என்னை கொல்லாமல் இருப்பதற்குக் காரணம்…
இன்றைய தினம் இந்த மதுரை மாநகருக்கு எனது கொள்கை பிரச்சாரத்திற்காக வந்த என்னை இந்த மதுரை மாநகராட்சி மன்றத்தார் அழைத்து வரவேற்பளித்து பெருமைப்படுத்தியதற்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏதோ மக்களுக்காகத் தொண்டு செய்கிறவர்களை ஊக்குவிக்கவும்,பாராட்டவும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுவது சாதாரணமானதேயாகும். என்னைப் போலொத்த பெரும்பான்மையான மக்களின் கருத்துக்கு மாறாக தொண்டாற்றுகின்ற எனக்கு வரவேற்பு கொடுப்பது என்பது சாதாரணமான காரியமல்ல.
புரட்சிகரமான கருத்து என்று சொல்லும்படியான பல மாறுதல் கருத்தை சொல்லி வருகிறேன். இது போன்று பெரும்பாலான, மிகப் பெரும்பாலான மக்களின் கருத்துகளை சொல்கிறவர்களை அதன்படி நடக்கிறவர்களை மக்கள் எதிர்ப்பது மட்டுமல்ல, கொலை செய்யப்படுவது இயற்கை. ஆனால், 40 ஆண்டுகளுக்கும் மேலாக பெரும்பாலான மக்களின் கருத்துக்கு, நடத்தைக்கு மாறாக இருந்து வருகிறேன் என்றாலும் இதுவரை என்னை யாரும் கொலை செய்யவில்லை என்பதோடு இந்த நகர மக்கள் எனக்கு வரவேற்பளிக்கிறார்கள் என்றால் மக்கள் அவ்வளவு பண்பாடு பெற்றிருக்கிறார்கள் என்பது தவிர இதனால் எனக்கொன்றும் பெருமை இல்லை.
யேசுநாதரை நாத்திகர் என்று சொல்லி அவரை சிலுவையில் அறைந்தார்கள். முகமது நபியை நாத்திகர் என்று சொல்லி ஓட ஓட அடித்து விரட்டினார்கள். அதுபோன்றே பவுத்தர்கள், சமணர்கள் எல்லாம் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சமுதாய சீர்திருத்தம் செய்ய முற்பட்ட ஆப்ரகாம் லிங்கனை சுட்டுக் கொன்றார்கள். கென்னடியை சுட்டுக் கொன்றார்கள். நமது நாட்டில் ஒன்றும் பெரிய மாறுதல் செய்யவில்லை. “கோயில்கள் எல்லாம் குச்சுக்காரி விடுதிகள்”, “பார்ப்பனர் விலகிக் கொண்டு மற்றவர் படிக்க இடம் கொடுக்க வேண்டும்”, “காங்கிரசில் அயோக்கியர்கள் பெருகி விட்டார்கள்; அதை கலைக்க வேண்டும்” என்று சொன்னதற்காக காந்தியை சுட்டுக் கொன்றார்கள். நான் கொல்லப்படாமல் இருப்பதற்கு காரணம் ஒன்று மக்கள் பக்குவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது எனது தொண்டினை மக்கள் சரியாகப் புரிந்து கொள்ளாமலிருக்க வேண்டும்.
நமது மக்கள் அறிவு பெற முடியாமல் நீண்டநாட்களாகத் தடுக்கப்பட்டு வந்ததன் காரணமாக உலகத்தில் நமது மக்கள் காட்டுமிராண்டிகளாக இருக்கிறார்கள். அறிவில் வளர்ச்சியடைய முடியாதவர்களாக, விஞ்ஞானத்தில் எந்த அதிசயத்தையும் கண்டுபிடிக்க முடியாதவர்களாக மற்ற வெளிநாட்டு மக்கள் காட்டுமிராண்டிகள் என்று அழைக்கும் வண்ணம் இருக்கிறோம். நமது நாட்டில் தெய்வீக சக்தி பொருந்தியவர்கள் பலர் இருந்திருக்கிறார்கள்.
பல மகான்கள், மகாத்மாக்கள், ஆனந்தாக்கள், தீர்த்தாக்கள் எல்லாம் இருந்திருக்கின்றனர். ஆனால், அவர்களில் எவரும் எந்த விஞ்ஞான அதிசய அற்புதத்தையும் செய்யவில்லை. அவர் என்னடா மகான் என்றால், “சாணியைத் தொட்டால் ஜவ்வாது வாடை வரும்”, “கையை நீட்டினால் சாம்பல் வரும்” என்கின்றானே தவிர,இன்னதைச் செய்தான் என்று சொல்ல ஒன்றுகூட இல்லை. நமக்குள்ள நூல்கள் என்பவை எல்லாம் மனிதன் படித்தால் மோட்சத்திற்கு போகலாம். பக்தி வரும் என்றுசொல்ல முடியுமே தவிர, மனிதனுக்கு அறிவு வரும் என்று சொல்லும்படியான நூல் ஒன்றும் நமக்கு இல்லை. நான் குறை சொல்வதெல்லாம் 1000-ம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாக சொல்லப்படுகிறதைக் குறை சொல்கின்றேன். அதைப் பரப்பி நம் மக்களை காட்டுமிராண்டிகளாக்க முற்படுகிறவர்களைத்தான் குறை சொல்கின்றேனே தவிர, இன்றைக்கு இருப்பவனை இந்த ரயில், மோட்டார், மின்சார விளக்கு, மைக் போன்ற விஞஞான சாதனைகள் செய்தவனைச் சொல்லவில்லை.
(13.12.1969 அன்று மதுரையில் நடைபெற்ற நகராட்சி வரவேற்பில் தந்தை பெரியார் ஆற்றிய உரை – ‘விடுதலை’ 24.12.1969)
பெரியார் முழக்கம் 02022012 இதழ்