காந்தியை ஜாதி கூறி விமர்சித்த அமீத் ஷா
பா.ஜ.க. தலைவர் அமீத் ஷா, காந்தியை அவரது ஜாதிப் பெயரைக் கூறி விமர்சித்திருக்கிறார். “அவர் ஒரு சாதுர்யமான பனியா. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தெரிந்தவர். அதனால் காங்கிரசை கலைக்கச் சொன்னார்” என்று பேசி இருக்கிறார். அமெரிக்காவில் வாழும் காந்தியின் பேரன் ராஜ்மோகன் காந்தியும், மற்றொரு பேரனும், மேற்கு வங்க ஆளுநராக இருந்தவருமான கோபால கிருஷ்ண காந்தியும் அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பிரபல வரலாற்று ஆய்வாளர் இராமச்சந்திரா குகாவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமீத்ஷா கூறிய ‘சாதுர்ய பனியா’ என்ற காந்தி மீதான விமர்சனத்தைத் தொடர்ந்து பனியா, பார்ப்பனர் உள்ளிட்ட பல்வேறு ஜாதிக் குழுக்கள் பற்றி ஆங்கில ஏடுகள் கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றன. ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு (ஜூன் 17, 2017) வெளியிட்ட ஒரு கட்டுரையில் வர்ணாஸ்ரம சமூக அமைப்பில் பார்ப்பனர், சத்திரியருக்குக் கீழே பனியாக்கள் வைக்கப்பட்டிருப்பதை பனியாக்கள் விரும்பவில்லை என்று எழுதியிருக்கிறது. குஜராத் சமூகத்தில் ஜாதியின் அடிப்படையிலேயே மனிதர்கள் மதிக்கப்படுகிறார்கள் என்றும் அக்கட்டுரை கூறுகிறது.
அதே நேரத்தில், தங்களை சமூகத்தில் மிக உயர்வானவர்களாக கருதிக் கொண்டிருக்கும் ‘பார்ப்பனர்களை’ இழிவாகவும் ‘கெட்ட சகுனக்காரர்கள்’ என்றும் பார்க்கும் கண்ணோட்டமும் இருப்பதை இக்கட்டுரை சுட்டிக் காட்டுகிறது. தீபன்கர் குப்தா எழுதியுள்ள அக்கட்டுரையில் இவ்வாறு கூறுகிறார்:
“பஞ்சாபிலிருந்து திருவாங்கூர் வரை பல சமூகப் பிரிவினர், ‘பிராமணர்’களை அபசகுன மிக்கவர்கள்; அவர்கள் கண்பட்டாலே கெட்டதுதான் நடக்கும் என்று கருதக் கூடிய சமூகங்கள் இருக்கின்றன. உதாரணமாக மேற்கு கேரளாவில் குரிச்சான்கள் (முரசiஉஉhயளே) என்ற சமூகத்தினர், ஒரு ‘பிராமணர்’ தங்கள் வீட்டுக்குள் நுழைந்து விட்டால், உடனே ‘கெட்ட நிகழ்வு’ என்று கருதி, அந்தத் தீங்குகளை விரட்டும் சடங்குகளை செய்வது இப்போதும் வழக்கத்தில் உள்ளது. பஞ்சாபில் ஏதாவது ஆபத்து, விபத்து நிகழ்ந்துவிட்டால், உடனே ‘பிராமணர்’ எவராவது சம்பந்தப்பட்டிருப்பாரா? கண்பட்டிருக்குமா? தலையிட்டிருப்பாரா?” என்றுதான் தங்கள் சிந்தனையை ஓட விடுவார்கள். ஒரு டிராக்டர் பழுதாகிவிட்டால், ‘பிராமணர்’ எவராவது வயலுக்கு வந்தாரா என்றுதான் முதலில் நினைத்துப் பார்ப்பார்கள். குஜராத்தில் ‘பிராமணர்’களைவிட தாங்களே உயர்வானவர்கள் என்பதுதான் ‘பனியாக்கள்’ மனநிலையாக இருக்கும். பார்ப்பனர்கள் உயர்ந்தவர்களைப்போல் நடிக்கிறார்கள் என்று பனியாக்கள் கூறுவார்கள். ஜாதி அமைப்பு ‘தலித்’ மக்களை இழிவுபடுத்துகிறது என்பது நமக்குத் தெரியும். உண்மையில் இந்து சதுர்வர்ண வர்ணாஸ்ர அமைப்பு பல்வேறு ஜாதிகள் ஒருவரை மற்றவர் இழிவாகவும் தாழ்வாகவும் கருதும் மனநிலையிலேயே வைத்திருக்கிறது. ஒரு மனிதனின் பெருமை, பிறப்பின் அடிப்படையில் நிர்ணயிக்கும் உரிமை புனித நூல்களில் இல்லை. அவன் வாழ்ந்து காட்டும் சிறப்பான திறந்த புத்தகத்தில் தான் இருக்கிறது” என்று முடிகிறது அக்கட்டுரை.
பெரியார் முழக்கம் 22062017 இதழ்