மதவாத சக்திகளை முறியடிக்க சூளுரை பெரியார் பிறந்த நாள் எழுச்சி கம்பீரமாக எழுகிறார் பெரியார்

பெரியாரின் 139ஆவது பிறந்த நாள் விழாக்கள் முன் எப்போதும் இல்லாத உணர்ச்சியுடன் கொண்டாடப்பட்டது. சமூக வலைதளங்களில் பெரியார் பிறந்த நாள் வாழ்த்துக்கள் குவிந்து வழிந்தன. ராகுல் காந்தி, கருநாடக முதல்வர் சித்தராமய்யா, லாலு பிரசாத், தலைசிறந்த ஆய்வாளர் இராமச்சந்திர குகா என்று அனைத்து தரப்பினரும் பெரியாருக்கு வாழ்த்துக் கூறினர். பெரியார் வரலாற்றுத் தேவையாகி யிருக்கிறார். சமூகத்தில் பீடு நடை போடுகிறார்.

பெரியார் 139ஆவது பிறந்த நாள் விழா இதுவரை காணாத அளவுக்கு தமிழகம் முழுதும் கொண்டாடப் பட்டது. திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட நகரங்களில் திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் கழகத் தோழர்கள் இணைந்து பேரணியாகச் சென்று பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்த காட்சி உணர்ச்சிமயமாக இருந்தது. பெரியார் இயக்கங்களைத் தவிர, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், மாணவர் அமைப்புகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மே 17 உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களும் பெரியார் விழாவைக் கொண் டாடி மதவெறி சக்திகளுக்கு எதிராக உறுதி ஏற்றன.

பேராவூரணி : கழக சார்பில் பேராவூரணியில் உள்ள பெரியார் சிலைக்கு கழக மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம் தலைமையில், கழகப் பொறுப்பாளர் சீனி. கண்ணன் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். தமிழக மக்கள் புரட்சிக் கழகம் சார்பில் முனியன், மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், உழைக்கும் மக்கள் கட்சியின் வீர.மாரிமுத்து, நாகூரான், பெரியார் அம்பேத்கர் மக்கள் கழகம் அனல் இரவீந்திரன், பெரியார் பிஞ்சுகள் அறிவுச்செல்வன், அரும்புச் செல்வன் ஆகியோர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். நிகழ்வில் ஆறு.நீலகண்டன், ஆயில் மதியழகன், பைங்கால் இரா.மதியழகன், தா.கலைச்செல்வன் உள்ளிட்ட பெரியாரிய தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

பெண் விடுதலை, சாதி மறுப்பு, வகுப்புவாரி இடஒதுக்கீடு, மநுநீதி எதிர்ப்பு, திருக்குறள் மீட்பு, மாநில சுயாட்சி உள்ளிட்ட பெரியாரின் கருத்துக்கள் ஒலிபெருக்கி மூலம் முழக்கம் செய்யப்பட்டது.

நாகர்கோயில் : திராவிடர் விடுதலைக் கழகம்,குமரி மாவட்டம்.நடத்திய தந்தை பெரியார் 139ஆவது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் 16.09.2017 சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு  நாகர்கோவில் அம்பேத்கர் சிலை அருகில் நடைப்பெற்றது. மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் வே. சதா தலைமை தாங்கினார். கழகத் தோழர் விஷ்ணு வரவேற்புரையாற்றினார். தோழர்கள் நீதி அரசர், தமிழ் மதி, சூசையப்பா சிறப்புரையாற்றினர். கழகப் பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன் “வஞ்சிக்கப்பட்டத் தமிழர்கள்” என்ற தலைப்பில் பார்ப்பனீய பாரதீய சனதா அரசின் துரோகங்களைப் பட்டியலிட்டு நீண்டதொரு உரையாற்றினார். முடிவில் கழகத் தோழர் அனீஸ் நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சிகளை தமிழ்நாடு அறிவியல் மன்ற மாவட்டத் தலைவர் ச.ச. மணிமேகலை தொகுத்து வழங்கினார். கழகத் தோழர்கள் மஞ்சு குமார், இராஜேஷ் குமார், தமிழ் அரசன், றசல் ராஜ் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

ஈரோட்டில் கருஞ்சட்டை படை அணி வகுத்தது

ஈரோடு தெற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக, கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி தலைமையில் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவிலுள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

திராவிடர் விடுதலைக் கழகம், திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சார்ந்த தோழர்கள் இருசக்கர வாகனங்களில் ஈரோடு மார்க்கெட் பகுதியில் ஊர்வலமாகச் சென்று பெரியார் மன்றத்தை அடைந்தனர். அங்கு தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

அடுத்ததாக தோழர்கள் இருசக்கர வாகனங்களிலும் ஆட்டோவில் ஒலிபெருக்கி முழக்கங்களோடு ஊர்வலமாகச் சென்று ஈரோட்டின் பல்வேறு பகுதிகளில் நிறுவப்பட்டிருந்த கழகக் கொடிக்கம்பங்களில் கொடியேற்றினர். மரப்பாலம் பகுதியில் சத்தியமூர்த்தி கொடியேற்றி வைத்து உரையாற்றினார்.

லோகநாதபுரம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் சித்ரா சுரேஷ் கொடியேற்றினார். ஆசிரியர் சிவக்குமார் உரையாற்றினார். சித்ரா அனைவருக்கும் நன்றி கூறினார். சித்ரா இல்லத்தில் அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டது.

ரங்கம்பாளையத்திலுள்ள கொடிக்கம்பத்தில் மணிமேகலை கழகக் கொடியேற்றினார். பெரியார் பிஞ்சு நிறைமதி பெரியார் பிறந்த நாள் கேக் வெட்டினார். 92 வயது கடந்த மூத்த பெரியார் தொண்டர் அய்யா இனியன் பத்மநாபன் உரையாற்றினார்.

சூரம்பட்டிவலசில் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் சென்னிமலை செல்லப்பன் கொடியேற்றினார். ஆசிரியர் பெ.சே மோகன்ராஜ் உரையாற்றினார்.

பெருமாள்மலையில் அமைக்கப்பட்டிருந்த கம்பத்தில் முருகன் கொடியேற்றினார். கொங்கம்பாளையம் சௌந்தர் உரையாற்றினார். மரவபாளையம் பகுதியில் மகேஸ்வரி கொடியேற்றினார். ஆசிரியர் சிவக்குமார் உரையாற்றினார்.

கொங்கம்பாளையம் பகுதியில் சண்முகப்பிரியன் கொடியேற்றினார். கிருஷ்ணமூர்த்தி உரையாற்றினார்.

சித்தோடு நால்ரோடு பகுதியில் கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி கொடியேற்றினார். ஆசிரியர் சிவக் குமார், கமலக்கண்ணன் ஆகியோர் உரையாற்றினர். அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி சிறப்புரையாற்றினார்.

இறுதியாக, சித்தோடு பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப் பட்டது. அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, செல்லப்பன் உரை யாற்றினர். ரங்கம்பாளையம் பிரபு நன்றி கூறினார்.

கழகப் பொறுப்பாளர்களும், கழகத் தோழர்களும், தமிழ்நாடு அறிவியல் மன்ற தோழர்களும் பெரும் எண்ணிக்கை யில் பங்கேற்றனர். கழக ஆதரவாளர் சுண்ணாம்பு ஓடை பழனிச்சாமி தோழர் களுக்கு மதிய உணவு வழங்கினார்.  புதிய மகிழ்வுந்து வாங்கிய நகரச் செயலாளர் சிவானந்தம் கழக வளர்ச் சிக்கென ரூ.1000/- அமைப்புச் செயலாளர் இரத்தினசாமியிடம் வழங்கினார்.

சென்னையில் : பெரியாரின் 139வது பிறந்தநாளான 17.09.2017 காலை திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட தோழர்கள் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் தியாகராயர் நகர் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து முழக்கத் தோடு மரியாதை செலுத்தினார்கள். மார்க்சிய லெனினிய மக்கள் விடுதலைக் கட்சித் தோழர்கள் பேரணியாக வந்து, கழகத் தோழர்களுடன் நிகழ்வில் இணைந்து கொண்டனர். அன்பு தனசேகர், செந்தில் (இளந்தமிழகம்) உணர்ச்சி முழக்கங்கள் எழுப்பினர்.

தொடர்ந்து கிண்டி ஆலந்தூர், மந்தவெளி குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு பேரணியாக வந்து மாலை அணி வித்தனர். ஆலந்தூரில் கழகத் தோழர் களோடு திராவிடர் கழகத் தோழர்களும் கலந்து கொண்டனர். திராவிடர் கழக மூத்த தலைவர் வீரபத்திரன் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்.

பின்பு, மயிலாப்பூர் பகுதியில் அமைக்கப்பட்ட பெரியாரின் படத்திற்கு கழகப் பொதுச் செயலாளர் மாலை அணிவித்தார். தொடர்ந்து இராயப் பேட்டை மற்றும் சென்னை அண்ணா சாலையிலுள்ள பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தொடர்ந்து தோழர்கள் இரு சக்கர வாகனங்களில் பேரணியாகச் சென்று, தண்டையார்பேட்டை பகுதியில் கழகக் கொடி ஏற்றி, அனிதாவிற்கு வீர வணக்க முழக்கங்கள் எழுப்பினர்.

நிறைவாக, திருவொற்றியூர் பகுதியில் கழக கொடியை ஏற்றி  அனிதா மற்றும் எழுத்தாளர் கவுரி லங்கேஷ் ஆகியோருக்கு மாலை அணிவித்து வீரவணக்க முழக்கமிட்டனர். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் உமாபதி, அய்யனார், பாண்டியன், ராஜூ, பாரி சிவா மற்றும் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பெரியார் தமிழ்நாட்டின் வரலாற்றுத் தேவையாக மாறியிருப்பதை சுட்டிக்காட்டி உரையாற்றினர். வந்திருந்த தோழர்கள் அனைவருக்கும் திருவொற்றியூர் பாண்டியன் மாட்டுக் கறி உணவு ஏற்பாடு செய்திருந்தார்.

கழகத் தோழர்களுக்கு தியாகராயர் நகர் பகுதி கழக சார்பில் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.

நாமக்கல் : திருச்செங்கோடு நகர கழக சார்பில் திருச்செங்கோடு நகர கழகத் தலைவர் சோமசுந்தரம் தலைமையில் குதிரைப்பள்ளம் கிராமத்தில்  மணி கொடியேற்றினார் பின் திருச்செங்கோட் டில் உள்ள பெரியார் சிலைக்கு தனலட்சுமி மற்றும் பிரியா ஆகியோரால் மாலை அணிவிக்கப்பட்டது. பின் காளிப்பட்டி ஒன்றிய அமைப்பாளர்  பெரியண்ணன் கழக  கொடி ஏற்றினார்.

பள்ளிபாளையம் நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் பள்ளி பாளையத்தில் பெரியார் பிறந்தநாள் விழா சசினா தலைமையில் நடைபெற்றது. ஆவாரங்காடு மற்றும் கோயிலாங்காடு ஆகிய பகுதிகளில் சசினா மற்றும் மீனா ஆகியோரால் கொடியேற்றி வைக்கப் பட்டது. பின்,  பெரியார் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

இராசிபுரம் நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் பெரியாரின் 139ஆவது பிறந்தநாள் விழா  – நடிகவேள் எம்.ஆர்.ராதா 38ஆவது நினைவேந்தல் நிகழ்வு இராசிபுரம் பாரதிதாசன் சாலையில் உள்ள கழக அலுவலகம் முன் நடைபெற்றது.

நிகழ்வில், கழகத் தோழர்கள் சுமதி, மலர், வி.பாலு, (தலைவர், நகர வளர்ச்சி மன்றம்) நா.ஜோதிபாசு (நகர செயலாளர், மதிமுக) நல்வினை, செல்வன் (நிறுவனர், தமிழக மக்கள் கட்சி), ந.பழனிசாமி, (இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை) சி.கண்ணன், (ஆதி தமிழர் பேரவை) நாணற்காடன், (தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம்) ஆர்.இளங்கோ, மற்றும் பூபதி, ஏர்செல் பிரபு, பாலா, அன்பழகன், மகேந்திரன், விஜி, கண்ணன், திலீபன், கிஷோர், லெனின், சிரஞ்சீவி உள்பட பலர் கலந்து கொண்டனர் பெரியார் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது.

குமாரபாளையம் நகர கழக சார்பில் பெரியார் பிறந்தநாள் விழா, பொன் மொழி வாசக பலகை திறப்பு, கழக கொடியேற்றுதல், இரு சக்கர வாகன ஊர்வலம் ஆகியவை நடைபெற்றது. இதில் மாவட்ட காப்பாளர் அண்ணா துரை தலைமை தாங்கினார், நிர்வாகிகள் கிருஷ்ணவேணி, சந்திரா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காவேரி நகர் பேருந்து நிறுத்தம் பகுதியில் கொடியேற்றி வைக்கப்பட்டு, இரு சக்கர வாகன ஊர்வலம் புறப்பட்டது. நகர தலைவர் தண்டபாணி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.  காவேரி பாலம் அருகில் பெரியார் பொன்மொழி வாசக பலகையை மாவட்ட அமைப்பாளர் வைரவேல் திறந்து வைத்தார்.

குமாரபாளையம் பேருந்து நிலையம், எம்.ஜி.ஆர். நகர், கோட்டைமேடு பைபாஸ் சாலை பிரிவு, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பகுதி உள்ளிட்ட பல பகுதிகளில் கொடியேற்றி வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

நகராட்சி அலுவலகம் அருகில் பெரியார் உருவப்படத்தை தோழர் ரேணுகா திறந்து வைத்தார்.  பெரியார் படத்திற்கும், பயணியர் மாளிகை வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது. இரு சக்கர வாகன ஊர்வலம் எடப்பாடி சாலை, சேலம் பிரதான சாலை, பள்ளிபாளையம் சாலை, ஆனங்கூர் சாலை உள்ளிட்ட பல்வேறு முக்கிய பகுதிகளில் சென்று கத்தேரி சமத்துவபுரம் பகுதியில் நிறைவு பெற்றது.

அங்கு பெரியார் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது. நிகழ்வில் பள்ளிபாளையம், திருச்செங்கோடு, மல்லசமுத்திரம் ஆகிய பகுதி நகர தோழர்கள் உட்பட 70 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

குமரி மாவட்டம் : பெரியாரின் 139ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மூவோட்டுக் கோணம் சந்திப்பில் தெருமுனைப் பரப்புரைக் கூட்டம் நடைப் பெற்றது. மாவட்டப் பொருளாளர் மஞ்சுகுமார் தலைமைத் தாங்கினார். தோழர்கள் நீதி அரசர், தமிழ் மதி பெரியார் பற்றி கருத்துரையாற்றினர்.

தோழர்கள் இராஜேஷ் குமார், அனில் குமார், ஜெயன், பெரியார் பிஞ்சு, ஆர்மல், சஜிக்குமார், ரசல் ராஜ், சிக்கு, சரத் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

திருப்பூரில் :  திருப்பூரில் 17.09.2017 காலை 10 மணிக்கு பெரியார் பிறந்த நாள் கொண்டாட்டம் பெரியாரியல் கூட்டமைப்பு சார்பாக மிக சிறப்பாகவும் எழுச்சி யோடும் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகம், த.பெ.தி.க., திராவிடர் கழகத் தோழர்கள் இணைந்து விழாவை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தி லிருந்து இரயில் நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலை வரை பெரியார் பிறந்த நாள் கொள்கை முழக்கங்களோடு பேரணியாய் சென்றனர். பெரியார் படையை வலுப்படுத்த தோழர்களோடு பெரியாரிய பிஞ்சுகளும் ஒன்று கூடினர்; கொட்டும் மழையிலும் பெரியார் கொள்கை முழங்கினர்; காரிருள் மண்ணில் இறங்கியதோ என வியக்கும் வண்ணம் கருஞ்சட்டையாய் அணி வகுத்து முழக்கங்களை எழுப்பி கருஞ் சட்டை படை அடர்த்தியாய் ஒன்றுபட்டு அணி வகுத்து வந்த காட்சி உணர்ச்சி மயமாக இருந்தது.

கழகத் தோழர் கனல்மதி உறுதி மொழியை படிக்க அனைத்து பெரி யாரிய தோழர்களும் உறுதியேற்றனர்

“பெரியாரியலை இலட்சியமாக ஏற்றுக் கொண்டுள்ள நான், அதை சமுதாயத்தில் பிரச்சாரம் செய்வதோடு நின்று விடாமல், எனது சொந்த வாழ்க்கையிலும் பின்பற்றுவேன் என்று உறுதி ஏற்கிறேன்.

தீண்டாமை, சாதீய உணர்வுகளி லிருந்து முழுமையாக விடுவித்துக் கொண்டு சாதி, மத மறுப்பாளனாக வாழ்ந்து காட்டுவேன் என்றும், எனது குடும்பத்தில் சாதிமறுப்புத் திருமணங் களையே நடத்த முழுமையாக முயற்சிப்பேன் என்றும், தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலையிலும், பெண் களுக்குச்  சமஉரிமை வழங்குவதிலும் சொல் லொன்று செயலொன்றாக இல்லாமல் உண்மையாக நடந்து கொள்வேன் என்றும், உதட்டளவில் சாதி எதிர்ப்புப் பேசிக்கொண்டு உள்ளத்தில் சாதிய வாதியாக இருக்கும் எவரும் பெரியாரியலுக்கு எதிரானவர்கள் என்றே கருதி வெறுப்பேன் என்றும் உறுதி

ஏற்கிறேன்.

ஒழியட்டும் சாதி அமைப்பு!

மடியட்டும் பெண்ணடிமை!

வெல்லட்டும் பெரியாரியப் பண்பாட்டுப் புரட்சி!”

– என்ற உறுதி மொழியை ஏற்றனர்.

நிகழ்வின் இறுதியில் அனைத்து பெரியாரிய இயக்கங்களும் இது போல் ஒன்றிணைந்து கூட்டாய் இனிவரும் காலங்களில் முன்னெடுப்போம் என்று உறுதி கொண்டனர்.

பெரியார் முழக்கம் 21092017 இதழ்

You may also like...