சங்கராச்சாரிகளின் ‘குடுமிபிடி’ சண்டைகள்

ஆதிசங்கரர் என்ற கேரள பார்ப்பனர், புத்தமதத்தை வீழ்த்தி அழிப்பதில் பெரும்பங்காற்றியவர். அவர் நான்கு சங்கர மடங்களை மட்டுமே உருவாக்கினார். பத்ரிநாத், சிருங்கேரி, துவாரகா, பூரி ஆகிய நான்கு மடங்களே அவை. காஞ்சிமடம், ஆதிசங்கரர் நிறுவியது அல்ல; அது கும்பகோணத்திலிருந்து காஞ்சிக்கு மாற்றப்பட்டு, ஆதி சங்கரர் உருவாக்கியதாக பொய்யாக ஆவணங்களை உருவாக்கினார்கள். இப்போது சங்கரமடங்கள் என்றும் ஆதிசங்கரரால் உருவாக்கப்பட்டவை என்றும் 50க்கும் மேற்பட்ட சங்கராச் சாரிகள் வந்து விட்டனர். டேராடூன் நகரிலிருந்து செயல்படும் சமூக செயல்பாட்டாளர் அஜய்குமார் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள சங்கராச்சாரிகள், சங்கர மடங்கள் குறித்த தகவல்களை மனித வளத்துறை அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு மத்திய அமைச்சகங்களிடம் கேட்டார். இது குறித்த எந்த தகவலும் தங்களிடம் இல்லை என்று அமைச்சகங்கள் கூறிவிட்டன. ஆக எந்த சங்கரமடமும் அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படவில்லை என்பது தெரிகிறது. காசியில், ‘அகில இந்திய அக்ஹரா பிரஷாத்’ என்ற அமைப்பு இருக்கிறது. சங்கராச்சாரிகள், சாமி யார்கள் பலரும் இந்த அமைப்பில் இருந்தாலும் தகவல் பெறும் சட்டத் தின்கீழ் இந்த அமைப்பு வரவில்லை.

இந்த நிலையில் கடந்த மகாசிவராத்திரியன்று அரித்துவாரைச் சார்ந்த அச்சுயதானந்தா என்ற பார்ப்பன சாமியார், தன்னை துவாரகபீட சங்கராச்சாரியாக அறிவித்துக் கொண்டார். ஏற்கெனவே சுவாமி சுவரூபானந்தா என்பவர் உள்ளிட்ட இரண்டு சங்கராச்சாரிகள், இந்த மடத்தில் இருக்கிறார்கள். புதிதாக தன்னைத் தானே அறிவித்துக் கொண்ட சங்கராச்சாரியை எதிர்த்து, நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு தொடரப் போவதாக சுவரூபானந்தா அறிவித்திருக்கிறார். அதிகாரத்தைக் கைப்பற்ற, சாமியார்களுக்குள் நடக்கும் போட்டிகளால் மக்கள் மன்றத்தில் மரியாதை கெட்டுப் போய்விடும் என்றும், இந்த சங்கராச்சாரிகள் பலருக்கு இந்து சாஸ்திரங்கள், சடங்குகள், ஆச்சாரங்கள் முழுமையாக தெரியாது என்றும், ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டுக்கு பல “சாது”க்கள் பேட்டி அளித்திருக் கிறார்கள். சங்கராச்சாரிகளாக இருப்பவர் அனைவருமே பார்ப்பனர்கள்.  இந்த நிலையில் ‘காயத்ரி திரிவேணி பிரயாக்பீடம்’ என்ற மடத்தின் சங்கராச்சாரியாக, ஒரு பார்ப்பன அம்மையார் இருக்கிறார். அவரது பெயர் திரிகை பகவந்த சரசுவதி. தன்னைத் தானே சங்கராச்சாரி என்று அறிவித்துக் கொண்டுள்ள இவர், சங்கராச்சாரிகள், பெண்களை இப்பதவிக்கு அனுமதிக்க மறுப்பதைக் கண்டித்துள்ளார். எனது சங்கராச்சாரி பதவியை அங்கீகரிக்கக் கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். தீர்ப்பு எனக்கு சாதகமாகவே இருக்கும் என்கிறார், இந்தப் பெண் சங்கராச்சாரி.

சங்கராச்சாரிகளிடையே இவ்வளவு அதிகாரப் போட்டிகள் இருந்தாலும் பிரதமர்களும், குடியரசுத் தலைவர்களும், அரசியல் புள்ளிகளும் அவர்கள் காலில் விழுவதற்கோ, ஆசி பெறுவதற்கோ வெட்கப்படுவது இல்லை.

பெரியார் முழக்கம் 09032017 இதழ்

You may also like...