மாணவி அனிதாவிற்கு நீதி வேண்டி பேராவூரணி வேதாந்தம் திடலில் உண்ணாவிரதம் 10092016
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் 150 மருத்துவ மாணவர்களுக்கான சேர்க்கையில் 15 மாணவர்கள் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் – மருத்துவர் ஜெயராமன் தகவல்.
“நீட் தேர்வுக்குப்பின் அரசு மருத்துவக்கல்லூரிகளில் ஏழை மாணவர்கள் சேர்ந்து படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு நடத்தும் மருத்துவக்கல்லூரிகளில் 85 விழுக்காடு மாணவர்களுக்கான சேர்க்கையை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களைக் கொண்டே நிறைவு செய்ய வேண்டும் என்ற சட்டம் உள்ளது. ஆனால் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் உள்ள 150 மாணவர்களுக்கான இடங்களில் 15 பேர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள். எல்லா மாநிலங்களிலிலும் நீட்டை ஏற்றுக் கொண்டுவிட்டார்கள் என்று இங்கு பொய் பரப்புரை செய்யப்படுகிறது. சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ள ஆந்ரா மாநிலத்தில் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேலூர் சி.எம்.சி மருத்துவக்கல்லூரி நீட் தேர்வை புறந்தள்ளிவிட்டது. தமிழ்நாட்டில் மாவட்டந்தோறும் மருத்துவக்கல்லூரி என்ற அடிப்படையில் 24 மருத்துவக்கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றது. தமிழக ஏழை எளிய மாணவர்கள் சேர்ந்து படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட இக்கல்லூரிகளில் இனி ஏழை மாணவர்கள் படிக்க முடியாத நிலையை உருவாக்கி வைத்துள்ளார்கள் மத்திய ஆட்சியாளர்கள். சில லட்சங்களை செலவு செய்து படித்தால்தான் மருத்துவராக முடியும் என்ற நிலையில் தற்போது தமிழக அரசு விரைந்து நீட் தேர்விலிருந்து விலக்கைப் பெற வேண்டும். மத்திய ஆட்சியாளர்களுக்கு அடிபணியக்கூடாது. தமிழக மாணவர்கள் நலன் காக்கப்படவேண்டும். மேலும் மருத்துவ உயர்கல்விக்கான மாணவர்சேர்க்கையிலும் தமிழகத்தின் நலன் பறிக்கப்பட்டுள்ளது. உயர் கல்விக்கான இடங்களில் 50 விழுக்காடு இடங்கள் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் சேர்ந்து படிக்கும் வகையில் இருந்த இடஒதுக்கீட்டு முறையை மத்திய அரசு இரத்து செய்துள்ளது ” என்றார் புதுக்கோட்டை பல் மருத்துவர் ஜெயராமன். பேராவூரணியில் நடைபெற்ற நீட் தேர்வுக்கு எதிரான உண்ணா நிலை அறப்போராட்டத்தைத் தொடங்கி வைத்து பேசியபோது இதை அவர் தெரிவித்தார்.
தமிழின உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று (10.09.2016) பேராவூரணி வேதாந்தம் திடலில், டாக்டர் அனிதா அரங்கில் நடைபெற்ற உண்ணாநிலைப் போராட்டத்திற்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆறு.நீலகண்டன் தலைமைவகித்தார். திராவிடர் விடுதலைக் கழக அமைப்பாளர் சித.திருவேங்கடம் வரவேற்றார். தாளாண்மை உழவர் இயக்கத் தலைவர் கோ.திருநாவுக்கரசு, பேரூராட்சியின் முன்னாள் தலைவர் நா.அசோக்குமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொறுப்பாளர்கள் பா.பாலசுந்தரம், காசிநாதன், இராசமாணிக்கம், மார்க்சிஸ்ட் கட்சியின் பொறுப்பாளர்கள் வழக்கறிஞர் கருப்பையா, வேலுச்சாமி, திராவிடர் விடுதலைக் கழக பொறுப்பாளர் தா.கலைச்செல்வன், இசிஐ திருச்சபை ஆயர் த.ஜேம்ஸ். தமிழர் நல பேரியக்க பொறுப்பாளர் பழ.திருமுருகன், பகுத்தறிவு பாடகர் அ.சி.நாவலரசன், உழைக்கும் மக்கள் கட்சித் தலைவர் வீர மாரிமுத்து, சாமானிய சகாக்கள் சங்கத் தலைவர் சமந்தா, பாவேந்தர் மக்கள் மன்ற பனசை அரங்கன், தமிழக மக்கள் புரட்சிக் கழக பொதுச் செயலாளர் வி.சி.முருகையன், முனைவர் கணேஷ்குமார், திராவிடர் கழக பொறுப்பாளர் வை.சிதம்பரம், சாதிக்அலி, மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், தமிழ்வழிக் கல்வி இயக்க பொறுப்பாளர்கள் அ.சி.சின்னப்பதமிழர், ஆசிரியர் ந.காசிலிங்கம் ஆகியோர் கருத்துரையாற்றினர். நிறைவாக ம.தி.மு.க தலைமைக்கழக பேச்சாளர் விடுதலை வேந்தன் உண்ணா நோன்பை முடித்துவைத்து சிறப்புரையாற்றினார்.
“தமிழ்நாட்டின் சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் எதிர்ப்புத் தீர்மானத்தின் மீது மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கத் தவறிவிட்டது. நீட் அவசரச் சட்டம் வருவதற்கு முன்னதாகவே அச்சட்டத்திற்கு நீதி மன்றம் எப்படி தடை விதிக்க முடியும்? குழந்தை பிறப்பதற்கு முன்பே ஆணா? பெண்ணா? என்று தெரியாத குழந்தைக்குப் பெயர் சூட்டுவதைப் போல் சட்டமாகாத ஒன்றுக்கு தடைவிதித்திருக்கிறது உச்சநீதிமன்றம். அரசியல் சட்டத்திற்கு முரணாக நீதி மன்றங்கள் செயல்படுகின்றன. பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற பல மாணவர்கள் இன்று மருத்துவக் கல்லூரிக்குள் நுழைய முடியாமல் உள்ளார்கள். பேராவூரணி, பட்டுக்கோட்டை போன்ற ஊரகப் பகுதி அரசு பள்ளி மாணவர்களில் யாரும் இந்த ஆண்டு மருத்துவக் கல்லூரிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்களின் சனநாயகபூர்வமான போராட்டங்களை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் விட்டால் மக்கள் தங்களின் போராட்ட வடிவங்களை மாற்றிவிடுவார்கள். இன்று நீட் தேர்வுக்கு எதிராக இளைஞர்களும், கல்லூரி, பள்ளி மாணவர்கள் களத்தில் இறங்கி போராடி வருகிறார்கள். இவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் நீட் ஆதரவு போராட்டம் நடத்துவோம் என்று பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தில் கலவரத்தை தூண்டிவருகிறார்கள். அவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக இடஒதுக்கீட்டுக் கொள்கையால் மருத்துவம் படித்தவர்கள் டாக்டர் தமிழிசையும், டாக்டர் கிருஷ்ணசாமியும். ஆனால் இப்போது அந்த இடஒதுக்கீட்டுக் கொள்கைகளுக்கு எதிராக நீட் தேர்வுக்கு ஆதரவாக பேசிவருவதை மக்கள் இழிவாகப் பார்க்கிறார்கள். ” என்றார் விடுதலை வேந்தன்.
நிகழ்வின் நிறைவாக திராவிடர் விடுதலைக் கழக பொறுப்பாளர் சீனி.கண்ணன் நன்றி கூறினார்.