திருமணங்களே தேவையில்லை: மூத்த எழுத்தாளர் ‘கி.ரா.’ பேச்சு
‘திருமணங்களையே கிரிமினல் குற்றமாக்கிட வேண்டும்’ என்று பெரியார் கூறியபோது சமூகமே அதிர்ச்சி அடைந்தது. இப்போது விடுதலையை கோரி நிற்கும் பெண்கள், திருமணஅமைப்புகளிலிருந்து விலகி நிற்பதைப் பார்க்க முடிகிறது. தமிழ்நாட்டின் கரிசல் மண் எழுத்தாளர் கி.ராஜ்நாராயணன், தனது 95ஆவது பிறந்த நாள் விழா நிகழ்வில் புதுவையில் பேசியபோது, “சொந்த ஜாதி திருமணமே ஜாதியை காப்பாற்றுகிறது; திருமணம் செய்வதையே ஒழிப்பதுதான் இதற்கு தீர்வு” என்று பேசியிருக்கிறார்.
கரிசல் இலக்கியத்தின் தந்தையும் ‘கி.ரா.’ என்று அழைக்கப்படுபவருமான கி. ராஜ நாராயணனின் 95-வது பிறந்த நாளையொட்டி, ‘எழுத்தாளர் கி.ரா. 95 விழா’ புதுச்சேரியில் சனிக்கிழமையன்று துவங்கியது. 2017ஆம் ஆண்டுக்கான கி. ராஜநாராயணனின் ‘கரிசல் இலக்கிய விருதுகளும்’ வழங்கப் பட்டன. இதில், ‘தளம்’ இலக்கியக் காலாண்டிதழுக்கு, சிறந்த சிற்றிதழுக்கான விருதையும், எழுத்தாளர் ரமேஷ் பிரேதனுக்கு, சிறந்த எழுத்தாளருக்கான விருதையும் வழங்கிய கி. ராஜநாராயணன், ‘வாகை முற்றம்’ என்ற தலைப்பில் வாசகர் களுடன் கலந்துரையாடினார்.
அப்போது அவர் பேசியதாவது: “உயர் குலத்தோரைவிட தாழ்ந்த குலத்தோர் மிகத் திறமையுடன் இருந்தால் ஏற்க மாட்டார்கள், இதன் மூலத்தை பார்த்தால் ஜாதி என்று தெரியும். அதை எப்படிஒழிப்பது என்று கேள்வி வரும். ஜாதியை உண்டாக்கியவர்கள் வருத்தப்படும் வகையில் ஏதும் நடக்காத வரையில் அது ஒழியாது. சிலர் எல்லாவிதமான வீடுகளிலும் சாப்பிடுவார்கள். ஆனால், தங்கள் வீட்டுப் பெண்ணை இதர சமூகத்தினருக்கு திருமணம் செய்து தர மறுப்பார்கள். உண்மையில் கல்யாணம்தான் இடிக்கிறது. எனவே, திருமணத்தை நிறுத்துங்கள். பிரான்ஸ் நாட்டில் திருமணம் செய்யாமல் குழந்தைகளுடன் வாழும் போக்கு உள்ளது. நாட்டை நிர்வகிப்பவர்களே அப்படித்தான் இருக்கிறார்கள். அதனால் திருமணத்தை நிறுத்துவதுதான் சமூகத்தின் விடிவுகாலம்.
இதை இப்போது யாரும் கேட்க மாட்டார்கள். பின்னர், இப்படி சொன்னதை நினைத்துப் பார்ப்பார்கள்.எனது பேத்தி, முஸ்லிமை திருமணம் செய்ய விரும்பினாள். வெள்ளியன்று தான் திருமணம் நடந்தது. இந்து – முஸ்லிம் ஒற்றுமை பற்றி பேசும் போது என் வீட்டில் நிஜமாக ஒரு திருமணம் நடந் துள்ளது. தைரியமாக ஏதாவது செய்ய வேண்டும். இதை தியாகம் என்று சொல்ல மாட்டோம். குழந்தைகளின் சந்தோஷம் தான் முக்கியம்” என்றார் கி. ராஜநாராயணன்.
புதுச்சேரி பொறியியல் கல்லூரி எதிரில் உள்ள புதுவைப் பல்கலைக்கழக விருந்தினர் இல்ல மாநாட்டு அரங்கத்தில் நடைபெற்ற இவ்விழாவில், கி.ரா. பற்றியகலை நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன. கி.ரா. வாழ்வு தொடர்பான ஆவணப் படங்கள் திரையிடப் பட்டன. கி.ரா.வின் கதைகளை கதை சொல்லிகளும், கி.ரா. பற்றிய கருத்துக்களை எழுத்தாளர்களும், கி.ரா.வின் மாணவர்களும் பகிர்ந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் 21092017 இதழ்