‘இந்து தர்மம்’ உருவாக்கிய ‘தேவதாசி’ முறையில் சிக்கித் தவிக்கும் பெண்கள்
இந்து மதம் உருவாக்கிய ‘தேவதாசி’ முறை தடைச் சட்டங்கள் வந்த பிறகும் ஒழியவில்லை; பசு மாட்டைக் காப்பாற்ற துடிக்கும் கூட்டம், பெண்கள் மீது சுமத்தப்பட்ட இழிவு பற்றி கவலைப்படுவதே இல்லை.
பல நூற்றாண்டுகளாகக் கோயிலுக்குள்ளேயே வாழ்ந்து கோயில் திருப்பணி களை அர்ப்பணிப்போடு செய்து வந்தவர்கள் தேவதாசிகள். ஆனால் ‘இறைவனின் அடிமை’ என்கிற அர்த்தத்தில் சிறுமிகளைக் கோயில்களில் பொட்டுக்கட்டிவிட்டு, அவர்களைப் பாலியல் தொழிலாளியாக்கியது தேவதாசி முறை. அதிலும் கடந்த நூற்றாண்டில் கோயிலை விட்டு வெளியேற்றப்பட்டுச் சமூக அங்கீகாரம் மறுக்கப்பட்டுக் கீழ்த்தரமாக அவர்கள் நடத்தப்பட்டார்கள்.
முத்துலட்சுமி ரெட்டி, பெரியார், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உள்ளிட்டோரின் மிக நீண்ட சமூகப் போராட்டத்துக்குப் பிறகு தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டது. “இந்த நாள்பட்ட கொடிய சமூகக் கொடுமையை ஒழிக்க யாருக்கும் ஆட்சேபணையோ, எதிர் அபிப்பிராயமோ இருக்கவே முடியாது. ஒரு தனிப்பட்ட பெண்ணுக்கு ஏற்படும் இழிவு, பெண்ணுலகிற்கே ஏற்பட்டதாகையால் இவ்வழக்கம் பெண்களின் கவுரவத்தைப் பெரிதும் பாதிக்கக் கூடியதாயிருக்கிறது” என 1930-லேயே குடிஅரசு இதழில் பெரியார் தலையங்கம் எழுதினார். தமிழகத்தில் 1947-லேயே தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் வந்துவிட்டாலும், தேசிய அளவில் 1988இல்தான் இந்த முறை தடைசெய்யப்பட்டது.
சமூகத்தில் சீழ்பிடித்துப்போன ஒரு வழக்கத்தை சட்டரீதியாகத் தடை செய்து விடுவதால் மட்டுமே அது தொடர்பான பிரச்சினைகள் தீர்ந்துவிடுவதில்லை. பெண்களை இழிவுபடுத்தி விளிம்புக்குத் தள்ளிய தேவதாசி முறை சட்டரீதியாகத் தடை செய்யப்பட்டாலும், அதன் பிடியிலிருந்து இன்னமும் விடுபட முடியாமல் தவிக்கும் பெண்கள் பல லட்சம் இருக்கிறார்கள். கர்நாடகத்தைச் சேர்ந்த ‘மஹிளா அபிவிருத்தி மட்டு சம்ரக்ஷண சமிதி’ என்ற அறக்கட்டளை, இந்தப் பெண்களை அடையாளம் கண்டுள்ளது.
கர்நாடகாவில் உள்ள 3,600-க்கும் மேற்பட்ட தேவதாசிப் பெண்களின் மறுவாழ்வுக்காக இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. தேவதாசி முறை இன்னமும் வழக்கொழியாத கிராமங்கள் இருக்கின்றன. 2013இல் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மட்டுமே 4 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் தேவதாசிகளாகச் சபிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அவர்களில் ஒருவர் கர்நாடகா முத்தபல்லி கிராமத்தைச் சேர்ந்த சிவம்மா. அங்குள்ள ஹூலிகெம்மா கோயிலில் பொட்டுக்கட்டி விடப்பட்ட பல அப்பாவிப் பெண்களில் அவரும் ஒருவர். ஹூலிகெம்மா கோயிலில் சிவம்மாவை நேர்ந்துவிட்டு நிர்க்கதியாக்கியபோது, அவருக்கு வயது ஐந்து. அப்பாவிச் சிறுமியாக இருந்த தனக்கு கொடுமை இழைக்கப்பட்ட நாளில் ஊர் கூடித் திருவிழா கொண்டாடி, விருந்தளித்ததை நினைத்து, இப்போது தள்ளாத வயதில் கண் கலங்குகிறார் சிவம்மா.
பெரும்பாலும் தேவதாசியாக்கப்படும் பெண்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரே. இறைவனுக்கே மணமுடித்துத் தரப்படுவதால் அவர்களால் ஒரு போதும் ஆண்களைத் திருமணம் செய்துகொள்ள முடியாது. ஆனால், அவர்களை மகிழ்வித்தாக வேண்டும். பெரும்பாலும் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த ஆண்கள் இவர்களைப் பயன்படுத்திக்கொண்டார்கள் (கொள்கிறார்கள்).
திருமணம் என்கிற ஒப்பந்தம் இல்லாவிட்டாலும் ஏதோ ஒருவித ஒப்பந்தத்துடனே தேவதாசி குடும்பத்துக்குள் ஓர் ஆண் நுழைவார். இந்த ஒப்பந்தத்தின்படி தேவரடியாரான அந்தப் பெண்ணுக்கும், குழந்தை பிறந்தால் அதற்கும், அந்தப் பெண்ணின் பெற்றோருக்கும் அவர் செலவழிக்க வேண்டும். அந்த ஆண் அப்பெண்ணைக் கைவிடும் நிலையில் வேறொருவர் அந்தப் பெண்ணைத் தன் தாசியாக்கிக் கொள்வார்.
பாலியல் தொழிலாளர்களின் சொல்லொணாத் துயரங்களைவிடக் கொடியது அறியாத பருவத்தில் நேர்ந்துவிடப்படும் இப்பெண்களின் நிலை. பாலியல் தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் குறைந்தபட்சப் பொருளாதார சுதந்திரம்கூட இவர்களுக்குக் கிடைப்பதில்லை. ஏற்கெனவே இவர்களுடைய வாழ்வை அபகரிக்கும் ஆண், இவர்களைக் கைவிடும் பட்சத்தில் எதிர்காலம் சூனியமாகிறது. இதனால் பண்பாட்டின் பெயரால் அதுவரை பாலியல் சுரண்டலுக்குத் தங்களை ஒப்புக் கொடுத்தவர்கள், முழுநேரப் பாலியல் தொழிலாளர் ஆகும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். ஏனெனில் தேவதாசியாக அறிவிக்கப்பட்டவர்களைச் சமூகம் அங்கீகரிப்பதுமில்லை, அதிலிருந்து மீண்டுவர அனுமதிப்பதும் இல்லை.
இத்தகைய கொடுமைகளையெல்லாம் கடந்து சிவம்மா கட்டிடத் தொழிலாளர் ஆகிவிட்டார். தன்னுடைய 19 வயது மகளைத் திருமணம் செய்து கொடுத்தும் விட்டார். ஆனால், தற்போது அவரை எயிட்ஸ் உருக்குலைத்து வருகிறது. எந்தத் துணையும் இன்றி நிர்க்கதியாக நிற்கிறார் சிவம்மா.
அவரைப் போன்றே தத்தளிக்கும் தேவதாசிப் பெண்களுக்காகச் சில அமைப்புகள் வேலைவாய்ப்பும், அவர்களுடைய குழந்தைகளுக்குக் கல்வியும் அளித்து மாற்று வழிகளைக் காட்ட ஆரம்பித்துள்ளன. இந்த விவகாரத்தில் அரசின் நேரடித் தலையீடு இல்லாததால், தேவதாசி முறை என்னும் படுகுழியில் தள்ளப்பட்ட அனைத்துப் பெண்களும் யாருக்கும் அடிமை இல்லை என்கிற நிலையும், கண்ணியமாக வாழ்வதற்கான உரிமையும் கிடைக்கும் நாள் எது என்பது தெரியவில்லை. மா.சு. சித்ரா
பெரியார் முழக்கம் 15062017 இதழ்