இராமகோபாலனே! கோயில் சொத்துகளை கொள்ளையடிப்பது யார்?
‘இந்து முன்னணி’ இராமகோபாலன் அய்யர் அவ்வப்போது அறநிலையத்துறைக்கு எதிராக வரிந்து கட்டிக் கொண்டு புறப்பட்டு விடுவார். இந்து கோயில்களை அரசின் அறநிலையத் துறை கட்டுப் படுத்தக் கூடாதாம். ‘இந்து’க்களைக் கொண்ட தனி வாரியம் அமைத்து, அவர்களின் முழுக் கட்டுப் பாட்டிலேயே விட்டுவிட வேண்டுமாம். இதே போன்ற அறிக்கையை இப்போது மீண்டும் வாந்தி எடுத்துள்ளார். இந்துக் கடவுளர்கள் அரசுக் கட்டுப் பாட்டில் இருக்கக் கூடாது என்றால் அது பார்ப் பானின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டும் என்பதே ‘இவாளின்’ துடிப்பு! அப்படித் தான் 1927 வரை இருந்தது. கோயிலில் குவிந்து கிடந்த நிலங்களும், தங்கம், வைரம், வெள்ளி, வைடூரியங் களும் பார்ப்பனர்களால் சுருட்டப்பட்டன.
இந்த பெருச்சாளிகளிடமிருந்து மீட்பதற்கு முதல் கடிவாளம் போட்டது, நீதிக்கட்சி ஆட்சி தான். பனகல் அரசர் முதலமைச்சராக இருந்தபோது, அவர்தான் மக்கள் வழங்கிய சொத்துக்களை பார்ப்பனர்களின் கொள்ளையிலிருந்து தடுக்க அறங்காவலர்களைக் கொண்ட ஒரு வாரியத்தை உருவாக்கினார். இராமகோபாலய்யர் கதறிக் கொண்டிருக்கும் இதே போன்ற வாரியம் தான், அதற்கே அன்று “தேசிய திலகங்களான” சத்திய மூர்த்தி அய்யரும், சனாதனவாதிகளான எம்.கே. ஆச்சாரியார் போன்ற பார்ப்பனர்களும் பூமிக்கும் வானத்துக்கும் தாவி குதித்து எதிர்த்தனர். காங்கிரசிலே இருந்தாலும் நீதிக்கட்சியின் இந்த சீரிய முயற்சியை பெரியார் வெளிப்படையாகவே ஆதரித்தார். காங்கிரசிலே இருந்த சத்திய மூர்த்திகள் வெளிப்படையாக எதிர்த்தனர். கொள்கை செயல் பாடுகளை கட்சி அமைப்புகளை முன் வைத்து எதிர்ப்பது அபத்தம் என்பதே பெரியாரின் அணுகுமுறை என்பதற்கு இது ஒரு சான்று.
என்னதான் வாரியம் அமைத்தாலும், பார்ப்பனக் கும்பல் வாரியத்தையே வாரிச் சுருட்டி வாயில் போட்டுக் கொண்டது. கோயில் சொத்துக்களுக்கு குத்தகையோ வாடகையோ செலுத்தாமல், ஏலத் துக்குக் கொண்டு வந்து, அடிமாட்டு விலையில் வாங்கி சொத்துக்களை ஏகபோகமாக்கிக் கொண்டு ஏப்பம் விட்டு வந்தார்கள். இந்த சூழ்ச்சியைக் கண்டுபிடித்து தடுத்து நிறுத்த உறுதியான முடிவுக்கு வந்தவர், காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த, தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஓமந்தூர் ராமசாமி (ரெட்டியார்) தான். இத்தனைக்கும் அவர் தீவிரமான வள்ளலார் பக்தர். தனது வாழ்க்கையின் இறுதிக் காலத்தையே வடலூர் இராமலிங்க சுவாமி மடத்தில் கழித்தவர். திருவண்ணாமலை இரமண ரிஷியின் சீடர். அத்தகைய ‘ஆன்மீக’த்தில் ஊறித் திளைத்த மனிதர்தான், 1951 இல் கோயில் சொத்துகளை சுரண்டும் கூட்டத்தைத் தடுக்க முதன்முறையாக வாரி யத்துக்கு பதிலாக, நேரடியாக அரசு நிர்வாகத்தின் கீழ் கோயில்களைக் கொண்டு வந்தார். அவர் கொண்டு வந்ததே இந்து அறநிலையத் துறை சட்டம்.
அப்போதும் இதே பார்ப்பனர்கள் கூக்குரலிட் டனர். இதே மிரட்டலுக்கு சட்டமன்றத்திலேயே வெள்ளை அறிக்கை ஒன்றை வைத்து பார்ப்பன கும்பலுக்கு சரியான சாட்டை அடி தந்தார். தமிழகம் முழுதும் கோயில் சொத்துக்கள் எப்படி கொள்ளை யடிக்கப்பட்டுள்ளன என்பதை புள்ளி விவரங் களுடன் அந்த அறிக்கை அம்பலப்படுத்தியது. ஒரு காலத்தில் பார்ப்பன உடமை; பிறகு வாரிய மாக்கப்பட்ட பிறகும் பார்ப்பனக் கொள்ளை; அதற்குப் பிறகுதான் அறநிலையத் துறை சட்டமே வந்தது. இந்த நிலையில் மீண்டும் வாரியம் அமைக்கக் கோருவது, வாரிச் சுருட்டுவதற்குத் தானே?
இப்போதும் கோயில் சொத்துக்களை பார்ப்பனர்களே ஏப்பமிட்டு வருவதை இந்து அறநிலையத் துறையின் நேர்மையான அதிகாரியாக செயல்பட்ட பரஞ்சோதி என்பவர் அறநிலையத் துறை இணையத் தளத்திலே வெளியிட்டார். அதில், பார்ப்பனக் கோட்டையான மயிலை கபாலீசுவரன் கோயில் சொத்துக்களை சுருட்டிக் கொண்டிருக்கும் பார்ப்பனப் புள்ளிகளின் முகம் வெளிச்சத்துக்கு வந்தது. இதோ சில தகவல்கள்:
- மயிலாப்பூரில் பார்ப்பனப் பரப்புரை அரங்க மான ‘பாரதிய வித்யா பவன்’ “கபாலி” கடவுளின் சொத்து. இந்த பவனைத் தொடங்கி வைத்தது கே.எம்.முன்ஷி என்ற பார்ப்பனர். அரசியல் நிர்ணய சபையில் இடம் பெற்ற ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர். மற்றொரு முக்கிய புள்ளி குலக் கல்வித் திட்ட’ப் புகழ் இராஜகோபாலாச்சாரி, இந்த நிறுவனம் ‘கபாலி’க்கு வாடகை தராமல் பாக்கி வைத்துள்ள தொகை ரூ.32 லட்சம். (வாடகைக் கூட வெறும் அற்பத் தொகைதான்)
- மற்றொன்று , ‘மயிலாப்பூர் கிளப்’. 1903 இல் 3 அய்யர், 3 அய்யங்கார் மற்றும் ஒரு முதலியாரை உரிமையாளராகக் கொண்டு ‘கபாலி’ நிலத்தைப் பறித்து தொடங்கப்பட்ட கிளப். இப்போது இதன் தலைவர் பிரபல ‘ஆன்மிகவாதியாக’ அடையாளம் காட்டிக் கொள்ளும் எம்.ஏ.எம். இராமசாமி (செட்டியார்). கிளப்புக்கு உள்ளே கிரிக்கெட்,டென்னிஸ் விளையாட்டு பயிற்சித் திடல், சீட்டாடும் இடம், 24 மணி நேர ‘மதுக் குடி’ பார், சாஸ்திரி அரங்கு – என்று எல்லாமுமே அடக்கம். இந்த ‘மெய்யன்பர்கள்’ கபாலிக்கு பாக்கி வைத்துள்ள தொகை ரூ.3.57 கோடி. மயிலாப்பூர் கிளப் முகப்பிலேயே அறநிலையத் துறை, “இது இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான இடம்” என்று அறிவிப்பு பலகையை நிறுவியுள்ளது.
- ‘தேசியத் தலைவராக’ வலம் வந்த தெலுங்கு பார்ப்பனர் நாகேசுவரராவின் ‘அமிருதாஞ்சன்’ தலைவலி தைல தயாரிப்பு நிறுவனம், ‘கபாலி’க்கு பாக்கி வைத்துள்ளது. ரூ.6 கோடியே 45 லட்சம்.
- இதே மயிலாப்பூரில் ‘கபாலி’க்கு சொந்தமான 76 கிரவுண்ட் நிலத்தை வளைத்துப் போட்ட மற் றொரு பார்ப்பனர் பெண்ணாத்தூர் சுப்ரமணிய அய்யர். 1928 இல் குத்தகைக்கு எடுத்தார். 1979 இல் குத்தகை ஒப்பந்தம் நீடிக்கப்பட்டது. கிரவுண்ட் ஒன்று ரூ.5 கோடிக்கு விலை போகும் மயிலாப்பூரின் மய்யமான பகுதி இது. ஆனால் 76 கிரவுண்டுக்கு ஆண்டு குத்தகையாக பெண் ணாத்தூர் சுப்ரமணிய அய்யர் பள்ளி நிர்வாகம் செலுத்தும் தொகை ரூ.1250 மட்டும் தான்.
- மயிலாப்பூர் காமதேனு திரையரங்குக்கு எதிராக கபாலிக்கு சொந்தமான 25 கிரவுண்ட் நிலத்தை ஆக்கிரமித்திருப்பவர் பார்த்தசாரதி அய்யங்கார். 99 வருட குத்தகைக்கு 1901 இல் எடுத்த இந்த ‘அய்யங்கார் திருமேனி’ உள் குத்தகைக்கு விட்டு பணம் பண்ணினார். பலகைகள் மாறி வணிக வளாகங்களாக எழும்பி, 35 பேர் ஆக்கிரமிப்பில் உள்ளது.
அரசுக் கட்டுப்பாட்டில் அறநிலையத் துறையின் கீழ் இருக்கும்போதே இந்த நிலை என்றால், வாரியமாகிவிட்டால் கேட்கவா வேண்டும்?
தில்லை நடராசர் கோயில் திட்சதர்கள் கட்டுப்பாட்டிலிருந்து மனித உரிமை பாதுகாப்பு மய்யமும் மக்கள் கலை இயக்கிய கழகமும் உள்ளூர் அமைப்புகளும் இணைந்து போராடி ஒரு வழியாக அறநிலையத் துறை அதிகாரி கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. தீட்சதப் பார்ப்பனர்கள் நடராசன் நகைகளைத் திருடிய வழக்கு விசாரணைக்கு வந்தபோது உயர்நீதிமன்ற நீதிபதி பி.பானுமதி, 2009, பிப். 2 ஆம் தேதி ஒரு வாரத்துக்குள் அறநிலையத் துறை நடராசன் கோயிலுக்கு நிர்வாக அதிகாரியை நியமிக்க உத்தரவிட்டார். 1997 ஆம் ஆண்டில் இதேபோல் அன்றைய தி.மு.க. ஆட்சி உத்தரவிட்ட போது, அரசு அறிவிப்புப் பலகையை திமிர் பிடித்த தீட்சத பார்ப்பனர்கள் உடைத்து எறிந்து, அதிகாரியை பொறுப்பேற்க விடாமல், வன்முறை யால் தடுத்தனர். அதிர்ச்சி அடைந்த அதிகாரி, குறிப்பிட்ட 3 தீட்சதப் பார்ப்பனர்களின் பெயரைக் கூறி, காவல்துறையில் புகார் கூறியும், காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.
தில்லை நடராசன், தீட்சதப் பார்ப்பனர்களின் முழுக் கட்டுப்பாட்டில் இருந்தபோது அங்கே நடந்த கொள்ளை, கொலைகள் ஏராளம். காணிக்கை உண்டியலைப் பங்கு போடுவதில் தீட்சதப் பார்ப் பனர்களே ஒருவருக்கொருவர் கோயிலுக்குள்ளே மோதிக் கொண்டு, அடிதடி குத்துவெட்டுகளில் இறங்கினர். உண்டியல் திருட்டுக்கு ஒரே ஒரு உதாரணம்: தீட்சதர்கள் கட்டுப்பாட்டில் ‘நடராசன்’ இருந்தபோது, 2007 ஆம் ஆண்டு உண்டில் வசூலாக இவர்கள் காட்டிய கணக்கு 37,199 ரூபாய் தான். அதாவது ‘உலகப் புகழ் பெற்ற’தாக கூறப்படும் நடராசனுக்கு நாளொன்று உண்டியல் வருவாய் சராசரியாக ரூ.100 மட்டும்தான் என்றால் நம்ப முடிகிறதா? மரத்தடி வினாயகருக்குக்கூட உண்டியலில் ரூ.400, 500 என்று குவிகிறது. ‘நடராசன்’ அரசு கட்டுப்பாட்டுக்கு 2009 இல் வந்த பிறகு, 18 முறை உண்டியல் எண்ணப்பட்டதில் கிடைத்த தொகை 88 லட்சத்து 50 ஆயிரம். இது தவிர, வெளிநாட்டு டாலர்கள், தங்கக் காசுகள் எல்லாம் உண்டியலில் விழுந்திருந்தன. இவை எல்லாம் காலம்காலமாக தீட்சதர் பார்ப்பனக் கும்பலால் ஏப்பம் விடப்பட்டு வந்திருக்கிறது. இப்போது தீட்சதக் கும்பல் உச்சநீதிமன்றம் போயிருக்கிறது. என்ன வாதத்தை வைக்கிறார்கள் தெரியுமா?
தில்லை நடராசனும் தங்களைப் போல் தீட்சதர்களில் ஒருவர் தானாம். எனவே நடராசனின் பவுதீக சொத்துகள் எல்லாம் ‘இவாள்களுக்கான’ ஆன்மிக சொத்துக்களாம். இதிலே கை வைக்க அரசுக்குஎந்த உரிமையும் கிடையாதாம். இப்படி ‘நடராசன்’ கையெழுத்தைப் போட்டு பல சொத்துக்களை ஏற்கனவே விற்றிருக்கிறது இந்த தீட்சதக் கும்பல். இவர்களுக்காக வரிந்து கட்டிக் கொண்டு நீதிமன்றங்களில் வாதாடக் கிளம்பி யிருப்பவர் சோழவந்தான் பார்ப்பனரான யோக்கியர் சுப்பிரமணியசாமி.
இப்படி பார்ப்பன பெருச்சாளிகளின் சுரண்டலை நியாயப்படுத்தி தில்லையில் அரசு நிர்வாக அதிகாரியைப் போட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு புள்ளி இராமகோபாலன் அய்யர்.
அறநிலையத் துறையான அரசு கண்காணிப்பை முற்றிலும் விலக்கி விட்டு மக்கள் உழைப்பைச் சுரண்டி மன்னர்கள் கட்டிய கோயில்களை பார்ப் பனர்களின் மடப்பள்ளிகளாக்கி, அவாள்களின் குடும்பச் சொத்தாக்க வேண்டும் என்பதற்காகவே ‘வாரியங்களுக்கு மாற்று’ என்று வீரியத்துடன் வீதிக்கு பூணூலை உருவிக் கொண்டு வந்து நிற்கிறது, இந்த புல்லுருவிகள் கூட்டம்.
‘கடவுள் பிராமணனுக்கு கட்டுப்பட்டது’ என்று ரிக் வேதம் கூறுகிறது. அந்த வேதத்தை மக்களிடம் பரப்புவதற்காக எழுதி வைக்கப்பட்டதே ‘மனுதர்மம்’. 2012-லும் பார்ப்பனர்கள் இந்த ‘மனுதர்மத்தை’ வலியுறுத்தி வருகிறார்கள். இது எதை உணர்த்துகிறது. ‘மனுதர்மம்’ இப்போதும் உயிர்த் துடிப்புடன் உலவிக் கொண்டிருக்கிறது என்பதைத் தானே!
(கட்டுரைக்கான தகவல்கள் ‘வினவு’ இணைய தளம்)
பெரியார் முழக்கம் 26072012 இதழ்