பெரியார் ஒருவரே நவீனத்தின் அடையாளம்
மார்க்சிய சிந்தனையாளரும் இந்திய தத்துவ மரபுகள் குறித்து ஆய்வு நூல்களை எழுதியவருமான பேராசிரியர் ந.முத்து மோகன், ‘உங்கள் நூலகம்’ மாத இதழுக்கு (ஏப். 2017) அளித்துள்ள பேட்டி இது. (கடந்த இதழ்களின் தொடர்ச்சி)
தேசியம் எதிர் காலனியம் – ஏகாதிபத்தியம் என்ற முரண்நிலை சட்டகங்களுக்குள், பெரியார், அம்பேத்கர் போன்ற சாதி எதிர்ப்புத் தலைவர்கள் காலனியத்திற்கு ஆதரவாளர் என்றும் விமர்சனம் செய்துவருகின்றோம். இந்த முரண்நிலை சட்டகம் இன்னும் நம்மிடையே வலுவாக இருக்கின்றது. இந்த விமர்சனத்தை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
இந்தியாவில் காலனியம் குறித்த விவாதங்கள் இன்னும் முழுமை அடையவில்லை. இன்னும் இந்த விவாதங்களில் குறைபாடுகள், இடைவெளிகள் இருக்கின்றன. வரலாற்றுரீதியாக அதிகமாக இந்தியச் சமூகம் தேங்கி நின்றதைக் காலனியம் உடைத்து, முன்னுக்குத் தள்ளியது என்பார் மார்க்ஸ். கம்யூனிஸ்ட் அறிக்கையில் மார்க்ஸ் ஒன்றரை பக்கத்திற்கு முதலாளி யத்தின் புரட்சிகரமான பணிகள் என்று சில விசயங் களைக் குறிப்பிடுவார். நிலவுடைமைமுறை உறவுகளை உடைத்தெறிந்து, இதுவரை கல் போல உறைந்து கிடந்த மதிப்பீடுகள், உறவுகள் எல்லாம் காற்றாகிக் கரைந்து விடுகின்றன. அன்பு, பாசம், குடும்பம், காதல். நட்பு என்பது போன்று வைத்திருக்கின்ற விசயங்களை யெல்லாம் முதலாளித் துவம் உடைத்தெறிந்து விடுகின்றது என்பார் மார்க்ஸ்.
இந்த மதிப்பீடு தவறு என்று சொல்ல முடியாது. முதலாளித்துவத்தின் புரட்சிகரமான பணிகள் என்றொரு பகுதி மார்க்சியத்தில் உண்டு. முதலாளித்துவம் அதனுடைய பணிகளைச் செய்துமுடிக்கும், அதற்குப் பிறகு முதலாளித்துவம் உருவாக்கும் தொழிலாளி வர்க்கம் அப்பணிகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்ற பார்வையை மார்க்சே உருவாக்கி யுள்ளார். 1853-க்குப் பிறகு முதலாளித்துவ அரசுகளே புரட்சித் தன்மைகளை இழந்துவிட்டன என்ற முடிவுக்கு வரும்போதுதான், மார்க்ஸ், கம்யூனிஸ்ட் அறிக்கையின் நிலைப்பாடுகளைக் கடந்து செல்வார். இதற்குப் பிறகுதான் விவசாயிகளுடன் கூட்டணி என்ற போர் தந்திரத்தை மார்க்சும் எங்கெல்சும் உருவாக்குவார்கள். இது மார்க்சியத்திற்கு உள்ளே அமைந்துள்ள சில வளர்ச்சி கட்டங்கள்.
அனுபவரீதியாக முதலாளியத்திற்கு முற்போக்கு பாத்திரம் ஏதுமில்லை, அவர்கள் நிலப்பிரபுத்துவத் துடன் கூட கூட்டுச் சேர்ந்து கொள்கிறார்கள் என்பது தெரிந்தவுடன்தான் மார்க்சும் எங்கெல்சும் விவசாயி களுடன் கூட்டணி என்ற முடிவுக்குச் செல்கிறார்கள். இதற்கு முந்தி விவசாயி வர்க்கம் உடைமை வர்க்கம், குட்டி முதலாளிய வர்க்கம் என்பது போன்ற விமர் சனங்களெல்லாம் உண்டு. பிறகு இந்த நிலைப்பாடுகள் சற்று மாறின. பிற்காலத்தில் ரஷ்ய விவசாயி, சீன விவசாயி, இந்திய விவசாயி ஆகியோரைப் பற்றியெல் லாம் மார்க்ஸ் கொஞ்சம் வித்தியாசமாகப் பேசுவார்.
காலனியம் (ஒரு நாட்டை தனது பிடிக்குள் வைத்திருக்கும் அன்னிய ஆட்சிதான் காலனியம்) பற்றிப் பேசும்போது இதையெல்லாம் எதற்காகச் சொல்கிறேன் என்றால், காலனியம் ஒரே நேரத்தில் காலனியமாகவும் முதலாளியமாகவும் இருக்கின்றது. காலனியம் என்பது மிக மோசமான முதலாளியம் என்ற கருத்தும் உண்டு. காலனியம் ஒரு வரலாற்றுக் காரணி என்ற கருத்தும் உண்டு. காலனியத்தின் பாத்திரம் என்ன என்பது மார்க்சியத்தில் சிக்கலான இடம். அந்தச் சிக்கல் மார்க்சின் எழுத்துகளில் உள்ளது. இன்னும் மார்க்சியத்தில் அந்தச் சிக்கல் நீடித்து வருகின்றது. அந்தச் சிக்கல் அம்பேத்கர் எழுத்துகளிலும் பெரியாரின் எழுத்துகளிலும்கூட இருக்கின்றது.
இந்தியாவில் மிகவும் உறைந்து போன பழமைக் கூறுகளை அடித்து நொறுக்கும் வேலையை, ஐரோப் பாவில் முதலாளித்துவம் செய்ததைப் போல, இங்குக் காலனியம் செய்யும் என்ற எதிர்பார்ப்பு பெரியார், அம்பேத்கர் ஆகியோரிடம் இருந்துள்ளது. இன்றும் கூட தலித், பெரியார் இயக்க அமைப்புகளில் இன்றைய இந்திய ஆட்சியில் இருப்பதைவிட, பிரிட்டிஷ் ஆட்சியில் சில அனுகூலமான நிலைமைகள் நிலவின என்ற எண்ணம் இருக்கின்றது. அதனால் காலனியம் குறித்த விவாதங்கள் இன்னும் நடைபெற வேண்டியுள்ளது.
காலனியம் குறித்த கேள்வியை மீண்டும் ஒருமுறை எழுப்பி, காலனியத்தின் பண்புநிலைகள் குறித்து முழுக்க எதிர் நிலையான மதிப்பீடுகளை முன்வைத்து மறுதலிக்கும் பின்னைக் காலனிய விவாதங்கள் இப்போது நடந்து வருகின்றன. வங்காளத்தில் பார்த்த சடர்ஜியும் கியோனேந்திர பான்டேயும் அவரது கூட்டாளிகளும், அடித்தள மக்கள் நோக்குநிலை – சபால்டர்ன்னில் தொடங்கி, பின்னைக் காலனிய நோக்கிலான ஆய்வுகளை முன்னெடுக்கின்றனர். அடித்தள மக்கள் நோக்குநிலையும் பின்னைக் காலனியப் பார்வைகளும் இணையும்போது காலனிய தேசியம் பற்றிய புதிய உரையாடல்கள் முன்னுக்கு வருகின்றன. அந்த உரையாடல்களில்தான் தேசியம் எந்த அளவுக்குக் காலனிய முதலாளியத்தின் கூறுகளை உள்வாங்கிக் கொண்டுள்ளது என்ற விமர்சனம் முன்வைக்கப் பட்டுள்ளது. பெரியாரின் தேசியம் குறித்த நிலைப்பாடுகளுடன் அவற்றை ஒப்பிட முடியும்.
ஆகவே முதலாளியம், காலனியம், தேசியம் பற்றிய மார்க்சிய நிலைப்பாடுகள், அம்பேத்கர் நிலைப் பாடுகள், பெரியார் நிலைப்பாடுகள் ஆகியவற்றை உடன்வைத்து நோக்கி, ஆழமாகச் சிந்தித்து, மதிப்பிட வேண்டும். எடுத்த எடுப்பிலேயே, அம்பேத் கரும் பெரியாரும் காலனிய ஆதர வாளர்கள், ஏகாதிபத்திய ஆதரவாளர்கள் என்று வரையறுப்பது சரியாக இருக்காது. இந்த உரையாடலை எம்.எஸ்.எஸ். பாண்டியனின் Brahmin and Non-Brahmin, Nations Without Nationalism போன்ற ஒரு சில நூல்கள் முன்னெடுத் துள்ளன. இதைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும்போதுதான் தெளிவுகள் கிடைக்கும்.
காலனிய இந்தியாவில், பெரியாரின் நவீனம் எனபது ஒரு மாற்று நவீனம் என்ற நோக்கில் விவாதத் திற்கு உட்படுத்த வேண்டும். அதில் சாதி-வருண எதிர்ப்பு, சனாதன எதிர்ப்பு, இந்துத்துவ எதிர்ப்பு ஆகிய இந்தியக் கூறுகளும், ஐரோப்பியக் கூறுகளும் கலந்து இருக்கலாம். பெரியாரின் நவீனத்திற்கு ஒரு விடுதலை அரசியல் உண்டு. அந்த விடுதலை அரசியல் ஒரு incomplete project, அதாவது நிறைவு பெறாத செயல்திட்டம். இந்த இடத்தில் ஹெபர்மாஸ் பயன்படுத்திய incomplete project என்ற சொல்லைப் பயன்படுத்திச் சொல்ல விரும்புகிறேன். அந்த விடுதலை அரசியலை முழுவதும் சாத்தியப்படுத்த வேண்டும். அதை முழுவதும் சாத்தியப்படுத்த திராவிட இயக்க தேர்தல் அரசியல் கட்சிகளால் முடியாது; அவை இடமளிக்காது. உண்மையில் அந்த அரசியல் கட்சிகளைவிட பெரியார் ரொம்ப பெரியவர், வலுவானவர்.
நவீனம் என்பதை இந்தியச் சூழல்களில் பெரியார் அமரச் செய்திருக்கின்றார்; தொழிற்படச் செய்திருக் கின்றார். ஐரோப்பிய நவீனத்தை அப்படியே மொன்னையாக இங்கே எடுத்து ஒட்டக் கூடாது. அப்படி ஒட்டுவது அல்ல பெரியாரின் நவீனம். ஐரோப்பாவில் நடந்தது போன்ற பெருந்தொழில் மயமாக்கல், தேசிய அளவிலான பெருநிறுவனங்கள் உருவாக்கல் ஆகியவை அல்ல நவீனம். சாதி-வருண எதிர்ப்பு, சனாதன இந்துத்துவ எதிர்ப்பு, நம் சுயத்தி லிருந்து நவீன வாழ்க்கைமுறை வளர்த்தல் ஆகியவை தாம் பெரியார் நவீனம். இப்போது இந்தியாவில் நடந்துகொண்டிருக்கும் நவீனமாக்கல் என்பது, இந்தியாவை ஐரோப்பாவிற்குத் திறந்துவிடுவது அவ்வளவுதான், வேறொன்றுமில்லை.
நவீனத்தை நம் பண்பாட்டில் வேர்கொள்ளச் செய்ய நமக்குப் பெரியார் தேவைப்படுகின்றார். பெரியாருக்கு முன்பு நவீனத்தைத் தமிழ்ப் பண்பாட்டில் வேர்கொள்ளச் செய்யும் பணியை அயோத்திதாசர் தொடங்கி வைத்தார். நவீனத்தைப் பண்பாட்டில் வேர் கொள்ளச் செய்ய நம்முடைய ஜீவா, நாவா (நா.வானமாமலை) போன்றோரெல்லாம் உழைத்துள்ளனர். ஆனால் அதனை பெரியார் இல்லாமல் செய்ய முடியாது. பெரியார்தான் திராவிட-தமிழ் அடையாளத்தை முழுக்கவும் வலிமையாகவும் ஒரு எதிர்ப்பு அடையாளமாக உருவாக்கியுள்ளார். பெரியார் இல்லாமல் இந்த எதிர்ப்பு அடையாளத்தை வேறு எவராலும் உருவாக்கியிருக்க முடியாது. எனவே தான் பெரியாரே நமது நவீன அடையாளமாகிறார். (நிறைவு)
பெரியார் முழக்கம் 22062017 இதழ்