சாதியும் காதலும் – கவிஞர் இரவிபாரதி

உன் சாதி பிறக்கும் முன்

என் காதல் பிறந்தது

உன் சாதியைவிட

என் காதலே சிறந்தது

உன் சாதியை காக்கவே

எங்கள் காதலை அழிக்கிறாய்

நீ பிறந்த சாதிக்காய்

பெற்ற மகளை கொல்கிறாய்

கூலி கேட்டு போராடிய போது

வரவில்லையே சாதி

வெண்மணியில் கருகியபோது

எட்டி பார்க்காத சாதி

திருமணம் என்ற உடன்

வந்து விடுகிறதே சாதி

சாதிய திருமணம் உன்

சொத்தை கொள்ளையடிக்கும்

சாதி மறுப்பு திருமணம்

சமத்துவம் வளர்க்கும்

பற்றிப் படரும் சாதிநோய்க்கு

பெரியாரியலே அருமருந்து

சாதி நோய்ப்பிடித்த தமிழனே அதை

மனம் கோணாமல் நீ அருந்து.

(சென்னை காதலர் நாள் விழாவில் வழங்கியது)

You may also like...