சங்பரிவாரங்களுக்கு அமெரிக்காவின் ஆணையம் கண்டனம்
இந்தியாவில் இந்தத்துவா சக்திகளால் மத சுதந்திரத் துக்கான அச்சுறுத்தல்கள் மேலும் மேலும் மோசமடைந்து வருவதாக அமெரிக்காவின் மத சுதந்திரத்துக்கான ஆணையத்தின் ஆண்டறிக்கை கூறியுள்ளது. ஏப்.26ம் தேதி, 2016ஆம் ஆண்டுக்கான அறிக்கையை அமெரிக்காவில் இந்த ஆணையம் வெளியிட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து தேசியவாதக் குழுக்களும் அவர்களின் ஆதரவாளர்களும், மதச் சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்களுக்கு எதிரான வன்முறை, துன்புறுத்தலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக அந்த அறிக்கை கூறுகிறது. 10 மாவட்டங்களில் இது மிகவும் மோசமாக நடந்து வருகிறது. நாட்டின் தேசிய மற்றும் மாநிலங்களின் சட்டங்களும் இந்த வன்முறைக்கு சாதகமான சூழல்களை உருவாக்கி வருகின்றன என்று குற்றம்சாட்டும், அந்த அறிக்கை பசுவதைத் தடைச் சட்டம், மற்றும் மத மாற்றத் தடைச் சட்டம் ஆகியவற்றை சுட்டிக்காட்டியுள்ளது.
பிரதமர் மோடி, சகிப்புத் தன்மை, மதச் சுதந்திரம் பற்றி பேசினாலும், ஆளும் கட்சியின் உறுப்பினர்களும் அவர்களோடு நெருக்கமாக இருக்கும் மத தேசியம் பேசும் அமைப்பினரும் மதச் சுதந்திரத்துக்கு எதிராக வன்முறை, கலவரங்களைத் தூண்டி விடுகிறார்கள் என்று அறிக்கை குற்றம்சாட்டுகிறது. காவல்துறையும், நீதித் துறையும் ஒரு சார்பாக செயல்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கை குற்றம் சாட்டுகிறது.
பெரியார் முழக்கம் 04052017 இதழ்