வழக்கறிஞர் துரைசாமி அம்பலப்படுத்துகிறார் ராஜிவ் கொலை வழக்கு விசாரணையில் மறைக்கப்பட்ட உண்மைகள் (1)

ராஜிவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப் பட்டவர்களுக்காக வாதாடியவா பெரியார் திராவிடர் கழகத்தின் மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி. அவர் இப்போது ராஜிவ் கொலை வழக்கில் முறையாக விசாரணை நடத்தப் பெறாமல், பல உண்மைகள் மூடி மறைக்கப் பட்டதை, வெளியே கொண்டு வரும் நூல் ஒன்றை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். விரைவில் அந்த நூல் வெளி வரவிருக்கிறது. இது தொடர்பாக ‘டெகல்கா’ வார ஏடு, வழக்கறிஞர் துரைசாமியின் பேட்டியை வெளியிட்டிருக்கிறது. அந்தப் பேட்டியின் தமிழ் வடிவம் இது.

கேள்வி : ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினிக்காக, நீங்கள் வாதாடியவர். அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு, தண்டனையும் உறுதி செய்யப்பட்டுஅனுபவித்து வரும்போது இவ்வளவு காலத்துக்குப் பிறகு ராஜீவ் கொலையின் பின்னணியில் மிகப் பெரும் சதித் திட்டம் இருப்பதாகவும், அந்த சதி அவர்களுக்குள்ளேயே உருவானது என்றும், நூல் எழுதியிருக்கிறீர்கள். உங்களின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு, என்ன ஆதாரம்?

பதில் : ராஜீவ் கொலைக்கான சதி காங்கிரஸ் அணிக்குள்தான் உருவானது என்பதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன. ஆனால், சி.பி.அய். விசாரணைக்கு தலைமையேற்று நடத்திய காவல்துறை அதிகாரி டி.ஆர்.கார்த்திகேயன், சரியான கோணத்தில் இந்த விசாரணையை கொண்டு செல்லவில்லை என்றே கூறுவேன். ராஜீவ் கோரக் கொலை நடந்து முடிந்த மூன்றாவது நாளில், அதாவது 1991 மே 24 இல் சி.பி.அய். விசாரணைக்கான பொறுப்பை ஏற்றது. அந்த விசாரணைக் குழுவில் கார்த்திகேயன், நான்கு டி.அய்.ஜி.க்கள், 8 காவல்துறை மாவட்ட தலைமை அதிகாரிகள், 14 மாவட்ட துணை ஆய்வாளர்கள், 44 ஆய்வாளர்கள், 55 துணை ஆய்வாளர்கள் மற்றும்   காவல்துறையினர் இடம் பெற்றிருந்தனர். இவர்கள் அனைவரையுமே தேர்வு செய்தது கார்த்திகேயன் தான். இதில் பெரும் பாலோர், தங்களது பணிக் காலங்களில் திறம்பட செயல்பட்டவர்கள். புலன் விசாரணை சுமார் ஓராண்டு காலம் நடந்தது. 1992 மே 20 இல்தான் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தனர். இவ்வளவு காலம் புலனாய்வுக்கு எடுத்துக் கொண்ட பிறகும் குற்றப் பத்திரிகையில் புலனாய்வில் பல ஓட்டைகள் வெளிப்பட்டன. சி.பி.அய். உண்மைகளை மறைத்தது. ஓராண்டு காலம் புலனாய்வுக்கான கால அவகாசம் கிடைத்த நிலையில், ஒரு சாதாரண போலீஸ்காரரால் கூட, இதைவிட சிறப்பாகவே புலனாய்வை நடத்தியிருக்க முடியும் என்பதே என் கருத்து. தடா நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்குமே தண்டனை வழங்கியது உச்சநீதிமன்றம் 19 பேரை விடுதலை செய்தது. சதியில் இவர்களுக்கு பங்கு உண்டு என்பதற்கு அரசு தரப்பில் முன் வைக்கப்பட்ட சாட்சியங்கள், ஏற்கக்கூடியதாக  இல்லை என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்டது.

கேள்வி : இவையெல்லாம் பொதுவான கருத்துகள் தான். பின்னணியில் பெரிய சதி நடந்தது என்பதற்கு குறிப்பிடத்தக்க சான்றுகள் இருந்தால் சொல்லுங்கள்.

பதில் : காங்கிரஸ் கட்சிக்கான நாடாளுமன்ற வேட்பாளர் மரகதம் சந்திரசேகருக்காக தேர்தல் பிரச்சாரத்துக்காகவே ஸ்ரீபெரும்புதூருக்கு ராஜீவ்காந்தி வந்திருந்தார். ஏற்கனவே ராஜீவ்காந்தி தமிழ்நாட்டில் தனது தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டவிட்டார். அதன் பிறகு, மே 18 ஆம் தேதி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூடி, ராஜீவ் சுற்றுப் பயணத் திட்டத்தை இறுதி செய்த போது, அதில் ஸ்ரீபெரும்புதூரும், விசாகப்பட்டின மும் சேர்க்கப்பட்டது. ஆனால், ‘தினத்தந்தி’ நாளேட்டில் ஒரு நாளைக்கு முன் கூட்டியே, அதாவது மே 17 ஆம் தேதியே ராஜீவ் ஸ்ரீபெரும்புதூர் வருகை தரும் செய்தி வெளிவந்துவிட்டது. தமிழ்நாட்டின் காங்கிரஸ் தலைவர் எவருக்கும் ராஜீவ் ஸ்ரீபெரும்புதூர் வருகை பற்றி எதுவும் தெரியாது. ராஜீவ் சுற்றுப்பயணத்துக்கு பொறுப்பாளரும் கட்சியின் அதிகாரபூர்வ பேச்சாளருமான மார்கரட் ஆல்வா (தற்போது உத்தர்காண்ட் ஆளுநர்) மே 18 ஆம் தேதிதான், ராஜீவ் சுற்றுப்பயணத் திட்டத்தை இறுதி செய்கிறார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, இறுதி செய்வதற்கு முன்பே, ‘தினந்தந்தி’ நாளேட்டுக்கு ராஜீவ், ஸ்ரீபெரும்புதூர் வருகை தரும் செய்தி எப்படி கிடைத்தது?

அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி, ராஜீவ் ஸ்ரீபெரும்புதூர் வருவதற்கும் அங்கேயே தங்குவதற்கும் மே 19 ஆம் தேதி அன்று வாழப்பாடி ராமமூர்த்தி தனது எதிர்ப்பை பதிவு செய்கிறார். தடா நீதிமன்றத்தில் அளித்த சாட்சியத்தில் வாழப்பாடி ராமமூர்த்தி, இதை ஒப்புக் கொண்டுள்ளார். மரகதம் சந்திரசேகர் டெல்லியில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி, தனது தொகுதியில் ராஜீவ்காந்தி பிரச்சாரத்துக்கு ஏற்பாடு செய்து விடுகிறார். ராஜீவ் வருகை உறுதியான நிலையில் உள்ளூர் காங்கிரசார், கூட்டத்தை பள்ளி மைதானம் ஒன்றில் நடத்துவதற்கு காவல்துறையின் அனுமதி கேட்டனர். ஆனால், கோயிலுக்கு சொந்தமான இடத்துக்கு பிறகு மாற்றப்பட்டது. இதற்கான காரணம் மரகதம் சந்திரசேகருக்குத்தான் தெரிந்திருக்க முடியும். பள்ளி விளையாட்டு மைதானத்திலிருந்து கோயில் இடத்துக்கு மாற்றப்பட்டதற்கு, காங்கிரசார் காவல்துறையின் அனுமதியையும் கேட்கவில்லை. அந்தக் கூட்டத்துக்கு முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. காங்கிரஸ் தலைவர்களின் எதிர்ப்பையும் மீறி, ராஜீவ், ஸ்ரீபெரும்புதூரிலேயே தங்குவதற்கான ஏற்பாடுகளும் நடந்தன. அந்த ஊரில் இருந்தது, ஒரே சுற்றுலா மாளிகைதான். அதுவும் பழுதடைந்த நிலையிலேயே இருந்தது. அப்போது தமிழகஆளுநாக இருந்த பீஷ்ம நாராயண் சிங், ராஜீவ் ஸ்ரீபெரும்புதூரிலேயே தங்க வைப்பதற்கு பாதுகாப்பு காரணங்களுக்காக எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், மரகதம் சந்திர சேகர், தனது கிராமத்திலேயே ஒரு அடகுக் கடைக்காரரின் பங்களாவில் ராஜீவை தங்க வைக்க ஏற்பாடு செய்துவிட்டார் என்று காங்கிரசாரிடம் கூறப்பட்டது. காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு கருதி இத்திட்டத்தை ஏற்க மறுத்தனர்.

கேள்வி : இந்த காரணங்களால் மரகதம் சதிக்கு உதவினார் என்று கூற முடியுமா?

பதில் : மரதகம் அம்மையார் சதிக்கு உடந்தையாக இருந்ததாக நான் குற்றம்சாட்டவில்லை. ஆனால்,இந்த வழக்கின் சாட்சிகள் அவருக்கு எதிராக இருக்கின்றன. முக்கிய குற்றவாளியான சிவராசன் எழுதிய நாட்குறிப்பில் பல செய்திகள் இடம் பெற்றுள்ளன. ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்தை ஏற்பாடு செய்வதற்காக மரகதம் சந்திரசேகரன் மகன் லலித் சந்திரசேகரிடம் சிவராசன் ரூ.5 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளதை சிவராசன் தனது நாட்குறிப்பில் எழுதி வைத்துள்ளார்.  இந்த வழக்கில் தலைமை விசாரணை அதிகாரியாக செயல்பட்ட ரகோத்தமன் எழுதிய நூலில் சிவராசன் நன்கொடை வழங்கியதை குறிப்பிட்டுள்ளார். நான் ரகோத்தமனை குறுக்கு விசாரணை செய்தபோது இதுபற்றி எதுவும் அவர் கூறவில்லை. தடா நீதிமன்றத்தில் சிவராசன் எழுதிய நாட்குறிப்பையும், சாட்சி ஆவணமாக முன் வைக்கவில்லை. குண்டு வெடிப்பில் காயமடைந்த லலித், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, ரகோத்தமன் அவரை மருத்துவமனைக்குப் போய் பார்த்தார். அப்போது ஒரு புகைப்படத்தைக் காட்டி, இதில், தாணுவை அடையாளம் காட்ட முடியுமா என்று கேட்டார், அதற்கு லலித், தனக்கு தாணு நினைவில் இல்லை என்று கூறிவிட்டார். அ ப்போது அங்கு இருந்த வாய் பேச இயலாத லலித்தின் மகள் தாணுவை அடையாளம் காட்ட முன்வந்த போது ஆத்திரமடைந்த லலித், அருகே இருந்த மனைவியிடம், தமது மகளை அறையை விட்டு வெளியே இழுத்துப் போகுமாறு கூறினார். ரகோத்தமன், தனது நூலில் இதையும் எழுதியுள்ளார். சிவராசன் தந்த 5 லட்சம் ரூபாய் நன்கொடை பற்றி சி.பி.அய். விசாரிக்கவில்லை. சிவராசனும் தாணுவும், மரகதம் குடும்பத்தினரோடு எப்படி நெருக்கமானார்கள் என்பதையும் விசாரிக்கவில்லை. லலித்தின் மனைவி அதாவது மரகதம் சந்திரசேகரன் மருமகள் ஒரு ஈழத் தமிழ்ப் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவராசன் எந்தப் பயனையும் எதிர்பார்க்காமல், ரூ.5 லட்சம் நன்கொடை வழங்கியிருக்க மாட்டார் என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். அதற்கு கைமாறாக லலித்திடமிருந்து நிச்சயமாக சிவராசன் உதவிகளைப் பெற்றிருப்பார். ரகோத்தமன் எழுதிய நூலில், இந்த செய்திகள் இடம் பெற்றிருந்தாலும் அதற்காக லலித், மறுப்பு எதையும் தெரிவிக்கவில்லை. ரகோத்தமன் மீது அதற்காக வழக்கும் தொடரவில்லை. நான் மரகதம் சந்திரசேகரை குறுக்கு விசாரணை செய்தபோது, குற்றம்சாட்டப்பட்டுள்ள சிவராசனையோ, தாணுவையோ தெரியுமா? என்று குறிப்பாகக் கேட்டேன். அந்தக் கேள்விக்கே மரகதம் எதிர்ப்பு தெரிவித்து, இதற்காக என் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள நீதிமன்றத்தின் அனுமதியையும் கேட்டார். நீதிமன்றமும் அனுமதித்தது. ஆனால், என் மீது அவர் வழக்குப் போடாமல் தவிர்த்துக் கொண்டார்.

சிவராசனின் நாட்குறிப்பில் இடம்பெற்றுள்ள தகவல்கள், இந்த வழக்கின் முக்கியமான சாட்சியங்களாகும். “ராஜீவ் பிற்பகல் 4.30 மணிக்கு புறப்படுகிறார். சென்னைக்கு மாலை 6 மணிக்கு வந்து சேர்கிறார்” – என்று எழுதியிருக்கிறார். ஆனால், திட்டமிட்டபடி 6 மணிக்கு ராஜீவ், ஸ்ரீபெரும்புதூர் வந்து சேர முடிய வில்லை. விமானத்தில் ஏற்பட்ட சில கோளாறு காரணமாக மாலை 6.15 மணி வரை விசாகப்பட்டினத்திலிருந்தே ராஜீவ் புறப்படவில்லை. விமானம் கால தாமதமாகவே சென்னை வருகிறது என்ற தகவலும், சிவராசனுக்கு தெரிந்திருந்தது.  அப்போது ‘செல்’ பேசி வசதியோ ‘பேஜர்’ வசதியோ கிடையாது. ராஜீவ் விமானம் தாமதமாக வருகிறது என்று தெரிந்த காரணத்தினால் சிவராசன் 6 மணி அளவில் ஸ்ரீபெரும்புதூருக்குள் வராமல், அந்த நேரத்தில் சென்னையிலிருந்து புறப்பட்டு பேருந்தில் வந்து கொண்டிருந்தார். ராஜீவ் தாமதமான வருகை, சிவராசனுக்கு தெரிவிக்கப்பட்டிருந்ததோடு, அவர், ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்துக்கு உறுதியாக வரப்போகிறார் என்பதும் தெரிந்திருந்தது. இதையெல்லாம் சிவராசன் தனது ‘6 ஆம் அறிவால்’ புரிந்து கொண்டார் என்றெல்லாம், நான் நம்பத் தயாராக இல்லை.

அது மட்டுமல்ல; ராஜீவ், விசாகப்பட்டினத்தில், விமானத்தில் ஏறும் நேரத்தில் திடீரென்று 3 பேர் பாதுகாப்பு வளையத்தையும் மீறி ராஜீவை சந்தித்துள்ளனர். அதில் ஒருவர் பெண். இந்தத் தகவலை அந்த விமான தளத்தின் பொறுப்பு அதிகாரியாக இருந்தவர் கூறியுள்ளார். ராஜீவை சந்தித்த அந்த மூன்று நபர்கள் யார் என்பதை காவல்துறை விசாரிக்க வில்லை. விமானம் புறப்பட்டவுடன், அந்த மூவரும், அங்கிருந்து மறைந்து விட்டனர். ராஜீவின் ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்பட்டு வந்தது என்பது இதிலிருந்து தெரிகிறது. இந்த கோணத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தவில்லை.

(தொடரும்)

 

பெரியார் முழக்கம் 26012012 இதழ்

You may also like...