குடியரசுத் தலைவர் பதவிக்கு தலித் வேட்பாளரை நிறுத்தும் மோடி ஆட்சியில் தலித் மக்களின் நிலை என்ன?
குடியரசுத் தலைவர் பதவிக்கு ராம்நாத் கோவிந்த் என்ற தலித் வேட்பாளரை நிறுத்தி, தலித் ஆதரவு நாடகம் நடத்தும் மோடி ஆட்சியில் தலித் மக்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? அவர்களுக்கான உரிமைகள் பாதுகாக்கப்படு கிறதா?
மோடி அரசாங்கம் மத்தியில் மூன்றாண்டுகளை நிறைவு செய்திருக்கிறது.
கடந்த மூன்றாண்டுகளில் மிகவும் விளிம்பு நிலையில் உள்ள சமூகத்தினரான, தலித்துகள், பழங்குடியினர் மற்றும் மதச்சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. அவர்களுக்கான முன்னுரிமை என்பது ‘பசு’விற்குக் கொடுப்பதைவிட குறைவேயாகும். ஆனால் தலித்துகள், பழங்குடியினர், மதச்சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் குறித்து நாட்டிலுள்ள ஊடகங்கள் வாயே திறப்பதில்லை.
2014 பொதுத்தேர்தலின்போது பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையையும் கடந்த மூன்றாண்டுகளில் அது அமல்படுத்தியுள்ளவற்றை யும் ஒப்பிட்டுப் பார்த்தாலே பாஜகவின் மோசமான ஆட்சியை நன்கு புரிந்துகொள்ள முடியும், ‘பாஜக மனிதர் மலத்தை மனிதர் சுமக்கும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைத்திட உறுதி பூண்டிருக்கிறது’ என்று தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது.
ஆனால், இந்த உறுதிமொழிக்கும் எதார்த்த நிலைக்கும் தொடர்பே கிடையாது. உண்மையில், 2017-18இல் சமர்ப்பிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையில், மனித மலத்தை சுமந்திடும் மனிதருக்கு மாற்று வேலைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியின் அளவு பத்து கோடி ரூபாய் அளவிலிருந்து ஐந்து கோடி ரூபாயாக, அதாவது பாதியாகக் குறைக்கப்பட்டுவிட்டது. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி நாட்டில் உலர் கழிப்பிடங்கள் 26,07,612 இருக்கின்றன. இதற்கு சுமார் 2 இலட்சம் சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் தேவை.
இத்துடன் ரயில்வே மற்றும் பொது இடங்களில் உள்ள கழிவறைகளைச் சுத்தம் செய்வோரையும் சேர்த்தால் இவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாகும். இவ்வாறு மலம் அள்ளும் தொழிலாளிக்கு மாற்றுப்பணி அளிப்பதற்காக ஒரு நபருக்கு ரொக்க ஊக்கத்தொகையாக 40 ஆயிரம் ரூபாய் அளிக்கப்பட வேண்டும் என்று கணக் கிட்டால், மொத்தம் 800 கோடி ரூபாய் தேவைப்படு கிறது. ஆனால் 2016 பிப்ரவரி 15 வரையிலும் 7,573 நபர்களுக்கு மட்டுமே மாற்றுப்பணி அளிக்கப்பட் டிருக்கிறது. 1,92,427 பேர் மாற்றுப்பணி எதுவும் அளித்திடாமல் நிர்க்கதியாய் விடப்பட்டிருக் கிறார்கள். மோடியின் ‘தூய்மையான பாரதம்’ திட்டத்தின்கீழ் எத்தனை உலர் கழிப்பிடங்கள் அகற்றப்பட்டிருக்கின்றன என்பதற்கான தரவு எதுவும் கிடையாது.
தாக்குதல்கள்
‘நாங்கள் (பாஜக) தலித்துகள்/பழங்குடியினருக்கு எதிரான அட்டூழியங்களைத் தடுத்திடுவதற்கும், அவர்களுக்கு உரிய பாதுகாப்பை அளித்திடுவதற்கும் உச்சபட்ச முன்னுரிமை அளித்திடுவோம்’ என்பது மற்றுமொரு தேர்தல் வாக்குறுதியாகும்.
இவர்களின் ஆட்சியில் தலித்துகள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்திருக்கின்றன. சமீபத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலம், சகரன்பூர் மாவட்டம், சப்பிர்பூரில் நடைபெற்றுள்ள தலித்துகள் மீதான தாக்குதல்கள் என்பது, எப்போதெல்லாம் தலித்துகள் தங்கள் மனிதகுல கண்ணியத்தை உயர்த்திப் பிடித்திட வேண்டும் என்று முயற்சிக்கிறார்களோ அப்போ தெல்லாம் சாதி வெறியர்களால் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்பதற்கான சான்றாகும். தலித்துகள் தங்களுடைய சந்த் ரவிதாஸ் கோவிலில் அம்பேத்கரின் மார்பளவு சிலையை நிறுவிட விரும்பியதே, ஆதிக்க சாதியினருக்கு அவர்கள்மீது ஆத்திரத்தைக் கிளப்பியதற்கான காரணமாகும்.
2017 மே 5 அன்று உயர்சாதி தாக்கூர்கள் மகாராணா பிரதாப் சிலையை நிறுவுவதற்காக ஊர்வலமாகச் செல்லத் திட்ட மிட்டிருந்தபோது, அவர்கள் சப்பிர்பூர் வழியாக வருகையில் தலித்துகள் அவர்களிடம் மோசமாக நடந்து கொள்ளப் போவதாக ஒரு வதந்தி பரப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஊர்வலத்தில் சென்றவர்கள் வாள்கள் ஏந்தி ஊர்வலமாகச் சென்று, தலித்துகளைத் தாக்கி இருக்கின்றனர், அவர்களின் வீடுகளுக்குத் தீ வைத்திருக்கின்றனர். தலித்துகளுக்கு எதிராக அட்டூழியங்கள் நடைபெறும் அத்தனை இடங் களிலும் இதேபோன்ற பாணி திரும்பத் திரும்பப் பின்பற்றப்படுகிறது. மற்றுமொரு கொடுமையான நிகழ்வு என்பது உனா என்னுமிடத்தில் பசுப் பாதுகாப்புக் குழுவினர் என்ற பெயரில் மதவெறியர்கள் மேற்கொண்ட அட்டூழியங்களாகும்.
இறந்த மாடுகளை அப்புறப்படுத்திய நான்கு தலித் இளைஞர்களை அவர்கள் போலீசாரின் தடியால் தெருவில் அடித்தே இழுத்துச் சென்றனர். இதற்கு போலீசாரும் உடந்தையாக இருந்திருக்கிறார்கள். ஒவ்வோராண்டும் நாட்டில் நடைபெற்ற குற்றங்கள் குறித்து ஓர் அறிக்கை உள்துறை அமைச்சகத்தால் தரப்படுகிறது. தலித்துகளுக்கு எதிரான அட்டூழியங்கள் அதிகரித்திருக்கின்றன என்று ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வரும் அதே சமயத்தில், தலித்/பழங்குடியினர் (வன்கொடுமை தடைச்) சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளோ குறைந்திருப்பதையும் பார்க்க முடிகிறது. இந்தச் சட்டத்தின்கீழ் 2013ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டிருந்த வழக்குகள் 13,975 ஆகும். ஆனால் இது 2015இல் 6,005ஆக குறைந்திருக்கிறது.
அதாவது 133 சதவீதம். தலித்துகளுக்கு எதிராக அநேகமாக இதர குற்றங்கள் அனைத்துமே அதிகரித்திருப்பாக தரவுகள் காட்டுகின்றன. இதற்கு, தலித்/பழங்குடியினர் (வன்கொடுமை தடைச்) சட்டத்தின்கீழ் வழக்குகளைப் பதிவு செய்வதைத் தவிர்த்திடுமாறு காவல்துறையினருக்கு அறிவுறுத்தப் பட்டிருப்பதே காரணம் என்று தெரியவருகிறது. இப்படி இல்லை என்றால், தலித்துகளுக்கு எதிராக இதர குற்றங்களின்கீழ் வழக்குகள் பதிவு செய்யப் பட்டிருப்பது அதிகரித்திருக்கும்போது, 2014க்குப் பின் வன்கொடுமைத் தடைச்சட்டத்தின்கீழ் மட்டும் வழக்குகள் திடீரென்று எப்படிக் குறைவாக இருந்திடும்?
2011-2015க்கு இடையே தலித்துகள் மீதான குற்ற நிகழ்வுகள்:
தலித்துகள் மேம்பாடு குறித்து தம்பட்டம் அடித்திடும் பாஜக அரசாங்கம் அரசுத்துறைகளில் காலியாகவுள்ள தலித்துகளுக்கான இடங்களை நிரப்பிட உருப்படியான கொள்கை எதையும் கொண்டுவரவில்லை. காலியாகவுள்ள தலித்/பழங்குடி யினர் பணியிடங்களை நிரப்பிட, 2008ஆம் ஆண்டில் தான் கடைசியாக சிறப்புத் தேர்வு நடைபெற்றது.
நிதி ஒதுக்கீடுகள் மறுப்பு
தலித்/பழங்குடியினரின் மக்கள் தொகை விகிதாச்சாரத்திற்கு ஏற்ப நிதிநிலை அறிக்கையில் துணைத்திட்டங்கள் மூலமாக நிதி ஒதுக்கப்பட்டு வந்தன. இவ்வாறான ஒதுக்கீடுகளை திட்டக் குழு கண்காணித்து வந்தது. இந்த நடைமுறையை பாஜக அரசாங்கம் நீக்கிவிட்டது. இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் திட்டச் செலவினம், திட்டமில்லா செலவினம் என்பதையே நீக்கிவிட்டதால், தலித்/பழங்குடியினருக்கு எனத் தனியே நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை. தலித் மனித உரிமைகளுக்கான தேசியப் பிரச்சாரக்குழு (NCDHR—National Campaign for Dalit Human Rights)வின் அறிக்கையின்படி, தலித்/பழங்குடியினருக்கு அவர்களின் மக்கள்தொகை விகிதாச்சாரத்தின்படி முறையே 91,386 கோடி ரூபாய், 47,276 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், முறையே 52,393 கோடி ரூபாய், 31,920 கோடி ரூபாய்தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது, தலித்/பழங்குடியினருக்கான ஒதுக்கீடு முறையே 55 சதவீதம், 66.5 சதவீதமேயாகும். இந்தத் தொகை முழுதும் தலித்/பழங்குடியினருக்கு மட்டுமானதல்ல. இந்த ஒதுக்கீடு மற்ற துறைகளுக்கும் பொருந்தும். உண்மையில் இந்த ஒதுக்கீட்டில் கணிசமான அளவிற்கு சம்பளம், ஓய்வூதியம் போன்ற நிர்வாகச் செலவினங்களுக்குச் சென்றுவிடுமாதலால், தலித் மேம்பாடுகளுக்கான திட்டங்களுக்கு ஒதுக்கப் பட்டுள்ள தொகை மிகவும் குறைவாகும் என்று நாடாளுமன்ற தலித்/பழங்குடியின உறுப்பினர்கள் பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.
தலித்துகளுக்கு நேரடியாகப் பயன் அளித்து வந்த திட்டம் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த கல்வி உதவித் தொகைகள் திட்டம்தான் (scholarships). சென்ற ஆண்டு கல்வி உதவித்தொகை வழங்கப்படாது நிலுவையில் உள்ள தொகை 11,267.61 கோடி ரூபாயாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். தலித்துகளின் முன்னேற்றத்திற்கு உந்துவிசையாக இருப்பது கல்வி. இப்போது அவர்களுக்குக் கல்வி உதவித்தொகையை வழங்காது இழுத்தடிப்பதன்மூலம் அவர்கள்
பள்ளி/கல்லூரிகளிலிருந்து இடையிலேயே நீங்குவதற்கான வேலைகளில் பாஜக அரசாங்கம் இறங்கி இருக்கிறது.
இந்த நிலையில் குடியரசுத் தலைவர் பதவிக்கு தலித் ஒருவரை வேட்பாளராக்கி தலித் ஆதரவு நாடகம் நடத்துகிறது மோடி ஆட்சி.
பெரியார் முழக்கம் 29062017 இதழ்