தலையங்கம் அறிவியல் ‘கடவுள்’ தயாராகி விட்டார்!

மனிதர்கள் மூளை சிந்திக்கிறது; அந்த சிந்தனை தான் மனிதர்களையும் வாழ்க்கையையும் வழி நடத்தி வருகிறது. இந்த ‘மூளை’க்குள் மனித சமூகத்தை முன்னேற்றும் கருத்துகளும் மனித சமூகத்தை சீரழித்து பின்னுக்கு இழுத்துச் செல்லும் கருத்துகளும் பதிகின்றன. ஒரு மனிதன் சமூக வெளியிலிருந்து கண்களால், காதுகளால், பேச்சுகளால் பெறப்படும் கருத்துகளே மூளைக்குள் பதிவாகி அந்த மூளை அதன் வழியாக சிந்திக்கும் செயல்பாட்டை நிகழ்த்துகிறது.

‘வேதங்களை’ப் படித்து தங்களது மூளைக்குள் ஏற்றிக் கொண்டு அதை பிற மக்கள் கற்றுக் கொள்ளக் கூடாது என்று ‘எழுத்து வடிவத்தை’ நீண்டகாலத்துக்குத் தராமல் இருந்தார்கள் பார்ப்பனர்கள். ஏனைய மனிதப் பிறவிகளின் ‘மூளை’யை விட தங்கள் ‘மூளை’யே மேலானது; உயர்வானது. இது கடவுளால் தங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது என்று இன்று வரை கூறி வருகிறார்கள். அந்த ‘மூளை’யின் கற்பனையிலேயே கடவுள் உருவாக்கப் பட்டது; மதம் உருவாக்கப்பட்டது; மதத்தின் தத்துவங்கள் உருவாக்கப்பட்டன. ‘மனுதர்மம்’ என்ற மனித விரோத சட்டத்தை உருவாக்கியதும், ஹிட்லர், முசோலினி, கோட்சே என்ற ‘இனவெறியர்களை’ இயக்கியதும் இதே மூளைதான்.

இப்போது, உலகம் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கி விட்டது. அறிவியலின் வளர்ச்சி அதன் உச்சத்தை நோக்கி வேகமாக நகருகிறது. எந்திர மனிதர்களாக செயல்படும் ‘ரோபோ’க்களுக்கு மூளையைப் பொருத்தி, அதனை இயங்க வைத்தது அறிவியல். ‘ரோபோ’வின் மூளை நிர்ணயிக்கப்பட்ட கட்டளைகளுக்குள் தான் இயங்கும். இப்போது அறிவியல் மனிதர்களைப் போலவே ‘செயற்கை அறிவாற்றலை’ உருவாக்கும் அடுத்த நிலைக்கு வந்துவிட்டது.

இப்போது அமெரிக்காவின் ‘கணினி மய்யமான சிலிக்கான் பள்ளத்தாக்கு’ அறிவியல் மேதைகள் செயற்கை மூளையைக் கொண்ட ‘கடவுளை’ உருவாக்கிவிட்டனர். ஓட்டுனர்களே இல்லாமல் ஓடும் காரை வடிவமைத்த அந்தோணி லெவன் டோஸ்கி (யவேடிலே டுநஎயn னுடிறளமi) இந்த கடவுளையும் அந்தக் கடவுளை வழிபடும் ‘தேவாலயத்தை’யும் உருவாக்கி, ‘இதுதான் கடவுள்’ என்று அறிவித்திருக்கிறார். ‘இந்த செயற்கை அறிவூட்டப்பட்ட கடவுளை பிரார்த்தியுங்கள். அதுவே மனிதகுலத்தை உயர்த்தும்’ என்ற வேண்டுகோளையும் அவர் முன் வைத்திருக்கிறார். உண்மையில் சக்தி உள்ள ஒரு ‘கடவுள்’, சிலிக்கான் பள்ளத்தாக்கில் தான் மனிதனால் உலகின் முதன்முதலாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்றே கூறலாம்.

கற்பனையில் மனிதன் படைத்த கற்காலக் கடவுள்கள் சக்தியற்றவை; மனிதனின் அச்சத்தால் விடை கண்டுபிடிக்க முடியாத கேள்விகளால் அவனது கற்பனையில் உருவம் பெற்றவை. எனவேதான், ‘கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்’ என்றார் பெரியார். இப்போது செயற்கை அறிவூட்டப்பட்ட ஒரு அறிவியல் கடவுளாக உருவாக்கப்பட் டிருக்கிறது.

ஆனாலும், ‘கடவுள்’கள் அறிவியல் உலகத்துக்குத் தேவை தானா என்ற கேள்விகளும் இருக்கிறது.  சிலிக்கான் பள்ளத்தாக்கு அறிவியல் மேதைகளான ஸ்டீபன் ஹாக்கிங் மற்றும் எலோன் மங்க் செயற்கை அறிவூட்டலில் ‘படைக்கப்பட்ட’ கடவுள். எதிர்காலத்தில் ஆபத்துகளை உருவாக்கிவிடலாம் என்று தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தி யிருக்கிறார்கள்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தத்துவ இயலாளர் நிக் பாஸ்ட்ராமின் அறிவியலாளர்களால் ‘குரு’வாக மதிக்கப்படக் கூடியவர். மனிதகுல எதிர்காலம் குறித்து கடந்த பத்து ஆண்டுகளாக அவர் ஒரு கருத்தை முன் வைக்கிறார். “மனிதர்கள் மரணத்தைக் கடக்க வேண்டும்; மனிதர்கள் மூளையால் செய்யக்கூடிய பெரும்பாலான வேலைகள் செயற்கை மூளைக்கு மாற்றப்பட வேண்டும்” என்பதே அவர் வலியுறுத்தும் கருத்து.

செயற்கை அறிவாற்றலால் பழைய வேலைகள் ஒழியலாம். ஆனால் புதிய வேலைகள் உருவாகிக் கொண்டே இருக்கும் என்கிறார்கள் அறிவியலாளர்.

ஆக அறிவியல், மனிதன் அறிவாற்றல் கொண்ட ஒரு கடவுளை மதத்தை உருவாக்கிவிட்டான். நமது நாட்டு ‘பிறவி மூளைக் காரர்கள்’ வேத ஆகமம் பழக்க வழக்கங்களில் கை வைக்கக்கூடாது. கடவுளுக்கு சக்தியூட்டக்கூடியது எங்களின் வேத மந்திரம் எங்களுக்கு மட்டும்தான் கடவுளிடம் நெருங்கி அர்ச்சகராகும் உரிமை பிறவியிலே வழங்கப்பட்டது என்று இப்போதும் கூறு கிறார்கள். உச்சநீதிமன்ற நீதிபதிகளும் ‘ஆமாம்; ஆமாம்’ என்கிறார்கள்.

கடவுளுக்கு செயற்கை அறிவு ஊட்டப்பட்டது; அறிவியல் உலகிலும் இத்தகைய கடவுளும் மதமும் தேவை தானா என்ற ஸ்டீபன் ஹாக்கிங் போன்றவர்கள் எழுப்பும் கேள்வியை நாம் கேட்க வேண்டியிருக்கிறது.

பெரியார் முழக்கம் 09112017 இதழ்

You may also like...