வினாக்கள்… விடைகள்…

பிரதமர் ஆகும் கனவு எனக்கில்லை என்று கூறிய மோடி –  பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட் டுள்ளார்.            – செய்தி

பிரதமர் வேட்பாளராகும் கனவாவது நிறைவேறட்டுமே என்ற நல்ல நோக்கம் தான்.

வினாயகன் சிலைகளை ஊர்வலமாக எந்தப் பகுதி முதலில் எடுத்துச் செல்வது என்பதில் தாம்பரம், பல்லாவரம் பகுதி ஊர்வலக் குழுக்களுக்கு இடையே மோதல்; இரண்டு பேருக்கு கத்திக் குத்து. – செய்தி

ஓகோ, ஜாதி-மோதல், மத-மோதல் களைக் கடந்து இந்துவும்-இந்துவும் மோதலா? ஓம் வினாயக நம!

 குருவாயூர் கிருஷ்ணன் கோயிலிலுள்ள தங்க நகை இருப்புக் குறித்து அரசுக்கு தகவல்  தெரிவிக்க வேண்டிய அவசிய மில்லை.                      – தேவஸ்வம் போர்டு அறிவிப்பு

அப்படியா? நகை திருட்டுப் போனால் போலீசில் தகவல் கொடுக்காமல் நேரடியாக போலீஸ் மோப்ப நாய்க்கு அழைப்பு விடுவீர்களோ?

 குஜராத்தில் – வினாயகர் சிலைகளை கரைப்பதற்காக லாரிகளில் ஏற்றிச் சென்றபோது நடந்த விபத்தில் 5 பக்தர்கள் பலியானார்கள்; 17 பேர் படுகாயமடைந்தனர்.     – செய்தி

லாரியில் வந்த ‘வினாயகன்’ என்ன ஆனார்? ‘கடவுள் அருளால்’ உயிர் பிழைத்து விட்டாரா?

சென்னை அய்.அய்.டி. நிறுவனத்தின் முறைகேடு குறித்து சி.பி.அய். விசாரணைக்கு உத்தரவிட்ட உயர்நீதி மன்றத் தீர்ப்புக்கு அய்.அய்.டி. நிர்வாகம் இடைக்காலத் தடை பெற்றது.                    – செய்தி

இந்த வழக்கிற்கான செலவுகளையும் அய்.அய்.டி.தான் செய்யப் போகிறதா? அல்லது பார்ப்பன நிறுவனங்களிடம், வழக்கு நிதி திரட்டப் போகிறதா?

அய்.ஏ.எஸ். – அய்.பி.எஸ். அதிகாரிகள் வெளிநாடுகளுக்குச் சென்று மருத்துவ சிகிச்சை செய்தால் அந்த செலவை அரசு ஏற்கும்.                   – மத்திய அரசு அறிவிப்பு

ஏன் மருத்துவச் செலவை மட்டும் ஏற்க வேண்டும்? வெளிநாடு சென்று நிர்வாகம் செய்தாலும் அதற்கு ஊதியச் செலவையும் ஏற்கும் என்று தேச பக்தியோடு அறிவிக்கலாமே!

ராஜஸ்தான் மாநில நகர வளர்ச்சி மேம்பாட்டுத் துறை 47 ஜாதிப் பிரிவு களுக்கு தனித்தனியாக சுடுகாடுகளை கட்டுவதற்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.                          – செய்தி

அடுத்து ஜாதி வாரியாக கழிப் பறைகளையும் கட்டி விடுங்கள்! பா.ஜ.க. தேர்தல் அறிக்கையிலும் இந்த திட்டங்களை முன் வைக்கலாம்.

 வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கேதார்நாத் கோயில் 86 நாட்களுக்குப் பிறகு மீண்டும் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது.                  – செய்தி

இந்த 86 நாட்களும் கோயிலுக்குள் இருந்த ‘பகவான்’ எங்கே இருந்தார்? எப்படி மீண்டும் கோயிலுக்கு வந்தார்? என்பதை பக்தர்களுக்கு விளக்கினால் நல்லது!

பெரியார் முழக்கம் 19092013 இதழ்

You may also like...