குரல் உள்ளவரை பேசுவேன்!

நான் (எனக்கு ஞாபகமிருக்கிற வரையில்) என்னுடைய 10 ஆவது வயதிலிருந்தே நாத்திகன். சாதி, சமயச் சடங்கு முதலியவற்றில் நம்பிக்கை யில்லாதவன். ஒழுக்க சம்பந்தமான காரியங்களில்கூட மற்றவர்களுக்குத் துன்பமோ, தொல்லையோ தரப்படாது என்பதைத்தவிர, மற்றபடி வேறு காரியங்களில் ஒழுக்கத்துக்கு மதிப்புக் கொடுத்த வனும் அல்ல. பணம், காசு, பண்டம் முதலியவை களில் எனக்குப் பேராசை இருக்கிறது என்றாலும், அவைகளைச் சம்பாதிப்பதில் சாமர்த்தியத்தை யாவது காட்டியிருப்பேனே யொழிய, நாணயக் குறைவையோ, நம்பிக்கைத் துரோகத்தையோ காட்டியிருக்க மாட்டேன். யாரையும் ஏமாற்றலாம் என்பதில் நான் சிறிதுகூட முற்பட்டிருக்க மாட்டேன்.

வியாபாரத் துறையில் பொய் பேசியிருந்தாலும், பொது வாழ்வுத் துறையில் பொய்யையோ, மனமறிந்து மாற்றுக் கருத்தையோ வெளியிட்டிருக்க மாட்டேன். இப்படிப்பட்ட நான், எதற்காக ஒரு சமுதாயத்தாரிடம் விரோதமோ, குரோதமோ கொள்ள வேண்டும்? நான் நமது நாட்டையும் சமுதாயத்தையும் ஆங்கில நாட்டுத் தன்மைக்கும், நாகரிகத்திற்கும் கொண்டுவர வேண்டும் என்கின்ற ஆசையுடையவன். இதற்கு முட்டுக்கட்டையாகப் பார்ப்பனச் சமுதாயம் இருக்கிறது என்று சரியாகவோ தப்பாகவோ கருதுகிறேன்.

அப்படி இல்லை என்பதைப் பார்ப்பனர்கள் காட்டிக் கொள்ள வேண்டாமா? உண்மையிலேயே எனக்கு மாத்திரம் பார்ப்பனர்களுடைய ஆதரவு இருந்திருக்குமானால், நம் நாட்டை எவ்வளவோ முன்னுக்குக் கொண்டுவர என்னால் முடிந்திருக்கும்.       (விடுதலை – 1.1.1962)

நான் துறவி

நான் துறவி. துறவிக்கு வேந்தன் துரும்பு என்பார்கள். எனக்கு வேந்தன் மாத்திரம் துரும்பல்ல; கடவுளும் துரும்பு. வேத சாத்திரங்கள் துரும்பு. சாதி துரும்பு. அரசியலும் துரும்பு. துரும்பு மாத்திரமல்ல; அவைகளை, எல்லா யோக்கியக் குறைவையும் காய்ச்சிச் சுண்ட வைத்துப் பிழிந்தெடுத்த சத்து என்று சொல்லுவேன்.                   (விடுதலை – 15.06.1967)

குரல் உள்ளவரை பேசுவேன்!

நாதசுரக் குழாயாக இருந்தால் ஊதியாக வேண்டும்; தவுலாயிருந்தால் அடிபட்டுத் தானாக வேண்டும் என்பதுபோல் – எனக்குத் தொண்டை, குரல் உள்ளவரையில் பேசியாக வேண்டும்; பிரசங்கம் செய்தாக வேண்டும்.

(விடுதலை – 18.05.1948)

பெரியார் முழக்கம் இதழ் 19122013

You may also like...