‘ஜெ.’ மாட்டிறைச்சி சாப்பிட்டார் என்பது பெருங்குற்றமா!

‘நக்கீரன்’ மீதான தாக்குதலை கண்டிக்கிறோம்

முதலமைச்சர் ஜெயலலிதா, மாட்டுக்கறி சாப்பிட்டார் என்று ‘நக்கீரன்’ இதழில் வெளியான செய்திக்காக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ‘நக்கீரனுக்கு’ எதிராக ஆளும் கட்சியைச் சார்ந்தவர்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு வன்முறையில் இறங்கியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. இந்தத் தாக்குதல் ‘நக்கீரனுக்கு’ எதிரானதாக மட்டும் நாம் கருதவில்லை. ‘மாட்டுக்கறி’ சாப்பிடும் கோடானுகோடி  மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் என்றே நாம் கருத வேண்டியிருக்கிறது.

புரதச் சத்தும், ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய உணவு மாட்டிறைச்சி. கோழி, ஆடு இறைச்சியைப் போல், மாட்டிறைச்சி மற்றொரு உணவு. உண்மையிலே ஜெயலலிதா மாட்டிறைச்சி உண்டிருப்பாரானால், அதனால் அவருக்கு பெருமையே தவிர, ‘இழிவு’ அல்ல.

‘பசு மாடு’ மட்டும் புனிதமானது என்று போராடுகிறவர்கள் பார்ப்பனர்கள் தான்! பா.ஜ.க. பார்ப்பன பரிவாரங்கள், இதை கொள்கையாக வைத்துப் போராடி வருகின்றன. சென்னையில் பார்ப்பன பத்திரிகை விழா ஒன்றில் பங்கேற்க, ‘இந்துத்துவ’ பயங்கரவாதி, குஜராத் முதல்வர் மோடி வர இருக்கும் நிலையில், இப்படி ஒரு வன்முறைக்கு ஆளும் கட்சியினர் தூண்டிவிடப்பட்டுள்ளது, பல சந்தேகங்களை எழுப்புகிறது.

“எங்கள் தலைவர் பா.ஜ.க.வின் இந்துத்துவத்தை ஏற்பதில் எவருக்கும் சளைத்தவரல்ல” என்று பா.ஜ.க. அரசியல் வட்டாரத்துக்கு உணர்த்துவதற்காக இப்படி ஒரு நாடகம் அரங்கேற்றப்படுகிறதா என்ற சந்தேகமும் எழவே செய்கிறது.

அந்த கேடு கெட்ட அரசியல் எப்படியோ, போய்த் தொலையட்டும். ஆனால், ஒருவரை மாட்டிறைச்சி சாப்பிடுபவர் என்று கூறுவதே, ‘சகிக்க முடியாத அவமானம்’ என்று வன்முறையைக் கையில் எடுப்பது, வன்மையான கண்டனத்துக்குரியது. கோடானுகோடி மாட்டிறைச்சி உண்ணும் ஏழை எளிய மக்கள் மீதான அவமதிப்பு.

  • புத்த மார்க்கம் செல்வாக்குப் பெறும் காலம் வரை பார்ப்பன ஆரியர்கள் மாட்டிறைச்சி சாப்பிட்டவர்கள் தான். ‘இந்திரனுக்கு’ பார்ப்பன ஆரியக் கூட்டம், மாட்டிறைச்சி படைத்து சாப்பிட்டதை, ‘ரிக்வேதம்’ பல இடங்களில் கூறுகிறது.
  • பார்ப்பனர் நடத்திய பல்வேறு யாகங்களான ‘அஸ்வமேதம்’, ‘ராகசூயம்’, ‘பாஜ பேயம்’, ‘சதுர்மாஷ்யா’, ‘கவுத்ராமணி’ போன்றவற்றில் பசுவை பலியிட்டு வயிறுமுட்ட பார்ப்பனர்கள் விழுங்கியதை ‘ரிக்வேதம்’ கூறுகிறது.
  • ‘ராமன்’ விரும்பி சாப்பிட்டது ‘மாட்டுக்கறி தான்’ என்று வால்மீகி ராமாயணம் கூறுகிறது.
  • வேதகாலப் பார்ப்பனர்கள் ‘சோமபானம்’, ‘சுராபாணம்’ குடித்து மாட் டிறைச்சி உண்பவர்கள் என்பதற்கு அடுக்கான ஆதாரங்களைக் காட்ட முடியும்.
  • மாட்டிறைச்சி இன்று சர்வதேச உணவு. ஆனால், பார்ப்பன இந்துத்துவ சக்திகள் ‘பசு’வின் பாதுகாவலர்களாக நாடகமாடி இஸ்லாமிய, கிறிஸ்துவ மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உணவு முறையை அவமதித்து வருகிறார்கள். இந்த அவமதிப்புகளுக்கு தமிழகத்தின் ஆளும் கட்சி அங்கீகாரம் வழங்குகிறதா? மாட்டிறைச்சி சாப்பிடுவோரின் வாக்குகள் தங்களுக்குத் தேவை இல்லை என்று கூறுவார்களா?
  • அண்மையில் ம.பி. மாநில ஆட்சி பசு மாட்டை வெட்டினால் 7 ஆண்டு சிறை என்ற கொடூரமான சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. புகார் ஏதும் இல்லாமலே அரசே, நேரடியாக வழக்கு தொடருவதற்கு வழி வகுக்கும் இந்த பார்ப்பனிய சட்டத்துக்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் வழங்கியிருப்பது கடும் கண்டனத்துக்குரியதாகும். மத்தியில் நடக்கும் காங்கிரஸ் ஆட்சி, இத்தகைய சட்டங்களைக் கடுமையாக எதிர்த்திருக்க வேண்டும். ஆனால், அதுவும் “இந்துத்துவத்தின்” நேச சக்தியாகவே பார்ப்பன கோர முகத்தைக் காட்டி நிற்கிறது.
  • ஜெயலலிதா மாட்டுக்கறி சாப்பிட்டார் என்று எழுதியதற்காகவே ‘நக்கீரன்’ அலுவலகத்தை தாக்குவதும், மின்சாரத்தைத் துண்டிப்பதும் நாகரிகமற்ற செயல். கடந்த காலத்தில் தி.மு.க. ஆட்சியில் மதுரையில் ‘தினகரன்’ அலுவலகத்தில் அங்கேயுள்ள சில ‘வீரர்களால்’ வன்முறை அரங்கேற்றப்பட்டு, 3 ஊழியர்கள் பலியானார்கள். அதே வன்முறை வெறியாட்டங்கள் இன்றைய ஆளும் கட்சியிலும் தொடருகின்றன.

ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை.

 

பெரியார் முழக்கம் 12012012 இதழ்

You may also like...