புரட்சிகர கலை நிகழ்ச்சிகள்; எழுச்சி உரைகள் உணர்ச்சிகரமான சென்னை மாநாடு

“இந்தித் திணிப்பை எதிர்ப்போம்; இழந்து வரும் உரிமைகளை மீட்போம்” எனும் முழக்கத்தை முன் வைத்து திருவான்மியூர் தெப்பக்குள மைதானத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய மாநாடு 4.6.2017அன்று மாலை 5 மணியளவில் எழுச்சியுடன் தொடங்கியது. சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் – இந்த மாநாட்டை கழக தலைமைக் குழுவின் தீர்மானத்தை ஏற்று நடத்தியது. திருவான்மியூர் பகுதி முழுதும் கழகக் கொடிகள் ஏராளமாகக் கட்டப்பட்டிருந்தன. பெரியார்-அம்பேத்கர் படங்களோடு அமைக்கப்பட்டிருந்த மேடை பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. நகரம் முழுதும் சுவரெழுத்துகள் எழுதப்பட்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. மாவட்ட செயலாளர் உமாபதி வழிகாட்டுதலில் 20க்கும் மேற்பட்ட கழக இளைஞர்கள் 15 நாள் இரவு பகல் பாராது கடுமையாக உழைத்தனர். மாநாட்டு திடலில் நிரம்பி வழிந்த கூட்டத்துக்கு கழகத் தோழர்கள் நடத்திய துண்டறிக்கை பரப்புரைகளும் விளம்பரங்களுமே பெரிதும் காரணம்.

காஞ்சி மக்கள் மன்றத் தோழர்கள் புரட்சிகர பறை இசை, பாடல், நடனம், நாடகம் மாநாட்டுக்கு உணர்வூட்டின. கலை நிகழ்ச்சிகளின் இடை யிடையே தோழர்கள் உரையாற்றினார்கள். தொடக்கத்தில் மாவட்ட செயலாளர் உமாபதி வரவேற்புரையாற்றினார். மாநாட்டுப் பணிகளுக்கு காவல்துறை தந்த இடையூறுகளையும் மக்கள் தந்த பேராதரவினையும் விளக்கினார். ஆசிரியர் சிவகாமி, வழக்கறிஞர்  திருமூர்த்தி, வெளியீட்டு செயலாளர் இராம. இளங்கோவன், தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகரன், வழக்கறிஞர் துரை. அருண், காஞ்சி மக்கள் மன்றத் தோழர் மகேசு, பேராசிரியர் சரசுவதி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் உரையாற்றினர். நீதிபதி அரி பரந்தாமன் சிறப்புரையாற்றினார். மாநாட்டுக்கு உழைத்த கழக செயல் வீரர்களுக்கு கழகத் தலைவர், பொதுச் செயலாளர் கருப்பு ஆடை அணிவித்து, பாராட்டுகளைத் தெரிவித்தனர். இறுதி வரை கூட்டம் கலையவில்லை. கலை நிகழ்ச்சிகளையும் உரைகளையும் கேட்டனர். மாநாட்டு அரங்கிற்கு 1938 இந்தி எதிர்ப்புப் போரில் சிறையில் உயிர் நீத்த  நடராசன்-தாளமுத்து பெயர் சூட்டப்பட்டு அவர்கள் படமும் வரையப்பட்டிருந்தது. ஏராளமான பொது மக்கள் மாநாட்டில் பங்கேற்றது குறிப்பிடத்தக்க சிறப்பாகும். கழகத் தோழர் மா. தேன்ராஜ் நன்றி கூற, இரவு 10.15 மணியளவில் மாநாடு நிறைவடைந்தது.

– நமது செய்தியாளர்

பெரியார் முழக்கம் 08062017 இதழ்

You may also like...