பல்லாயிரக்கணக்கான மக்களிடம் துண்டறிக்கை; நிதி திரட்டல்; சென்னையை கலக்குகிறார்கள் கழக செயல் வீரர்கள்
ஜூன் 4ஆம் தேதி சென்னையில் தமிழர் பண்பாட்டுப் பாதுகாப்பு மாநாடும், ஜூன் 5ஆம் தேதி மத்திய அரசு அலுவலகங்களில் இந்திப் பெயர் அழிப்புப் போராட்டமும் நடைபெற இருக்கிறது. சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் நிகழ்ச்சியின் வெற்றிக்கு தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
கடந்த 10 நாள்களாக கழகத் தோழர்கள் 15 பேர் முதல் 20 பேர் கொண்ட குழு, கழகக் கொடி, கருப்புச் சட்டையுடன் நகரின் பல்வேறு பகுதிகளில் வணிகர்கள் பொது மக்களை சந்தித்து துண்டறிக்கைகளை வழங்கி, நன்கொடைகளை திரட்டி வரு கிறார்கள். திருவல்லிக்கேணி, மைலாப்பூர், சைதாப்பேட்டை, கோயம்பேடு, எம்.ஜி.ஆர். நகர், புரசைவாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, இராயப்பேட்டை பகுதிகளில் மாலையில் தொடங்கி, இரவு வரை ஒவ்வொரு கடையாக இந்த வசூல் பணி நடந்தது.
தோழர்களிடம் பொது மக்கள் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறார்கள். தோழர்கள் இந்த கேள்விகளுக்கு உரிய விளக்கங்களை பொறுமையாக அளித்து வருகிறார்கள். சனி, ஞாயிறு நாள்களில் காலையிலும் வசூல் பணிகள் நடந்தன. பார்ப்பனக் கோட்டையான மயிலாப்பூரில் கபாலீசுவரர் கோயிலைச் சுற்றி நடை பாதைக் கடைகள், வணிக நிறுவனங்கள் நடத்தி வரும் மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. நெற்றியில் மதச் சின்னம் அணிந்தவர்கள்கூட – பெரியார் மட்டும் இல்லாதிருந்தால் இந்த மயிலாப்பூர் பகுதிகளில் நாங்கள் கடைபோட்டு வியாபாரம் நடத்தியிருக்க முடியாது” என்று உணர்ச்சியுடன் பலரும் கூறி நன் கொடை வழங்கினர். பெண் தோழர்களும் வசூல் பணியில் பங்கெடுத்து வருவது பலரையும் வியப்பில் ஆழ்த்துகிறது. அவர்கள் மக்கள் கேட்கும் கேள்விக்கு பொறுமையாக விளக்கங்களை வழங்கு கிறார்கள்.
துண்டறிக்கையை படித்து விட்டு, பிறகு அதில் குறிப்பிடப்பட்டுள்ள அலைபேசி எண் வழியாக தொடர்பு கொண்டு ஒவ்வொரு நாளும் கழகப் பொறுப் பாளர்களிடம் பேசுகிறார்கள். பா.ஜ.க. தரப்பிலிருந்து எதிர் வாதங்களை முன் வைக்கிறார்கள். இளைஞர்கள் கூட்டமாக ஒவ்வொரு பகுதிக்கும் சென்று துண்டறிக்கை வசூல் பணிகளில் ஈடுபடுவதை சகிக்க முடியாத பார்ப்பனர்கள், மதவாத சக்திகள், காவல் துறையிடம் புகார் தருவதும், காவல்துறையினர் கெடுபிடி காட்டினாலும் அவர்களுக்கு உரிய விளக்கங்களை தந்து கெடுபிடிகளை முறியடித்து தோழர்கள் இந்தப் பணியை தொடர்ந்து செய்து வரு கிறார்கள். பொது மக்களுடன் நேரடியாக நிகழ்த்தி வரும் இந்த சந்திப்பு, தோழர் களை மிகவும் உற்சாகப்படுத்தி வருகிறது. இதுவரை 15,000 துண்டறிக்கைகள் பொது மக்களிடம் சேர்க்கப்பட்டுள்ளன.
– நமது செய்தியாளர்
பெரியார் முழக்கம் 01062017 இதழ்