கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை ‘திராவிட’ எதிர்ப்பாளர்களின் குழப்பம்
அனைத்து தமிழர் சிக்கல்களுக்குக் காரணம் ‘திராவிடம்’ என்ற சொல் தானா? எந்த ஒரு மனிதரையும் ஒற்றை அடையாளத்தில் பொருத்தி விட முடியுமா? என்று பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கேட்டுள்ளார். அடுக்கடுக்கான கேள்விகளோடு கொளத்தூர் மணி விடுத்துள்ள அறிக்கை.
- தமிழர் என்பதன் திரிந்த வடிவமே திராவிடர் என்றால், பிற மொழியாளர்கள் ‘திராவிடர்’ என்று எப்படி தங்களை அழைப்பார்கள்?
- திராவிடர் இயக்கம் வேறு; திராவிட இயக்கம் வேறு.
- தமிழ்மொழி பேசுவதால் பார்ப்பனரை தமிழர்களாக ஏற்பீர்களா?
- திராவிடர் வடமொழிச் சொல்லாக இருந்தும் பார்ப்பான் அதை ஏற்க மறுப்பது ஏன்?
- பிற மன்னர் படையெடுப்பால் வென்ற பகுதி யில் தமது முகவர்களைக் குடியமர்த்தியதற்குக் காரணம் என்ன?
இன்றைய நிலையில் சமுதாயத்தில் நிலவும் ஏராளமான சிக்கல்கள் உரிய அளவுக்கு கவனிக்கப் படாமலும், கவனத்துக்கு வந்தாலும் அதைத் தீர்ப் பதற்கான உரிய நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப் படாமலும் உள்ளன.
சமூக தளத்தில் சாதிய அடக்குமுறைகள்; தீண்டாமை வன்கொடுமைகள்; அரசுத் திட்டங்களே சாதிய ஆதிக்கத்திற்கு சாதகமாக தீட்டப்படுதல்; தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள்கூட சட்டக் கடமைகளை ஆற்ற முடியாமல் தடுக்கப் படுதல்; இரட்டைக் குவளை, இரட்டை சுடுகாடுகள், இரட்டை வாழ்விடங்கள் என்ற ஜனநாயக விரோத ஜாதிய முரண்பாடுகள் எண்ணிலடங்காமல் கிடக் கின்றன.
அரசியல், பொருளியல் தளங்களிலோ பற்பல பின்னடைவுகள். நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக போராடி பெறப்பட்ட தொழிலாளர் உரிமைகள், சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் புறந் தள்ளப்படுவது, எட்டு மணி நேர வேலை என்ற சட்டபூர்வ உரிமையைப் பறித்து பத்துமணி நேரத்துக்கு மேலாகக்கூட வேலை வாங்கும் பன்னாட்டு நிறுவனங்கள், பெரு முதலாளிகளை மனதில் கொண்டே தீட்டப்படும் திட்டங்கள், ஊழல் மயமாகிப்போன அரசு இயந்திரங்கள்; தன்னளவில் முழுமை பெற்றிருந்த உள்ளூர் உற்பத்தி முறைகள் அழிக்கப்படுதல்; சிறு தொழில்கள் – வளர்ந்துவரும் வறுமை, தேய்ந்து வரும் கிராமப் பொருளாதாரம், சாவதே மேல் என எண்ண வைக்கும் விவசாயம் என ஏராள சிக்கல்கள் நிலவி வருகின்றன.
ஆனால், இவை எவற்றையும்விட தமிழ்நாட்டு அரசியல் தளங்களில் – நுண்ணரசியல் தளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியிருப்பது – மாற்றப்பட்டிருப்பது “திராவிடர் – திராவிடம்” என்ற சொற்களே ஆகும்.
அதுவும் இச்சொற்களே ஈழத்தில் நடந்த பேரழிவுக்கும், இங்கு தமிழ்நாட்டில் நிலவும் எல்லா சிக்கல்களுக்கும் காரணம், இச்சொற்களை மக்கள் சிந்தனையில் இருந்தே அகற்றாவிட்டால் உய்யும் வழியே இல்லை என்பதுபோலப் பேசப்படுகின்றன; எழுதப்படுகின்றன; கருத்துப் பரப்பல் நடக்கின்றன.
இச்சொற்கள் மட்டுமல்ல; பெரியார் என்ற மனிதன் – பெரியாரியல் என்ற கருத்தியல் தமிழர் களிடம் ஏற்படுத்திய சிந்தனை தாக்கம்தான் தமிழர் வீழ்ச்சிக்கே காரணம் என்று உளம் வருந்தி பாவ மன்னிப்புக் கோரி சில முன்னாள் பெரியாரியர்களும் தூய ‘தமிழர்’ ஏடுகளில் எழுதுகிறார்கள்.
ஆக, பார்ப்பனியத்தையும், செயற்கை இந்திய தேசியத்தையும், பன்னாட்டு சுரண்டலையும்விட கொடூரமானதாக திராவிடர் – திராவிடம் ஆகியவைக் காட்டப்படுகின்றன.
எப்போதும் இதையே பேசிக் கொண்டிருந்த ம.பொ.சி., குணா போன்றோரோடு,
பெரியாருக்குத் தமிழ்த் தேசத்தின் தந்தை என்று முன்னர் பட்டம் சூட்டிய ‘தமிழ்த் தேச’ப் பொதுவுடைமைக் கட்சி –
தனது கட்சியின் ஆவணப்படி (பக்கம் 39) “நட்பு முரண் வகையிலும், அல்வழிப் பகை முரண் வகையிலும் எச்சரிக்கையோடும், விழிப்போடும் கையாளப்பட வேண்டிய” தரப்பினரைச் சேர்ந்த சீமான் அவர்களின் நாம் தமிழர் கட்சி –
“நாம் தமிழ்த் தேசிய மக்களே திராவிடர்கள் அல்லர்” எனக் கூறும் தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் –
போன்றவை இப்போது புதிதாக இந்தக் கருத்துக்களை மக்களிடம் எடுத்துச் செல்லத் தொடங்கியுள்ளன.
எனவே இந்த வேளையில் நாமும் இது குறித்து விவாதிக்க வேண்டியது அவசியமாகிறது.
முதலில் ஒருவரை அடையாளப்படுத்துதல் குறித்துப் பேசுவோம்.
எந்த ஒரு மனிதருக்கும் ஒற்றை அடையாளம் மட்டுமே இருந்துவிட முடியாது. உலகில் நிலவும் எல்லா அடையாளங்களும், உறவுகளும் கற்பியல் கோட்பாட்டுக்கு உட்பட்டவையே.
தமிழ்நாட்டுக்காரர் ஒருவர் அய்ரோப்பியர் ஒருவரோடு நின்றால் கருப்பர்; ஆப்பிரிக்கர் ஒருவரோடு சேர்ந்து நின்றால் கருப்பர் அல்லர். ஒருவரே கருப்பராயும், கருப்பர் அல்லாதவராயும் இருப்பார். ஆனால் இரண்டும் உண்மையே.
ஒருவர், அமெரிக்காவில் வாழ்ந்தால் ஆசிய அமெரிக்கர்; இங்கிலாந்தில் வாழ்ந்தால் பிரிட்டிஷ் ஆசியன்.
அவரே இந்தியத் துணைக் கண்டத்தில் டெல்லி யில், பீகாரில், வங்காளத்தில் வாழ்ந்தால் தமிழ்நாட்டுக்காரர்.
அவரே தமிழ்நாட்டில் சென்னையில் வசித்தால் அவர் தஞ்சைக்காரர், சேலத்துக்காரர், மதுரைக்காரர் நெல்லைக்காரர். அவரே நெல்லை நகரில் வாழ்ந்தால் தென்காசிக்காரர், புளியங்குடிக்காரர், சங்கரன்கோயில்காரர்.
தன் சொந்த ஊரிலேயே உள்ளபோது மேல் தெருக்காரர், தெற்குத் தெருக்காரர்… என்றவாறு இருக்கும் இடம் சார்ந்தும் அவரது சொந்த இடத்தைக் குறிக்கும் சொற்கள் வெவ்வேறாக இருக் கும். என்றாலும் அவை அனைத்தும் உண்மையே.
ஒருவர் தொழிற்சாலையில் இருந்தால் அவரது அடையாளம் தொழிலாளி, மேலாளர், நேரக் கண்காணிப்பாளர் – வீட்டில் இருந்தால் அவரது அடையாளம் அவை அல்ல.
வீட்டிலும்கூட ஒருவரது அடையாளம் ஒன்றாகவே இருப்பதில்லை; இருக்க முடியாது. அதுவும் சார்பு அடையாளமாகத்தான் இருக்க முடியும்.
தாயோடு தந்தையோடு இருக்கும்போது மகன், மகள் எனப்படுவார்.
தன் குழந்தைகளோடு இருக்கும்போது தாய், தந்தை எனப்படுவார்.
சொந்த வீட்டுக்குள் இருக்கும்போதுகூட ஒருவரை அடையாளப்படுத்தும் சொற்கள் வேறு வேறாகவே இருக்கின்றன.
ஒருவர்தான் நிற்கும் திசையைக்கூட யாரோடு பேசுகிறாரோ, அவர் இருக்கும் இடம் சார்ந்தே கிழக்கில், மேற்கில், தெற்கில், வடக்கில் இருப்பதாகக் கூறிக் கொள்ள முடியும்.
இருவேறு திசைகளில் உள்ளவர்களோடு ஒரே சமயத்தில் தொடர்பு கொண்டால் அவர்கள் இரு வரிடமும் தான் வெவ்வேறு திசைகளில் இருப்பதாக ஒருவர் கூறுவார். இரண்டும் நேர் எதிர் திசையாகக் கூட இருக்கலாம். ஆனால், இரண்டும் உண்மையே.
எனவே, எவர் ஒருவரையும் இருக்கும் இடமானா லும், இருக்கும் திசையானாலும், உறவு முறையே ஆனாலும் ஒற்றைச் சொல்லால் மட்டுமே அடையாளப்படுத்திவிட முடியாது.
இடம் விட்டு நகராமல் இருக்கும் ஒருவரைச் சந்திக்க பலர் வரலாம். ஒவ்வொருவருக்கும் அவர் வெவ்வேறு அடையாளச் சொற்களாலேயே அறியப்படுவர்.
ஒருவருக்கு நண்பர்; இன்னொருவருக்கு எதிரி; மற்றொருவருக்கு கடன்காரர்; இன்னொருவருக்கு வாடிக்கையாளர்; ஒருவருக்கு விற்பனையாளர்; இன்னொருவருக்கு முகவர், என்றிவ்வாறு எண்ணிலா அடையாளங்கள்.
அடுத்து கூட்டு அடையாளச் சொல் அணியாய் திரட்டப்பட்டு நிற்கும் போதாவது ஒற்றைச் சொல்லால் கூறிவிட முடியுமா என்றால் அதுவும் முடியாது.
தொழிற்சாலையில் உரிமைக்காக அணி திரண்டால் தொழிற்சங்கம் –
சாதிக்காரனோடு சண்டைக்கு அணி திரண்டால் சாதிச் சங்கம் –
சொந்த ஊர்க்காரனோடு கட்டமைப்பு வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதிக்கென அணி திரண்டு நின்றால் குடி மக்கள் குழு.
எனவே, தனி மனிதராக மட்டுமல்ல, கூட்டமாக அணி திரண்டு நின்றாலும் ஒற்றைச் சொல் அடையாளத்தோடு அணி திரட்ட முடியாது.
ஒரு பள்ளி வகுப்பறைக்குள் பல ஆசிரியர்கள் வருவார்கள்.
ஒரு ஆசிரியர் பாடத் தெரிந்தவர்கள் எல்லாம் இந்தப் பக்கம் வா; மற்றவர்கள் அந்தப் பக்கம் போ என்பார் – அவர் நாடகத்துக்கு தேர்வு செய்ய வந்தவர்.
அடுத்துவரும் ஒரு ஆசிரியர் உயரமானவர் எல்லாம் இந்தப் பக்கம் வா என்பார் – அவர் கூடைப் பந்து விளையாட்டுக்கு பயிற்சிக் கொடுக்க வந்தவர்.
மற்றொரு ஆசிரியர் வருவார்; ஆண்களெல்லாம் இந்தப் பக்கம் வா, பெண்களெல்லாம் அந்தப் பக்கம் போ என்பார் – சான்றிதழில் உள்ள அடையாளங்களைப் பதிவுசெய்ய ஆண், பெண் ஆசிரியர்களிடம் அனுப்பி வைக்க வந்தவர் அவர்.
இன்னொரு ஆசிரியர் வருவார். ஆங்கிலத்தை இரண்டாம் பாடமாய் எடுத்தவர்கள் இந்தப் பக்கம் வா; பிரஞ்சு மொழியை எடுத்தவர்கள் அந்தப் பக்கம் போ என்பார் – அவர் இலவசப் பாடப் புத்தகங்களை விநியோகிக்க வந்தவர்.
என்றிவ்வாறு ஒரே வகுப்புக்குள் நுழையும் வெவ்வேறு ஆசிரியர்கள், வெவ்வேறு வகையாக அணி பிரிகிறார்கள். காரணம், அவர்களுக்கு வெவ்வேறு நோக்கங்கள் இருப்பதே.
அப்படித்தான் கொள்கை அடிப்படையில் முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கென அணி பிரிப்பதும் கூட ஒரு வகையாய் இருக்க முடியாது.
தொழிலாளர் உரிமைகளுக்குப் போராடும் அமைப்புகள் தொழிலாளி – முதலாளி என பிரித்துக் காட்டும்; போராடும்.
(ஆனால், கோரிக்கைகள் வெவ்வேறாக இருந்தால் தொழிலாளர்களும்கூட உடலுழைப்புத் தொழிலாளர்கள், நிர்வாகத் துறை ஊழியர்கள் என பிரிக்க வேண்டியும் வரும்)
தலித் விடுதலைக்குப் போராடுவோர் ஆதிக்க சாதியினர், ஒடுக்கப்படும் சாதியினர் என்றுதான் பிரித்துப் பார்ப்பர்.
ஏரி, குள நீர்ப் பாசனம் பெறுவோர் அடிமடை விவசாயிகள், கடைமடை விவசாயிகள் என்று பிரிந்து நின்றே நீர் முறைப் பற்றிப் போராடுவர்.
சுற்றுச் சூழலுக்குப் போராடுவோர், மாசுபடுத்து வோர், மாசுகளைத் தடுக்க விரும்புவோர் என்றே பிரிந்து நிற்க முடியும்.
கிராமத்துக்குள் மோதல்கூட இந்த மதத்துக்காரர், அந்த மதத்துக்காரர்; இந்த சாதிக்காரர், அந்த சாதிக்காரர், இந்த தெருக்காரர், அந்த தெருக்காரர் என மோதலின் காரணத்தால் வெவ்வேறு வகையாக பிரிந்து நிற்பர்.
மேற்சொன்ன அணிப் பிரிவினைகளின் தரப் பினர் ஒரு நோக்கத்துக்காக ஒரு அணியில் இருப்பவர், வேறு நோக்கத்துக்காக மற்றொரு அணியில் இருக்க நேரிடும்.
அதாவது, ஒரு நோக்கத்துக்காக ஓரணியில் இருப்பவர்கள், வேறொரு நோக்கத்துக்காக எதிர் எதிர் அணிகளில் இருக்க நேரிடும்.
ஆக, நமக்கான ஒற்றை அடையாளங்கள் என்பது எதுவும் இல்லை. அனைத்தும் சார்பு அடை யாளங்களே. நாம் அணி பிரிவதும் / பிரிப்பதும் தேவைகளை ஒட்டியே!
எனவே நாம் தமிழ்த் தேசிய மக்களே; திராவிடர் அல்லர் என்பது சரியானதல்ல. ஒரே நேரத்தில் ஒரே நபருக்கு இரண்டு அடையாளங்கள் இருக்க முடியும்.
தொழிற்சங்கப் போராட்டத்தின்போது தொழி லாளராகத் தானே அடையாளப்படுத்த முடியும். அங்கு நாம் தமிழ்த் தேசிய மக்களே, தொழிலாளர் அல்ல என்று கூறுவது எப்படி சரியில்லையோ, அப்படித்தான் மேலே சொல்லப்படுவதும்.
இவற்றை மனதில் கொண்டுதான் தமிழர் / அல்லாதோர்; ஆரியர் / திராவிடர் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
அரசியல் விடுதலை என்று வருகிறபோது, “தமிழ்நாடு தமிழருக்கே” என ‘தமிழர்’ அடை யாளத்தை முன் வைத்த பெரியார், சமூக விடுதலை, பண்பாட்டு விடுதலை என்று வருகிறபோது அடிமைப்படுத்தும் ஆரியப் (பார்ப்பன) பண்பாட் டில் அல்லலுறும் அனைத்து பார்ப்பனரல்லாத மக்களை மீட்க ஆரியரின் எதிர் அடையாளமாக ‘திராவிடர்’ என்ற அடையாளத்தை முன் வைத்தார்.
‘திராவிடர்’ என்பது தமிழ்ச் சொல் அல்ல என்பதை அறிந்தே பெரியார் அச்சொல்லைப் பயன்படுத்தினாரே அன்றி அறியாமல் அல்ல. ஒரு சொல்லுக்கு சமுதாயம் புரிந்து கொண்டுள்ள பொருளை மனதில் கொண்டு அதைப் பயன்படுத்தினவரேயன்றி, ‘அகராதி’யோ சங்க நூல்களையோ புரட்டிப் பொருள் பார்த்து அல்ல.
‘சமூக நீதி’ என்பது தமிழல்ல என்றாலும் அச்சொல்தான் புழக்கத்தில் உள்ளதே தவிர ‘குமுக நயன்மை’ என்ற தமிழ்ச் சொல்லை யாரும் பயன்படுத்துவதில்லையே! சொல்லுக்குள் நுழைந்து கொண்டு விளையாடும் வீண் வேலைகள் எப்போதும் பெரியாரிடம் இருந்தது இல்லை.
பல வேளைகளில் ஒரு கேள்வி திரும்பத் திரும்ப எழுப்பப்படுகிறது. திராவிடர் என்று தமிழர்களில் சிலர்தான் கூறுகிறார்களேயொழிய தெலுங்கரோ, கன்னடரோ, மலையாளியோ அவ்வாறு தன்னைக் கூறிக் கொள்வதில்லையே என்பதே அது.
திராவிடர் என்ற சொல், தமிழர் என்பதை சரியாக உச்சரிக்கத் தெரியாத / முடியாத வடமொழி யாளர்களால் உண்டாக்கப்பட்டதே அந்தச் சொல் என்று கூறுகிறார்கள். படி என்பதை பிரதி எனவும், மெதுவாக என்பதை மிருதுவாக எனவும், மதங்கம் என்பதை மிருதங்கம் எனவும் உச்சரித்ததைப் போன்றே தமிழர் என்பதை திரமிளர் என்று விளக்கப்படுகிறது.
அவ்வாறாயின், திராவிடர் என்பது தமிழர் என்பதன் திரிந்த வடிவமே. தமிழர் என்ற சொல்லின் திரிந்த வடிவத்தை எப்படி தமிழரல்லாத பிறமொழியினர் தம்மைக் குறிக்கப் பயன்படுத்துவர் என்று நாம் எதிர்பார்க்க முடியும்? இருப்பினும் ஆந்திராவில்தான் திராவிட மொழிகளின் பல்கலைக் கழகம் இயங்கி வருகிறது. மைசூரில் இயங்கும் மொழிகள் ஆய்வு மையம் திராவிட மொழிகளை ஆய்வு செய்வதாகத்தான் அறிவித்துக் கொள்கிறது.
இது ஒருபுறம் இருக்க, பெரியார், திராவிடர் என்ற சொல்லை பார்ப்பனரல்லாத அனைவரையும் பார்ப்பனர் ஆரியப் பண்பாட்டால் இழிவுபடுத்தப் பட்டு, அடிமைப்பட்டுக் கிடக்கிற அனைவரையும் குறிப்பதற்கும், ஆரியத்துக்கு எதிராக அணி திரட்டு வதற்கும் அடையாளச் சொல்லாய் பயன் படுத்தினாரோ அன்றி சகோதர மொழிகளைப் பேசுகிற தெலுங்கர், கன்னடர், மலையாளிகளோடு இணைவதற்கல்ல என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் ‘திராவிடர்’ என்ற சொல்லை ஏன் பயன்படுத்த வேண்டும்? ‘தமிழர்’ என்று சொன்னால் போதாதா என்று பலராலும் பேசப்பட்டு வருகிறது.
திராவிடர் என்றால் பார்ப்பான் நுழைய மாட்டான் என்று கூறுகிறீர்களே திராவிட இயக்கமான அ.தி.மு.க.வில் ஆரிய (பார்ப்பன)ப் பெண் தானே தலைவராக உள்ளார் என்றும் பேசப்பட்டு வருகிறது.
மருத்துவர் இராமதாஸ் போன்றவர்கள் திராவிடர் என்று சொல்லைப் பயன்படுத்தவில்லையே. அதைப் பயன்படுத்தாமலேயே பா.ம.க.வில் பார்ப்பனர்கள் இல்லையே என்ற இன்னொரு வாதமும் வைக் கின்றார்கள்.
தி.மு.க., அ.தி.மு.க. போன்றவை திராவிடர் இயக்கங்கள் இல்லை. அவை திராவிட இயக்கங்கள் மட்டுமே. ஆரிய எதிர்ப்புச் சொல்லான மக்கள் கூட்டத்தைக் குறிக்கும் திராவிடர் என்பதை கைவிட்டு விட்டு மண்ணை, நிலப் பகுதியைக் குறிக்கும் ‘திராவிடம்’ என்ற வடநாட்டு எதிர்ப்புச் சொல்லால் குறிக்கப்படும் கட்சிகள் அவை.
பாட்டாளி மக்கள் கட்சியில் பார்ப்பான் என்ற இரத்தமும் சதையுமாய் உள்ள பார்ப்பன மாந்தர்கள் உள் நுழையவில்லை என்பதுகூட உண்மையாய் இருக்கலாம். ஆனால், சாதியம் என்ற பார்ப்பனர் கருத்தியலில் ஊன்றி நிற்கும் கட்சியாகத்தானே அது உள்ளது.
திராவிடர் என்ற சொல், பார்ப்பன – ஆரியப் பண்பாட்டின் எதிர்க் குறியீட்டுச் சொல் மட்டுமல்ல, பார்ப்பன – ஆரியப் பண்பாட்டுக்கு எதிராக – ஆரிய, சாதிய, இந்தியத்தின் அனைத்து வகை ஆதிக்கங் களுக்கு எதிராக – போராடி, போராடி அவற்றிலிருந்து விடுபடவும் அணி திரட்டலுக்கான சொல்லாகும்.
திராவிடர் என்பது தமிழர் என்ற சொல்லின் திரிந்த வடிவம் என்ற சொல்லாராய்ச்சியோடு நிறுத்திக் கொள்பவர்களிடம் நமக்கு ஒரு கேள்வி உள்ளது. மொழியடிப்படையில் பார்ப்பனரை நம்மவரே என்ற கருதச் செய்யும் போக்கு அவ்வாதத்துள் புதைந்து கிடப்பது உங்களுக்குப் புரியவில்லையா? அல்லது தெரிந்தும் யாரோ சில பார்ப்பனர் நட்புக்காக – தயவுக்காக அதை மறைக்கிறீர்களா?
முதலாவதாக, கருப்பாயி, கருத்தம்மா என்ற தமிழ்ச் சொற்களின் வடமொழி சொற்களான சியாமளா, நீலா என்ற பெயர்களையும், கார் வண்ணன், இருளப்பன் என்று பொருள்படும் சியாமள வர்ணன், கிருஷ்ணன் என்ற பெயர்களைத் தயக்கமில்லாமல் தங்களைக் குறிக்கும் பெயர்ச் சொற்களாக பயன்படுத்தும் பார்ப்பனர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். இதேபோல் தமிழர் என்ற சொல்லின் வடமொழி சொல்லாக மட்டுமே உங்களால் கூறப்படும் திராவிடர் என்ற சொல்லால் தன்னை அடையாளப்படுத்த முன் வரும் ஒரு பார்ப்பனரையாவது உங்களால் காட்ட முடியுமா? தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழ் பேசும் பார்ப்பனர்கள்கூட வேண்டாம், தமிழின் திரிந்த வடிவங்களான தெலுங்கு, கன்னட மொழி பேசும் ஒரு பார்ப்பனராவது தமிழின் திரிந்த வடிவமான திராவிடர் என்ற சொல்லால் தன்னைக் குறிப்பிட ஒப்புக் கொள்வாரா? எனவேதான் நாம் வீழ்த்த விரும்பும் பண்பாட்டு ஆதிக்கமான பார்ப்பனியத்தை எதிர்க்க ‘திராவிடர்’ என்ற எதிர் அடையாளத்தை ஏற்றாக வேண்டும் என்பதையாவது உணர்கிறீர்களா? இல்லையா?
மேலும் – பார்ப்பனியத்தைக் கைவிட்டுவிட்ட, பார்ப்பனர்களைகூட பார்ப்பனிய எதிர்ப்பு இயக்கங்களில் சேர்த்துக் கொள்ளவே கூடாது என்ற இனவாதம், சாதிய வாதம் புரிகிறீர்கள் என்ற கேள்வி எழுப்புபவர்களிடமும் எமக்கொரு கேள்வி இருக்கிறது.
பவுத்தம் போன்ற பார்ப்ன எதிர்ப்பு நெறிகளைக் கூட உள் நுழைந்து சீர்குலைத்த பார்ப்பனர்களை பற்றிய வரலாற்று புரிதலால் வந்த எச்சரிக்கை உணர்வு ஒரு காரணம். பல்லைப் பிடுங்கி விட்டாவது பாம்பை படுக்கையில் போட்டு கொஞ்ச வேண்டும் என்ற ஆசை ஏனோ என்பார் குத்தூசி குருசாமி.
பார்ப்பனியம் கொடுமையானது – எதிர்க்கப்பட வேண்டியது – போராடி வீழ்த்தப்பட வேண்டியது என்ற புரிதலுக்கு வந்து சேர்ந்துவிட்ட பார்ப்பனர்கள் சிலரோ, பலரோ தமக்குள் அணி திரண்டு தம்மின மக்களான பார்ப்பனாகளிடம் கேள்வி கேட்டதே இல்லையே. ஏன்? வரலாற்றில் அப்படிப்பட்ட ஒரு பதிவே இல்லையே! அது தற்செயலானது என நம்புகிறீர்களா?
பார்ப்பனிய எதிர்ப்போடு, பிறரால் கட்டப்பட் டுள்ள அமைப்புகளில் வேண்டுமானால் தம்மை இணைத்துக் கொண்டு, அதுவும் அடிப்படை உறுப்பினராக அல்ல, தலைமைப் பொறுப்புகளில் மட்டும் இணைத்துக் கொள்கிறவர்களும், மக்களிடம் சென்று பணியாற்ற அல்ல, தம் அமைப்பில் உள்ளோரிடம் அதிகாரம் செய்கிற இடங்களில் மட்டுமே தம்மைத் தக்க வைத்துக் கொண்டு உள்ளவர்களும் தவிர, தம்மால் கொடுமை என்று கருதப்படும் பார்ப்பனியத்தை அதன் ஊற்றுக் கண்ணான பார்ப்பனர்களை திருத்த வேண்டும், திருத்தி அவர்களையும் பிறரை மதிக்கிற, சமத்து வத்தை ஏற்கிற மனிதர்களாக மாற்ற ஓர் இயக்கம் கட்ட வேண்டும் என்ற முயற்சியில் பார்ப்பான் ஈடுபடாதது ஏன்? பார்ப்பனரல்லா கரையான்கள் கட்டி எழுப்பியுள்ள புற்றுகளில் நுழைந்து கொள்ள வேண்டும்? என்பதே எமது கேள்வி.
தமிழ் நாட்டை ஆள இன்னொரு நாட்டான் கூடாது என்ற பொருளில் தான் ‘தமிழ்நாடு தமிழ ருக்கே’ என்பதில் உள்ள தமிழருக்கே என்பதைப் புரிந்து கொள்ள வேண்டுமே தவிர அதையும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்பவர்களை மட்டும் குறிக்க அல்ல.
மாகாணமானாலும், மாநிலமானாலும் அதன் எல்லைக்கோட்டோடு ஒரு மொழி மட்டுமே பேசுவோர் என கறாராக பிரித்துவிட முடியாது. எல்லைப் புறங்களில் பிற மொழி / இரு மொழிகள் அல்லது மும்மொழிகள் பேசுவோர்கூட இருக்க முடியும். அவர்களில் பலர் பல கட்டங்களில் வணிகத்துக்காக, ஆட்சியாளர் களிடம் பணியாற்ற, பிழைப்பு தேடிக் கூட உள் பகுதிகளிலும் வாழ்ந்து வரலாம்.
எந்த வகைகளில் எல்லைப் பிரிவினைகள் நடந்தாலும் பிரிவினை நடக்கும் நேரத்தில் பிரிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்ந்து வருபவர்கள் அப்பகுதியினராக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, ஒவ்வொரு பிரிவினையின்போதும் பிரிவினையின் முதன்மை நோக்கத்துக்கு வேறுபட்டு இருப்பவர்களைக் குடிபெயரச் சொல்ல முடியாது.
பாகிஸ்தான் இந்தியாவாக இணைந்திருந்தபோது ஆங்காங்கே வாழ்ந்தவர்கள் பிரிவினையின் முதன்மை நோக்கமாக மத வழித் தேச பிரிவினை என்று வந்தபோது அடுத்தவர்களைக் குடி பெயரச் செய்யப்பட்டமை இன்றளவும் வரலாற்று பேரவலமாகவும், பெருங்கொடுமையாகவுமே கருதப்படுகிறது.
பாகிஸ்தானமும், வங்க தேசமும் ஒன்றாக இருந்தபோது அரசுப் பணிகளுக்காக, வணிகத்துக்காக என மற்ற பகுதிக்குச் சென்று வீடு, நிலம், தொழிற்சாலைகள் என வாழ்ந்தவர்கள் பிரிவினை ஏற்பட்டவுடன் அந்தந்த பகுதிக்குத் திரும்ப வேண்டும் என்று சொல்லப்படவில்லை.
தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் என பிரிந்தபோதும், அதற்கு முன்னதாக ஆந்திரம் பிரிந்தபோதும்கூட, தமிழ்நாட்டிலே தங்கிவிட்ட பிற மொழியினரைப் போலவே கேரளத்தில் பாலக்காடு, தேவிகுளம், பீர்மேடு பகுதிகளில் வாழும் தமிழர்களும், கர்நாடகத்தில் கோலார், பெங்களூர், இரியூர் பகுதிகளில் வாழும் தமிழர்களும், ஆந்திரத்தின் சித்தூர் மாவட்டத் தமிழர்களும் தொடர்ந்து அங்கங்கே தான் வாழ்ந்து வருகின்றனர்.
காரணம், வெறும் மனிதர்கள் என்றால் குடிபெயர்வதில் சிக்கல் இல்லை. வீடு, நிலம், தொழிற்சாலை என அசையாச் சொத்துக்களோடு உள்ளவர்கள் குடி பெயர்வது அவ்வளவு எளிது அல்ல.
மேலும், நாம் தமிழர் கட்சி ஆவணத்தின் பக்கம் 34 இல் ‘உறுப்பினர் தகுதி’யில்.
“தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தால் அல்லது தமிழை வாழ்வியல் மொழியாக ஏற்றுத தாய் மொழிக்குத் திரும்பியிருந்தால்” தங்கள் கட்சியில் உறுப்பினராகச் சேரத் தகுதியுடையவர் என்று கூறுகிறது. அப்படியானால், தமிழ்நாட்டில் பிறமொழியினர் அல்லது நாம் தமிழர் கட்சி ஆவணத்தில் கூறியுள்ளபடி, ‘திராவிடர்’ எனக் குறிப்பிடுவது வேறு யாரை என்பதுதான் நமக்கு விளங்கவில்லை.
இந்த இடத்தில் மற்றொன்றையும் கருதிப் பார்க்க வேண்டும்.
சங்க காலம் முதல் பிற்காலச் சோழர்கள், பிற்காலப் பாண்டியர் என எல்லா தமிழ் மன்னர்களும் பல நாடுகளுக்குப் படையெடுத்துச் சென்றுள்ளனர். பல நாடுகளை வென்றும் உள்ளனர்.
ஆனால், நம் தமிழ் மன்னர்கள் அனைவரும் தோற்கடித்த மன்னரின் மணிமுடி (மகுடம்) தன் காலடியில் விழுந்தால் போதும்; அல்லது மன்னனின் பிறந்த நாளின்போது வெற்றிப் பெற்ற தமிழ் மன்னன் மட்டுமே மணி முடியோடு அரசவையில் வீற்றிருக்க, வெல்லப்பட்ட நாடுகளின் மன்னர்கள் கையுறையாக, கப்பமாக சில பொற்காசுகளை அளித்தால் போதும் என்று மட்டுமே மனநிறைவடைந்துள்ளனர். பல வேளைகளில், பகை மன்னர் பெண்டிரைச் சிறை எடுப்பதும், பகை மன்னர் அரண்மனைகளை இடித்துத் தள்ளுவதும், சில வேளைகளில் பகை அரச குலப் பெண்களை ஏரில் போட்டு எருக்கு போன்றவற்றை விதைத்தலும் செய்துள்ளனர்.
ஆனால், தமிழரல்லாத மன்னர்கள் பிற நாடுகளை வென்றவுடன் நம்பகமான தமது ஆட்களை அழைத்து வந்து தனது ஆட்சிக்குத் துணையாக வரி தண்டல் செய்ய, படைத் தலைமையேற்க, பகுதிகள், பாளையங்களில் நிர்வாகத் தலைமையேற்க என குடியேற்றங்களை வென்ற நாடுகளில் ஏற்படுத்தியுள்ளனர்.
எனவே, தமிழ் மன்னர்கள் வென்றாலும், வென்ற நாடுகளில் தமது மக்களைக் குடியேற்றவில்லை. ஆனால் வென்றவுடன் பிற நாட்டு மன்னர்கள், தமது மக்களை குடியேற்றியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வாழும் பிற மொழியினரின் வளமான வாழ்வுக்கும், அதே நேரத்தில், தம் வாழ்க்கைப் பாட்டுக்காக பிற மொழிப் பகுதிகளில் கூலிகளாய் சென்றமர்ந்ததற்குக் காரணம் வர்க்கப் பிரச்சினையா? மொழிப் பிரச்சினையா? என்பதை கருதிப் பார்க்க வேண்டும்.
ஆக, பிறமொழியினரின் வளமான நிலைக்குக் காரணம் அவர்களது மன்னர் அளித்த ஆட்சிப் பணியில் பங்கு என்பதன் தொடர்ச்சியே அன்றி, அவர்கள் பேசும் மொழியால் அல்ல. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் கிராமங்களில் மணியக்காரர், கணக்குப் பிள்ளை (முன்சிப், கர்ணம்)களாக இருந்தவர்களின் வழிமுறையினர்கூட நிலபுலன்களோடு மிக வளமாக வாழ்வதைக் கிராமங்களில் காண முடியும். அது அவர்களின் அரசுப் பணி அதிகாரத்தால் வந்ததே தவிர, அவர்கள் பேசும் மொழியால் அல்லவே!
ஆக, அவர்களது ஆதிக்கம் வர்க்க ஆதிக்கமாகக் கொண்டு எதிர்க்கப்பட வேண்டிய ஒன்றே தவிர, பிற மொழியினர் ஆதிக்கமாக எடுத்துக் கொள்வது பிழையானதாகும்.
(“திராவிடர் கழகம்” என்ற பெயர் சூட்டும் முடிவை பெரியார் ஒரே நாளில் எடுத்தார் என்ற வாதம் சரியா? -இது குறித்து அடுத்த இதழில் எழுதுவோம்.)
பெரியார் முழக்கம் 07062012 இதழ்