராசிரியர் டி.எம்.புரட்சிமணி, பெரியார் மீது வைக்கப்படும் விமரிசனங்களுக்கு உரிய பதில்களைக் கூறி விளக்கியதோடு, பெரியாரின் ஜாதியொழிப்புப் பணிகளால் தமிழகம், குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்கள் பெற்ற பயன்களை விளக்கி உரையாற்றினார்.
நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி “அம்பேத்கரின் ஜாதியொழிப்புப் பணிகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார். நிகழ்வு இரவு 9-00 மணிக்கு நிறைவடைந்தது.
பெரியார் முழக்கம் 30112017 இதழ்